அறிவாளிகள் போர்களில் ஈடுபடுவதில்லை. ஈடுபடவும் மாட்டார்கள். மாறாக போர்களை உருவாக்குவார்கள்.

கவனித்துப் பாருங்கள்.

யாரெல்லாம் சண்டைக்கு முந்திக் கொண்டு நிற்கிறார்களோ அவர்கள் அறிவிலும் படிப்பிலும் சற்று பின் தங்கியவர்களாக இருப்பார்கள். நேர்மையானவனும் இதில் சிக்கிக் கொள்வது தான் நேர்மையின் பலவீனம். ஆனால் அறிவில் தெளிவும் முதிர்ச்சியும் கொண்டவர்கள் பின்னால் இருந்து அவர்களை இயக்குபவர்களாக இருப்பார்கள். அப்படித்தான் எல்லா போர்களும். அதனால் தான் அறிவு ஆபத்தானது என்ற புரிதலும்.

கையில் துப்பாக்கியோடு... கத்தியோடு..... வெடி குண்டுகளோடு களத்தில் நின்று நேருக்கு நேர் அடித்துக் கொண்டு சாவோர் எல்லாம் அறிவிலிகள் தான். அவர்களை அப்படி அவர்களாகவே வைத்திருக்கும் ஒரு தெளிந்த கூட்டம் எப்போதும்... அதிகாரத்தை தன் வயத்திலேயே வைத்திருக்கிறது. புத்திசாலித்தனமாக திட்டமிட்டு காய் நகர்த்தும் அந்த கூட்டம் குளிரூட்டப்பட்ட அறையில் முந்திரி தின்று கொண்டு பேப்பரில் கையெழுத்திடும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது... பேசி பேசி உரு ஏற்றி... பலமில்லாத மனதை களைத்து தனக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும். போரில் இருக்கும் வீர தீர பராக்கிரம செயல்களை பரப்பி அதில் இருக்கும் கர்வத்தை இளைய மனதில் திணிக்கும். முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர்.. இதோ இப்போது நடந்து கொண்டிருக்கும் மூன்றாம் நான்காம் உலகப் போர்களெல்லாம்...கூட அப்படியாக வழி நடத்தப்பட்டவையே. மேலே இருப்பவனுக்கு இல்லாத இனவெறி கீழே இருப்பவனுக்கு மட்டும் ஊட்டப்படுவது தான் அரசியல். அதை எல்லா காலத்திலும் அதிகார மேல்தட்டு வர்க்கம் மிக தெளிவாக கட்டம் கட்டி செய்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் இந்த படத்திலும் கூட.

முதல் உலகப்போர். முதல் மயிர் போர் என்றும் சொல்லலாம்.All Quiet on the Western Frontஎந்த உயர் அதிகாரியாவது சண்டைக்கு நேருக்கு நேர் சென்றிருக்கிறானா. கஞ்சிக்கு இல்லாத வீட்டில் இருக்கும் காளைகளை தான் பயன்படுத்துவார்கள். விளிம்பு நிலைக்காரனுக்கு விதி... அது தான்.

ஆதி தொட்டே போர்களின் வழியே வீரத்தை நிலைநாட்டுதல் தான் வரலாறு என்பதாக எவனோ பதிந்து விட்டான். பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம். போர்களின் வழியே கண்டடைந்த எல்லாமே சர்வ நாசத்தின் வழியே மீண்ட மறு வாழ்வு தான். திரு வாழ்வு இல்லை. புத்திகெட்ட பயலுகளின் வழி நடத்துதலில் உடல் சோர்ந்து உள்ளம் வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் நிலை நிச்சயமற்றது. எந்த நொடியில் எந்த மரணம் என்று தெரியாத செத்து வீழும் நொடிகள்... பயங்கரமானவை.

"சரி... தயாராகுங்கள்..." என்று விரட்டி களத்துக்கு அனுப்பும் அதிகார ஆடர்களின் முன்... விதிகளிடம் தங்களை ஒப்படைத்து விட்டு... வீறிடும் வலிகளை தூக்கி துப்பாக்கியைத் தோளில் போட்டுக் கொண்டு அலையும் அவர்களின் ஆற்றாமைக்கு சொற்கள் இல்லை... தோட்டாக்கள் தான் உண்டு.

நாவலின் வழியே எழும் சினிமாக்கள் வாழ்வுக்கு நெருக்கமானவையாகவே இருக்கிறது. இந்த படம் கூட நாவலின் பக்கங்களில் விரியும் போர்க்கள பதிவு தான். போர் என்றாலே வெற்றியின் களிப்பு அல்லது தோல்வியின் வலி என்பதாக இருக்கும் களத்தில்... இரு பக்கமும் நின்று சண்டையிடும் எளிய வீரர்களின் மனநிலையை பேசுகிறது இந்த படம். ஒவ்வொரு காட்சியிலுமே கொத்து கொத்தாய் விழும் மனித உயிர்கள்.... போர்க்களங்களில் எப்போதுமே மதிக்கப்படுவது இல்லை. முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்லது பின்னேறும் நிலையில் அவனவன் உயிரை அவனவன் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து துளைக்கும் புல்லட்டுக்கு யார் யார் எந்த பக்கமே என்றெல்லாம் தெரியாது. அது ஒரு சமதர்ம சாவு நிலை.

பருவத்தில் போர்கள் மீது யாவருக்கும் ஒரு ஹீரோயிச தோற்றம் இருப்பது இயல்புதான். அதற்கு காரணம்..... நாம் கற்ற கேட்ட பார்த்த எல்லாமுமே வீரத்துக்கு நான்கு பேரை போட்டு தள்ளுவதையே திரும்ப திரும்ப சொன்னது தான். சொல்லிக் கொண்டிருப்பது தான். ஆனால் வயதும் அறிவும் முதிர்ச்சியும் தெளிவும் ஏற்படும் கால கட்டத்தில்.. போர்களின் நோக்கம் ஒரு போதும் தீர்வை அடையாது என்று புரிய நேரிடுகிறது. தன்னை புரிதலுக்கு உட்படுத்துகிறவன் ஒரு போதும் போரில் பங்கேற்க மாட்டான். அதற்கு மாறாக பேசி தீர்க்கும் வழிமுறைகளை கண்டடைவான். அதுதான் மானுட தேவைக்கு முக்கியமான கண்டுபிடிப்பு என்பதையும் சேர்ந்தே உணர்வான். ஆனால் இங்கு நடப்பது வேறு. அதிகாரம். எப்போதும் ஆடர் போட்டுக் கொண்டே இருக்கிறது. அதை கண்மூடித்தனமாக பின்பற்றும் நிலையில் தான் வீரர்களின் வாழ்வாதாரங்கள் இருக்கின்றன. அப்படி இருக்க வைப்பதில் தான்.. அதிகாரத்தின் வலிமை தொடர்ந்து பலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எவனோ திட்டம் போடுகிறான். எவனோ.. ஆணை பிறப்பிக்கிறான். எவனோ துப்பாக்கி ஏந்துகிறான். உச்சாணியில் இருக்கும் அந்த பத்து பேர் ஆடும் பரமபதத்தில்... முன் வரிசையில் நிற்கும் வீரர்கள்.... எப்போதும் பலி ஆடுகள்.

படத்தின் முதல் காட்சியே நம்மை கலங்கடித்து விடும். கல் தின்ற கனவான்களின் போர் வியூகத்தில்... களத்தில் மாண்டவர்களின் துணிகளை... பூட்ஸ்களை ரீ சைக்கிளிங் செய்து அடுத்த பேட்ச்க்கு அனுப்புகையில்... போர்கள் இல்லாத உலகம் எத்தனை அற்புதமானது என்று நடுங்க உள்ளே உதிக்கிறது ஒரு சிந்தனை. ஒவ்வொரு கணமும்... வாழும் இந்த பூமியில் அன்பு செய்ய.... அரவணைக்க எத்தனை இருக்கிறது. ஆனால்...தன் ஆதிக்கத்தை எப்போதும் இந்த பூமியில் நிலைநாட்டி நான் தான் பெரிய பிளக்கர் என்று உலக வர்த்தகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள... வாழ்வுக்கு ஏங்கும் வர்க்கத்திற்கு சீருடை அணிந்து... சிதைத்து புதைத்து ஆதாயம் தேடிக் கொண்டேயிருப்பது... அதிகார வர்க்கம்.

ஹீரோவின் பள்ளி நண்பர்களும் போரில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் சாவும் அது தரும் நோவும் ஹீரோவை இந்த பூமியை விட்டு ஓடி விட செய்யும் சிந்தனையை கிளறுகிறது. ஓர் இளம் வீரனின் உள்ளார்ந்த பிறாண்டல்களை போர் நிகழ்த்தும் இடங்களே இந்த படம். போர்க்களத்தில் நிற்கும் வீரர்கள் பெரும்பாலும் இருபது வயதை ஒட்டியவர்களாக இருக்கிறார்கள். ஹீரோ கூட 17 வயது நிரம்பிய துரு துரு வாலிபன் தான். அவனுக்கும் போர்க்களத்தின் மீதிருக்கும் அந்த இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது. வீர தீர நாயகனின் கண்கள் வழியே காணும் போர்க்களம்.... நிஜத்தில் அப்படி இல்லை. நெருக்கத்தில் அவன் மீது கவியும் புல்லட் மழையின் வடிவில்.... அதன் மறு உருவத்தைக் காண்கிறான். நடுக்கமும் பயமும் தவிப்புமாக.... உயிர் பயமும்.. அக மூட்டமும் அவனை அவனில் இருந்தே அந்நியப்படுத்தி எங்காவது ஓடி விட யோசிக்கிறது. போர் ஒரு சூனியம். உள்ளே சிக்கியவர்கள் வெளியே வரவேண்டுமென்றால் அதையும் போர் தான் தீர்மானிக்கும். துப்பாக்கி அற்றவர்கள் மட்டுமல்ல.. ஏந்தியவர்களும் கைதிகளே. தன்னை சுற்றி சூழ்ந்திருக்கும் போரின் மாய கம்பிகளின் வழியே தன்னையே நொந்து கொள்கிறான்.

அரசு எப்போதும் ஆயுதங்களின் வழியாகத்தான் ஆட்சி நடத்தும். போர்கள் என்று வந்து விட்டால் மானுடம் பிறகு. வெற்றிகள் மட்டுமே முதற்முழு குறிக்கோள்.

பெண்களின் வாசத்துக்கு அலையும் இரவுகளின் வழியே ஒவ்வொரு வீரனுக்குள்ளும் இருக்கும் ஆழ் விருப்ப தவிப்பை உணர்கிறோம். தூரத்தில் நடைபாதை பெண்களை கண்டு விட்டால் அவர்களின் குணமும் முகமும் நொடியில் மாறி... அவர்களின் விடலை பருவ நிலைக்குள் வந்து விடுவது இயல்பு தானே. பின்னால் சென்று தன்னையே கோமாளியாக்கி விளையாட்டு காட்டும் நிலைக்கு மாற்று எது. ஒரே ஒரு துண்டு வாத்து கறிக்கு... ஒரு முட்டைக்கு அவர்கள் படும் பாடு....பதிலிகள் அற்றவை. திருடிய பச்சை முட்டையை உடைத்து குடித்து விட்டு அதன் பிறகு நடக்கும் அசம்பாவிதம் என்று ஒரு உயிரின் விலை ஒரு முட்டையாக கூட இருப்பது தான் போர்க்கள விதி.

நிலை கொள்ளாத நிழலின் விரட்டல் இந்த போர். தீர்வு பைத்தியம் உண்டாக்கி பதற செய்து பார்த்து ரசிக்கிறது.

வயிறும் நிறையா... புணர்வும் தெரியாத போர்க்கள நாட்களின் வலி... உடலை உருக்குலைத்து.... உயிரை நோக செய்து விடுகின்றன. தலைமுறை தலைமுறையாக ஏதோ ஒரு வகையில் இனவெறி கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சுய சிந்தனையை அழிக்கும் வல்லமை போர்களுக்கு உண்டு. அதே நேரத்தில் என்ன நேர்கிறதோ.... அதுதான் வீரத்தின் வழியே கண்டடைந்த வரலாறு. அல்லது தோல்வியின் வழியே சென்று சேர்ந்த மரணம். அர்த்தமற்ற மரணங்களுக்கு போர்கள் கொடுக்கும் விலை எளிய விளிம்பு நிலை வீரர்களின் உயிர். அறியாமை... ஆர்ப்பாட்டம்... குடும்ப தேவை... உரு ஏற்றிய முதிர்ச்சியற்ற வீம்பு... கூடவே இனவெறி... இதெல்லாம் கையில் துப்பாக்கியை சுகமாக்க வைக்கிறது. தீர்வு... தோற்ற துப்பாக்கியும் சிலுவை தான் சுமக்கும். ஜெயித்த துப்பாக்கியும் சிலுவை தான் சுமக்கும். ஆனால்.... ஆடர் போட்டவன் கையில் ஒயினும் கோழிக்கறியும்.

எங்கெல்லாம் எதற்கெல்லாம் எப்படியெல்லாமோ தப்பிய நாயகன்.... போர் முடிந்து ஊருக்கு திரும்ப எத்தனிக்கும் அந்த ஒரு பொழுதில்.... இன்னும் இருக்கும் மீதி அரை மணி நேர வக்கிரம்... நினைக்க நினைக்க கொதிக்கும் உலைக்களம். உள்ளம் உதிர... உலகம் அதிர... ஒவ்வொரு வீரனின் தத்தளிப்பும் தவிப்பும் தான் அந்த அரைமணி நேரமும் சேர்ந்த இந்த படம்.

எதிரி வீரனை சரமாரியாக குத்தி விட்டு... ஒரு கட்டத்துக்கு பின் அவன் உயிர் அடங்க தவிக்கும் சத்தம் தாங்காமல் அவனுக்கு உதவும் ஹீரோவின் மனநிலை தான் மனிதனாக நாம் எப்போதோ மாறி விட்டதற்கான அறிகுறி. அதுவும் அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்த அவன் மனைவி குழந்தை புகைப்படத்தை பார்த்துக் கொண்டே.... அழுகையின் வழியே கரைந்து கதறும் போது... இந்த படத்தின் வழியே நாம் கற்றுக் கொண்ட பாடத்தின் வலிமை வலி நிறைந்தது. வாழ்க்கை ஒரு போதும் போர்களின் வழியே பூந்தோட்டம் வளர்க்காது. மாறாக... வதைபட்ட குருதி தோய்ந்த நினைவலைகள் வழியே ஒரு நரகத்தின் தீர்வையே தெளித்துப் போகும்.

எதிராளிகளிடம் இருந்து கவியும் அடிமைத்தனத்தை விட... தன் பக்கமிருந்தே சூழும் அடிமைத்தனம் ஆபத்தானது. அது தான் இங்கே துப்பாக்கியை தும்பிக்கை மாதிரி தோளில் மாட்டி அதிகாரம் தருவதாக.... வாழ்நாள் துயரத்தை நெஞ்சில் அடித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் செய்வது என்னதென்றே தெரியாமல் போய் விடுவது...போர்க்கள பேதலிப்பு. இறுதிக் காட்சியில்... எதிரி வீரன் ஹீரோவைக் குத்தி விட்டு செய்வதறியாமல் நிற்பதும் கூட அது தான்.

உயிர் கருகும் குருதி வாசம் திரை தாண்டி உணர்கிறோம். உள்ளம் படபடக்க..... மனிதா போர்கள் வேண்டாம் என்று முனங்குகிறோம். முப்பது லட்சம் வீரர்களை பலி கொடுத்து.... அவர்கள் மீட்டெடுத்த நிலம் ஒரு சின்ன சுடுகாட்டுக்கு மட்டுமே உதவும் என்பதுதான் போர்களின் மூர்க்கத்தில் கண்டடைந்த முட்டாள்தனம். 1914 ம் ஆண்டு தொடங்கிய முதலாம் உலகப் போர் 1918 ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி முடிவுக்கு வந்தது சரி... மாண்ட மனிதர்கள் தந்த சாபம் எப்போது முடிவுக்கு வரும்.

Film: All Quiet on the Western Front
Director : Edward Berger
Languages German / French
Year : 2022

- கவிஜி

Pin It