கீற்றில் தேட...

1.
காத்திருப்புகளை
கவசமாக அணிந்துள்ளேன்.
நிதானமாய் நிராகரி.

2.
உனக்கான சொற்களை
எத்தனை நாட்களாக
பாதுகாத்தேன்!
தானும் தூங்குவதில்லை,
என்னையும் தூங்கவிடுவதில்லை.

எத்தனை முறை
உனக்கான சொற்களோடு
வானத்தில் வட்டமிட்டேன்!
கடற்கரை போதாதாம்,
கடல் தரையைத் தொட்டு வந்தேன்!

இத்தனையும்
இரகசியமாக வேறு செய்ய வேண்டியுள்ளது!

உனக்கான சொற்கள் தான்,
ஆனால் உனக்குப் பிடிக்குமா என்ற தயக்கம்!

நீ திருப்பிவிட்டாலும் பரவாயில்லை,
மீண்டும் என்னுள்ளம்
தாங்கிப் பிடித்துக் கொள்ளும்.
உன் நிராகரிப்பை
உனக்கான சொற்கள் தாங்குமா?
நிராகரிப்பில் உன் மனதைக் கீறிவிடுமா?
அல்லது உன் நினைவுகளை
எழுப்பி வருத்திவிடுமா?
என்றொரு மயக்கம்!

பிறந்தது முதல்
என்னோடே இருந்து வரும்
என்னுடலைப் போலே,
பிரிந்தது முதல்
என்னோடே இருந்து கொண்டிருக்கும்
உனக்கான அந்த மூன்று சொற்களும்
இருக்கும் வரை
என்னோடே இருந்து போகட்டும்.

உனக்கான இடத்தில்
உனக்கான சொற்களையாவது
நிரப்பிக் கொள்கிறேனே!
"ஐ மிஸ் யூ."

3.
இல்லாமல் போவதற்காகத்தான்
இருந்து கொண்டிருக்கிறோம்.

4.
சற்று முன்னர்,
சாலையில் வேகத்தடையைப் பொருட்படுத்தாது
பறந்தவன்,
தானே கொஞ்சம் நேரத்திற்கு
வேகத்தடையானான்.

5.
நமக்கு மேல் யாருமில்லை என்ற
நமது தலைக்கனத்தை,
ஒரே கணத்தில்
நடனமாடித் தகர்த்துவிடுகிறாள்
மேல் போர்ஷன் நர்த்தகி.

6.
கடலோ, கண்ணாடித் தொட்டியோ!
தண்ணீர் போதும்.
வாஸ்தா பார்க்கின்றன
வாஸ்து மீன்கள்!

7.
உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.
நம் காதலை நீ பார்த்துக்கொள்.

8.
தற்கொலை!

தானாக
இறந்து போவதற்கு,
யாரோவாக கூட
இருந்து போகலாமே!

- அ.சீனிவாசன்