1
ஆயுள் ரேகை
மருத்துவச் செலவு
சில கோடிகள் ஆகும்—
“முயற்சித்துப் பார்க்கலாமா?”
எனும் வினாவின் விடையில்
சிலரின் ஆயுள்
முடிவு செய்யப்படுகிறது.
மருத்துவச் செலவு
சில லட்சங்கள் ஆகும்—
“முயற்சித்துப் பார்க்கலாமா?”
எனும் வினாவின் விடையில்
சிலரின் ஆயுள்
முடிவு செய்யப்படுகிறது.
மருத்துவச் செலவு
சில ஆயிரங்கள் ஆகும்—
“முயற்சித்துப் பார்க்கலாமா?”
எனும் வினாவின் விடையில்
சிலரின் ஆயுள்
முடிவு செய்யப்படுகிறது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல
வண்டி வாடகை
ஓராயிரம் ஆகும்—
“முயற்சித்துப் பார்க்கலாமா?”
என்ற வினா எழும்
விதி கூட இன்றி
சிலரின் ஆயுள்
முடிவு செய்யப்படுகிறது.
2
பந்தல் போட
ஆரம்பிக்கும் போது
எரிச்சல்
காற்றில் கலக்கிறது.
ரங்கராட்டினங்கள்
சுழலும் வேளை
மனம் சுழன்று
நிழலில் விழுகிறது.
திருவிழாக் கடைகளில்
கூட்டம் கூடும்போது
அருவருப்பு மேகமாய்
மூடுகிறது.
தேர் உலா வரும் நேரம்
தலை குனிந்து
நாணம்
ஒளிந்து கொள்கிறது.
வாணவெடி
பொய்க்கும் தருணம்
கடும் சிரிப்பு போல்
தெறிக்கிறது.
பந்தல் கழற்ற
ஆரம்பிக்கும் போதுதான்
மனதில் இயல்பு நிலை
திரும்புகிறது.
உண்ட ஊருக்கு
இரண்டகம்
நினைக்கக் கூடாது தான்.
இந்த வருசமும்
சொந்த ஊர்த் திருவிழாவிற்குப்
போகாததைக்
குத்திக் காட்டும்
பிழைப்புக்கு நுழைந்த
ஊர்த் திருவிழாவை
வேறெப்படி
கொண்டாடுவதாம்?
3
தன்னெல்லையை
தானே
வரையறுத்துக் கொள்கிறது
கடல்.
எல்லை தாண்டி
அலைபாயாமல்
இருப்பதற்கு
பார்ப்பவர்களின்
கால்களில்
விழுந்து வேண்டிக்கொள்கிறது.
எல்லோரின்
கால்களையும்
ஒரே மாதிரி
நனைக்கிறது;
ஆனால்
எல்லோரின்
மனங்களும்
ஒரே மாதிரி
நனைவதில்லை.
கால்களை
நனைக்கும்போதே
அவரவர்களின்
காயங்களையும்
தன்னுள்
கரைத்துக் கொள்கிறது.
ஈரம் காய்ந்ததும்
அந்தக் காயங்களை
மீண்டும் நினைக்கத்
தொடங்கிவிடுகிறது—
மனமென்னும்
மாயப் பெருங்கடல்.
4
நீ நினைப்பது போல
இது தியாகபூமி இல்லை;
உன்னைச் சுற்றி
நியாயவான்கள்
சூழ்ந்திருக்கவில்லை.
சுதந்திரம்,
சமத்துவம்,
சகோதரத்துவம்
ஆறாக
ஓடவில்லை.
நாற்காலியைக்
கையோடு சுமக்க வேண்டியதில்லை—
உனக்கான நாற்காலியை
நீதான் இழுத்து வைத்து
அமர வேண்டும்.
நீ நினைப்பது போல
நீ அவ்வளவு பெரியவன் இல்லை;
ஆனால்
நீ நினைப்பதை விட
பெரியவன் நீ.
5
அந்த சாமியார்
இந்த சாமியார்
அந்த யோகி
இந்த யோகி
அந்த ஞானி
இந்த ஞானி—
நெருங்கிப் பார்த்ததில்
கடவுள்
இங்கு இல்லை
என்று முடிவு செய்து கொண்டு
மனிதனாக
வாழ ஆரம்பித்தாயிற்று.
அவர்களும்
கடவுள் இங்கில்லை
என்று முடிவு செய்ததால்தான்
சாமியாராக
வாழ ஆரம்பித்திருக்க வேண்டும்!
6
என்
இதயத்தை
நீ
கவர்ந்த பிறகு
நான்
இதயமில்லாதவன்
தானே!
எல்லோரும் என்னை
அப்படித்தானே
அழைக்க வேண்டும்!
ஆனால்
இப்போது தான்
எல்லோரும்
என்னை
நல்ல இதயம்
கொண்டவன்
என்கிறார்கள்.
ஒருவேளை
உன்னிதயம்
என்னுடனோ?
7
காணாமல் போனவை குறித்து
ஓர் ஆறுதல்—
அவை
மீண்டும்
காணாமல்
போவதில்லை.
8
நல்லவனாய்
இருப்பதில்
இருக்கும்
மிகப்பெரிய
அசவுகரியம்—
நல்லவனுக்குக் கூட
உன்னைப் பிடிக்காது.
9
காதல்
யாரையும்
கைவிடுவதில்லை.
நல்ல
கவிதைகளை
எழுத வைத்துக்
கொண்டே இருக்கிறது.
10
ம்
ம்
ம்
ஹம்மிங் பறவையெல்லாம்
எனக்கு
பரிச்சயமில்லை.
உன்னைத்தான்
தெரியும்—
நீயொரு
ம்ம்ம்மிங்
பறவை!
- அ.சீனிவாசன்