ஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம் இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட இப் படம் ஒஸ்காரிலும் சில விருதுகைளப் பெறுலாம் என கருதப்படுகின்றது. ரொரண்ரோ திரைப்படவிழாவில் பலரது பாராட்டைப் பெற்ற படம். அத்துடன் சிறந்த மக்கள் தெரிவு விருதையும் பெற்றுக் கொண்ட படம்.
ஓஸ்காரில் பத்து விருதுகளுக்காக இப் படம் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இசைக்கு ஏ.ஆர்.ரகுமானுக்கும், பாடல்களுக்காக இரு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றை (ஓ..சாயா...சாயா...) பாடியவர் மாயா- M.I.A எனப்படும் மாதங்கி அருட்பிரகாசம். இவர் லண்டனில் பிறந்து, இலங்கை, இந்தியாவில் சிறிது காலம் வாழ்ந்து இப்பொழுது லண்டனில் வாழ்கின்றார். இவரது தந்தை “அருளர்” என அழைக்கப்படும் ஈரோஸ் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவர். M.I.A - Missing in Action and Missing in Acton.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் சுமார் 33 வீதமானோர் இந்தியாவில் தான் வாழ்கின்றனர். மும்பையில் மாத்திரம் சுமார் 2.6 மில்லியன் சிறுவர்கள் சேரியில் வாழ்கின்றனர். இதில் 400,000 சிறுவர்கள் பாலியல் தொழில் புரிகின்றனர். அங்கு வாழும் ஒருவனைப் பற்றிய படமே இது.
விகாஸ் சுவாரப்பின் கேள்வியும், பதிலும் என்ற நாவலை மையமாகக் கொண்டு சிமன் பியுபோய் திரைக்கதை அமைத்துள்ளார். எ.ஆர். ரகுமானின் இசையமைத்துள்ளார். இயக்கம் டான் பொயில்; Danny Boyle (இங்கிலாந்து).
மும்பை தெரு வீதிகளில் வாழும் 18 வயது ஜமால் மாலிக் Who Wants To Be A Millionaire? என்ற லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறுகின்றார். இன்னும் ஒரேயொரு கேள்வி, பதில் கூறினால் 20 மில்லியன் ரூபா பரிசு. அன்றைய நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக் கொள்கின்றார் நிகழ்ச்சி அறிவிப்பாளர் பிரேம் குமார் (அனில் கபர்);. நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட அரங்கத்தை விட்டு வெளியே காலடிவைத்த ஜமால் பொலிஸால் கைது செய்யப்படுகின்றான். மோசடி செய்து பதில்கள் கூறியதாக இன்ஸ்பெக்டர் காரணம் கூறுகின்றார். அடி, உதை எப்படி பதில்களை பெற்றுக் கொண்டாய்? கேள்விகளுக்கான பதில்களை எப்படி ஜமால் தெரிந்து கொண்டார் என்பதுடன் விரிகின்றது. வாழ்வின் அவலங்களை, வறுமையின் நிறங்களையும், அவனது காதலின் தூய அன்பையும் கூறுகின்றான். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவன் அளித்த பதில்கள் எங்கிருந்து பெற்றுள்ளான். பார்வையாளர்களுக்கு வெளிச்சமாகின்றது. மறு நாள் இறுதிக் கேள்விக்கான பதிலை நோக்கி இன்ஸ்பெக்டரும் அன்றைய இரவும் நகருகின்றது.
கேள்விகளுக்கான பதிலை எப்படி பெற்றுக் கொண்டான்?
இந்து, முஸ்லீம் கலவரத்தில் தாய் இறந்து விட, ஊரைவிட்டு தனது அண்ணன் சலீமுடன் ஓடி வருகின்றான் ஜமால். வந்து சேர்ந்த இடம் மிகவும் மோசமான பம்பாயின் தாதா உலகத்தில். சேரி வாழ்வு. இவர்களுடன் அநாதரவற்று நின்ற லத்திக்காவையும் சேர்த்துக் கொள்கின்றான் ஜமால். சிறுவர்களுக்கு வாழ்வு தருவதாக கூறி அழைத்துச் சென்ற கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். நன்றாக பாட்டு பாடுபவர்களது கண்களை குருடாக்கி, பணம் பிச்சை எடுக்க அனுப்புகின்றது இந்தக் கும்பல். ஜமாலும் நன்றாக பாடுவான். இந்தக் கும்பலின் நம்பிக்கையை சம்பாதிக்கும் சலீமிடமே, ஜமாலின் கண்களை கொதி எண்ணெயை ஊத்தி குருடாக்கும்படி கூறுகின்றனர். அமிலத்தை எடுத்து அருகில் நின்ற கும்பல் உறுப்பினக்கு ஊத்திவிட்டு தப்பி ஓடுகின்றனர். காலங்கள் கரைகின்றன. ஜமால் உணவு விடுதியில் வேலை பார்க்கின்றான். சலீம் தாதா குழுவில் உறுப்பினராகி விடுகின்றான்.
ஜமால் லத்திகாவை தேடித்திரிகின்றான். ஒருவாறு லத்திகாவை கண்டுபிடித்து சலீமின் உதவியுடன் மீட்டுக் கொள்கின்றான். சலீம் துப்பாக்கி முனையில் ஜமாலை துரத்திவிட்டு லத்திகாவை தனதாக்கிக் கொள்கின்றான். பின்னர் லத்திகா, சலீமின் தாதா குழு தலைவரின் சொத்தாக்கப்படுகின்றாள். ஜமால் தொடாந்து லத்திகாவை தேடுகின்றான். அவள் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று தன்னுடன் வரும்படி கூறுகின்றான். இதற்கிடையில் இப் போட்டியில் கலந்து கொள்கின்றான். போலிஸ், அடி உதையின் பின்னர், மறு நாள் காலை ஜமால் பற்றிய விபரங்கள், பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் அலங்கரிக்கின்றன. சலீம் லத்திகாவிடம், தனது முதலாளியின் கார் திறப்பையும் தனது கைத் தொலைபேசியையும் கொடுத்து தப்பி ஓடி விடுமாறு கூறுகின்றான். தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறுகின்றான்.
இறுதிக் கேள்வி இவர்கள் பள்ளியில் படித்த Three Musketeers கதையை மையமாகக் கொண்டது. இதற்கான விடைக்கு உதவி பெற தனது அண்ணன் சலீமின் கைத்தொலைபேசிக்கு அழைக்க்கின்றான். நீண்ட நேரத்தின் பின்னர் லத்திகா குரல் கொடுக்கின்றாள். அப்பாவியாக விடை தெரியாது எனக் கூறுகின்றாள். சலீம் தனது முதலாளியை சுட்டுக் கொல்கின்றான். சலீமும் இறக்கின்றான். இறுதிக் கேள்விக்கான விடையை அதிர்ஸ்டமாக “ஏ” எனக் கூறுகின்றான். அதுவே சரியன விடை. 20 மில்லியன் ரூபாய்கள் பரிசாக பெற்றுக் கொள்கின்றான். ஜமாலும், லத்திகாவும் இணைகின்றனர்.
படத்தில் வரும் சிறுவர்களுக்கு இந் நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இந் நிகழ்ச்சியையோ, இப் படத்தையோ பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. பாத்திரங்கள், பார்வையாளர்கள் என அந்நியப்பட்ட சூழ்நிலையில் தான் இது உள்ளது. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் தமது மனச் சாட்சி மீதான விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது. இது படத்தின் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஜமால் இறுதிக் கேள்வி பதில் கூறி 20 மில்லியன் ரூபாயை பெறுவாரா? என்ற கேள்வியுடனேயே படம் தொடங்குகின்றது. மத்திய மேல் தட்டு வர்க்க பார்வையாளர்கள் சேரி சிறுவனுக்கு 20 மில்லியனா? என்ற கேள்வியுடனே படத்தை பார்க்க ஆரம்பிப்பார்கள். படம் பார்வையாளர்களை சேரி வாழ் மக்களது வாழ்வியலில் இருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மேலும் அந்நியப்படுத்துகின்றது. ஜமாலை ஒரு கதாநாயக, காவியனாகவே காட்டுகின்றார்கள். இப் படத்தைப் பார்க்கும் பொழுது, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது. இறுதிக் காட்சி மேலும் இதற்கு சான்று.
உலகமயமாக்கலின் கட்டாயம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை எதுவுமற்றவர்களாக காட்டுவதுடன், இங்கு சமூகரீதயான ஒடுக்கு முறைகள் உள்ளன என்பதனை வெளிப்படுத்தி இந்திய பார்வையாளர்களையும், அவர்கள் நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினையும் தகர்ப்பது மிக முக்கியம்.
காதல் பற்றிய மத்திய தர வர்க்க கோட்பாடுகளில் இருந்து மாறி, கற்பு போன்ற கற்பிதங்களை மீறி ஜமாலின் தூய காதல் வெளிப்படுகின்றது. இது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் மத்தியேலே தான் சாத்தியம்.
தாதாக்கள் அவர்களது மனோ நிலைகள், கதாநாயகத் தன்மைகள் சலீமிடம் சென்றடைகின்றன. அதன் வெளிப்பாடு தம்பியின் காதலியையே துப்பாக்கி முனையில் தனதாக்கிக் கொள்கின்றான். இது “துப்பாக்கியிலான” அதிகாரத்து வெளிப்பாடு. இது எமக்குப் புதிதல்ல.
சலீம் பாத்திரத்தின் படிப்படியான வளர்ச்சி இயல்பாகவுள்ளது. ஜமாலின் வளர்ச்சி இயல்பற்றுள்ளது. தாஜ்மகால் உல்லாசப்பயணிகளிடம் ஆங்கிலம் பேசுவது போன்றவை நம்பமுடியாமல் உள்ளது. அதுவும் ஒரு சிறுவனை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் உல்லாசப் பயணி, “இது ஓர் 5 நட்சத்திர கோட்டல், இராணி விபத்தில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார்” போன்றவற்றை நம்பும் உல்லாசப்பயணி. இதில் யார் முட்டாள், பார்வையாளர்களா? பாத்திரங்களா?
படத்தில் வரும் ஜமாலும், சலீமும் முஸ்லீம்கள். ஏன் இவர்களை இந்துக்களாக காட்டவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. மூலக் கதையில் இப் பாத்திரத்தின் பெயர் “ராம் மொகமட் தோமஸ்” என உள்ளது. நாவலாசிரியர் இப் பாத்திரம் ஓர் இந்தியன் எனக் காட்டுவதற்காகவே அவ்வாறான பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்தார். புடத்திற்கான வியாபாரமும், மேற்குலகு முஸ்லீம்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு மனோரீதியான வடிகாலாக இது அமையும். அறிவிப்பாளர் இறுதிவரை ஜமாலை போட்டியில் இருந்து விலக்கி விட தீவிரம் காட்டுகின்றார். மலசல கூடத்தில் கண்ணாடியில் “B” என எழுதி விட்டுச் செல்கின்றார். ஜமால் அதற்கெதிரான விடையை D எனக் கூறுகின்றான்.
அறிவிப்பாளர் ஜமாலை அடிக்கடி “சாய் வாலா” எனக் கூறி கேலி செய்கின்றார். ஒவ்வொரு முறை கூறும்பொழுதும் பின்னணியில் சிரிப்பொலி கேட்கின்றது. இவ்வாறான சிரிப்பொலிகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களால் செயற்கையாக ஒலிபரப்படுவது வழமை. இப் படத்தில் இந் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக காட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் சிரிப்பொலியாக காட்டப்படுகின்றது. பார்வையாளர்கள் பெரும் பாலோனோர் மத்திய மேல் தட்டு வர்க்கத்தினரே. படத்தின் பார்வையாளர்களும், நுகர்வோர்களும் அவர்களே. படத்தின் கருவின்படி சேரி வாழ்வியலால் அனைத்து பதில்களை கூறும் ஜமாலால் ஏன் இறுதிக் கேள்விக்கு மாத்திரம் அதிர்ஸடத்தை நம்ப வேண்டி வந்தது? அதுவும் தான் படித்த புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கே விடை தெரியாமல் அதிர்ஸ்டத்தை அழைக்கின்றான். அனைத்து கேள்விகளுக்கும், அனுபவத்தில், பொதுப் புத்தியில் பதில் கூறும் ஜமால், இறுதிக் கேள்விக்கு, அவனது கல்வியறிவே உதவவில்லை. இயக்குனர் ஜமாலையும், அவன் சார்ந்த சேரி மக்களையும், நன்றாகவே கேலி செய்துள்ளார். இது கூட வர்த்தகரீதியான வெற்றிக்கான வழியமைப்பும், மேல் தட்டு வர்க்க மனோபாவத்தின் எதிரொலியாகவுமே வெளிப்படுகின்றது.
சேரி வாழ் மக்கள் பற்றிய பதிவின் காவியாக ஏன் இப் போட்டி நிகழ்ச்சி பயன்படுத்தப்பட்டது? ஓர் சேரி வாழ் நாயகனால் இப் போட்டியில் இலகுவாக பங்கு பற்ற முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இப் படக்கதையின் மூல ஆசிரியரான விகாஸ் சுவாரப்பின் பேட்டி ஒன்றின் போது “இங்கிலாந்தில் ஒரு இராணுவ அதிகாரி ஒருவர் இப் போட்டியில் தவறான வழியில் விடைகளை பெற்றதற்காக சட்டத்தின் பிடியில் சிக்கினார்” அதைப் பற்றி யோசிக்கும் பொழுது ஒரு சேரி வாழ் சிறுவன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றாலும்; இது போன்ற சட்ட நடவடிக்கைக்குட்படலாம். அதுவே கதையாயிற்று என்றார். சேரி வாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அணுகும் கதாசிரியரின் சமூக அக்கறையை நிச்சயம் பாரட்டத்தான் வேண்டும். ஆசிரியர் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர் வழக்கறிஞர்கள். தாத்தா இந்திய முன்னால் சட்டமா அதிபர்.
ஓர் ஒடுக்கப்பட்ட, பல துன்பங்களை சந்திக்கும், அனைத்து அரசுகளாலும் கைவிடப்பட்ட சமூகத்தின் பதிவு, அதன் அகச் சூழலை வெளிப்படுத்தியுள்ளதா? கவர்ச்சியான கரு. இக் கருவின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
புடத்தில் பல தவறுகள் உள்ளதாக பல இணையத்தளங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. கவி சுரதாஸ் எழுதியதாக விடை கூறப்பட்ட பாடல், உண்மையில் நர்சி பகட்டால் எழுதப்பட்டது. டொன் பட இசைக்கு, யுவா பட காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மும்பை பாடத்திட்டத்தில் மூன்று நுளம்புகள் கதை பாடத்திட்டத்தில் இல்லை.
போட்டி நிகழ்ச்சி படத்தில் நேரடி ஒளிபரப்பாகவே காட்டப்படுகின்றது. வழமையில் இது முன்னரே ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதியே ஒளிபரப்படும். இது திரைக்கதையாசிரிருக்கோ, இயக்குனருக்கோ உள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகின்றது. சினிமாத்தனம் என்பது இவர்களுக்கு நன்கு பொருந்தும். பல இடங்களில் காட்சி சட்டகங்களில் தொடர்ச்சி தவறானதாக காணப்படுகின்றது. ஜமாலின் காயமடைந்த கண் முதலில் இடதாகவும், பின்னர் வலதாகவும் வெளிப்படுகின்றது.
இந்திய வறுமையை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. மீரா நாயரின் சலாம் பம்பாய், சத்தியஜித்ரேயின் படங்கள் போன்ற பல படங்கள். இவையாவும் வெளி நாட்டுச் சந்தையை நோக்கியும், திரைப்பட விழாக்களையும் நோக்கியே நகர்கின்றன. மாதுர் மன்டகாரின் டிரபிக் சிக்னல் என்ற இந்திப் படம் ஒரு சந்தியைச் சுற்றியுள்ள சேரி மக்களை பதிவு செய்துள்ளது. இப் படம் பதிவு செய்த பல தீவிர கருத்துக்களை சிலம் டோக் பதிவு செய்யவில்லை. டிரபிக் சிக்னல் இந்திய சந்தையிலேயே விற்கப்பட்டது. அண்மையில் இந்தியாவின் தெய்வீக கதாநாயகன் அமிதாப்பச்சன் “சிலம் டோக்”; இந்திய வறுமையை கேலி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். (Amitabh Bachchan: Slumdog Millionaire Shows India as Third World's Dirty Underbelly)
சேரி வாழ்மக்கள் பற்றிய பல படங்கள் உலகலாவிய ரீதியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வீதிச் சிறுவர்களைப் பற்றிய பல பதிவுகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக City of God மற்றும் Kite Runner(Afgan) போன்ற படங்கள் பரவலாக அறியப்பட்ட படங்கள். 1958ல் லண்டனில் வெளியான A cry from the streets என்ற படம் லண்டன் வாழ் சேரி சிறுவர்களைப் பதிவு செய்துள்ளது. இவை கூட பெரும் வரவேற்பு பெறவில்லை. இவற்றில் வெளிப்பட்ட யதார்த்தமும், இம் மக்கள் மீதான அக்கறையும் இப் படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் மேற்கூறிய படங்களுக்குக் கிடைத்த கவன ஈர்ப்பை விட அதிகளவில் இப்படம் பெற்றுள்ளது. இது அமிதாப்பின் கூற்றில் உள்ள உண்மையை உணர்த்துகின்றது. அதற்காக அமிதாப்பிற்கு இவர்கள் மேல் அக்கறையோ, அனுதாபமோ எனக் கூற முடியாது. இதுவும் ஒரு சுய வியாபாரமே. இவரது படங்களில் எதிலும் சேரி வாழ் மக்கள் நலன்கள் கருதி கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
உலகெங்கும் சேரிகளில் மக்கள் வாழ்கின்றனர். இதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் விதி விலக்கல்ல. அமெரிக்காவில் பெரும் நகரங்களிலேயே இதனைக் காணலாம். டிற்றொய்ட், அற்லான்ரா, மியாமி, சென் லூயிஸ், கூஸ்ரன், சிக்காகோ, நியு ஒலியன்ஸ், மில்வாக்கி போன்ற நகரங்களில் சேரிகளை காணலாம். இவற்றில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் (49 வீதம்) கறுப்பின மக்களே. வெள்ளை இனத்தவர்கள் வெறும் 5 வீதத்திற்கும் குறைவானவர்கள். இது உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களிலும் காணப்படுகின்றது. நவீன நகரமயமாக்கல் என்பதன் பெயரில் குடியிருப்போரை எழுப்பி வீடற்றவர்கள் ஆக்கும் முயற்சியும் வளர்ச்சியடைந்த நகரங்களிலேதான் நடைபெறுகின்றன.
நியு யோர்க் நகரில் புறுக்களின் பாலத்தை சுற்றியுள்ள நகர மக்கள், ரொரண்ரோவின் றிஞன்ற் Park மக்கள் இவ்வாறு நவீன மயமாக்கலில் பாதிக்கப்பட்டோர். இவர்கள் மீதான வன்முறையையும், ஒடுக்குமுறையையும் மறைக்கும் முயற்சியே, இப் படம் மீதான அதீத விளம்பரத்திற்கான காரணம். இப் படம் சிறந்த மக்கள் தெரிவு விருதை ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் பெற்றுக் கொண்டது. ரொரண்ரோ விழா கேந்திர முக்கியத்துவமுடையது. உலகின் இரண்டாவது பெரிய திரைப் பட விழா, அத்துடன் வட அமெரிக்க சந்தையையும் தீர்மானிக்கின்றது. பல வெகுசனத் தொடர்பாளர்கள் சங்கமிக்கும் விழா. இப்பொழுது தங்க உலகம் (Golden Globe), ஒஸ்கார் எனத் தொடர்கின்றது.
ஒன்றை மட்டும் கூறலாம் யதார்த்தை மீறி வெளிப்பட்டுள்ள இப் படத்தை பார்க்கச் செல்ல முன்னர், மூளையைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். பொதுப் புத்தி என்பது பார்வையாளனுக்கு இல்லை என்பதையே இப் படம் வெளிப்படுத்துகின்றது. இன்றைய மேற்கத்திய வெகுசனத் தொடர்பு சாதனங்கள் இப படம் செய்ததைத்தான் செய்கின்றன.
- ரதன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
Slumdog Millionaire - கதிரையின் நுனியில் எறும்பு
- விவரங்கள்
- ரதன்
- பிரிவு: திரை விமர்சனம்