"வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும்.
டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்''

- கலீலியோ கலிலி

galileoஇந்த ஆண்டை சர்வதேச வானியல் ஆண்டாக (International Year of Astronomy 2009) ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு 1609-இல் கலீலியோ தனது தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்து கூறினார். "சூரியக் குடும்பத்தின் மையப்பகுதி சூரியன். அதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது”. இதனை நம்ப மறுத்த மதவாதிகளுக்காக பொதுமக்களுக்கு முன் செய்முறை விளக்கத்தை அளித்தார். தனது கண்டுபிடிப்பை மக்கள் மத்தியில் தொலைநோக்கி வழியே பார்க்கச் செய்தார். வானை நோக்கி தொலைநோக்கியைத் திருப்பிய அந்த ஆண்டிலிருந்து நவீன அறிவியலின் பெரும் புரட்சி தொடங்கியது.

மக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற விஞ்ஞானி கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும். அந்த உக்கிரமான போராட்டம், "மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது.

ஐரோப்பாக் கண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவுப் புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது. அப்படியொரு காலத்தில்தான் கலீலிலியோ கலிலி இத்தாலியில் பிறந்தார். மருத்துவப் படிப்பை பயின்று வந்தவர் விருப்பமில்லாமல் பாதியிலேயே விட்டுவிட்டு கணிதத்தைப் படித்தார். பேராசிரியராகப் பணியாற்றி பல அறிவியல் கருத்துக்களை எடுத்துரைத்தார். அறிவியல் கருத்துக்கள் தத்துவார்த்தமாக கூறப்பட்டு வந்த காலத்தில், முதன்முதலாக செய்முறையின் மூலம் அறிவியல் கருத்துக்களைச் வெளியிட்ட பெருமை கலீலிலியோவைச் சாரும்.

1609-இல் தாமஸ் ஹரியோட் மற்றும் சிலருடன் சேர்ந்து தொலைநோக்கியை வடிவமைத்தார். இதன் வழியே வான்வெளியை ஆராய்ந்து சூரியன் மையப்பகுதி என்று கூறினார். இங்குதான் அவருக்கு எதிர்ப்பு ஆரம்பமாகியது. பல நூற்றாண்டுகளாக பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்பகுதி என்றும் அதனையே சூரியன் சுற்றிவருகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது. இதற்கு பூமி மையக் கோட்பாடு (Geocentric Theory) என்று பெயர். இதனை தாலமி (கிபி.85-165) கூறினார். இவரது கருத்து கிருத்துவ மதக்கோட்பாட்டின்படி அமைந்திருந்தது. அதனால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதற்குப் பின்னர் நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் (1473-1543) சூரியன் மையக்கோட்பாட்டை (Heliocentric Theory) கூறினார். அதில் "நாம் இருப்பது சூரியக் குடும்பம். அதன் மையப்பகுதியில் சூரியன் உள்ளது. இதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது'' என்றார். அதனை பல நூற்றாண்டுகளாக சமயவாதிகள் மறுத்து வந்தனர். இந்த நிலையில்தான் கலீலியோ “சூரியன்தான் மையப்பகுதி. பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன” என்று புதிய விளக்கமளித்தார். வேண்டுமானால் நீங்களே தொலைநோக்கியில் பாருங்கள் என்று மக்கள் முன்னால் தனது ஆய்வை நிரூபித்தார். ஆனாலும் அவரது கருத்துகளை கிருத்துவ சமயவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிருத்துவ மத குருமார்களால் குற்றம்சாட்டப்பட்டார்.

கலீலியோவின் புதிய அறிவியல் கருத்துக்கள் அபாயகரமானதெனவும் மதத்திற்கெதிரான கொள்கை எனவும் கருதப்பட்டது. ஏனெனில் பைபிள் வாசகங்களில் Pslam 93: 1, Pslam 96: 10, மற்றும் Chronicles 16:30 போன்றவற்றில், "உலகம் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் நகர முடியாது.'' Pslam 104: 5 இல் "கர்த்தர் பூமிக்கான அடித்தளத்தை இட்டார். அதனால் நகர முடியாது'' என்றுள்ளது. இதனை கலீலிலியோ கடுமையாக மறுத்தார். "பைபிள் பாடல்களையும், கவிதைகளையும் கொண்டது. இது வரலாற்று ஆவணமோ தகவல் களஞ்சியமோ இல்லை'' எனக்கூறி அதனை மறுத்தார். அதற்காக தாக்கப்பட்டார். மதத்திற்கு எதிரானவரென பிரச்சாரம் செய்யப்பட்டது.

1621- இல் கலீலியோ தனது முதல் நூல் "த அஸயேர்' (The Assayer) எழுதினார். ஆனால் வெளியிட அனுமதி கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டார். பின்னர் 1623-இல் வெளியிட அனுமதி கிடைத்தது. 1630-இல் Dialogue concerning the Two Chief World System வெளியிட அனுமதி கோரினார். அதனையும் 1632-ல் தான் வெளியிட அனுமதி கிடைத்தது. வரலாற்றில் உண்மையான கருத்துக்கள் கொண்ட நூல்கள் வெளியிட அவ்வப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி அந்த நூல்கள் வெளியில் வந்து தனது உண்மைகளைக் கூறி அறிவார்ந்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். கலீலியோ த அஸயேர் (The Assayer) அறிவியலை எதார்த்தத்துடன் போதித்தது. அந்நூல் ‘அறிவியல் அறிக்கை' (Scientific Manifesto) என்று அழைக்கப்படுகிறது. பல தடைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது தனது அறிவியல் கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டார்.

அவரது கண்டுபிடிப்புகளில் புவியின் மையக் கோட்பாட்டிலிருந்து சூரிய மையக் கோட்பாடு பற்றிய அறிவியல் கருத்தை வெளியிட்டார். வியாழன் கோளை ஆராய்ந்து அதற்கான நான்கு துணைக்கோள்களை கண்டறிந்தார். இவை கலீலியோ நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. தொடர்ந்து வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தார். முதன்முதல் சூரியனில் புள்ளிகளைக் (Sun Spots) கண்டறிந்து கூறினார். வெள்ளி, சனிக் கோள்களை ஆய்வு செய்தார். பூமியின் துணைக்கோளான நிலாவினை தொலைநோக்கி வழியே ஆய்வு செய்து அங்குள்ள மலைகளையும் பள்ளங்களையும் கண்டறிந்தார். அதனைக் கொண்டு நிலவினை வரைபடமாக்கி அளித்தார். இதுவே நிலா ஆராய்ச்சியில் மாபெரும் மைல்கல் ஆகும். இத்துடன் நெபுலா, பால் வீதி மண்டலம், நெப்டியூன் கோள் போன்றவற்றை ஆராய்ந்து கூறினார். அது மட்டுமல்லாது தொழில்நுட்பத்திலும் பல சாதனைகளை புரிந்தார். குறிப்பாக ஜியாமின்டிரி கருவி, தெர்மோமீட்டர், டெலஸ்கோப் போன்றவற்றை வடிவமைத்தார்.

இயற்பியலில் எந்திரவியல் மற்றும் பொருட்களின் பொருண்மை (Mass) பற்றிய அறிவியல் கருத்துக்களை உருவாக்கித் தந்தார். இவையே பின்னர் சர் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் ஆய்வு மூலமாக இருந்தன. அதனாலேயே கலீலியோ ‘நவீன இயற்பியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார். கலீலியோ இயற்பியல், கணிதவியல், வானவியல், தத்துவ அறிஞர். அறிவியல் புரட்சியில் முக்கியமான பங்காற்றியவர். பல அறிவியல் கருத்துக்களை சமயவாதிகளுக்குப் பயப்படாமல் வெளியிட்டார். தனது கருத்துகளை உண்மையானவை என்று விளக்க கடுமையாக வாதாடினார். தமது வாழ்நாள் முழுவதும் சமயவாதிகளுக்கு எதிராக போராடினார்.

ஆனாலும் போப் ஆண்டவரால் கலீலியோவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். உலகில் முதன்முதலாக நவீன தொலைநோக்கியின் மூலம் வானத்தைப் பார்த்த அவரது அந்தக் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் பல காலம் வாழ்ந்தார். அப்போதும் தனது அறிவியல் கருத்துக்களை விடாப்படியாக பரப்பிவந்தார். இந்த அறிவியல் புரட்சியாளர் நோயின் கொடுமை தாங்காமல் இறந்து போனார். அவரது இறந்த உடலைக்கூட அவமரியாதை செய்ய மதப்பழமைவாதிகள் காத்திருந்தனர். அவரது நண்பர்களால் இரகசியமாக உடல் அடக்கம் செய்யப்பட்டது. தனது உண்மையான அறிவியல் கருத்துக்களுக்காக எப்போதுமே சமரசம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் போராடி வந்தவர் கலீலியோ. சர்வதேச வானியல் ஆண்டில் நமது மனித அறிவியலின் ஆகச்சிறந்த போராளியான கலீலியோவை நினைவுக் கூர்ந்து அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாக இதனை அனுசரிக்க வேண்டிய கடமை நமக்குரியது.

- செல்வ வேந்தன்

Pin It