நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரனை இயக்குனர் விஜய்மில்டன் கதாநாயகனாக அறிவித்த நாளிலிருந்தே கடுகு திரைப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பவர் ஸ்டாரைப் போல சமீப காலமாக சோலார் ஸ்டார் என ராஜகுமாரன் பரவலாகக் கலாய்க்கப்பட்டு வந்ததால் இந்த அறிவிப்பு ஆச்சர்யத்தை தந்தது. இப்பொழுது படமும் வந்துவிட்டது. எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
தன் வாழ்வில் வரும் சில பெண்களும், அந்தப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தப் போராடும் புலிவேசம் கட்டி ஆடும் புலிக்கலைஞன் பாண்டியின் கதைதான் இந்த 'கடுகு'. இயக்குனர் விஜய் மில்டன் கோலிசோடாவைப் போலவே, இதையும் ஒரு எதார்த்த கமர்சியல் படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதில் பாதி வெற்றியைத்தான் பெற்றிருக்கிறார்.
ராஜகுமாரன் அப்பாவி பாண்டியாக அழுது, புலம்பியும், ஆக்ரோஷமான புலிக்கலைஞனாகவும் நன்றாகவே நடித்திருக்கிறார். ராதிகா பிரிஷித்தா தனித்துவமான அழகியாகத் தெரிகிறார். பரத்துக்கு கிட்டதட்ட வில்லன் கதாபாத்திரத்தையே கொடுத்துவிட்டார்கள். அரசியலில் நல்லதும் கிடையாது, கெட்டதும் கிடையாது என உணர ஆரம்பிக்கும் இளம் அரசியல்வாதியாக பரத் வருகிறார். இனி இதுபோன்ற குணசித்திர கதாபாத்திரங்களை அவர் தொடர்ந்து செய்தால் நீண்ட நாட்கள் திரைத்துறையில் இருக்கலாம் எனத் தோன்றியது. நேர்மையாக இருக்க நினைத்தாலும் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மையை மறந்து சமரசம் செய்துதான் பலர் போகிறார்கள் என வெங்கடேஷின் கதாபாத்திரம் மூலமாக இயக்குனர் உணர்த்துகிறார்.
படத்தில் ப்ளஸ்களும், அதற்கு இணையாக மைனஸ்களும் இருக்கவே செய்தது. புலிக்கலைஞனான கதாநாயகனுக்கு ஒரு பின்கதை இல்லாததால் சட்டென்று படத்துடன் ஒன்ற முடியவில்லை. ஃபேஸ்புக், டாலர் விளையாட்டுக்கள் போரடித்தது. மேலும் கதாநாயகனை புலிவேசம் போடுபவனாக வைத்துவிட்டு அதை இறுதிக் காட்சியில் இயக்குனர் எதற்கு பயன்படுத்தப் போகிறார் என்பதும் முன்கூட்டியே தெரிந்தும் விடுகிறது. பல இடங்களில் கதாபாத்திரங்கள் டப்பிங் வசனங்களுடன் லிப்-சிங்க் பொருந்தவில்லை. மேலும் படத்தின் இறுதிக்காட்சியில் நம்பகத்தன்மையே ஏற்படவில்லை. படுசெயற்கையாகப் படம் முடிகிறது. அதனால் பல இடங்களில் படம் ஏற்படுத்தும் நல்ல இம்பேக்ட் படம் முடியும் தறுவாயில் குறைந்துவிடுகிறது. சில இடங்கள் பாலா படங்களை நினைவுபடுத்தியது.
ஆனால் படத்தின் வெற்றி எங்கே இருக்கிறது என்றால் ராஜகுமாரனின் அப்பாவியான முகமும், வசன உச்சரிப்பும் மனதில் தோன்றியபடியே உள்ளது. ஒருமுறை பார்க்கலாம்.
கடுகு இன்னும் காரமாக இருந்திருக்கலாம்.
- சாண்டில்யன் ராஜூ