சென்னை மாகாணப் பள்ளிகளில் வட்டார மொழிகளில் கல்வி கற்பிக்க உதவ கலைச்சொல் குழுவை அரசு 1923இல் உருவாக்கி 1932இல் Chemistry போன்ற 12 துறைகளுக்கு உரிய கலைச் சொற்களை வெளி­யிட்டது. இக்கலைச் சொல் பட்டியலில் பெரும்பாலும் சமஸ்கிருதப் பெயர்களும், ஆங்கிலப் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. ஆதலால் இப்பட்டியலுக்கு ஆசிரியர்கள் ஆதரவு தரவில்லை. இப்பட்டியலுக்கு மாற்றாக பா.வே.மாணிக்க நாயக்கர், காழி. சிவ.கண்ணுசாமி இருவரும் செந்தமிழ்ச்செல்வி வாயிலாக தமிழ் அறிவியல் சொற்களை வெளியிடத் தொடங்கினர். 1933இல் தமிழ்ப் பயிற்று மொழி குறித்த தமிழன்பர் மாநாடு சென்னையில் கூடியது. இம் மாநாட்டில் தலைமையுரையாற்றிய உ.வே.சாமிநாதையர்,

“இப்பொழுது சாதாரணத் தமிழில் வழங்குகின்ற சொற்களை மாற்றி பல புதிய புதிய சொற்களை உபயோகிக்கத் தொடங்கினால் அச்சொற்கள் தமிழ்நாடு முழுவதும் வழக்கத்தில் அமைவதற்கு நெடுங்காலம் ஆகும். சொற்களின் வழக்கமும், அவற்றின் பொருள் எளிதில் விளங்குதலும் முக்கியமேயன்றி எல்லாம் தனித்தமிழ் வார்த்தைகளாக இருக்க வேண்டுமென்று அனுபவத்தில் இயற்றுவதன்று என்று கூறினார். இம்மாநாட்டிற்கு மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதி, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, கே.சுப்பிரமணிய பிள்ளை, டி.வி.உமாமகேஸ்வரன் பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆகியோர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் தமிழில் தக்க பதங்கள் இல்லாத இடத்து வழக்கத்திலுள்ள பதங்கள் உபயோகித்தல் நல்லதென்றும் தமிழ் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.tamil languageஇத்தீர்மானங்களில் உடன்பாடு இல்லாதத் தமிழறிஞர்கள் திருநெல்வேலி இ.மு.சுப்ரமணியபிள்ளை தலைமையில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து அரசு வெளியிட்டிருந்த கலைச் சொற்கள் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களாக இல்லாதபடியால்

(எ-கா: EXCRETORY ORGANS     -      விமர்சன இந்திரியங்கள்

LUNGS     -      புப்புசம்)

தமிழ்ச் சொற்களை ஆக்கி வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். இதுமொழித் தூய்மை வாதத்திற்கான

(எ-கா: LUNGS    -      நுரையீரல்

EXCRETORY ORGANS    -      கழிவுறுப்புக்கள்)

அடிக்கல்லாக அமைந்தது. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கச் செயலாளர் இ.மு.சுப்பிரமணியபிள்ளை தந்தை பெரியாருடன் இணைந்து குடியரசு இதழில் தொடர்ந்து இராமாயணம், மகாபாரதம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியவர் என்பது இவரது பின்புலம். இவர் பணி ஆற்றிய சங்கம் துறைவாரியாகக் கலைச்சொற்களை உருவாக்கி 1936இல் 5300 சொற்களுடனும் பிறகு திருத்திய பதிப்பாக 10,000 சொற்களுடனும் பட்டியலை 1938இல் வெளியிட்டது. இச்சொல்லாக்க முயற்சி தமிழில் நடந்த முதல் கலைச் சொல்லாக்க இயக்கம் எனலாம். இச்சங்கத்தால் 1938இல் வெளியிடப்பட்ட பட்டியலை அரசு வாங்கி அன்றைய சென்னை மாகாணத்தின் தமிழ்ப் பகுதிகளில் வழங்கியது. இச்சொல் சமஸ்கிருத சொற்களுக்கு எதிரான சென்னை தமிழ்ச் சங்கத்தின் முதலாவது வெற்றி. கலைச்சொல் நூலுக்கு முன்னுரை எழுதிய இராஜாஜி “தமிழில் கலந்து கொள்ளும் தன்மை கொண்ட சமஸ்கிருத மொழிகளைக் காரணமின்றி வெறுக்கக்கூடாது, தனித்தமிழ் வெறியும், வடமொழி மோகமும் இரண்டும் இந்தத் தமிழ்ப் பணிக்குத் தடையாகும்” என்றார்.

இக்காலகட்டத்தில் ‘தமிழ் ஆராய்ச்சி வரலாறு’ குறித்து விரிவான நூல் எழுதிய ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் தமிழ்க் கலைச்சொல்லாக்கம் பற்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“சுமார் நான்கு தலைமுறைகளாக மேனாட்டுக்கல்வி ஆங்கிலத்தின் மூலம் பரவிய பிறகும், அரசியல் துறையிலும் சற்று முன்னேற்றம் அடைந்த பிறகும், தமிழில் முடியும் என்று பறைசாற்றி அதற்கு உதாரணங்கள் மாத்திரம் கொடுத்துக் கொண்டிருந்தால் இந்த நாட்டு மக்களிடையும் மாணாக்கரிடையும் விஞ்ஞான சாஸ்திர அறிவும், அதனால் அமைந்த மனப்பான்மையும் விரிந்து பரவ எவ்வளவு காலமாகும்?”

எனவும் நம்பிக்கையின்றி வினவியுள்ளார்.

கலைச்சொல்லாக்கம்

கலைச்சொல் உருவாக்கம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது கிரேக்க லத்தீன் சொற்களை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டதைச் சுட்டிக்காட்டுகிறார். அச்சொற்களுக்கு மாற்றுச்சொற்களை அவர்கள் உருவாக்க முயற்சிகள் எடுக்கவில்லை எனவும் அதேபோல் பிறமொழிக் கலைச்சொற்களுக்கு இணைச்சொற்களை முதலில் தமிழில் தேட வேண்டும், இல்லையெனில் பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வது சிறந்த முறை என்பதை,

“...விஞ்ஞான சாஸ்திரங்கள் சம்பந்தமாக ஆங்கிலத்தில் காணப்படும் அநேகச் சொற்கள் அந்த மொழியைக் கூட சேர்ந்தவையல்ல; கிரேக்க லத்தின் முதலிய மொழிகளைச் சேர்ந்தவை; அவைகளை ஆங்கிலேயர் அப்படியே கைக் கொண்டிருக்கிறார்களே ஒழிய அவற்றின் பொருள்களைக் கொடுக்கும் ‘ஆங்கிலோ ஸாக்ஸன் பதங்களைத் தேடிக் கொண்டிருக்கவில்லை. விஞ்ஞான சாஸ்திர கருத்துக்களுக்குத் திட்டமாய்ச் சரியான பொருளுடைய பதங்கள் தமிழில் வழங்கியிருந்தால், அவைகளைப் போற்றி எடுத்துக் கொள்வது தமிழர் கடமை. அப்படி­யில்லையானால் பிற மொழியிலுள்ள சொற்களை அப்படியே கையாள்வது உத்தமம்”

எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சொற்கள் எந்த மொழிக்கு உரியன என்று கவலைப்படத் தேவையில்லை; மக்கள் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வது நலம் எனவும் வலியுறுத்துகிறார்.

‘...சாஸ்திர பதங்கள் எந்த மொழியைச் சேர்ந்திருந்தாலும் அவைகளை அப்படியே எடுத்தாள்வதுதான் முறை. ‘தெர்மாமீட்டர்’, ‘ஆசிட்’ போன்ற சொற்களை ஆண்களும், பெண்களும், படித்தவர்களும், பாமரர்களும் தாராளமாய்க் கையாண்டு வருவதால், அவைகளுக்குப் பதிலாகத் தமிழ்ச் சொற்கள் ஆக்கப்புகுவது சரியில்லை. ‘அனற்பதனி’, ‘காடி’ போன்ற சொற்களை ஆக்கி விடலாம். ஆனால¢ அவை மக்களின் பேச்சோடு இயங்குவதற்கு வெகுகாலம் ஆகும்.”

என்ற பகுதி இதனைத் தெரிவிக்கிறது.

கலைச்சொல்லாக்கத்தில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதா? தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதா என வாதப்பிரதிவாதம் நடைபெற்ற காலத்தில் மொழியைப் பற்றிக் கவலை­யில்லை, அறிவியல் அறிவுதான் முக்கியம் என்ற சுப்பிரமணிய அய்யரின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கன.

தமிழ்ப்பதங்களையும், பதத்தொகுதிகளையும் வெறும் தேசபக்தி உணர்ச்சியாலும் மொழிப்பற்றாலும் தூண்டப்பட்டு உருவாக்குவது தவறாகும் என்ற சுப்பிரமணிய அய்யரின் கருத்துக்கள் முறையே சுதேச உணர்வுடைய கலைச்சொல்லாக்குநர்களையும், செ.மா.த.சங்கத்தினரையும் குறிப்பிடுவதாகக் கருத இடமுண்டு. இவ் இரு குழுக்களின் போக்கிலிருந்து வேறுபடும் மூன்றாவது போக்கினராகவே ஏ.வி.சுப்பிரமணிய அய்யரும். டி.எஸ்.சொக்கலிங்கமும் விளங்கு கின்றனர்.

டி.எஸ்.சொக்கலிங்கம்

தினமணி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் டி.எஸ்.சொக்கலிங்கம். சிறந்த இதழாளராகவும், தீவிர காந்தி இயக்க ஆதரவாளராகவும் அறியப்பட்டவர்; மொழிப் பாதுகாப்பு, மொழி வளர்ச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் இவர் கலைச்சொல்லாக்க முயற்சியையும், பயிற்றுமொழித் திட்டத்தையும் எதிர்த்து வந்தார்.

இதனை

“கலைச்சொற்கள் எல்லாவற்றையும் தனித்தமிழில் ஆக்க வேண்டுமென¢று சொல்வது உபயோகமில்லாத வேலை. தமிழரின் ஜனத்தொகை இரண்டரை கோடி இருக்கலாம் இந்த சொற்ப ஜனத்தொகையுள்ள ஒரு பிரதேசத்தில் சகல கலைகளுக்கும் உள்ள உயர்தரப் படிப்பைச் சொல்லிக் கொடுக்கக் கூடிய ஸ்தாபனங்களை ஏற்படுத்தி நடத்தி வரமுடியுமென்று நினைப்பது வெறும் பகற்கனவு” (டி.எஸ்.சொக்கலிங்கம் 1943:45)

என்ற அவர் கூற்றிலிருந்து அறியமுடிகிறது.

கலைச்சொல்லாக்கம்

இந்தியா முழுமைக்கும் ஒரே வகையான கலைச்சொல்லாக்கம் அவசியம் என்பதை,

“தமிழ்க் கலைச்சொற்களைக் கொண்டு ஒரு கலையில் ஆரம்பப் படிப்பை முடித்துவிட்டு, மற்றொரு மாகாணத்திற்கு உயர்தரப் படிப்புக்குப் போனால் அங்குள்ள பாஷையின் கலைச்சொற்களைப் புதிதாகப் படித்தாக வேண்டும். இந்தக் கஷ்டத்தைத் தவிர்க்க வேண்டுமானால் இந்தியா பூராவுக்கும் பொதுவான ஒரு பாஷையில் கலைச் சொற்கள் இருக்க வேண்டும். அப்படிச் செய்வது தான் புத்திசாலித்தனமானது. அது தான் காரிய சாத்தியமானது. அதைவிட்டு தனித்தமிழில் எல்லாக் கலைச் சொற்களும் வேண்டுமென்று சொல்வது வெறும் குருட்டுத்தனமாகும்”

என்று வற்புறுத்தியுள்ளார். மேலும் இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு மொழியில் கலைச்சொற்கள் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளது வடமொழியை மனதில் கொண்டேயாகும். இந்தியாவுக்கு ஒரே ஆட்சிமொழி என்ற அடிப்படையில் தமிழின் இருப்பைப் புறக்கணிக்கும் வகையிலே சொக்கலிங்கத்தின் கருத்து அமைந்துள்ளது.

சீனிவாச சாஸ்திரிக் குழு (1940)

கலைச்சொல் பற்றித் தமிழக அறிஞர்களிடம் கருத்து மோதல் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அன்றைய சென்னை மாகாண அரசு புதிய கலைச்சொல்லாக்கக் குழுவை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியது.

“உயர்நிலைப் பள்ளிகளில் தாய் மொழிவழி மொழியில்லாத பாடங்களைக் கற்பிப்பதில் அரசு கவனம் செலுத்திவருகிறது. இதற்கென மாகாணத்தின் மொழிகளில் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய அறிவியல் கலைச்சொற்கள் இல்லாவிட்டால் தரமான பாடநூல்களை உருவாக்க முடியாது. எனவே அரசு பொதுத்தன்மையுடைய தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்களை உருவாக்குவதற்கான பொதுக்கோட்பாடுகளை உருவாக்கவும் கலைச்சொற்களை உருவாக்கவும் பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்தது”

இக்குழுவே சென்னை மாகாண அரசால் நிறுவப்பட்ட இரண்டாவது கலைச்சொல்லாக்கக் குழுவாகும்.

குழுவினரிடம் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்

சாஸ்திரி குழுவிற்குக் கலைச்சொல்லாக்கக் கொள்கை வகுப்பது தொடர்பாகச் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அக்கருத்துக்கள் வருமாறு;

1.            (அ) கல்வி நோக்கங்களைப் பொறுத்தவரை அந்நிய, ஆங்கில கலைச்சொற்களுக்குச் சமமாகத் தற்போது உபயோகத்திலுள்ள தென்னிந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வரும் கலைச்சொற்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றன?

               (ஆ) தென்னிந்திய மொழிகளில் ஏற்கக்கூடிய அளவில் இணையான கலைச்சொற்கள் இல்லாதபோது ஆங்கில மொழிக் கலைச்சொற்களையே பயன்படுத்துவது சிறந்ததாக இருக்குமா?

2.            இவற்றுக்கு ஒரு மாற்றுவழியாக அந்நியமொழிக் கலைச்சொற்களுக்கு ஈடான சொற்களைக் கொண்டு தென்னிந்திய மொழிகளிலேயே புதிய தரமான சொற்கோவையை உருவாக்குவது அவசியமானதா?

3.            பதிப்பகங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட குறிப்புக்களின் மீதான தீர்மானங்கள் குறித்து என்னென்ன ஆணைகள் வழங்கப்பட வேண்டும்?

குழுவின் அறிக்கை

குழுவின் முன் வைக்கப்பட்ட கருத்துக்களையும் ‘இந்திய அரசின் மத்திய கல்வி ஆலோசனைக் கழகத்திற்கு, பி.என்.சீல் (பொதுத் தகவல் துறை, பூனே) அளித்த பொதுவான அறிவியல் கலைச்சொற்கள் பற்றிய குறிப்பு’, ‘அறிவியல் பாடங்களின் மொழிபற்றிய ஐ.ஆர்.பரஞ்பே எழுதிய குறிப்பு’ ஆகியவற்றைக் குழு விவாதத்துக்கு எடுத்துக் கொண்டது. தென்னிந்திய மொழிகளுக்குள் ஒட்டுமொத்தமாக அறிவியல் கலைச்சொற்களில் ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டுவருவது என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்து, குழு தன் அறிக்கையை அளித்தது, அந்த அறிக்கை சில பகுதிகள் வருமாறு:

1.            நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பயன்பாட்டிலுள்ள தென்னிந்திய மொழிகளில் உள்ள அந்நிய மொழிக் கலைச்சொற்களுக்கான இணைச்சொற்களை ஆராய்ந்ததில் அவை பெரும்பாலும் நிலைபெற்றவையாகவும், கல்வி நோக்கங்களுக்கு ஏற்புடையதாகவும் இருக்கின்றன. புழக்கத்திலுள்ள வேறு சில சொற்கள் இயற்கையான பொருட்கள் அல்லது நிகழ்வுகளைக் குறிக்கும் (எ.கா. மின்னல், இடி, எதிரொலி, நிலநடுக்கம், உலோகம், மூட்டு, கோவேறு கழுதை). இவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். இவ்வகைச் சொற்கள் தென்னிந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் வேறுபட்டதாகவும், சிறப்புடைய தாகவும் இருக்கக்கூடும்.

2.            கருத்துக்கள் அல்லது பண்புகளைக் குறிக்கும் சொற்களுக்கும் எல்லாத் தென்னிந்திய மொழிகளுக்கும் பொதுவாக ஒரு தரப்படுத்தப்பட்ட கலைச்சொல் பட்டியலை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது (எ.கா. இயல்புகள், குணங்கள், பெயர்கள்: சக்தி, மைல், பரிமாணம், போக்கு, உணவுச்சத்து)). இவற்றுக்கான தென்னிந்திய மொழி இணைச்சொற்களின் உருவாக்கத்தின் போது திராவிட மொழிகளுக்கு சமஸ்கிருத மொழியை அடிப்படையாகவும் உருது மொழிக்கு பாரசீக மற்றும் அராபிய மொழிகளை அடிப்படையாகவும் எடுத்துக்கொள்ளலாம் எனினும் இந்த வகையில் சொற்கள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

3.            மேலே குறிப்பிட்ட இரண்டு வகைக்குள் வராத (அல்லது அவற்றின்படி உருவாக்க முடியாத) அறிவியல் கலைச்சொற்களை அப்படியே அவற்றின் மூலமொழியிலிருந்து எடுத்துக்கொண்டு, அதே உச்சரிப்புடன் அந்தந்த மொழிகளின் எழுத்துக்களில் உபயோகப்படுத்திக் கொள்ளப்படும்.

சாஸ்திரிக் குழுவிற்கு எதிர்ப்பு

சாஸ்திரிக் குழுவின் அறிக்கை வெளிவந்த காலகட்டத்தில் செ.மா.சங்கத்தின் பணிகளைப் பற்றி குறிப்பிட்டு, இ.மு.சு. அரசுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் சாஸ்திரிக் குழுவின் அறிக்கையைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள்,

1.            புதிய குழுவின் (சாஸ்திரிக் குழு) பரிந்துரைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

2.            அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கும் பொறுப்பை, செ.மா.த. சங்கம் போன்ற சங்கங்களிடம் ஒப்படைத்து அரசு எல்லா வகையிலும் உதவ வேண்டும்.

3.            இது நிறைவேறாத நிலையில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கான கலைச்சொற்களை உருவாக்க உண்மையான அறிவும் பயிற்சியும் உள்ள குழுமனப் பான்மையில்லாத (unbiased) வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.

4.            தமிழைப் பொறுத்த அளவில் செ.மா.த.சங்கம் வெளியிட்டுள்ள கலைச்சொற்கள் நூலில் உள்ள சொற்களைத் தரப்படுத்த அரசு உதவவேண்டும். மேலும், அரசு மற்றும் பல்கலைக்கழகக் கல்வித் துறைகளுக்கான கலைச்சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ள செ.மா.த.சங்கத்திற்கு அரசு உதவ வேண்டும் என்பதாக அமைந்திருந்தது. இ.மு.சு.வின் கடிதத்தை அன்றைய ஆளுநர் அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இருப்பினும் சாஸ்திரிக்குழுவின் கொள்கைகள் தமிழுக்குக் கேடு விளைவிப்பன என்பதை வலியுறுத்தி அவர் மீண்டும் அரசுக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்,

சமஸ்கிருத வேர்களிலிருந்து உருவாக்கப்படும் சொற்கள் தமிழ்மொழியின் இனிமையையும், வளர்ச்சியையும் பாதிப்பதுடன் சாதி அடிப்படை­யிலான வெறுப்பையும் நிச்சயம் தூண்டிவிடக்கூடும்...

எனக் குறிப்பிட்டார்.

அவரின் எதிர்ப்புக் கடிதத்தையும் அதற்குப்பின் செ.மா.த.சங்கத்தின் சார்பில் அனுப்பிய பல அறிக்கைகளையும் ஆலோசகர் ஆட்சி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் தமிழ் அறிஞர்களை பேரின வாதிகளாகச் சீனிவாச சாஸ்திரி சுட்டிக்காட்டினார் இத்துடன் வையாபுரிப் பிள்ளையைச் சேர்க்க வேண்டும் என்று கடுமையாகப் பரிந்துரைத்தார். சாஸ்திரியார் குழு பொதுவாகத் தமிழருக்கு விரோதமாகக் கருதப்பட்டது.

கண்டனக் கூட்டங்கள்

இதற்கிடையே சாஸ்திரிக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த சமஸ்கிருதத்திற்கு ஆதரவான நிலைப்பாடு செ.மா.த.சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களைப் போராடத் தூண்டியது. 31.08.1941இல் சென்னை கோகலே மண்டபத்தில் அரசாங்கக் கலைச்சொல் கமிட்டி கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். கண்டனக் கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி, டி.எஸ்.நடராசப் பிள்ளை, ரெவரென்ட் அருள் தங்கையா, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், மு.இராசகண்ணு. கே.எம். பாலசுப்பிரமணியம், டி.சண்முகம் பிள்ளை, பி.பாலசுப்பிரமணியம், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் பேசுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. ஏற்கனவே வெளியான இக்கூட்டங்களில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கச் சொற்கள் பட்டியல் இருக்கும்போது புதிய குழு தேவையற்றது என்றும், இக்குழுவின் அமைப்பு, போக்கு, நோக்கு ஆகியவை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் இக்குழுவில் தமிழறிஞர்கள் யாரும் இடம் பெறவில்லை. மேலும் முன்னாள் உழைத்த தமிழ்ச் சங்கத்தின் பிரதிநி­தித்துவம் இல்லை என்பது கண்டிக்கத்தக்கது என்றும் வலியுறுத்தப்பட்டது.

அன்றைய கூட்டத்தில் அரசு அமைத்த குழுவைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 25.12.1940 ஆம் நாள் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் தலைமையில் நடந்த சென்னை மாகாணத் தமிழறிஞர் மாநாட்டிலும் சாஸ்திரி குழுவிற்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1940ஆம் ஆண்டு காஞ்சீபுரம் கண்ணன் டாக்கீசில் ‘கலைச் சொல்லாக்கக் கண்டன மாநாடு’ நடைபெற்றது 1941இல் தஞ்சையிலும், 1942இல் திருநெல்வேலியிலும், 1943இல் மதுரையிலும், 1945இல் சென்னையிலும், 1946இல் மீண்டும் திருநெல்வேலியிலும், கலைச் சொல்லாக்கக் கண்டன மாநாடுகள் நடைபெற்றன. சாஸ்திரிக் குழுவிற்கு எதிரான கண்டன அறிக்கைகளைத் தமிழறிஞர் கழகம் என்ற அமைப்பு அச்சிட்டு, தமிழகம் முழுவதும் வெளியிட்டது. சென்னை மாகாண தமிழ்ச்சங்கம், தமிழறிஞர் கழகம் போன்றவை தொடர் துண்டு பிரசுரங்களை வெளியிட்டது. இப்பிரசுரங்கள் தொழில் நுட்பச் சொற்களைத் தமிழில் மட்டும் ஏன் உருவாக்க வேண்டும் என்பதை விளக்கியது மற்றும் சமஸ்கிருத சார்புகளை அம்பலப்படுத்தியது. சமஸ்கிருத அடிப்படையிலான முந்தைய பட்டியல் மூலம் ஏற்படும் குழப்பமும் மெய்ப்பிக்கப்பட்டது. மேலும் கட்டுரைகள் மூலம் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் எப்படி முற்றிலும் வேறுபட்டது என்பதும் வலியுறுத்தப்பட்டது. தமிழ் அதன் சொந்த அடிப்படையில் சொற்களை உருவாக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்பட்டது.

விடுதலை இதழின் கண்டனம்

சாஸ்திரிக் குழுவிற்கு எதிரான கருத்துக்களை ‘குதிரைக்கு முன் வண்டி’ என்ற தலையங்கம் வா­யிலாக ‘விடுதலை’ (6.07.1946) இதழ் கண்டனம் செய்தது. ‘கலைச்சொற்கள் பெயரால் தமிழ்க்கொலை’ என்ற தலைப்பிட்டு (11.10.1946) இக்குழுவை மீண்டும் ‘விடுதலை’ இதழ் கண்டித்துள்ளது. அத்துடன்

“பழைய கலைச்சொற்கள் பட்டியல் ஒன்றிருக்கும்போதே இப்போது மற்றொரு பட்டியலை ஏற்பாடு செய்வதன் உட்கருத்து என்னவென்பது விளங்கவில்லை. ஒருக்கால் பழைய பட்டியலைக் காட்டிலும் அதிகமான வடமொழிச் சொற்களை இந்தப் பட்டியலில் நுழைப்பதற்காக இந்த ஏற்பாடா? அப்படியானால் தமிழ் மந்திரியான தோழர் அவினாசிலிங்கம் அதற்கு இணங்கியது எப்படி?” (விடுதலை 11.10.1946)

என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

“சென்னை அரசாங்கத்தார் தொகுத்து வரும் கலைச்சொற்பட்டியலை, எல்லா தமிழ்ப் புலவர்களுக்கும், தமிழாசிரியர்களுக்கும், தமிழ்ப் பத்திரிகையாசிரியர்களுக்கும் அனுப்பி அவர்களது திருத்தங்களையும் பிற ஆலோசனைகளையும் கேட்ட பிறகு தான் ஸர்க்கார் அந்தப் பட்டியலை ஒப்புக் கொள்ள வேண்டும்”           (விடுதலை 11.10.1946).

என்ற கருத்தினையும் வெளியிட்டுள்ளது. இதனை அறியும்போது தமிழ்மீது தந்தை பெரியார் கொண்டிருந்த தமிழ்ப் பற்றை நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது.

குழுவின் செயல்பாடுகள்

சாஸ்திரிக் குழுவின் அறிக்கையின்படி ஒவ்வொரு மொழிக்கும் ஒரு துணைக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்த் துணைக்குழுவின் (Tamil Sub committee) கூட்டங்கள் குழுத்தலைவர் கே.சாமிநாதன் (ஆங்கிலப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி) தலைமையில் 25.10.1941, 21.02.1942, 27.06.1942 ஆகிய நாள்களிலும், அதனைத் தொடர்ந்து நான்கு நாள்களும் நடந்தன.

சென்னையில் இருந்த துணைக்குழுவின் உறுப்பினர்கள் பல முறை கூடி, கலைச்சொல்லாக்கம் குறித்து விவாதித்தனர். துணைக்குழுவின் அழைப்பின் பேரில் குழுக்கூட்டங்களில் கலந்து கொண்ட சச்சிதானந்தப்பிள்ளை, ஜெ.பி.மாணிக்கம், பெ.நா.அப்புசாமி ஆகியோரின் ஆலோசனைகளையும் பெற்றனர். மேலும் தமிழ் மற்றும் பிற துறைத்தொடர்பான பதினான்கு முக்கிய அறிஞர்களின் ஆலோசனைகளையும் ஏற்றனர்.

சாஸ்திரிக் குழுவை எதிர்த்துப் போராடிய செ.மா.த.சங்கத்தின் கலைச்சொற்களைத் தமிழ்த் துணைக்குழு பயன்படுத்திக் கொண்டது. சாஸ்திரி அளித்த அறிக்கையில் இடம்பெற்ற ஆங்கில கலைச்சொற்களைப் பயன்படுத்துதல், ‘சமஸ்கிருத மூலச் சொற்களைப் பயன்படுத்துதல்’ ஆகிய இரண்டு நிலைப்பாடுகளும் சரியானவை அல்ல எனத் தமிழ்த் துணைக்குழு கருதியது. அதனால் இரண்டு புதிய பரிந்துரைகளைத் தமிழ் உட்குழு உருவாக்கியது. இரு பரிந்துரைகள் வருமாறு:

1.            உயர்நிலைப்பள்ளிகளில் பொது உபயோகத்திலுள்ள தமிழ்ச்சொற்களை எடுத்துக் கொள்வது (இது சீனிவாச சாஸ்திரி) குழுவில் குறிப்பிட்டுள்ள வகை (1)ன் சற்றே பரந்த (Extended) வடிவக் கருத்தாகும்.

2.            பண்புகள் மற்றும் செயல்பாடுகளைக் குறிக்கும் சொற்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்த்தல் (சமஸ்கிருதத்திலிருந்து பெறத் தேவையில்லாமல் தமிழிலேயே இருக்கும் பெரும்பாலான இச்சொற்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும் பொதுவானதாக இருப்பதில்லை).

சாஸ்திரி 1943ஆம் ஆண்டில் இறந்து விட்டார். அவர் தலைமையில் தயாரிக்கப்பட்ட கலைச்சொற்கள் அச்சகத்திற்கு அனுப்பப்பட்டன.

குழுவில் மாற்றங்கள்

காங்கிரஸ் அரசு 1946இல் மீண்டும் பொறுப்பேற்றது. அன்றைய காங்கிரஸ் அரசின் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம், சாஸ்திரியின் மறைவினால் அவருடைய பதவியில் ராவ்பகதூர் டி.எஸ்.மூர்த்தியை 1946இல் நியமித்தார். அவருடைய தலைமையின்கீழ் பணிபுரிய புதிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவில் புதிய உறுப்பினர்களாக தமிழறிஞர்களை இணைத்துக் கொள்ள தமிழறிஞர் கழகம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதனைத் தொடர்ந்து சாஸ்திரிக் குழுவில் சுவாமி விபுலானந்தர், ஆர்.பி.சேதுப்பிள்ளை, விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், ஸ்ரீனிவாச இராகவன், சபேசன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், ஜி.சுப்பிரமணியப்பிள்ளை, டாக்டர்.சிதம்பரநாதச் செட்டியார் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். இக்குழு முந்தைய குழு தயாரித்த கலைச்சொற்களை மறுஆய்வு செய்து 1947இல் அரசுக்கு வழங்கியது. புதிய குழுவினர் அளித்த கலைச்சொற்களை 1947இல் அரசு வெளியிட்டது. 1940 இல் அமைக்கப்பட்ட கலைச்சொல் குழு உருவாக்கிய சொற்கள் இதில் இடம்பெற்றன.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க கொள்கைகளை ஏற்றுக்கொண்ட சாஸ்திரியின் துணைக் குழு அமைப்பு மற்றும் குழு ஏற்றுக்கொண்ட தமிழறிஞர்கள் போன்ற செயல்கள் செ.மா.த.சங்கம் சார்பு முகாமுக்கு இறுதி வெற்றியை உணர்த்தியது.

கலைச்சொல் பட்டியல்

அரசு 1947ஆம் ஆண்டில் வெளியிட்ட கலைச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பாடநூல்களை மட்டுமே பாடநூல் குழு அங்கீகரிக்கும் என கல்வியமைச்சர் அவினா­சிலிங்கம் அறிவித்தார். இடைக்கால அமைச்சகத்தின் கீழ், தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் காங்கிரஸ்காரராக இருந்தாலும் பொதுவாகச் செயல்பட்டா£¢. இவரது தமிழ்ச் சார்பு தமிழ் அறிஞர்களின் நம்பிக்கையை உயர்த்தியது. ஏனெனில் குழுவின் தரப்படுத்தலை மாற்றியமைக்கும் பணியை மேற்கொண்டார். இது சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்திற்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி ஆகும்.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It