புதன் 25 ஏப்ரல் 1945 மதியம். 

நடந்ததை மீட்டுப் பார்க்கின்றேன்; இரவு ஒரு மணிக்கு நிலவறையிலிருந்து முதலாம் மாடிக்குப் போனேன். பாமசிஸ்ற்காரியின் கதிரையில் படுத்து தூங்கிவிட்டேன். திடீரென குண்டுகள் விழத்தொடங்கியது. வானத்தில் விமானங்களின் முற்றுகை. நித்திரையின் பிடியிலிருந்து விடுபடமுடியாது நான் சோபாவிலேயேக் கிடந்தேன். கண்ணாடி சன்னல்கள் சிதறிப்போய் இருந்தன. பொசுங்கும் நாற்றத்துடன் காற்று வீசியது, போர்வை ஏதோ உலோகக்கவசம் போல் பாதுகாப்பானதென நினைப்பு வேறு. 

குண்டுவீச்சின்போது போர்வையுள் பதுங்கிக்கொள்வது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை ஒருமுறை டாக்டர் எச் சொன்னது எனது ஞாபகத்திற்கு வந்தது. குண்டுவீச்சின்போது போர்வையுள் காயப்பட்ட பெண் ஒருத்திக்கு வைத்தியம் செய்த அனுபவத்தை சொன்ன அவர் காயங்களினுள் போர்வைக்குள் அடைக்கப்படும் இறகுகளின் துகள்கள் ஆழமாகப் போய் படியும் அதனை எடுப்பதென்பது இயலாத காரியம் என விபரித்திருந்தார். அதீத களைப்பு சிலவேளைகளில் மரணபயத்தை மிஞ்சுவதும் உண்டு. இப்படித்தான் முன்னரங்கு இராணுவமும் எந்தச்சேற்றிலும் சகதியிலும் படுத்து உறங்குவார்கள். 

ஏழுமணிபோல் நித்திரையால் எழுந்தேன். அதிரும் சுவர்களுடன் அந்தநாள் தொடங்கியது. யுத்தத்தின் பிடி இறுகிக்கொண்டு வருகிறது காஸ், தண்ணீர் எதுவும் இல்லை. சிலநிமிடம் கண்மூடி இருந்தபின் படிக்கட்டுகளில் தலைதெறிக்க ஓடி எனது அறைக்குப்போனேன். கலைக்கப்பட்ட தனது குகைக்குள் வந்த மிருகம்போல் அறையுள் பூட்டிக்கொண்டு அவசர அவசரமாக பின்வாங்களுக்கு தயாரானேன். படுக்கைவிரிப்பு, உடலைக் கழுவுவதற்கென சில பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் பார்மசிஸ்ரின் வீட்டுக்கு ஓட்டம். எங்கள் இருவருக்குமிடையில் பிரச்சினைகளற்ற உறவு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவர்மீதான மற்றையவரின் புரிதல் விரைவில் வந்துவிடும். 

இரண்டு கைகளிலும் வாளிகளுடன் செடிகள் நிறைந்த தோட்டத்தின் பைப்படிக்குப்போனேன்.சூரியனின் கதிர்கள் சூடாகப் பூமியைத்தொட்டன. அடிபைப்பின் நீண்ட, பாரமான கைபிடி ஒவ்வொருவரும் அடிக்கும்போதும் கிரீச்சிடும் சத்தத்துடன் அசையும். கால்மணி நேரத்தில் வழியும் வாளியுடன் திரும்பினேன். “ நாங்கள் பாரம் தூக்கும் அழகிய கழுதைக்குட்டிகள்” (நீட்சே என நினைக்கிறேன்). பட்டர்க்கடையில் இலவச பட்டருக்காக ஒரேகூட்டம். இறைச்சிக்கடையிலும் முடிவில்லா வரிசை எல்லாமே ஆண்கள் கூட்டம். ஒருவருக்கு அரைலீற்றர் பிரண்டி, முடிந்தால் கிடைக்காது. 

இன்னுமொருதடவை தண்ணீர் எடுக்கப்போய் திரும்பிவரும்போது குண்டுகள் விழத்தொடங்கின. சினிமாவிற்குமுன் உள்ள புல்வெளியில் தூசியும் புகையும் தூண்போல் மேலே எழுந்தது. இரண்டு ஆண்கள் குண்டுவீச்சிலிருந்து தப்ப தரையோடு தரையாக வீழ்ந்தார்கள். பெண்கள் வீடுகளை நோக்கி ஓடினர். நானும் படிகளினூடு ஒரு நிலவறைக்குள் புகுந்துகொண்டேன். அந்நிலவறையுள் வெளிச்சத்தின் அடையாளங்கூட இல்லை. வாளியையும் கைவிடவில்லை, விட்டால் யாராவது தூக்கிப்போய்விடுவார்கள். எதுவுமே தெரியவில்லை ஒரே இருட்டு. “ கடவுளே, கடவுளே…” ஒரு பெண்ணின் குரல், மீண்டும் அமைதி. 

யாரோ ஒருத்தி கடவுளை வேண்டுகின்றாளோ? இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என் ஞாபகத்திற்கு வந்தது; 3000 பேர்கள் வசிக்கும் சிறிய கிராமம். சேமக்காலைக்குச் செல்லும் வழியில் இருப்பதைத்தவிர அக்கிராமத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. பலவித சாமான்கள் விற்கும் கடை, அதன்கீழ் உள்ள நிலவறையினுள் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. பெண்கள்( அக்கிராமத்தில் ஆண்கள் இல்லை என்றே சொல்லலாம்) செபமாலை சொல்லிக்கொண்டிருந்தனர். உணர்ச்சியற்ற குரலில் அவர்களது வேண்டுதல் இன்னும் என் காதில் ஒலிக்கின்றது. 

“ …எங்களுக்காக நீர் பிடிபட்டீர்…” எங்கள் பிதாவே சருவேஸ்வரனே என்று தாழ்ந்த குரலில் முணுமுணுப்பு “ ஓம் மனி பத்மே கூம்”என்ற திபேத்தியர்களின் இடையறா மந்திர உச்சாடனம்போல் ஒலித்தது. இந்த வேண்டுதல் ஒலிக்கிடையில் இடையிடையே விமானங்களின் உறுமல் சத்தம். ஒருமுறை குண்டுவிழுந்து வெடிக்க மெழுகுதிரிச்சுவாலை நடுங்கியது. திரும்ப வேண்டுதல் ஒலி “…எங்களுக்காகப் பாரச்சிலுவை சுமந்தீரே…” செபிப்பதால் மனதிற்கு கிடைக்கும் ஆறுதல், உணர்வுகள், செபத்தில் கிடைக்கும் நன்மைகள் எல்லாவற்றையும் அன்றே கிழக்கு டொச்லாந்தில் நேரடி அனுபவமாகப் பெற்றேன். அன்றிலிருந்து நான் எந்த நிலவறைச் செபக்கூட்டங்களுக்கும் போவதில்லை. வாடகைக் குடியிருப்பான இந்த நான்குமாடிக் கட்டிடத்தில் கூட்டுச்செபம் சொல்லுமளவிற்கு யாராவது ஒன்றுகூடும் வாய்ப்பில்லை. செபிக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்ட யாரோ “ கடவுளே என் கடவுளே” என முணுமுணுத்திருக்க வேண்டும். வாய்ப்ழக்கத்தில் சொற்கள் உதிருமேயன்றி அர்த்தம் என்ன என்பதில் யார் கவனமும் பதிவதில்லை. 

“ துன்பம் செபத்தின் தேவையை கற்பிக்கும்” என்ற பழமொழியைக் கேட்டாலே வெறுப்புத்தான் வரும் “ துன்பம் கெஞ்சவைக்கும்” என்றுதானே அதன் அர்த்தம். மகிழ்ச்சியான தருணங்களில் செபிக்காதவன் துன்பவேளையில் செபிப்பது பிச்சை கேட்பதை தவிர வேறொன்றுமில்லை. 

“மகிழ்ச்சி வேண்டுதலின் தேவையைக் கற்பிக்கும்” பழமொழி ஏதாவது இருக்கின்றதா? சாம்பிராணியின் புகையைப்போல வேண்டுதல் தன்னெழுச்சியாக மனதிலிருந்து கிளம்ப வேண்டும். இதுகூட வெறும் கணிப்புத்தான். செபித்தலும் பிச்சைகேட்பதும் ஏறத்தாள ஒன்றுதான் என்று எனது மொழியின் சொல்லமைப்பும் சொல்கிறது. தேவாலய வாசல்களில் கோவில்மணியின் ஓசையைப்போல் பிச்சைக்காரரின் குரல்களும் கேட்ட முன்னொருகாலம் இருந்தது. கடவுளின் இரக்கமும் அரசனின் கருணையும் ஒன்றென்பதுபோலும், அரசன் கடவுளின் வேலையை பூமியில் செய்கின்றான் என்பதைப்போல் கோவிலின் உள்ளே செபமும் வெளியே பிச்சையும் அச்சமூக சாட்சியாக இருந்திருக்கிறது. நிலவறை இருட்டின் பயத்தின் தேவைக்காக தனிப்பட்டமுறையில் நான் இதுவரை செபிக்கவில்லை இனிமேல் செபிப்பேனோ தெரியாது.மற்றவர்கள் செபிப்பதை எதிர்ப்பவளா என்றால் இல்லை என்பதுதான் பதில். 

தண்ணீர்வாளியுடன் திரும்பிய என்னை இறைச்சி வாங்க அனுப்பினாள் பார்மசிஸ்ரின் மனைவி. இறைச்சியின் வரத்து அவ்வப்போது தடைப்படுவதுபற்றி பெரிய சர்ச்சை. போரைவிட இறைச்சித்தட்டுப்பாடு பெண்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. இதுதான் பெண்களின் பலம் உடனடித்தேவை எதுவோ அதுவே எங்களின் பிரச்சினை. உடனடித்தேவைகளில் மூழ்கிவிடாது எதிர்காலக் கற்பனைகளில் மூழ்கிவிடமுடியுமானால் நன்றாகத்தானிருக்கும்.இன்று இறைச்சிப் பிரச்சினை மற்றைய பெரிய பிரச்சினைகளைப் பார்க்காது எங்கள் சிந்தனை முழுவதையும் நிரப்பி விடுகிறது.

மீண்டும் நிலவறைக்குள், மாலை 6 மணி. எங்கள் கட்டிடத்திற்கருகாமையில் எங்கோ ஒரு கட்டிடம் குண்டுவீச்சில் சிதைந்திருக்கவேண்டும், நான் போர்த்தியிருந்த கம்பளிப்போர்வையில் சுண்ணாம்புச் சிதறல்கள் , அமைதியாகத்தூங்கமுடியாது நிலவறைக்கு ஓடிவந்தேன். பேக்கரியில் வேலைசெய்யும் ஒருவர், சினிமாத்தியேட்டருக்கு அருகே இருந்த பார்மசி குண்டுவீச்சில் நொருங்கிவிட்டதாகவும் உரிமையாளர் இறந்துவிட்டார் குண்டின் சிதறல்கள் தாக்கி இறந்தாரா அதிர்ச்சியில் செத்துப்போனாரா இதுவரை தெரியாது ஆனால் அப்பிரேதத்தில் இரத்தக்காயங்கள் எதையும் காணவில்லை என்றும் சொன்னார். மூன்று சகோதரிகளில் ஒருத்தி “அப்ப எப்படி மண்டையைப் போட்டான்” . இப்படித்தான் இப்போது பேசிக்கொள்கின்றோம். எங்கள் மொழியின் தரம் மிக மிகக் கீழே போய்விட்டது.வழமையாக வாயில் புளங்காத சொற்களெல்லாம் தாராளமாகப் பேச்சில் அடிபடுகின்றன. மனதில் உள்ள பயத்தை என்ன செய்வதென்று தெரியாத நிலையை இச்சொற்களை சொல்வதன் மூலம் சமாதானப்படுத்திக்கொள்கிறோம். எங்களை எதிர்நோக்கும் அபாயங்களையும் எங்கள் இழிநிலையையும் சொற்களினூடு பிரதிபலிக்கின்றோம்.

வியாழன் 26 ஏப்ரல் 1945 – காலை 11 மணி  

நடுங்கும் விரல்களுடன் எழுதுகின்றேன். குண்டுவீச்சில் சிதறிய சுண்ணாம்புத்துகள்கள் இன்னும் அடங்கவில்லை முப்பது நிமிடங்களுக்கு முன்பு நான்காவது மாடியில் குண்டு விழுந்தது எனக்கு மூச்சே நின்றுவிட்டது.நாலுகால் பாய்ச்சலில் கீழே இறங்கினேன். சுண்ணாம்புத்துகள்கள், கட்டிடச்சிதறல்கள், கண்ணாடித்துண்டுகள் என சிதலமாகக் கிடந்தது. ஒரு நிமிடத்திற்கு முன்பு வீடு, இப்போது குடியிருக்கமுடியாத இடிபாட்டுக் குவியல்.

ஓடிவரும்போதே ஒரு சமையல்பாத்திரம், துவாய், முதலுதவிமருந்துகளென கையில் எடுத்துக்கொண்டுதான் கீழே வந்தேன். சுண்ணாம்புத்துகள்களை சுவாசித்ததில் தொண்டை வறண்டுவிட்டது, குடிக்க எதுவுமில்லை. கணப்பு ரேடியேட்டர்கள் உடைந்து அதிகளவுநீர் வீணாகிப் போய்விட்டது. எங்களுக்கு குடிக்க… 

நடந்துவிட்ட நிறைய விடயங்களை நான் இன்னும் எழுதவில்லை. முதலில் நடந்ததை நினைவுக்கு கொண்டுவருகின்றேன். நேற்று மாலை 7 மணியளவில் யாரோ வந்து மூலைக்கடையில் புடிங்பவுடர் கொடுக்கின்றார்கள் என்று சொல்ல நானும் அவருடன் சென்று வரிசையில் நின்றபோது திடீரென இரசியக்குண்டுவீச்சு விமானங்கள். முதலில் வரிசையிலிருந்து யாரும் நகரவில்லை பின்பு பக்கத்தில் இருந்த கட்டிட இடிபாடுகளுக்குள்போய் நின்றார்கள். உடைந்த சுவரின் எச்சங்கள் எந்தப்பாதுகாப்பைக் கொடுத்துவிடப்போகிறது.பேர்லீன் வீதிப்பக்கம் புகையும் நெருப்புமாக இருந்தது.மீண்டும் ஒரு குண்டுப்பொழிவு. புடிங்கும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று நிலவறைக்கு ஓடிவந்தேன். “ சுவர்பக்கமாக ஓடு” என்றது ஒரு குரல். கட்டிட இடிபாடுகள் தெறித்துக்கொண்டிருந்தது, ஒருவழியாக புடிங்பவுடர் இல்லாவிடினும் நிலவறைக்கு வந்துசேர்ந்தேன். பொர்ரியேஸ் பெண் தன் மகள் மேலேயே நின்றுவிட்டாள் எனக்குறைபட்டுக்கொண்டாள். இந்தக் குண்டுமழையில் வீதியைக்கடந்து நிலவறைக்கு வர அவளால் முடியவில்லை. 

ஒன்றரைமணித்தியாளங்கள் கழிந்தபின் புடிங்பவுடரின்றி அவள் வந்துசேர்ந்தாள்.மூலைக்கடை நிலவறைக்குள் நெருங்கியடித்துக்கொண்டு நின்றதாகச்சொன்னாள். நிலவறையை நோக்கி ஓடுகையில் குண்டுகள் விழத்தொடங்கியதில் ஓர் இளைஞ்ஞனின் தலையில் உலோகத்துண்டுப்பாய்ந்து இறந்துபோனான், தான் அவனைக் கடந்துகொண்டுதான் நிலவறைக்குள் ஓடியதாகவும் தலையில் பட்ட காயத்திலிருந்து வெள்ளையாகவும் ரோஸ்நிறத்திலும் ஏதோ வடிந்தது என்றும் அவளது விவரணம் முடிந்தது. நாளை புடிங்பவுடர் மீண்டும் விநியோகிப்பார்கள், தேவையானளவு மீதமாகி கடையில் இருக்கும். 

மாலை 9 மணி நிலவறைக்குடிகள் நித்திரையில். பார்மசிஸ்ரின் மனைவி எனக்கும் படுக்கைபோல் ஒன்றைத்தயார்செய்து வைத்திருந்தாள். நிலவறையின் முன்பகுதியில் கூரையைத்தாங்கும் இரு மரக்குற்றிகளுக்கிடையில் இடம் போதாவிடினும் மென்மையான குளிர், குறைவான படுக்கை, இருந்தும் நித்திரையாய் போன நான் குண்டுகள் விழும் சத்தம் கேட்டு முழித்தேன். தொங்கிய எனது கையை எதுவோ நக்குவதுபோல் இருந்தது.நாயின் சொந்தக்காரி இன்று வரவில்லை, நானும் நாயும் மாத்திரம் நிலவறை முன்பகுதியில் இருந்தோம்.கூரையிலிருந்து மண்கொட்டியது, எவருடைய குரட்டைச்சத்தமும் கேட்காததால் எங்கள் பகுதி அமைதியாக இருந்தது.

காலை பைப்படிக்கு தண்ணீர் எடுக்கப்போனேன். பல நாட்களின்பின் அச்சடிக்கப்பட்ட பத்திரிகை பேக்கரி சன்னலில் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். செவ்வாய்கிழமைக்கான இராணுவ அறிவிப்பும் அப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது. இரண்டுநாட்கள்பிந்திய செய்தி, அதில் அ). எதிரிகள் எங்களை நெருங்கிவிட்டார்கள். 

ஆ).முன்னரங்கிற்குமேலும் படையணிகள் அனுப்பி வைக்கப்படும். 

அத்துடன் கோயப்பெல்சும் அடொல்வும் பேர்லீனில் தொடர்ந்தும் இருக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்கள். இன்னுமொரு செய்தியில் சோனன்பேர்க் ரெயில்நிலையம் இராணுவத்தினரால் நிரம்பி வழிகின்றது – அதில் பெரும்பாலானோர் இராணுவத்தை விட்டு ஓடிப்போகும் சிப்பாய்கள். 

நிலவறையில் காலை உணவிற்கான ஆயத்தங்கள் ஏறத்தாள எல்லோருமே ஒரு குடும்பம்போல் வேலைகளைப் பங்குபோட்டுச்செய்தார்கள். பெட்டிகளை அடுக்கி மேசை, பேப்பர்கள் போர்வைகளால் மேசைவிரிப்பு,கோப்பியை மரநெருப்பில் அல்லது மதுசாரவிளக்குகளில் சூடாக்கினார்கள். பட்டர், சீனி, மாமலேட் அவற்றிற்கான கொள்கலன்களில், சில்வர் கரண்டி என தடல்புடலான காலை உணவு. பார்மசிஸ்ற்விதவை கோப்பிக்கொட்டையை நசுக்கி சிறுதுகள்களாக்கி தன் சமையைலறையில் கோப்பி தயாரித்துக்கொண்டு வந்தாள். சிடு சிடு என்றே இருந்த பரபரப்பான நிலவறைக்குடிகளை இந்தக்கோப்பி சிறிது அமைதிபடுத்தும். 

பத்துமணியளவில் எங்கள் வீட்டுக்கூரையில் குண்டு விழுந்தது.எல்லோரும் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நிலவறைக்கு வந்தனர். பொர்ரியேஸ் பெண் தூணைக்கட்டிக்கொண்டாள், அவளது முகம் வெளிறிப்போய் இருந்தது. கம்பேர்க்காரி தனது பதினெட்டு வயது மகளையும் இழுத்துகொண்டு வந்தாள். மகளின் தலைமயிர்களுக்கிடையிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஓடிவரும்போது அவள் காயாப்பட்டிருக்க வேண்டும். 

சிறிது நேரத்திற்குப்பின் வென்னீர்கணப்பு ரேடியேட்டர் உடைந்து தண்ணீர் வழிவதாக யாரோ சொல்ல நாங்கள் மேலே ஓடினோம். அதற்கிடையிலும் சில எதிர்ப்புக்களும் வந்தன. தபாலதிபரின்மனைவி தனது கணவன் இதயநோயாளி எனவே அவர் உதவிக்கு வரமுடியதெனக்கத்தினாள். கார்டன்சிமித்தும் தனது கையை மார்பில் அழுத்தி சைகையில் தன்னாலும் முடியாது என்றார். ஏனைய சிலரும் உதவிக்கு வரப்பின்நின்றனர். செல்வி பெகன் “ ரேடியேட்டர் உடைந்து உங்கள் அறைகளெல்லாம் தண்ணீர்” கத்திக்கொண்டே மேலே ஏறத்தான் பதினைந்துபேர்கள் அவளைத்தொடர்ந்தனர். அவர்களைத்தொடர்ந்து நானும் போனேன்.

மூன்றாவது மாடி நீரால் நிறைந்து ஒரு சிறிய குளம்போல் காட்சியளித்தது.ரேடியேட்டரிலிருந்து நீர் வெளியேறும் இரைச்சல் தொடர்ந்து கேட்டது. நான்காவது மாடியிலிருந்து நீர் சொட்டுச்சொட்டாகக் கசிந்தது .முதலில் காப்பெற்றுகளை பிய்தெடுத்துவிட்டு தண்ணீரைச் சேந்தி சன்னலூடாக வீதியில் ஊற்றினோம்.

தொப்பையாக நனைந்து களைத்துப்போய் நிலவறைக்கு வந்தோம். நனைந்த கால்மேசுடன் உட்கார்ந்து யோசித்தேன். இந்த விடயத்தைச் சரியாகக் கையாண்டோமா? அல்லது உணர்ச்சிவசப்பட்டுவிட்டோமா? புரியவில்லை ஆனால் எப்படிப்பார்த்தாலும் எல்லோரும் ஒன்றுகூடி இதைச் செய்திருக்கின்றோம். லெப்டினன் பெகன் முன்னே ஓட தன்னார்வ இராணுவம் அவளைப் பின்தொடர எதிரியின் குண்டுவீச்சு, உயிர் ஆபத்து எதனையும் கணக்கில் எடுக்காது தாக்கப்பட்ட எங்கள் நிலையை தக்கவைத்துக்கொண்டோம். கண்ணைமூடிக்கொண்டே கட்டளையை நிறைவேற்றியிருக்கிறோம். எங்களுக்கு என்ன நடக்குமென்று பயம் கூட இல்லை. அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அதுபற்றிய பயமோ கவலையோ எங்களிடமில்லை. வீரம்பற்றிய விவரணத்தில் இதுபற்றி ஏதும் எழுதியும் இல்லை. இப்படியானவற்றிற்கு என்ன பதக்கம் வழங்கலாமென்று யாரும் நிர்ணயமும் செய்யவில்லை. போரின் நெருக்குவாரத்தில் அலைபாயும் நேரத்தில் மனிதன் எதையாவது செய்து நிலமையை சமாளிக்கின்றானே தவிர யோசிப்பதில்லை என்பதுமட்டும் எனக்குப் புரிந்தது. பயம் எனபது அவனிடம் இருக்காது ஏனெனில் கவனமெல்லாம் அவன் என்ன செய்துகொண்டிருக்கின்றான் என்பதிலேயே குவிந்திருக்கும் வேறொன்றையும் அவனால் அந்நேரத்தில் பார்க்கவோ உணரவோ முடியாது. 

நாங்கள் துணிச்சலானவர்களா? அப்படித்தான் பொதுவாகச் சொல்வார்கள். பெகன் வழிநடத்தியா? ஒரு வீராங்கணையா? வலு கவனமாக வீரம்பற்றியும் போருக்கான துணிவுபற்றியும் மீளச் சிந்திக்கவேண்டியுள்ளது. இங்கு வீரம்பற்றிய புனைவு உடைந்துபோகிறது. முதல் அடி எடுத்து வைத்துவிட்டால் மிகுதி தானாகவே வந்துவிடுகிறது.

மூன்றாம் மாடியில் நீர் நிறைந்திருக்க அதனை அகற்றி வீட்டின் சேதத்தை மட்டுப்படுத்துவதில் என் கவனம் இருந்ததே ஒழிய குண்டுவீச்சில் எனது நான்காம்மாடிவீட்டிற்கு ஏதாவது நடந்திருக்கலாம் என்று மற்றவர்கள் சொல்லும்வரையில் அதுபற்றி எந்தவொரு எண்ணமுமே வரவில்லை. சேதம் ஏற்பட்டிருந்தாலும் விதவையின் வீட்டில் நான் குடியிருக்கலாம். தனியாக இருப்பதில் அவளுக்குப் பயமென்பதால் நானும் சேர்ந்திருப்பது அவளுக்குப் பெரியதுணை. முன்பு அவளின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவரை தேசியம் அழைத்ததால் படையில் சேர்ந்துவிட்டான்.அவன் இருக்கின்றானா? இல்லையா? யாருக்குத் தெரியும். உண்மையிலேயே இப்படித்தான் நாங்கள் சிந்திக்கின்றோம், ஆனால் யாரும் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள்.

நான்கு மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் நிலவறையில், மீண்டும் மூச்சுமுட்டியநிலை, நடுங்கும்விரல்களின் எழுத்து, ஆனால் எழுதுவதற்குமட்டும் என்னிடம் காரணம் உள்ளது.

நண்பகல் வெளியே சிறிது அமைதி, கதவீனூடு வெளியே வந்து நிலவறையின் ஈரலிப்பை உடலிலிருந்துவிரட்ட சூரிய ஒளியில் உட்கார்ந்தேன் எனக்கருகே பேக்கரிமாஸ்ரர். முன்பு இராணுவத்தினரை திரட்டி அனுப்பிய இடத்தில் இப்போது விமானப்படையினர் நிலைகொண்டிருந்தனர். அங்கிருந்து தோளில்மாட்டின் முள்ளந்தண்டுப்பகுதியுடன் ஒருவன் ஓடிவந்தான். மாட்டுத்துண்டிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது, ஓடிக்கொண்டே “ நிறையச்சாமான்களை அங்கு பகிர்ந்தளிக்கின்றார்கள் நீங்களும் போய் வாங்குங்கள்”.

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இருவரும் இராணுவதளத்தை நோக்கி ஓடினோம்.பேக்கரியில் வேலைசெய்யும் ஒருவரும் எங்களுக்குப் பின்னால். இவனுக்கு வேலையே எங்கு என்ன நடக்கின்றது எனப்பார்ப்பதுதான். சூரியனும் காயுது குண்டும் விழுகுது எனச் சொல்லிக்கொண்டு ஓடிவந்தான். ஒரு வீட்டின் மூலையில் தலைமுடி நரைத்த இராணுவத்தினர் முதுகை வளைத்து முகத்தை முழங்கால்களுக்கிடையில் வைத்தநிலையில் நிலத்தில் குந்தியிருந்தனர்.நாங்கள் ஓடிவருவதைக்கூட தலைநிமிர்ந்து அவர்கள் பார்க்கவில்லை. இது மக்கள்படை. இராணுவத்தளத்தின் முன்னால் கைகளில் கூடைகள், சாக்குகள்,பைகளுடன் பொருட்களை வாங்க சனம் கூட்டமாக நின்றனர். முதலில் அவசரமாக ஒரு கொறிடோரினுள் புகுந்த நான் அங்கு யாருமில்லாது குளிராகவும் வெறுமையாகவும் இருப்பதைப்பார்த்துவிட்டு இது பிழையான இடமென நிர்ணயித்துக்கொண்டேன்.

அவசரமாக திரும்பி ஓடிவந்த நான் “ இங்கே இங்கே” எனக்குரல்கள் கேட்ட இடத்தைநோக்கி ஓடினேன். ஓடும்போதே வழியில் கிடந்த பெட்டி ஒன்றையும் தூக்கிக்கொண்டேன்.

ஆட்களுடன் முட்டிமோதி தள்ளல்களையும் உதைகளையும் வாங்கிக்கொண்டு நகர்ந்து ஒரு நிலவறைக்குள் நெட்டித்தள்ளப்பட்டேன். இருட்டில் கும்பலாக சனம் இடித்தும் தள்ளியும் உதைத்தும் நோவில் கத்திக்கொண்டும் ஒரு கூட்டு மல்யுத்தத்தை நடாத்திக்கொண்டிருந்தனர். இங்கே யாரும் எதனையும் பகிர்ந்தளிக்கவில்லை என்பது தெளிவு நடப்பது சூறையாடல்.

யாரோ ரோச்லைற்றை அழுத்தி அணைத்ததில் தட்டுக்களில் பதப்படுத்தப்பட்ட உணவு போத்தல்களும் ரின்களும் இருந்ததைக்கண்டேன். மேற்தட்டுக்கள் எல்லாம் காலியாகிவிட்டன கீழ்பகுதிகள் மட்டும் இன்னும் வெறுமையாகவில்லை. குனிந்து தரையில் படுத்தவாறே கைகளால் தட்டுக்களைத் தடவிப்பார்த்ததில் ஐந்தாறு போத்தல்கள் தட்டுப்பட்டன.எடுத்துப்பெட்டிக்குள் திணித்துக்கொண்டேன். மீண்டும் தடவியபோது ரின் ஒன்று தட்டுப்பட என் விரல்களை காலால் உளக்கியபடி “ இது எனக்குரியது” சொன்னது ஓர் ஆண் குரல்.

எனது பெட்டியை எடுத்துகொண்டு கதவினூடாக பக்கத்து அறைக்குப் போனேன். சுவரின் வெடிப்பினூடாக மங்கலான வெளிச்சம், பாண்கள் என் கண்களில் பட்டன.வரிசையாக பாண்கள் அடுக்கியிருந்தது. இங்கும் தட்டுக்களின் மேல்பகுதி காலியாகி கீழே மட்டும் பாண்கள். தரையில் தவழ்ந்து தேடவேண்டிய அவசியமில்லை, யாரும் நோவில் அலறவுமில்லை. பாண்மணத்திலேயே தேடித்தேடி என் பெட்டிகொள்ளுமட்டும் நிரப்பிக்கொண்டேன். தூக்கமுடியாத பாரத்தைத் தூக்கிக்கொண்டு கொறிடோரின் இறுதியில் தெரிந்த வெளிச்சத்தின் உதவியுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறினேன்.

வெளியே வரும்போது பேக்கரிக்காரர் கண்ணில் பட்டார். அவரும் பாண்களை அள்ளிக்கொண்டு வந்தார். தான் கொண்டுவந்த பாண்களையும் எனது பெட்டிக்குள் வைத்தார். வீதியருகில் பெட்டியை வைத்துவிட்டு பேக்கரிக்காரர் தனது இரண்டாவது வேட்டையை முடித்துக்கொண்டு ரின் உணவுகள், பீங்கான் கோப்பைகள், தடித்ததுவாய்கள், இளநீல கம்பளிநூலில் பின்னப்பட்ட உறையுடனான உருளை விளக்கு என கைநிறைய பொருட்களை அள்ளிவந்தார். 

பேக்கரியில் வேலைசெய்யும் அந்தோனி மாட்டுத் தொடையுடனும் கைனி வையின் போத்தல்களுடனும் வந்தான். இருவருமே ஒரே குரலில் “ எல்லாமே முகாமில் கிடைக்கிறது; கோப்பி, சொக்கிலேற்,மதுபானங்கள். இராணுவத்தினர் நன்றாகத்தான் அனுபவித்திருக்கிறார்கள். நம் சகோதரங்கள்!” எனப்பொருமிக்கொண்டே வீட்டுக்குள் போனார்கள். பெட்டியைக் காவல்காத்தபடி நின்ற என்னைநோக்கி ஒருவர் வந்தார். தனது கோட்டை சாக்குபோல அமைத்து அதனுள் மதுக்குப்பிகளை போட்டு நிரப்பி மேலே ஒரு முடிச்சும் போட்டிருந்தார். கண்களில் ஆவல் பொங்க அவர் எனது பாண்பெட்டியைப் பார்த்தபடி “ இதில் ஒன்றை எனக்குத்தருவீர்களா” எனக்கேட்க நான் “ ஆம் – மதுக்குப்பிக்குமாற்றாக”. பண்டமாற்று நடைபெற இருவருக்கும் மகிழ்ச்சி.

போத்தல்களின் கழுத்து சுவரில் தட்டி உடைக்கப்பட்டன. அடங்கா ஆவலுடன் மிடறு மிடறாக வாயில் ஊற்றிக்கொண்டனர். நிலமை மாறி முரட்டுத்தனம் மெல்ல மேலேழத்தொடங்கியது. நானும் அந்தனியும் பெட்டியைத்தூக்கிக்கொண்டு வீட்டிற்கு நடையைக்கட்டினோம்.

பெட்டிமுழுவதும் பொருட்கள் கனம் வேறு, இருவராலும் சரியாகப் பிடிக்கமுடியாததால் அவ்வப்போது வைத்து வைத்துதான் தூக்கிப்போனோம்.தொண்டை வரண்டு எனக்குத்தாகமாக இருந்தது. சிவப்பு வையின் போத்தல் ஒன்று பெட்டியிலிருந்து தவறி விழுந்து கழுத்து உடைந்துபோனது( நிறைய பேர்குண்டர் வைன் போத்தல்களை கண்டெடுத்தேன் பிரான்ஸ் தயாரிப்பு). உடைந்த போத்தலை எடுத்துக்குடித்ததில் கீழ் உதட்டில் காயம் பட்டதைக்கூட நான் உணரவில்லை.இரத்தம் கழுத்துவரை வடிவதைக்கண்ட அந்தோனி தனது கைக்குட்டையைத் தந்து துடைக்கச்சொன்னபோதுதான் நான் உதட்டைக் காயப்படுத்திய விடயமே எனக்குத் தெரிந்தது. களைத்துப்போய் பேக்கரிக்காரர் எங்கள்பின்னே வந்தார். குதிரைச்சாணம்பூசிப் பதப்படுத்தப்பட்ட நீலநிறத்தில் மாட்டுத்தொடை, அதனை அவர் ஒரு குழந்தைபோல் தூக்கிக்கொண்டு வந்தார். வெய்யில் கடூரத்தில் வியர்வை வழிந்தது.அருகில் விமானங்களின் குண்டுவீச்சுச் சத்தம் அதற்குப் பதிலளித்த துப்பாக்கிகளின் டப்… டப்… டப்…

வீட்டு வாசலில் எங்கள் வேட்டையைப்பிரித்தோம். பேர்குண்டர் வையின் ஐந்து போத்தல்கள், பதனிடப்பட்ட மரக்கறிசூப் மூன்றுபோத்தல்கள், ஸ்ரைன்காகர் மதுபோத்தல் ஒன்று, கோமிஸ்பாண்கள் நான்கு, பச்சைக்கடலைமா ஆறு பக்கற் ஒரு ரின் உணவு லேபல் இல்லாததால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இவை பேக்கரிக்காரர் எனக்குத்தந்தது எனதுபங்கை விதவையின் முதல்மாடிக்குச் சுமந்துசென்றேன்.

விதவையின் சமையல் அடுப்பு பலர்சேர்ந்து வாங்கியதால் சமையலுக்குப் பலர் அங்கு கூடுவர். அடுப்பின் இடப்புறத்தில் கையில் உருளைக்கிழங்குக்களியுடன் அவ்வப்போது ஓரிரண்டு கரண்டிகளை அவசரமாக வாயுள்போட்டுக்கொண்டே எனது வீரசாகசங்களை அங்கு கூடியுள்ளவர்களுக்குச் சொன்னேன். வெளியே தொடராகக்குண்டுவெடிப்புகள். ஆச்சரியத்தில் விரிந்தவிழிகளுடன் அங்கிருந்தவர்கள் எனது வேட்டைப்பொருடகளைப் பார்த்தனர்.யாரும் இராணுவமுகாமுக்குப் போகத்துணியவில்லை போனாலும் அங்கு எல்லாமே சூறையாடப்பட்டு வெறுமையாகத்தானிருக்கும். 

பலமணிநேரங்களுக்குப்பின் மாலை 6 மணியளவில் மீண்டும் நிலவறையில். அதற்குமுதல் ஆழ்ந்ததூக்கம், நானும் விதவையும் உடைந்த வையின் போத்தலைக்குடித்து முடித்ததில் நல்ல வெறி, தலைகிறு கிறுப்புடனும் வாய்கசப்புடனும் நித்திரையால் எழும்பிய எனக்கு பெற்றோல்மக்ஸ் மங்கலாக எரியும் பாதாள உலகில் யதார்த்தத்துடன் என்னைப்பொருத்திக்கொள்வது கடினமாக இருந்தது. “ இராணுவக்குடியிருப்பில் இருந்து உருளைக்கிழங்குகளை எடுக்கிறார்கள்” யாரோ அவசரத்தொனியில் சொன்னதும் எல்லாம் விலகி நடைமுறையினுள் நுழைந்துகொண்டேன்.

நானும் விதவையும் குடியிருப்பைநோக்கி ஓடினோம்.எதிரிக்கு இடைவேளைபோலும் அமைதியாக இருந்தது. நண்பகலும் இப்படித்தானிருந்தது திடீரென குண்டுகளும் துப்பாக்கிச்சூடுகளும் தொடங்க வீதியை விட்டு ஓடினோம். இருபெண்கள் குழந்தையை வைத்து தள்ளும் வண்டியில் ஒரு சிறிய பீப்பாவை வைத்துத் தள்ளிக்கொண்டு போனார்கள்.வினாகிரியில் பதப்படுத்தப்பட்ட சவுக்கிரவுட் (கோவா) ரின் வாசம் மூக்கைத்துளைத்தது. இளைஞ்ஞர்களும் முதியவர்களும் விரட்டி விரட்டி வேட்டையாடப்படுபவர்களைப்போல குடியிருப்பைநோக்கி ஓடினார்கள்.

நானும் விதவையும் கிடைத்த வாளிகளை ஆளுக்கு இரண்டாக கைகளில்தூக்கிக்கொண்டு ஓடினோம். வீதியில் காலால் மிதிபட்டு நசிந்த உருளைக்கிழங்குகள், அழுகிய கரட் எனச்சிதறிக் கிடந்தது.அதுவே எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.குடியிருப்பின் நுளைவுப்படிகளில் இரத்தம் சிந்திக்கிடந்தது. பயத்தில் நான் நின்றதைக்கண்ட விதவை “ மார்மலேற் !”. உண்மைதான் சிறு மார்மலேற் பீப்பாக்களை படியில் உருட்டி வீதிக்குக் கொண்டுவந்தார்கள்.

சனம் நிரம்பி வழிந்த கொறிடோரினூடு இடித்துத் தள்ளிக்கொண்டு படிகளில் ஏறி அழுகி நாற்றமடிக்கும் உருளக்கிழங்குக்குவியலுக்கு வந்துசேர்ந்தோம். கூளாகிப்போன உருளைக்கிழங்குகளை கைகளால் வாரி எறிந்துகொண்டே நல்லவை கிடைக்கின்றனவா எனத்தேடினோம். கரட், முள்ளங்கியினக்கிழங்கு தவிர்த்து உருளைக்கிழங்கிலேயே குறியாக இருந்தோம். வாளிகளில் உருளைக்கிழங்குகளை நிரப்பிக்கொண்டு கிளம்பியபோது அரைவாசி நிரம்பிய உருளைக்கிழங்குச்சாக்கைக் கண்டோம். யாருக்குச்சொந்தமானது என்ற கேள்வியே இல்லாமல் அதனையும் இழுத்துக்கொண்டு படிகளில் ஏறி வீதிக்கு வந்து வீட்டில் முதல்மாடியில் உருக்கிழங்குகளைப் பத்திரப்படுத்தினோம். 

குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிகளின் ஓசைகளும் தொடங்கியிருந்தும் எவரும் அதைபற்றிக் கவலைப்படாமல் சூறையாடுவதிலேயே எல்லோரும் உற்சாகமாக இருந்தனர். மீண்டும் ஓடிப்போய் வாளிகளை நிரப்பிக்கொண்டு திரும்பி வந்தோம். 

உரிமையாளர்கள் விட்டுச்சென்ற கடைகளும் சூறையாடப்பட்டன. தலைமுடிவெண்மையான முதியவர் இழுப்பறை ஒன்றை சுமந்தவாறு கடையொன்றிலிருந்து வெளியே வந்தார். இழுப்பறை நிறைய சவர்க்காரத்தூள்பக்கற்றுக்கள் இழுப்பறையின் முகப்பில் “ அரிசி” என எழுதியிருந்தது. 

எங்கள் முதல்மாடியில் வரவேற்பறைசோபாவில் உட்கார்ந்திருந்தோம்.கைகள் விறைத்துப்போயிருந்தன, கால்களில்நடுக்கம். சன்னல்களின் உடையாத கண்ணாடிகள் அதிர்ந்தன.உடைந்த கண்ணாடிகளினூடு சூடான காற்று அறையினுள் எரியும் வாடையுடன் வீசியது. சிலவேளைகளில் வும்ம்ம்ம்ம்! என எதிரொலியுடன் நீண்ட சத்தம், கனரக ஆயுதத்தின் முழக்கம். பின்பு பாங் நேரம் குறைவானாலும் காதின்செவிப்பறையை அழுத்தும் சத்தம். இன்னுமொருசத்தம் வெகுதொலைவிலிருந்து கினக்கவும் கினக்கவும் எனக்கேட்கும் பின் விசில்போல் சத்தம் அதையடுத்து வெடிக்கும் சத்தங்கள் கேட்கும். எனக்கு இது என்ன சத்தமென்று தெரியவில்லை. விதவை ஸ்ராலின் ஓகன்(பல்குழல் எறிகணை) என்றாள். இரசியர்களின் ஸ்ராலின் ஓகன். இரசியர்கள் இதுவரை பல குண்டுகளை ஒரேநேரத்தில் வீசவில்லை. அவர்களது குண்டுகள் ஒவ்வொன்றாகத்தான் வந்தன.

நானும் விதவையும் மூலையிலிருக்கும் கடைவரை போய்வர வேண்டியிருந்தது. இதுவரை அந்தக்கடை திறந்து வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.நேற்று அந்தக் கடையிலும் குண்டு விழுந்ததால் திறந்திருக்குமா என்ற சந்தேகம்.புடிங்பவுடர் கிடைத்தால் வாங்கலாம் என்ற எண்ணம். கடைதிறந்திருந்தது வாடிக்கையாளர்களும் இருந்தார்கள் வியாபாரமும் நடந்துகொண்டிருந்தது. விற்பனையாளன் உரிமையாளன் எல்லாம் ஒருவர்.கடையின் மேல்மாடியில்தான் அவரது குடியிருப்பும். புடிங்பக்கற்றின் விலை 38பெனிக், சரியான சில்லறை தந்தால் மாத்திரமே புடிங்பக்கற் கிடைக்குமென பிடிவாதம் பிடித்தார்.யாராவது சரியான சில்லறை கொடுக்காவிட்டால் கடைக்குள்ளும் வெளியே நிற்பவர்களிடமும் சில்லறை இருக்கா எனக்கேட்டுக்கொண்டே இருந்தார். எல்லா ஆயுதங்களும் எல்லா பக்கங்களிலும் சுட்டுக்கொண்டிருக்க சில்லறையாவது ஒன்றாவது.

வேடிக்கைப்பார்க்க மூலைக்கடையை கடந்து இறைச்சிக்கடைப்பக்கம் போனோம். எனது ரேசன் இறைச்சியை நான் இன்னும் வாங்கவில்லை.அங்கும் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.ஒருடசின் சனம் இறைச்சி வாங்க நின்றுகொண்டிருந்தார்கள். இந்த நேரத்திலும் இவ்வளவு சனமா? நல்ல பன்றித்துண்டு முறையாக நிறுத்துத் தந்தார்கள். 

கடையிலிருந்து இறங்கியபோது இராணுவ ட்றக் ஒன்று எங்களைக்கடந்துபோயிற்று. டொச் இராணுவத்தினர் நகரத்தின் மையத்தை நோகிப்போய்கொண்டிருந்தனர். வண்டிக்குள் இருந்தவர்களின் முகங்களில் எந்த உணர்வும் தெரியவில்லை தொலைதூரத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டே போனார்கள். “ இராணுவத்தைவிட்டுத்தப்பி ஓடுகிறார்களா?”ஒரு பெண் அவர்களைப்பார்த்து உரத்தகுரலில் கேட்டாள். யாரும் அவளுக்குப்பதில் சொல்லவில்லை. “ஆட்டம் முடிந்துவிட்டது நீங்களும் இப்போது தெருநாய்கள்தான்” தனக்குத்தானே பதில் சொல்லிக்கொண்டள்.

இப்போதெல்லாம் ஆண்கள் பற்றிய அபிப்பிராயம் என்னுள்ளும் மற்றையபெண்களிடத்திலும் மாறி வருவதை என்னால் உணரமுடிந்தது.அவர்களைப்பார்க்கவே பாவமாக இருக்கிறது பலமற்றவர்களாகவும் பாதுகாப்பிற்கு மற்றையவர்களில் தங்கியிருப்பவர்களாகவே ஆண்கள் இருந்தனர். பலவீனமான பாலினம். ஒருவகையான ஏமாற்றம் பெண்களின் அடிமனதில் பதியத்தொடங்கியது. ஆண்களால் கட்டியாளப்பட்ட பலமான ஆண்களைத்தூக்கிக்கொண்டாடுகின்ற நாசிகளின் உலகம் ஆட்டம் காணத்தொடங்க – அவர்களின் புனைவான “ஆண்” உருவகமும் உடையத்தொடங்கியது. முன்னையப்போர்களில் தந்தைநாட்டிற்காக கொல்வதும் கொல்லப்படுவதும் ஆண்கள்தான் என மார்தட்டிக்கொள்ள முடிந்தது. இன்று பெண்களாகிய நாங்களும் அதில் பங்கேற்கின்றோம். எங்கள் மனநிலையும் சிந்தனையும் மாறுகிறது ஆண்களை அவர்கள் சிம்மாசனத்திலிருந்து இறக்கி ஆண் என்ற காரணத்திற்காக மட்டும் அடிபனிய நாங்கள் இனிமேல் தயாரில்லை, இந்தப்போரின் முடிவில் பலதோல்விகளோடு ஆண் என்ற பாலினத்தின் தோல்வியும் சேர்ந்தே இருக்கும்.

நிலவறையில் இரவுணவு நேரம். ஒருசதுர மீற்றருக்கு ஒரு குடும்பம். ஒருபக்கத்தில் தேனீர் இன்னுமொருபக்கத்தில் உருளைக்கிழங்குக்களி. கம்பேர்பெண்ணின் மகள் கார்ப்புக்கத்தி சகிதம் சவுகிறவுட்டை சாப்பிடுகிறாள். அவளின் தலைக்காயத்தில் புதிய கட்டு. புத்தகக் கடைகாரரின் மனைவி “ உங்களுக்கும் சிறிதளவு பரிமாறட்டுமா” கார்டன் சிமித்தைக் கேட்க “ நன்றி அம்மனி சிறிது பரிமாறுங்கள்”. 

குருவிக்கூட்டை ஒருதுணியால் மூடியிருந்தார்கள். இராணுவத்தைவிட்டுத்தப்பி ஓடிவந்தவர், இரசியர்கள் சினிமாத்தியேட்டர்வரை வந்துவிட்டார்கள் என அறிவித்தார். எங்கள் இடம் இலகுரக ஆயுதங்களின் வீச்சுக்குள் வந்துவிட்டது. யாரும் இராணுவச்சீருடையுடன் நிலவறைக்குள் இருக்கக்கூடாதென முன்நாள் இராணுவத்தினன் கட்டளை ஒன்றைப்பிறப்பித்தார் – இராணுவச்சீருடையுடன் யாராவது இருந்தால் போர்க்காலச்சட்டங்களின்படி நாங்கள் கொல்லப்படலாமென விளக்கமும் தந்தார்.

பத்திரிகைச் செய்திபற்றி அவரவர் கருத்தை நிலவறைக்குடிகள் பரிமாறிக்கொண்டனர். இரண்டு பெரும்படைப்பிரிவினர் பேர்லீனைப் பாதுகாக்க அனுப்பிவைக்கப்பட்டதாக செய்தி சொன்னது. தெற்கே ஸ்சேனரில் இருந்தும் மற்றுமொன்று வடக்கிலிருந்தும் நகர்கிறதாம், ரெயன் பிறிற்சன் பேர்ணவ் ஓரியன் பேர்க் என்பன விடுவிக்கப்பட்டதாகவும் செய்தி மேலும் அறிவித்தது.

நாங்கள்? கலந்துகட்டிய உணர்வுகள் ஏறத்தாள அதிர்ச்சி. “ இராணுவம் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்கள் நடுவில் அகப்பட்டுக்கொண்டோம். மாதக்கணக்கில் நிலவறைக்குள் அடைந்துகிடக்கவேண்டுமா? எப்படிபார்ப்பினும் நாங்கள் தோற்றுவிட்டோம். இவானிடமிருந்து நழுவமுடியாது. அமெரிக்கன் வேறு வான்வழி வரப்போகிறான்.அவர்களின் தொடர்குண்டுவீச்சுக்களில் இருந்து கடவுள்தான் எங்களைக்காப்பாற்றமுடியும். நிலவறையினுள்ளே புதைந்து சாவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை”.

சாலைகளிலிருந்து வந்த செய்திகள் : மக்கள்படை விரட்டியடிக்கப்பட்டுவிட்டது. இவான் எங்களை நோக்கி வேகமாக முன்னேறுகின்றான். டொச் ஆட்லறிகள் எங்கள் பக்கம் வந்துசேர்ந்தது. அவர்களின் சூடுகளின் அதிர்வுகள் நிலவறையை கிடுகிடுக்க வைக்கின்றன. ஆறுபெண்கள் மேசையைச்சுற்றி உட்கார்ந்திருக்க விதவை தாரொட்காட்களை அடுக்கினாள்.மது உற்பத்தியாளனின் மனைவிக்கான காட்டின் பலன்கள் “ கணவன் தொடர்பில் ஏமாற்றத்தைச் சந்திப்பீர்கள் ( அவளின் கணவன் இன்றுவரை சிவப்புமயிர்க்காரியுடன் மது வடிசாலையிலேயே தங்கியுள்ளார்)”.

வயிறு நிறைய இன்று உணவு கிடைத்தது, உட்சாகமாக இருக்கின்றேன். இக்கணத்தில் பயத்தை நான் உணரவில்லை. சிந்தனை முழுவதும் கடுங்கோபமும் பேராசையும். விறைத்துப்போன முதுகு, களைத்துப்போன கால்கள் பெருவிரல் நகம் உடைந்துவிட்டது காயப்பட்ட உதடு எரிகிறது. “ என்னைக்கொல்லாதவை எல்லாமே என்னைப்பலப்படுத்துகிறது” உண்மைதான். தூங்கப்போகவேண்டும், தூங்கப்போவதையிட்டு எனக்கு மகிழ்ச்சி.

பின்குறிப்பு: சாலையில் நான் கண்ட காட்சி. ஒருமனிதன் கைவண்டியைத்தள்ளிக்கொண்டு போனான். அவ்வண்டியில் இறந்து விறைத்துப்போன பெண்ணின் உடல். அப்பெண் அணிந்திருந்த இளநீல ஏப்ரன் காற்றில் ஆடியது. வண்டியிலிருந்து சாம்பல்நிற ஸ்ரொக்கின் அணிந்த கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. யாரும் அம்மனிதனைக் கவனிக்கவில்லை.முன்பு குப்பைகளை அள்ளிப்போவதுபோல் இப்போது இறந்தவர்களின் உடல்கள். 

( 4ம் பாகம் அடுத்த இதழில் )

Pin It