jothika 450இயக்குநர் பாலாவின் நாச்சியார் என்ற படத்தில், ‘தே...பய’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதை நடிகை ஜோதிகா என்ற பெண்ணின் வாயால் பேச வைக்கிறார். அந்தப் படத்தின் டீசர் அந்தச் சொல்லுடன் வந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி தொடங்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் என இதுவரை எத்தனையோ ஆண் கதாநாயகர்கள், வில்லன்கள், இயக்குநர்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வரிசையில் வந்த நடிகர் சிம்பு பாடிய பீப் சாங் மிகப்பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.

பீப் சாங்கிற்கு எழுந்த எதிர்ப்பைப் போல அதற்கு முன்பு இதுபோன்ற ஆபாசச் சொற்களைப் பயன்படுத்திய நடிகர்களையோ, படங்களையோ நாம் எதிர்த்ததில்லை. அவை கதையின் யதார்த்தம் எனக் கடந்து சென்று விட்டோம். நாச்சியார் படத்தில் அந்த வசனத்தைப் பேசிய ஜோதிகா, வசனத்தை வைத்த பாலா இருவரையும் கண்டிக்க வேண்டும்.

காவல்துறையைப் பொறுத்தவரை, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த - தனக்கென அரசியல், பொருளாதார, சமுதாய பலமில்லாத, மக்களை நோக்கியே இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதே வார்த்தைகளை ஒரு கொலைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியையோ, சீட்டிங், 420 குற்றவாளியான விஜய் மல்லையாவையோ பார்த்து எந்தக் காவல் அதிகாரியும் பேசிவிட முடியாது. அப்படிப் பேசுவது போல காட்சிகளை வைத்துவிட முடியாது. அப்படி ஒருவேளை பாலா துணிச்சலாக அடுத்தடுத்த படங்களில் பார்ப்பனர் களையோ, பன்னாட்டு முதலாளிகளையோ கூட அப்படித் திட்டுவதுபோல ஒரு காட்சி அமைத்தால் அதையும் கண்டிப்பாக எதிர்ப்போம்.

இந்தச் சொற்கள் ஆபாசமானவை. அருவருக் கத்தக்கவை. நாகரீகமற்றவை என்பதற்காகக் கண்டிக்கவேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆபாசம், அருவருப்பு, நாகரீகம் என்பதற்கெல்லாம் ஆளுக்கொரு வரையறை வைத்திருக்கிறோம். நாம் எதிர்ப்பதற்கான காரணம், ஜாதி அடிமைத் தனத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் நீடிக்கச் செய்யும் பல பண்பாட்டுக்கூறுகளில் இந்தக் கெட்ட வார்த்தைகளுக்கு மிகப்பெரும் பங்கு உண்டு என்பதுவே ஆகும்.

மனுசாஸ்திரமும் கெட்டவார்த்தைகளும்

பெண்களின் உறுப்புகளையும், பெண்களின் நடவடிக்கைகளையும் அடிப்படையாக வைத்தே 99 சதவீத வார்த்தைகளும் உள்ளன. கிராமத்துச் சண்டைகளில் முதலில் வரும் வார்த்தைகள் பெண்ணின் உறுப்புகளைச் சொல்லித் தொடங்கும். பெண்களின் உறுப்புகளை மய்யமாகக் கொண்ட வார்த்தைகள் என்பவை பெண்களை வெறும் காமப் பொருட்களாக மட்டுமே எண்ணி உருவான வார்த் தைகள்.அடுத்தடுத்த தலைமுறைக்கு பெண் என்பவள் காமத்திற்காகவள் - ஒரு பொருள் என்ற ஆணாதிக்கச் சிந்தனைகளைக் கடத்திச் செல்பவை. இவற்றைவிட மோசமானவை எவை என்றால், பெண்ணின் நடவடிக்கைகளைக் கொச்சைப் படுத்தும் வார்த்தைகள்.

வெளிப்படையாக எழுதுகிறேன். இன்றும் தென்மாவட்டங்களில் அனைத்து கிராமங்களிலும், பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் நடக்கும் சண்டைகளில் இரண்டாம் கட்டமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் சில. ‘ஒங்க ஆத்தாள சக்கிலியப்பய கூட்டிட்டுப் போக...’ ‘வண்ணாப்பய கூட்டிட்டுப்போக....’சில பகுதிகளில் ‘சாணாப்பய கூட்டிட்டுப்போக...’ என்பது போன்ற வார்த்தைகள் மிகவும் சகஜமாகப் புழங்குகின்றன.

ஒரு பெண் தன் விருப்பத்திற்கு உரியவரோடு போவதோ, வாழ்வதோ, விரும்புவதோ மிகப்பெரும் குற்றம் என்ற சிந்தனையைத்தான் இந்த வார்த்தைகள் விதைக்கின்றன. அடுத்து அப்படியே விரும்பி னாலும், வாழ்ந்தாலும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரை விரும்பிவிடக் கூடாது. அவர்களோடு வாழ்ந்துவிடக் கூடாது என்பதையும் ஆழமாக விதைக்கின்றன.

இந்த வார்த்தைகள் விதைக்கும் ஆதிக்கக் கருத்துக்கள் ஏதோ படிப்பறிவற்ற கிராமத்தான்கள் உருவாக்கியவை என்று எண்ண வேண்டாம். இவை இந்து மதத்தவர்களை இன்றுவரை இயக்கிவரும் மனுசாஸ்திரங்களும், வேதங்களும் உண்டாக்கிவை.

“உயர்ந்த ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரண வரையில் தண்டனை விதிக்க வேண்டியது. ”

- 8 வது அத்தியாயம் 366 வது ஸ்லோகம்

இந்தக் கருத்தைத்தான் கெட்ட வார்த்தைகள் மக்கள் மொழியில் பேசுகின்றனர். இது ஒரு எடுத்துக்காட்டுக்காக கூறப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள ‘அசல் மனுதரும சாஸ்திரம்’ என்ற நூலில் இதுபோன்ற ஏராளமான சான்றுகள் உள்ளன.

பொதுவாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் படிப்பறிவில்லாத, நாகரீகமில்லாத மக்கள் இப்படிப் பட்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அது தவறு. பங்காளிகள் என்றால் அவர்களைத் திட்டுவற்கான தனி சொற் களஞ்சியம் உள்ளது. மாமன் மச்சான் முறை என்றால் அதற்கென்று தனியாக ஒரு சொற் களஞ்சியம் உள்ளது. எவ்வளவு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கெட்ட வார்த்தை பேசினாலும், முறையை மாற்றிப் பேசமாட்டார்கள். ஆணைத் திட்ட தனிப்பட்டியல், பெண்ணைத் திட்டத் தனிப் பட்டியல். இப்படித் தெளிவாக இலக்கணம் மாறாமல் தான் திட்டுகிறார்கள்.

படித்தவன், படிக்காதவன், அரசியல்வாதி, அதிகாரி, விவசாயி, கூலிதொழிலாளி என அனை வரும் மிக நிதானத்துடன் தான் இந்த வார்த்தை களைப் பயன்படுத்துகிறார்கள். எந்த வார்த்தை யானலும், யாரைத் திட்டினாலும் அவை ஆணாதிக் கத்தையும், ஜாதி ஆதிக்கத்தையும் ஒருசேர விதைப் பவையாகவே உள்ளன.

சட்டப்படி நாம் தேவடியாள் மக்களே!

சமுதாயத்தில் அனைத்துப் பிரிவு மக்களிடமும் ஒரு பழக்கம், ஒரு பண்பாடு இருக்கிற தென்றால், இந்தச் சமுதாயத்தின் ஆதிக்கவாதி களான பார்ப்பனர்களிடம் இருந்ததுதான் அவை புறப்பட்டிருக்கும். ஆம், இந்தக் கெட்ட வார்த்தை களும் பார்ப்பனர்களிடமிருந்துதான் தோன்றின.

. இந்து மதத்தில் உள்ள பார்ப்பனர் அல்லாத அனைத்துத் தமிழர்களையும், அனைத்து தேசிய இன மக்களையும் பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி மக்கள்’ என்று பார்ப்பனர்களின் சாஸ்திரங்கள் கூறுகின்றன. உலகில் எந்த மதமும் தனது மதத்தைப் பின்பற்றுபவர்களையே ‘தேவடியாள் மக்கள்’ என்று கூறவில்லை. பார்ப்பனர்களின் இந்து மதம் நம்மை இழிவு செய்துள்ளது. ஏதோ சாஸ்திரத்தில் எழுதி வைத்துவிட்டார்கள். அவ்வளவுதானே? என நினைக்க வேண்டாம். இந்திய அரசியல் சட்டத் திலேயே அந்த சாஸ்திரங்களுக்குப் பாதுகாப்பும் செய்துவிட்டார்கள். நாம் இந்திய அரசியல் சட்டப்படியே ‘தேவடியாள் மக்கள்’ தான்.

இந்து மதத்தின் ஆணிவேர்களான ரிக் வேதம், மனுசாஸ்திரம் ஆகியவை இந்த நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் அனை வரையும் ‘சூத்திரர்கள்’ என்று வகைப்படுத்தி யுள்ளது.

‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்றுதான் பொருள். ஆம். அப்படித்தான் ‘மனுசாஸ்திரம்’ கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415) இந்த வேதங்களும், சாஸ்திரங்களும் இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அது எந்த ஆண்டபரம்பரை ஜாதியாக இருந்தாலும், அந்த ஜாதி மக்களைப் பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாகத்தான் இந்து மதமும், இந்திய அரசியல் சட்டமும் கூறுகிறது.

அதனால்தான் தோழர் பெரியாரும், தோழர் அம்பேத்கரும் 1927 லேயே மனுதர்மத்தைக் கொளுத்தினார்கள். 1927 ல் டிசம்பர் 24, 25 தேதிகளில் தோழர் அம்பேத்கர் மகத் மாநாட்டில் மனு சாஸ்திரத்தைக் கொளுத்தும்போது,

“இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப் பட்டிருப் பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத் தொகுப்பான அங்கீகரிக்கப் பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனுஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது”. என்று அறிவித்தார்.

கெட்ட வார்த்தைகளைப் பேசுவது என்பது, இந்து மத வேதங்களையும், மனுசாஸ்திரங்களையும் அவை உருவாக்கியுள்ள பண்பாடுகளையும் நிலைநிறுத்துவதற்கே பயன்படும். சமூக அக்கறை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்போம். இதுபோன்ற கெட்ட வார்த்தைகளைப் பேசியதற்காக, தோழர் சீமானையும், பாலாவையும், ஜோதிகாவையும், அஜித்தையும், சிம்புவையும் எதிர்த்துக் களமாடுபவர்களுக்கு ஒரு கேள்வி. இந்தக் கெட்டவார்த்தைகளுக்கு அடிப்படையாக உள்ள இந்துமத, மனுசாஸ்திரங் களையும், அவற்றுக்குப் பாதுகாப்பாக உள்ள அரசியல் சட்டப் பிரிவுகளையும், எதிர்த்தும் - இனியாவது குரல் கொடுப்பீர்களா?

Pin It