ஆப்கானிஸ்தான் தொடங்கி, தெற்கே குமரி வரையும் பரந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள், திராவிடர்கள் என்று சான்றுகளுடன் நிறுவுகிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.
கி.மு.1500ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சொந்தம் கொண்டாடப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே கி.மு. 3,000-2,500 காலங்களில் இந்நாகரிகம் மிக உச்சத்தில் இருந்தது. இதுகுறித்த டி.என்.ஏ ஆய்வு இந்நாகரிகம் திராவிடர்களுக்கு உரியது என்பதை மெய்ப்பித்தது.
சிந்துவெளியில் கிடைத்த காளைச் சின்னத்தைச் சிவனின் வாகனம் என்றனர் ஆரியர்கள். அது சிவன் வாகனம் இல்லை, மாறாக இனக்குழுவின் அடையாளம் என்பது வரலாறு.
இப்பொழுது வைகைக் கரையை ஒட்டிக் கீழடி அகழாய்வு உலகையே வியக்க வைக்கிறது.
தமிழ் மொழியின் முதல் எழுத்து வடிவம் ‘தமிழி’.கீழடியில் கிடைத்த சுடுமண் பாண்ட ஓடுகளில் இந்த தமிழி வரிவடிவத்தில் ‘ஆதன்’, ‘குபிரன் ஆதன்’ போன்ற பெயர்கள் இருப்பதை பார்க்கிறோம்.
இதன் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்று தொல்லியல் விஞ்ஞான ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
அந்தக் காலத்திலேயே எழுத்து வடிவம் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதனால், இவர்களின் கல்வி அறிவு தொல் பழங்காலத்திலேயே மேம்பட்டிருந்தது என்பதையும் அறிய முடிகிறது.
அனேகமாக இது இடைச்சங்கத்தின் காலமாக இருக்க வாய்ப்புண்டு.
பானைகள், தக்களிகள், எலும்பு மற்றும் தந்தத்தால் ஆன வரைகோல், தந்தத்தால் ஆன சீப்பு, எழுத்தாணிகள், அரவைக்கல், குடுவை, தங்கம்-பவழம்-மணிகளால் ஆன வளையல்கள், தோடுகள், பிற அணிகலன்கள், சுட்ட செங்கற்களால் ஆன நேர்த்தியான கட்டிடச் சிதைவுகள், நீர்க் கால்வாய்கள் எனப் பல நூற்றுக்கணக்கான பண்டைய தமிழ் மக்களின் பொருள்கள் இன்னமும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
ஒரு முக்கியமான செய்தியைக் கவனிக்க வேண்டும். சிந்து சமவெளியில் கிடைத்த யானை உருவத்தைச் சிவன் வாகனம் என்று சொன்ன பார்ப்பனர்களுக்கு, வைகைக் கீழடியில் அப்படி ஒரு மதம் சார்ந்த, மத அடையாளத்தில் எந்த ஒரு வாகனமும் கிடைக்கவில்லை.
கீழடி ஆய்வில் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியின் அடையாளமே இங்கு கிடைக்கவில்லை.
கிரேக்கம்-சீனம் போன்ற தொலைதூர நாடுகளுடன் அறிவு சார்ந்தும், வணிகம் சார்ந்தும் பல சான்றுகள் கிடைத்துள்ளன.
உலகின் முதல் நாகரிகம் கொண்டவர்கள் தொல் பழங்காலத்திலேயே மதம் சாராத படித்த பகுத்தறிவாளர்களாகச் செழித்தோங்கியவர்கள் தமிழர்கள், திராவிடர்கள் என்பதை உறுதி செய்கிறது கீழடி அகழாய்வு.