என் காலம்

தவழ்கிறது

தத்துகிறது

நடந்து செல்கிறது

தலைதெறிக்க ஓடுகிறது

தள்ளாடி சரிகிறது

திரும்பிப் பார்க்கிறது

தேங்கிக் கிடக்கிறது

இன்னும் என்னன்னவொ செய்கிறது

என் காலம்


உன் காலமோ

காலை மாலைகளற்ற

வாடாத பூவாகத் தன் தீராத இதழ்களில்

மலர்ந்து கொண்டேயிருக்கிறது

(எதிரெதிர் காலங்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா)

வெகு காலம் சந்திக்காத இரண்டு சகோதரிகள் மீண்டும் இணைகிறார்கள். விடுமுறைக்காக எனச் சொல்லி அழைத்த மூத்தவளின் அழைப்பை மறுக்க இயலாமல் அவளுடன் ஒரு பெரும் பயணம் எதற்காக என்றறிந்த பின் இளையவளின் மனநிலை என்னவாகிறது என்பதை இருண்மையுடன் காட்சிப்படுத்துகிறார் ஸ்வீடன் இயக்குனர் லிசா லாங்செத்.

EuphoriaEuphoria - இத்திரைப்படத்தின் கதையை இரண்டே வரியில் கூறிவிட முடியும். ஆனால் கதைக்குள் மறைந்துள்ள வாழ்வும் மரணமும் நிச்சலனமும் கதையை வேறாக்குகிறது. நீண்ட பிரிவிற்குப் பிறகு தங்கை இனெஸ் (அலிஷியா விகாண்டர்) சந்திக்க விரும்புகிறாள் எமிலி (ஈவா க்ரீன்). இனெஸ் அமெரிக்காவில் வசிக்கிறாள். அவள் ஒரு பிரபல ஓவியர். தனது துறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தவளுக்கு சொந்த ஊரும், சொந்த தாயும், சகோதரியும் கசந்தவர்களாகி ஆண்டுகள் பலவாகிவிட்ட நிலையில் தான் எதிர்பாராத எமிலியின் அழைப்பு. இனிஸின் ஓவியங்களை அண்மைக்காலமாக விமரிசகர்கள் கடுமையாக விமரிசித்து வருவதால் அவளுக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதனாலும் கூட எமிலியின் அழைப்பை ஏற்கிறாள். ஆனால் இனெஸை வரவழைக்க எமிலி பெரும் செலவு செய்ய வேண்டியிருந்தது.

விமான நிலையத்தில் ஆரத் தழுவி, பிரிவு காலத்தை சமன் செய்ய முயல்கின்றனர். எமிலியின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தென்படுகிறது. ஆனால் இனெஸ் சற்று இறுக்கமாகவே உள்ளாள். அவர்கள் முன்பதிவு செய்திருக்கும் ஆடம்பர விடுதிக்குச் செல்கின்றனர். அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்த இனிஸ் அக்காவிடம் இவ்வளவு பணம் அவளிடம் உள்ளதா எனக் கேட்க அதற்கு எமிலி வீட்டை விற்றுவிட்டதாகக் கூறுகிறாள். மேற்படிப்பைத் தொடர்ந்தால் மாணவர் விடுதியில் தங்கிக் கொள்வேன் என்கிறாள். இரவு உணவு உட்கொள்ளச் செல்கின்றன்றனர். எமிலி கேட்ட உணவையே அனெஸும் கேட்கிறாள். புன்னகையுடன் ஒரு மோதிரத்தை தன் கைப்பையிலிருந்து எடுத்த எமிலி அதனை ஆவலுடன் இனெஸிடம் காண்பித்து நினைவிருக்கிறதா எனக் கேட்க அவள் இல்லையென்கிறாள். அம்மாவுடையது என்று கூறி அவளிடம் தர இனெஸ் அது தனக்கு வேண்டாம் நீயே வைத்துக் கொள் என மறுக்கிறாள். ஒரு நொடி எமிலியின் முகம் வாடுகிறது. அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து உணவருந்திய ஒரு செல்வந்தர் இவர்களில் ஒருவரை நடனமாட அழைக்க, இனெஸ் மறுக்க, எமிலி அவருடன் நடனமாடுகிறாள். இனெஸ் சற்று வெறுப்புடன் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, எமிலி அருந்திய மது அவளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த வாந்தி எடுக்கிறாள். அதன் பின் அவர்கள் உறங்கச் செல்கின்றனர்.

பழைய கதைகள் பேசியபடி இருவரும் ஒரு தூரப் பயணத்திற்கு ஆயத்தமாகி காரில் புறப்படுகின்றனர். நாட்டை தாண்டி செல்கிறோமா என்று பொறுமையின்றி இனெஸ் கேட்க, உன்னிடம் முன்பே கூறியிருந்தேன் என்று எமிலி பதில் உரைக்கிறாள். ஒருவழியாக கார் ஓரிடத்தில் நிற்க இருவரையும் வரவேற்க மரினா (சார்லெட் ராம்ப்ளிங்) என்பவள் தன் குழுவினருடன் வருகிறாள். நீ எமிலியாகத் தான் இருக்க வேண்டும், இவள் இனெஸா என்று கேட்க, ஆம் என்று கூறி கைகுலுக்குகின்றனர். இவர்கள் யார் என்று ஆச்சரியத்துடன் இனெஸ் பார்க்க, மரினா என்னுடைய வழிகாட்டி என்றபடி எமிலி மரினாவின் கரம் பற்றி நடக்கத் தொடங்குகிறாள். இருவரும் வெகுநாள் பழகியவர்கள் போல உரையாடிக் கொண்டே செல்ல, இந்த அடர்வனத்தினுள் அவர்கள் எங்கு செல்கிறார்கள் அனுமானிக்க முடியாத இனெஸ் அமைதியாகப் பின் தொடர்கிறாள். ஒருவழியாக நீண்ட மரங்களுடைய அந்தப் பாதை முற்றுப் பெற்று ஒரு தோட்டத்தினை கடந்து பெரிய மாளிகையின் வாசலுக்கு வந்து சேர்ந்தனர். வரவேற்பரையில் இருந்தவரிடம் எமிலி முன்பதிவு விபரங்களைக் கூறுகிறாள். அவர் இவளிடம் விதிமுறைகள் பற்றி கூற தான் கடமைப்பட்டவர் என்பதால் மீண்டுமொரு முறை கேட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்லத் தொடங்குகிறார்.

அப்போதுதான் இனெஸுக்கு தான் விடுமுறையைக் கழிக்க வரவில்லை இறந்து கொண்டிருக்கும் தன் அக்காவின் கடைசி ஆறு நாட்கள் அவளுடன் தங்கப் போகிறோம் என்ற உண்மைத் தெரிய வருகிறது. அந்த ஆடம்பர விடுதி நோயாளிகள், வயோதிகர்கள், வாழப் பிடிக்காதவர்கள் என மரணத்தை விரும்புவோர்க்கு அடைக்கலமாக விளங்குகிறது. பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, கவனித்துக் கொள்ள ஒரு காப்பாளருடன் அங்கு வந்து தங்கி, அவர்களின் கடைசி ஆறு நாட்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி வாழ வழி வகுக்கின்றது. பின்பு அவர்கள் அவர்களை கருணைக் கொலையும் செய்து கொள்ள உதவுகின்றது. இவற்றையெல்லாம் ஒப்புக் கொள்கிறீர்களா என்று விடுதி ஆள் கேட்க ஆம் என்று கூறி தன் அறைச் சாவியைப் பெற்றுக் கொள்கிறாள் எமிலி. இனெஸ் அவளைக் கோபமாக பின் தொடர்ந்து வந்து, ஏன் இப்படி செய்தாய், ஏன் என்னிடம் உன் நோய் பற்றிக் கூறவில்லை என்று கேட்க, அதற்கு எமிலி ஒரு வெற்றுப் புன்னகையுடன் எத்தனை முறை அழைத்தும் உன்னிடமிருந்து சரியான பதில் வருவதில்லை. உன்னிடம் பகிர்ந்து கொள்ள எனக்கும் ஆசை தான் ஆனால் என் அழைப்பை கூட ஏற்க மறுத்த உன்னிடம் என்ன சொல்வது என்று மூன்று வருடங்கள் தனியாக இந்தப் புற்றுநோயுடன் போராடுகிறேன் என்று கூறுகிறாள். முந்தைய இரவு மது அருந்திய ஒவ்வாமையில் அல்ல புற்றுநோயின் முற்றிய நிலையில் தான் அவள் வாந்தி எடுத்திருந்தாள் என்பதை அறிந்து உறைந்து போகிறாள் இனெஸ்.

இறந்த பின் எங்கே போகிறோம் என ஒருவருக்கும் தெரியாது. உற்ற உறவினர்களையும் பிரியத்துக்குரியவர்களையும் இனி ஒருபோதும் காண முடியாது, இகவுலக சுகானுபவங்களை இனி பெற முடியாது என்பதினால்தான் மரணம் அஞ்சத்தக்கதாக உள்ளது. எமிலியைப் பொருத்தவரை தன்னுடன் பேசவோ வாழவோ நீயிருந்ததில்லை என்னுடைய மரணத்துக்காகவேனும் சாட்சியாக இரு என்பதற்காகத் தான் இனெஸை அழைத்திருந்தாள் எமிலி. ஆனால் அவளுக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை. ஆனால் ஒரு பக்கம் தன்னுடைய கைவிடப்பட்ட அக்காவின் கடைசி விருப்பமாகவும் அது இருக்கவே மனம் ஒன்றாமல் இருந்தாள். அன்றிரவு இருவரும் பேசி சிரித்து அதன் பின் உறங்குகிறார்கள். ஆனால் அடுத்த நாள் காலை மரினா எமிலியிடன் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்க நாம் மூவரும் தேனீர் அருந்தியபடி பேசலாம் என்று தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறாள். ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்த தன் வாழ்க்கை குறிப்பை எமிலி வாசிக்கத் தொடங்குகிறாள். அது ஒரு கடிதம் போல தொடர அதில் அவர்கள் குழந்தைப் பருவத்துக் கதையை உரைக்கத் தொடங்குகிறாள் எமிலி. எல்லா குடும்பத்தைப் போல அவர்களுடையதும் ஒரு மகிழ்ச்சியான குடும்பம்தான். அவர்களுடைய அப்பா குடும்பத்தை விட்டு வெளியேறும் வரை எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு எமிலி இனெஸ் இருவரின் வாழ்க்கையும் சிதறுண்டு போகிறது. காரணம் குழந்தைகளைக் காக்க வேண்டிய தாய்க்கு மன அழுத்தம் அதிகரிக்க அவளால் இவர்களை வளர்க்க முடியவில்லை. எமிலி இளம் வயதிலேயே வீட்டுப் பொறுப்பை ஏற்கும் கட்டாயத்தில் இருக்க, அவர்களின் போராட்டத்தில் பங்குபெறாமல் பதின் வயதிலேயே இனெஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அதன் பின் அவர்களின் அம்மா தற்கொலை செய்து கொண்டாள் என்ற தகவல் தெரிந்தும் இனெஸ் திரும்ப வரவில்லை. கடிதம் பாதி வாசிக்கப்படும் போதே கடுங் கோபத்துடன் மூன்றாம் நபரின் முன் நம் குடும்ப விவகாரத்தை ஏன் எடுக்கிறாய் என எமிலியை திட்டியபடி அவ்விடத்தை விட்டு அகன்றாள் இனெஸ்.

கோபத்துடன் அந்த மாளிகையை ஒட்டியிருந்த தோட்டத்துக்குச் செல்கிறாள். முதிய தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக தோள் பிடித்து நடந்து செல்லும் காட்சியை தனது ஓவியக் குறிப்பு புத்தகத்தில் எழுதிவிட்டு, தூரத்தில் நடந்து செல்லும் அவர்களை அலைபேசியில் புகைப்படுமெடுக்கிறாள். அவளை பார்த்த டாரென் என்பர் இங்கு இவற்றுக்கு அனுமதி இல்லையென்பது தெரியுமா எனக் கேட்க, அவள் பேசாமல் இருக்கிறாள். இனெஸைப் போலவே கறுப்பு நிற கண்ணாடியை அணிந்திருந்தவர் அவளிடம் வலிய பேச்சுக் கொடுத்து அவளைப் பற்றிய விபரங்களைக் கேட்கிறாள். தனக்கு மூளையில் கட்டி, பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனவே கடைசியாக இங்கு வந்து தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன் மரணத்தையும் வரவேற்க தயாராகிவிட்டதாகக் கூறுகிறார். அவர் மீது பரிதாபம் ஏற்படவில்லையெனிலும் பேசுவதற்காவது ஒருவர் கிடைத்தாரே என்று இனெஸ் தன்னைப் பற்றி சில தகவல்கள் மட்டும் கூறுகிறாள். தனது அக்கா எமிலிக்காக வந்துள்ளதையும் சொல்கிறாள்.

அன்றிரவு தோட்டத்தில் அனைத்து நோயாளிகளும் சூழ்ந்திருக்க, ஒரு கவிதை வாசிக்கப்படுகிறது. அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணிக்காகவே அந்த கவிதை இரவு என்பதை அறிந்து கொள்கின்றனர். அங்கு இருக்கப் பிடிக்காத இனெஸ் அவ்விடத்தை விட்டு அகல்கிறாள். அவளுடன் எமிலியும் தொடர விடுதி அறைக்குள் இருவருக்கும் இணக்கம் ஏற்பட, எமிலி தனக்கு ஆண்களுடனான உறவில் ஆழமான அனுபவங்கள் இருந்ததில்லை எனக் கூறி தங்கையின் அனுபவம் குறித்து விசாரிக்கிறாள். இதையெல்லாம் எப்படி பகிர்ந்து கொள்வது என முதலில் வெட்கப்பட்டாலும், அவள் தனது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்று ஒரு சம்பவத்தை விவரிக்கிறாள். சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த எமிலி ஒரு கட்டத்தில் உறைந்து போகிறாள்.

அடுத்த நாள் உணவருந்தும் சமயத்தில் இருவரும் எதையோ பேசிக் கொண்டிருக்க திடீரென்று உணர்வு வயப்பட்ட நிலையில் எமிலி இனெஸிடம் நீ எப்போதும் எதிலிருந்தும் தப்பித்துப் போவதையே விரும்புகிறாய் என கூச்சலிடுகிறாள். என்னவென்று இனெஸ் உணரும் முன் அவளை வசைமொழிகிறாள் எமிலி. நம் அம்மா தற்கொலை செய்து இறந்த சமயத்தில் உன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தை நீ அனுபவித்துக் கொண்டிருந்தாய். நான் தனியாக அவளை அடக்கம் செய்தேன். உனக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது என்று கூறியபடி ஆவேசமாக அங்கிருந்த உணவுப் பதார்த்தை அவள் மீது வீசியெறிகிறாள் எமிலி. உடை முகம் எல்லாம் இருவரும் சண்டையிடுவதைப் பார்த்த மரினா அங்கு வந்து எமிலியிடம் ஆறுதல் வார்த்தைகள் கூறி அறைக்கு அழைத்துச் செல்கிறாள். பின் தொடர்ந்து வந்த இனெஸிடம் மேலும் கோபத்துடன் தன் ஆற்றாமையை கூறுகிறாள். இனெஸ் தொலைபேசி அழைப்புகளை எடுக்காத சமயத்தில் கூட அம்மா இனெஸை வெறுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளாள் எமிலி. தங்களைத் திரும்பிக் கூட பாராத ஒரு சகோதிரியின் மீதான அதீத அன்பினால் இந்த நொடி வரை அவளுக்காக காத்திருந்திருக்கிறாள். இறுதியாக இந்த அர்த்தமற்ற வாழ்க்கையை முடித்து கொள்ளும் தருவாயில்தான் அவளை அழைத்திருக்கிறாள் எனச் சொல்லி அழ, அனெஸ் மனம் கரைகிறது. தன்னால் வேறெப்படியும் இருக்க முடியவில்லை என்று கூறி எமிலியிடம் மன்னிப்பு கோருகிறாள். இருவரும் இப்படி சண்டை இட்டுக் கொண்டிருக்காமல் அடுத்த நாள் ஓரிடத்துக்குச் சென்று அமைதியாக உட்கார்ந்து பேச முடிவெடுக்கின்றனர். இதற்கிடையே டாரென் ஒரு பெண்மணியுடன் இணையத்தில் சிலவற்றை பதிவிட கூறிக் கொண்டிருக்க அது என்ன என்று ஆவலுடன் இனெஸ் கவனிக்கிறாள். ஒருவர் இறந்த பின் அவர்கள் வாழ்ந்த சமயத்தில் இருந்ததை விட நல்லவர்களாக அதில் பதிவு செய்திட முடியும் என்று டாரென் கூற, எமிலி இனெஸிடம் உனக்குத்தான் இது தேவை. நீயும் பதிவு செய்து கொள் என திட்ட இருவருக்கும் இடையே மறுபடியும் ஒரு சிறிய சண்டை ஏற்பட, கோபத்தில் எமிலி அங்கிருந்து ஓடுகிறாள். அப்போது ஒருவன் தோட்டத்தில் அமர்ந்து தன் கால்களை தானே குச்சியால் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அவன் பெயர் பிரயன். சகோதரிகள் அந்த விடுதிக்கு வந்த நாள் முதல் அவர்களை கவனித்து வருகிறான். எமிலி அங்கு நிற்காமல் தொடர்ந்து ஓடுகிறாள்.

நதிக்கரையோரம் உணவு எடுத்துச் சென்று பேசிக் கொண்டிருக்கும் போது மறுபடியும் சகோதரிக்குள் சர்ச்சை ஏற்படுகிறது. இந்த முறை கைகலப்பும் ஏற்பட, கட்டிப் புரண்டு சண்டையிடுகின்றனர். ஒரு கட்டத்தில் இனெஸ் எமிலியை தள்ளிவிட அவளுக்கு வெகுவாக மூச்சிரைக்கிறது. அப்படியே மயக்கமடைகிறாள். பதற்றமான இனெஸ் உதவி வேண்டி கதறுகிறாள். மயக்கத்திலிருக்கும் அவளின் தலைகோதிய மரினா இன்று அவளது உயிருக்கு ஏதும் அபாயம் இல்லை எனக் கூற இனெஸ் விடுபட்ட உணர்வுக்கு வருகிறாள். அங்கு பெருஞ்சப்தத்துடன் ஒரு ஹெலிகாப்டர் வரவே அது டாரென் தனது இறுதி யாத்திரைக்குத் தயாராகிவிட்டதால் கடைசி விருப்பமாக ஒரு இசைக் கச்சேரியை அன்றிரவு நிகழ்த்த கலைஞர்களை வரவழைத்திருந்தார் என அறிகிறாள் இனெஸ். அந்த ஹெலிகாப்டர் மறுநாள் திரும்பும் என்பதை அறிந்த அவள் புறப்பட முடிவு செய்கிறாள். மயக்கம் தெளிந்த நடமாடத் தொடங்கிய எமிலியிடம் தனது முடிவைச் சொல்ல அவள் எனக்கு தெரியும் உன்னை இனி வற்புறுத்தப்போவதில்லை எனக் கூறிவிட தன் உடைகளை எடுத்து வைக்கிறாள். எமிலியை சமாதானப்படுத்திய மரினா அவளுடன் நடனமாடினாள். நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என எமிலி விசாரிக்க தன் கணவருடன் சில ஆண்டுகள் முன்பு அங்கு வந்த அவள் அவருடைய மரணத்திற்குப் பின் புறப்பட்டுச் செல்ல மனமின்றி இங்கே தங்கிவிட்டதாகக் கூறுகிறாள். வெளியுலகில் தனக்கு எதுவுமில்லை என்று கூறுகிறாள். எமிலிக்கு பெரும் ஆறுதலாகவும் இழந்த தாயன்பைத் தறுபவளாகவும் மரினா இருப்பதை உணர்கிறாள்.

அன்றிரவு டாரென் ஒழுங்கமைத்திருந்த இன்னிசை நிகழ்ச்சி ஆரவாரமாக தோட்டத்தில் நடந்து கொண்டிருக்க, அனைவரும் அதைப் பார்த்து ரசிக்கின்றனர். எமிலி முந்தைய தினம் தோட்டத்தில் பார்த்திருந்த பிரயனுடன் (மார்க் ஸ்டான்லி) சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள். இதை தூரத்திலிருந்து பார்த்த இனெஸ் இன்னும் சில மணி நேரத்தில் இந்த கொடும் இடத்திலிருந்து தப்பிக்கப் போகிறோம் என்ற உணர்வில் இருக்கிறாள். பிரயன் எமிலியின் கரங்களைப் பிடித்து நான் இங்கு சந்தித்தவர்களுள் நீ மிகவும் அழகு என்றுக் கூற, எமிலி புன்னகைக்கிறாள். அந்த இரவு அவளுடன் இருக்க விருப்பம் தெரிவிக்கிறான் பிரயன். வேறு எந்த உள் நோக்கமும் தனக்கில்லை, தன் உடல்நிலையும் அதற்கு இடம் கொடுக்காது என அவன் அழைக்க மறுக்க மனமில்லாத எமிலி அவனுடன் செல்கிறாள். அவன் ஒரு சாக்கர் விளையாட்டு வீரன் என்றும் புகழ் பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கார் விபத்தில் கால்களை இழந்துவிட்டபின் வாழ்க்கையே இருள் அடைந்துவிட்டது. மரணம் வேண்டி இங்கு வந்துவிட்டேன் இன்னும் ஒருசில தினங்களில் இறப்பேன் என்று கூற எமிலி அவனிடம் உனக்கு கால்கள் மட்டும் தானே இல்லை உடல் இருக்கிறது என்று கூறுகிறாள். இந்தப் பக்கம் டாரென் நிகழ்ச்சி முடிந்து கடும் துயரத்தில் இருக்க, ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி அவருக்கு ஒரு கோப்பையை அளிக்கின்றனர்.

மறுநாள் இனெஸ் புறப்படும் சமயத்தில் மரினா அவளிடம் ஒரு விஷயத்தைப் பார்த்துவிட்டு புறப்படும்படி சொல்ல, ஹெலிகாப்டர் காத்திருக்கிறது என்று இனெஸ் தயங்குகிறாள். அது காத்திருக்கும் என்று கூறிய மரினா அவளை ஓரிடத்திற்கு வேகமாக அழைத்துச் செல்கிறாள். ஒரு அறையை காட்ட அவள் அதற்குள் நுழைந்தவுடன் கதவடைக்கிறாள். இனெஸ் அதிர்ச்சியடைந்து கதவை தட்ட மரினா திறக்க மறுக்கிறாள். ஹெலிகாப்டர் கிளம்பும் சப்தம் கேட்டு இனெஸ் அழத் தொடங்குகிறாள். சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறி ஓடத் தொடங்குகிறாள். அவளை மரினா பின் தொடர ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் திணறித் தவித்து உடைந்து அழத் தொடங்குகிறாள். அவளை மடியில் தாங்கிய மரினா அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். வீட்டை விட்டு வெளியேறியதற்குக் காரணம் தன்னால் அந்த துயரத்தை தாயின் மன அழுத்தத்தை அந்த வயதில் தாங்க முடியவில்லை என கூறி என் அம்மாவை இழந்ததில் எனக்கும் அதிக வருத்தம் அவளை இனி எங்கு காண்பேன் என்று கதறி அழுகிறாள். அவளை தேற்றி விடுதிக்கு அழைத்துச் செல்கிறாள் மரினா.

எமிலியிடம் சென்ற இனெஸ் அவள் தலையைக் கோதியபடி பழைய விஷயங்களை சிறுமிகளாக இருந்த போது அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பின் தருணங்களை நினைவு கூர்கிறாள். தங்கையின் மனமாற்றத்தை உணர்ந்த எமிலியும் அவளுடன் பேசி களிக்கிறாள். இத்தனை காலம் அவள் காத்திருந்தது இந்த பரிவுக்காகத் தான் என்பதை உணர்த்துகிறாள். எமிலியின் வாழ்க்கையின் கடைசி தினத்தன்று அவளை நீராட்டி, புத்தாடையை அணிவித்து ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறாள் இனெஸ். அங்கு அவளிடம் சம்மதம் கேட்டபின் ஒரு கோப்பை தரப்படுகிறது. நஞ்சு கலந்திருந்த அதனை அருந்திய பின் மீளா உறக்கம் என ஏற்கனவே அவள் அறிந்திருந்ததால் ஆயத்தமாகிறாள். எமிலியின் காலடியில் அமர்ந்து அவளுக்கு நீண்டதொரு முத்தம் தருகிறாள் இனெஸ். கோப்பையில் இருந்த திரவத்தை எமிலி அருந்திவிட்டு சிறிது நேரம் சலனமின்றி இருந்து பின் மெள்ள உறக்கத்தில் அமிழ்கிறாள்.

சத்தமில்லாமல் ஒரு மரணம் தன் கண் முன் அரங்கேறியதைக் கண்டு பதைத்து துடிக்கிறாள் இனெஸ். அங்கிருந்து வெளியேறி தடுமாறி நடந்து ஓரிடத்தில் விழுகிறாள். அவளை ஆறுதல்படுத்திய மரினா புறப்படும் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறாள். ஹெலிகாப்டரில் அவளுடன் இன்னொருவரும் பயணிக்கிறான். அவன் எமிலியின் நண்பன் ப்ரயன். கிளம்புகையில் மரினா எமிலி ஒப்படைக்கச் சொன்ன ஒரு கடித உறையைப் பிரிக்கிறாள். அதில் அவர்களுடைய அம்மாவின் மோதிரம் இருந்ததைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போகிறாள் இனெஸ். மெள்ள ஹெலிகாப்டர் உயரத்தில் பறக்கத் தொடங்க, இனெஸ் அயச்சியிலும் துயரிலும் ஆற்றாமையிலும் ஒருவித விடுதலையுணர்வுடனும் கண் மூடுகிறாள்.

மரணத்தைப் பற்றி இப்படியொரு பக்கத்தை காண்பிக்கத் துணிந்த இயக்குநர் லிசாவிற்கு உலகத் திரை ரசிகர்கள் பாராட்டினாலும், ஹாலிவுட்டில் இத்திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. திரைப்பட விழாவில் கவனம் பெற்றிருந்தும், ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ள அலிஷா, மற்றும் பிரபல நடிகை ஈவா க்ரீன் நடித்திருந்தும் இப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெறவில்லை. காரணம் இதன் திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ எதிர்ப்பார்த்த அளவு சம்பவங்களோ இல்லாதது என விமரிசகர்கள் குறைபட்டிருந்தனர். அலிஷா விகாண்டர் தனது சொந்த தயாரிப்பில் வெளியிட்டிருந்த இந்தப் படம் அவரைப் பொருத்தவரையில் தனது திரை வாழ்வில் முக்கியமான படமெனவே கருதுகிறார். இயக்குநர் லிசாவுடன் முன்பு இரண்டு படங்களில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. குழந்தை நட்சத்திரமாக இருந்த அலிஷா விகாண்டரை வெள்ளித் திரைக்கு ’ப்யூர்’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தியது லிசா என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா துயரையும் கரைத்துவிடக் கூடிய மரணம் ஒருவருக்கு விடுதலையாகவும் அவருடன் பயணிப்பவர்களுக்கு கடும் துயரமாகவே இருக்கும். தனது மரணத் தேதியினை அறிந்தவர்களின் மனத்துயர் என்பது வார்த்தைகளுக்குள் அடங்காது. ஆனால் அவர்கள் எஞ்சியிருக்கும் நாட்களை புத்தம் புதிதாக ஒரு குழந்தையின் மனநிலையுடன் அணுகுவது அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் அறியத் தருகிறார் லிசா. அதிக ஓசையின்றி இரைச்சலின்றி தீவிரமான கருத்தாடல்களுடன் ஒரு படத்தைப் பார்க்க விரும்புவோர்க்கு இந்தப் படம் ஏற்றது.

- உமா பார்வதி

Pin It