நடிகவேள் எம்.ஆர்.ராதாவை தமிழகத்தின் டக்ளஸ் என்று அழைப்பதுண்டு. யார் அந்த டக்ளஸ் என்று பலருக்குள்ளும் ஒரு கேள்வி எழுந்திருக்கக்கூடும். அது 1920. வாரன் ஜி.ஹார்டிங் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மது விலக்கு அங்கு முழு வீச்சில் அமலாகியிருக்கிறது. 19-வது சட்டத்திருத்தத்தின் மூலம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வந்துசேர்ந்திருந்தது. அமெரிக்காவின் முதல் வர்த்தக ரீதியிலான வானொலி நிலையம் காற்றில் தனது அலைவரிசையை முதன்முதலில் பரப்பத் துவங்கியிருந்தது. இந்தச் சூழலில்தான் பேசாப்படம் தனது உச்சக்கட்டப் புகழில் மக்களிடையே ஒருவிதக் கலைக் காய்ச்சலையே உண்டுபண்ணியிருந்தது.பழைய நாடக இசை அரங்குகள் சில எஞ்சியிருந்த போதும், புதிய சினிமா மாளிகைகள் மிகுந்த எழுச்சியோடு உதயமாகத் தொடங்கின. முழுமையான மேற்கத்திய இசைக் குழுக்களின் வீரியமிக்க இசையுடனான அமெரிக்காவின் சினிமா முழு வீச்சில் மக்களிடையே பிரபலமாகி விட்டது. தங்களின் சினிமா நாயக-நாயகிகளின் மீதான வெறித்தனமான ஈடுபாடு ரசிகர்களை நோய்போலத் தொற்றிக் கொண்டு ஆட்டிப் படைத்தது. அதிலும் குறிப்பாக ஒரே ஒரு மனிதர் அமெரிக்கப் பேசாப்பட யுகத்தின் சக்கரவர்த்தியாக-பேரரசனாகவே கொடிகட்டிப் பறந்தார்.
‘அவர் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே பெண் ரசிகைகளுக்கு கிறக்கம் வந்துவிடுகிறது’ என்று அன்றையப் பத்திரிகைகள் எழுதின. அவரின் காதல் சாகச நடிப்பும் வீரத்தனமான வெளிப்பாடும் ஆண்களையும் அவரின் ரசிகர்களாக்கி விட்டனவாம். அவர்தான் ஹாலிவுட் பேசாப் படயுகத்தின் மன்னன் எனப் போற்றப்படும் டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்.
டக்ளஸ் 1883-ஆம் ஆண்டு மே 23 அன்று அமெரிக்காவின் கொலொராடோவிலுள்ள டென்வர் எனுமிடத்தில் ஹெசக்கியா சார்லஸ் உல்மான் என்பவரின் மகனாகப் பிறந்தார். உல்மான் நியூயார்க்கின் புகழ்மிக்க வழக்கறிஞராக இருந்தவர். சுரங்கத் தொழிலில் ஆர்வமிக்கவர். தாயார் எல்லா அடிலெய்டு மார்ஷ் வீக் ஒரு பேரழகி.
டக்ளஸ் தந்தை உல்மானுக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தன. எல்லா அவருக்கு முன்பே அறிமுகமாகியிருந்தவர். எல்லாவின் முதல் கணவர் டி.பி.நோயால் இறந்துவிட, அவரின் சட்டப்பூர்வ உரிமைகளை எல்லாவுக்கு உல்மான் பெற்றுத் தந்தார். அதன் பிறகு எல்லா அட்லாண்டா சென்று அங்கு நீதிபதியாக இருந்த எட்வர்ட் வில்காக்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரோ எல்லாவைக் கொடுமைப்படுத்தி, தவறாக நடத்தத் தலைப்பட்டார். 1870களில் சட்டப்பூர்வ மணமுறிவு அபூர்வமாகவே வழங்கப்பட்டு வந்த நிலையில் உல்மான் தனது வாதத் திறமையால் எல்லாவுக்கு விவாகரத்து பெற்றுத்தந்தார். வழக்கில் வெற்றிபெற்ற அதே நேரத்தில் எல்லாவின் இதயத்தையும் வென்றவராக ஆகிவிட்டார் உல்மான். அது இருவரையும் தம்பதி களாக்கியது. 1881-ல் அவர்களுக்கு ராபர்ட் எனும் மகனும், 1883-ல் டக்ளசும் பிறந்தனர்.
உல்மான் நாடக ரசிகராக இருந்தார். அடிக்கடி நாடகங் களுக்குத் தன் மகன்களை அழைத்துச் செல்வார். மேடைக்குப் பின்னால் சென்று நாடக நட்சத்திரங்களோடு உரையாடுவார். ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கும் அந்த நாளைய நாடகக்குழுக்களை அழைத்துத் தன் வீட்டில் தங்க வைத்து, விருந்து கொடுக்கிற ஆர்வமும் உல்மானிடம் இருந்தது. இதனால் கலை ஆர்வம் டக்ளசுக்கு இயல்பாகவே தொற்றிக் கொண்டது. ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடமாக ஒப்புவிக்க டக்ளசுக்கு அதிக சிரமம் ஏற்படவில்லை. எதிர்கால ஹாலிவுட்டின் அசல் அரசன் இவ்வாறு உருவாகத் தொடங்கினான்.
டக்ளஸ் தனது தந்தையுடன் மலையேறுவது வழக்கமானது. அவரது குழந்தைப் பருவம் பல வகைகளிலும் மகிழ்ச்சிகரமாகத்தான் சென்றது. ஆனால் அவரது தந்தை உல்மான் குடிப்பழக்கத்துக்கு அடிமை யானார். தொழிலில் பெரும் சரிவு ஏற்பட்டது. குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோக நேர்ந்தது.
டக்ளசுக்கு ஐந்து வயதுதான் முடிந்திருந்தது. அதற்குள் அவரது வாழ்க்கையில் இவ்வளவும் நடந்து முடிந்துவிட்டது. என்ன நடந்தாலும் டக்ளசிடம் அவரது தந்தையால் ஏற்பட்ட கலைத் தாகம் மட்டும் குறைத்து மதிப்பிடத்தக்கதாக இல்லை. அதன் காரணமாக டக்ளஸ் நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்தார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று அரசர்களோடும், அரசியரோடும், அதிபர்களோடும் தோளோடு தோள் உரசும் பெரு விருப்பம் அவரைக் கவ்வியிருந்தது.
தாயின் சிறகுக் கதகதப்பிலேயே அந்தப் பிள்ளைகள் வளர்ந்தன. தந்தை உல்மான் பிரிந்து போனபின் எல்லா அந்தக் குழந்தைகளை பெரும் பாடுபட்டு வளர்த்தார். எல்லாவின் முதல் கணவனுக்குப் பிறந்த ஜான் ஃபேர்பாங்க்ஸ் மற்றும் டக்ளஸின் அண்ணன் ராபர்ட் மற்றும் டக்ளஸ் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கிடையிலும் நன்கு வளர்ந்தனர். தனது மூத்த கணவரின் கௌரவமிக்கதாகக் கருதப்பட்ட ஃபேர் பாங்க்ஸ் எனும் குடும்பப் பெயரையே எல்லா தன் மற்ற இரு குழந்தை களின் பெயர்களோடும் சேர்த்தார். டக்ளஸ் எல்டன் தாமஸ் உல்மான் ‘டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்’ ஆனார்.
டக்ளஸ் தனது 11 வயதில் மேடையேறத் தொடங்கினார். பிரபலமாக இருந்த எலிட்ச் கார்டன்ஸ் தியேட்டரில் தனது பதின் பருவத்தில் டக்ளஸ் தனது உணர்ச்சிப் பூர்வமான நடிப்பால் முக்கிய கவனம் பெற்றார். ஒரு நடிகராக நல்ல வரவேற்பைப் பெற்ற டக்ளஸ் அதனால் தனது உயர்நிலைப்பள்ளிப் படிப்பைக் கை கழுவ நேர்ந்தது. அதற்காக அவர் எந்தக் கவலையும் படவில்லை.
1900 ல் அவர் நியூயார்க் சென்றார். அங்கு 1902 ல் பிராட்வே நாடக அரங்கில் தனது முதல் தடம் பதிக்கிற வரையில் வயிற்றுப் பிழைப்பிற் காகக் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்லும் கூலியாகவும், வால் ஸ்டிரீட்டில் குமாஸ்தாவாகவும் கிடைக்கிற வேலைகளையெல்லாம் செய்ய நேர்ந்தது. பிரடெரிக் வார்ட் கம்பெனி தயாரித்த ‘தி டியூக்ஸ் ஜெஸ்டர்’ அவருக்குப் பெயர் வாங்கித் தந்த முதல் நாடகமானது. டக்ளஸ் லட்சியப்பூர்வ மாக உழைத்தார், நடிப்பின் உன்னத உயரங்களைத் தொடுமளவு கடுமையாக உழைத்தார். இருப்பினும், உண்மையி லேயே ஒரு இமாலய வெற்றி அவரை வந்தடைய நீண்ட காலம் பிடித்தது.
1907 ல் அன்னா பெத் சல்லி என்ற அழகிய மங்கையை டக்ளஸ் மணந்தார். ‘பருத்தி அரசர்’ எனப் புகழ் பெற்றிருந்த பெரிய தொழிலதிபர் டேனியல் சல்லி யின் அன்பு மகள் அன்னா. டேனியல் தன் மருமகனை நாடகத்தை விட்டு விட்டுத் தன்னோடு தொழிலுக்கு வந்து விடும்படி வேண்டினார். டக்ளஸ் மறுத்தார். ஆனால், வறுமை காரணமாக பின்னர் புச்சானன் சோப் கம்பெனி அலுவலக வேலைக்கு அவர் போக நேர்ந்தது. அதுவும் நீடிக்கவில்லை. 6 மாதங்களில் டக்ளஸ் மீண்டும் பிராட்வே நாடக அரங்கம் நோக்கித் திரும்பினார்.
1909 டிசம்பர் 9 அன்று டக்ளஸ் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு டக்ளஸ் பெயரே சூட்டப்பட்டது. பின்னாளில் அந்தக் குழந்தையும் டக்ளஸ் போலவே ஜுனியர் டக்ளஸ் என்ற பெயரில் பெரிய நடிகனானது தனிக் கதை. டக்ளஸ் தனது நாடக வருவாயில் குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டார். அமைதியாக ஓடக்கூடிய சலனப்படம் எனும் அன்றைய சினிமாவின் மீது டக்ளஸ் உள்ளிட்ட நாடகக் கலைஞர்களுக்கு ஒரு விதப் பரிகாசப் பார்வைதான் இருந்தது.
1914-ல் ஒரு மிகப் பெரிய அதிர்ஷ்டம் அவரின் வீட்டுக் கதவைத் தட்டியது. டிரை ஆங்கிள் ஃபிலிம் கார்ப்பரேஷன் எனும் சினிமா நிறுவனம் அவருக்கு அப்போதே ஒரு லட்சத்து 4 ஆயிரம் டாலர் சம்பளமாகத் தந்து தனது சினிமாவில் நடிக்க அழைத்தது. டக்ளஸ் எனும் அந்த நாடகக் கலை மேதை என்ன செய்தார் தெரியுமா?
அன்றைய நிலையில், நாடகம்தான் மிகச்சிறந்த கலை எனும் எண்ணமும், பெருமிதமும் ஓங்கியிருந்த சூழலில் டக்ளஸ் தனக்கு வந்த வாய்ப்பை மறுத்தார். அவர் சொன்னார்: “இது மிகப்பெரிய தொகைதான் என்று எனக்கும் தெரிகிறது. ஆனாலும் என்னை சினிமாவில் அல்லவா நடிக்க அழைக்கிறீர்கள்?” - சினிமாவை அன்று எவ்வளவு கேவலமாகப் பார்த்திருக்கிறார்கள் பாருங்கள்!
1915-இல் நிலைமை கொஞ்சம் மாறியிருந்தது. டக்ளஸ் விருப்பமில்லாத ஒரு விருந்தாளிபோல ஹாலிவுட் போய்ச் சேர்ந்தார். அதற்குள் நாடகத்துறையில் நடிப்பில் புலமை பெற்று, புகழ்பெற்ற கலைஞராகிவிட்டிருந்தார் டக்ளஸ். அப்போது அவருக்கு வயது 31.
டி.டபிள்யூ. கிரிஃபித் என்ற நம்பிக்கை வறட்சி கொண்ட ஒரு நபரின் பாதுகாப்பில் அவர் வேலை செய்ய நேர்ந்தது. டக்ளஸ் பற்றி அந்த நபர் இப்படிச் சொன்னார். “இவர் தலை ஒரு பூசணிக்காய் மாதிரி இருக்கிறது, இவரால் நடிக்க முடியாது”. இப்படிப்பட்ட எத்தனை யோ தடைகள் வந்த போதிலும் டக்ளஸ் தனது விடாமுயற்சியின் பயனாக பேசாப் படயுகத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக உயர்ந்து காட்டி னார். அன்று அவரைப்போலவே முன்னணி நகைச்சுவை நடிகர்களாக பஸ்டர் கீடன், ஹெரால்டு லாய்ட் மற்றும் டக்ளசின் ஆப்த நண்பர் சார்லி சாப்ளின் ஆகியோர் இருந்தனர்.
அவருடைய முதல் 26 படங்கள் காதல் முதல் முறைகேடுகள் வரை அனைத்து விதமான மேற்குலக சமுதாயப் போக்கு களையும் பகடி செய்யும் நகைச்சுவைப் படங்களாக இருந்தன.
1916-ல் தனது புகழின் உச்சத்திலிருந்த டக்ளஸ் ஃபேர் பாங்க்ஸ் சொந்தமாக திரைப்படங்களைத் தயாரிக்க எண்ணி ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். புனைபெயரில் அவரே அடிக்கடி சினிமா வுக்குக் கதைகள் எழுதினார். முதல் உலகப் போரின்போது மனம் பதைத்திருந்த மக்களுக்கு தொடர்ந்து வெளிவந்த டக்ளசின் படங்களால் கவலை மறந்து சிரிக்க முடிந்தது.யுத்த வீரர்களுக்கு மக்களின் உற்சாக ஆதரவு வேண்டி டக்ளஸ் பிரச்சாரம் செய்தார். செஞ்சிலுவைச் சங்கத்திற்காகவும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் விடுதலை மற்றும் வெற்றிக்காகவும் சார்லி சாப்ளினை இணைத்துக் கொண்டு நிதி திரட்டும் பொருட்டு யுத்தப் பத்திரங்களை விற்பனை செய்யும் பயணத்தை 1918 ல் மேற்கொண்டார். அந்தச் சமயத்தில்தான் ‘அமெரிக்காவின் இனிய இதயம்’ எனப் புகழப் பட்ட முன்னணி நடிகையான மேரி பிக்ஃபோர்டு உடன் அவருக்கு இரகசியக் காதல் பிறந்தது. மேரி இப்போது டக்ளசின் இனிய இதயமா னார். அவரின் மனைவி பெத் இதனைக் கேள்விப்பட்டு நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார்.
மேரிக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. இந்தச் சமயத்தில் டக்ளஸ் தன்முன்னேற்ற நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார். பத்திரிகைகளில் ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். எல்டன் தாமஸ் எனும் தனது தந்தையின் நினைவாக, அந்தப் பெயரிலேயே நிறைய திரைக்கதைகளை எழுதினார். அவரது எழுத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மிகச்சிறந்த படைப்பாளியாக அவை அவரை அடையாளம் காட்டின.
சினிமாத் துறையிலும் அவர் தன்னை ஒரு முக்கியமானவராக நிலைநிறுத்திக் கொண்டார். 1919 ல் தனது காதலி மேரி பிக் ஃபோர்டு, சார்லி சாப்ளின் மற்றும் தனக்கு முதலில் அடைக்கலம் தந்து, தன் மீது அவநம்பிக்கையும் கொண்டிருந்த டி.டபிள்யூ. கிரிஃபித் ஆகியோருடன் இணைந்து ஐக்கிய கலைஞர்கள் கழகத்தை நிறுவினார். அதன் நோக்கம் சொந்தப்படம் எடுக்கும் கலைஞர்களுக்கு விநியோகத்தில் உதவுவது என்பதாக இருந்தது.
மேரியும், டக்ளசும் தங்களது முதல் திருமண பந்தங்களை சட்டப் படி முறித்துக் கொண்டு இணைய 1920-இல் முடிவெடுத்தனர். மேரி பிக்ஃபோர்டு - டக்ளஸ் ஃபேர் பாங்க்ஸ் திருமணம் அமெரிக்கா முழுவதும் சிலிர்ப்பூட்டும் நிகழ்வானது. அந்த இருவரையும் நேசிக்கும் ரசிகர்கள் அந்தத் திருமணநாளைத் தங்களது திருவிழாபோல எண்ணி மகிழ்ந்து போனார்கள்.
மேரிக்காக அழகிய பிவர்லி மலைப்பிரதேசத்தில் டக்ளஸ் ஒரு மாளிகையை வாங்கினார். அதை மேலும் அழகுறச் செப்பனிட்டார். அதைப் பத்திரிகை நிருபர் ஒருவர் ‘Pick fair’ என்று இருவர் பெயரையும் இணைத்துப் பெயர் சூட்டி அழைத்தார். அமெரிக்க ரசிகர்களின் இதயங்களில் தங்களின் மதிப்புமிகு அரண் மனையானது அந்தப் பிக் ஃபேர். அதற்கு அடுத்த இடத்திற்குத் தள்ளப்பட்டு, தன் முக்கியத்துவத்தை இழக்கிற நிலைக்குப்போனது வெள்ளை மாளிகை. டக்ளஸ் மீது அமெரிக்க மக்கள் வைத்திருந்த அளப்பரிய அன்பு அத்தகையதாக இருந்தது. டக்ளஸ் நகைச்சுவை வேடங்களிலிருந்து வரலாற்று நாயகர்கள் வேடங்களை ஏற்கத் தொடங்கினார். மிடுக்கும், கம்பீரமும், நுட்பம் நிறைந்த நடிப்பும் அவருக்கு எந்தப் பாத்திரத்திலும் வெற்றியையே பெற்றுத் தந்தது.
தனது 44வது வயதில், 1927 ஆம் ஆண்டு தனது நீண்ட, அனுபவ மிக்க நடிப்புக் கலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார் டக்ளஸ். இனி, வயதான காலத்தில் எப்படி மாவீரனாக வந்து சண்டை-சாகசங்கள் செய்வது என எண்ணினார். ஆனாலும் அவர் தன் கலைப் பயணத்தை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. சலனப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமியை நிறுவினார். அதன் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிராமானின் சீன நாடக அரங்கை ஹாலிவுட்டில் திறக்கிற பணியில் பிரதான பங்கு வகித்தார். அது உலகின் முன்னணி சினிமா மாளிகையானது. மரபார்ந்த வழக்கப்படி டக்ளசும், மேரியும் தங்களது கை மற்றும் கால்களை அந்த மாளிகை முகப்பில் உலராமல் இருந்த சிமெண்ட்டில் பதித்துப் பெருமை சேர்த்தனர். முதல் அகாடமி விருதுகள் 1929 ல் வழங்கப்பட்டன.
ஒரு தலைமுறைக்கும் அதிகமான காலம் டக்ளசும், மேரியும் ஹாலி வுட்டின் அரசனாகவும், அரசியாகவும் கலை ஆட்சி புரிந்தனர். அவர் கள் காலத்திய மிக முக்கியமான படங்களை அவர்களே தந்தனர். இருந்தபோதும் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தைக்கூட உருவாக்கியதில்லை. ஷேக்ஸ்பியரின் கதையொன்றை வைத்து 1929 ல் அப்படியொரு முயற்சி செய்த அவர்கள் அந்தப்படம் தந்த தோல்வி யால், ஒருவர் மீது ஒருவர் புகார் செய்யத் தொடங்கினர். மேரி குடிக்கு அடிமையானார். இருவரிடையே கசப்பு முதன்முதலாக ஏற்பட்டு அது விரிசலாக விரிந்தது.
30 களின் ஆரம்ப நாட்களில் ஹாலிவுட் முற்றிலுமாக மாறியிருந்தது. புதுமுகங்கள் ஏராளமாக திரையில் உருவாகியிருந்தனர், டக்ளஸ் மகன் ஜுனியர் டக்ளஸ் உள்பட. 1931-இல் சினிமா தொழிலின் புதிய மனிதா பிமானமற்ற போக்கைப் பிடிக்காத டக்ளஸ் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளத் துவங்கினார். அது ஆவணப் படமாக-‘80 நிமிடங்களில் உலகைச் சுற்றி’ (Around the world in 80 minutes) என்ற பெயரில் 1931 ல் வெளியானது.
1933-ல் டக்ளசும், மேரியும் சினிமாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர். அதோடு அவர்கள் தங்கள் காதல் மணவாழ்விலிருந்தும் பிரிந்தனர். பின்பும் 1934-ல் இறுதியாக ஒரு படத்தை டக்ளஸ் எடுத்தார்.
1939-ல் மீண்டும் ஒரு சினிமா சிந்தனை வந்து, கதையை எழுதத் துவங்கினார். ஆனால், அது முடிவுறுமுன்பே, அவரின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. டிசம்பர் 12, 1939 அன்று டக்ளஸ் ஃபேர் பாங்க்ஸ் எனும் அந்த பேசாப்பட உலகின் அரசன் உண்மையிலேயே பேசாது போய்விட்டான். தூக்கத்திலேயே டக்ளஸ் உயிர் பிரியும்போது அவருக்கு 56 வயதே முடிந்திருந்தது.
தமிழில் ஈடிணையற்ற நடிகவேள் எம்.ஆர். ராதாவை தென்னாட் டின் டக்ளஸ் என்று அழைப்பதுண்டு என்று பார்த்தோம். டக்ளசின் நாடகத்தின் மீதான காதல் போன்றதே நமது நடிகவேளின் நாடக ஈடுபாடும். டக்ளஸ் வெளிப்படுத்திய நவரச நடிப்பும் ராதாவின் நடிப்பும் பல வகைகளிலும் ஒத்தமைந்திருந்தன. டக்ளஸ் பல ஆண்டுகளுக்கு முன்னர், பேசாப்பட காலத்தைச் சார்ந்தவர் என்ற போதிலும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு ‘தென்னகத்தின் டக்ளஸ்’ என்ற பெயர் பொருத்தமானதாகவே நிலைத்து விட்டது.
நடிகராக, திரைக்கதை ஆசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக சாகசங்கள் ததும்பி வழிந்த வாழ்க்கை டக்ளசுடையது. சினிமாவின் துவக்க காலத்திலேயே அதன் ஆன்மாவைப் புரிந்துகொண்டு, அதற் கொரு உன்னத சிம்மாசனத்தைப் பெற்றுத்தந்த டக்ளஸ் எனும் அந்தக் கலைஞன் உலக சினிமா வரலாற்றில் என்றும் ஒளி வீசும் ஒரு தாரகைதான்!
- சோழ.நாகராஜன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் - ஹாலிவுட் பேசா பட யுகத்தின் அரசன்
- விவரங்கள்
- சோழ.நாகராஜன்
- பிரிவு: திரைச் செய்திகள்