1932 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி காந்தியடிகள் தனது இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தினைத் துவக்கினார். மறுநாள் ஆங்கிலேய அரசு காந்தியடிகளைக் கைது செய்து எரவாடா சிறைக்கு அனுப்பியது. காந்தியடிகளின் திடீர் கைது நாடெங்கிலும் கொந்தளிப்பை உருவாக்கியது.
கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை அகற்ற பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருதுபாண்டியர், திண்டுக்கல்லில் கோபாலநாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைக் கருவறுக்க ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, திருநெல்வேலி எனப் பரந்து விரிந்த கூட்டிணைவை உருவாக்க மராட்டியப் போராளி "துந்தாஜிவாக்'கைச் சந்திக்கச் சென்ற மூன்று தூதுக்குழுவில் சின்னமலையின் பெருந்துறைப்பாளையமும் பங்கேற்றது. கொங்குப் பகுதி மைசூர் ஆட்சியின் கீழ் வரிவசூல் பகுதியாக இருந்தாலும் பொதுஎதிரியான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்ற திப்புவின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேயப் படைகளை திப்புவுடன் சேர்ந்து எதிர்த்துப் போராட 10,000 படை வீரர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார் சின்னமலை. அங்கே ஜாக்கோபின் என்ற பிரெஞ்சு புரட்சி வீரர்களால் சின்னமலை படைக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சீரங்கப்பட்டினப் போரில் சிறப்பாக மாலவல்லி எனுமிடத்தில் ஆங்கிலேயப் படைக்குப் பெருத்த சேதத்தையும் விளைவிக்கிறது கொங்குப்படை.
மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூதுசெல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பினிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.
அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப்படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. வெறியோடு 1803இல் குதிரைப்படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள்மீது எறிகுண்டை வீசித் துரத்தியடிக்கிறார் சின்னமலை. மீண ்டும் பெரும்படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்துவிட்டு கோட்டையிலிருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்று பிற பாளையக்காரர்களுடன் கும்பினிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார். எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யப்படுகிறார்.
கும்பினி ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டால் விட்டுவிடுவதாக ஹாரிஸ் பேரம்பேசியும், சோரம் போகாத தீரனும் அவனது சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதர் ஆகியோருடன் மூவரையும் சங்ககிரி மலைக்கோட்டையில் ஆலமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது கும்பினி ஆட்சி. கல்லாய்ச் சமைந்த துயரம் என 1500 அடி உயர சங்ககிரி மலை நம் கண்முன்னே தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டி நிற்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு இந்த மண் அடிபணியாது என்று கல்லும் மண்ணும் நம்மைப் பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறது. மறந்து விடவேண்டாம்!
- ராஜகிரி கஸ்ஸாலி