keezhadi 634கீழடி அகழாய்வு முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் ஆதி வரலாற்றின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. கங்கைச் சமவெளியில் தோன்றியது போல, நகர நாகரிகம் இங்கு தோன்றவில்லை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் நகர நாகரிகத்தோடு வாழ்ந்தனர் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கீழடியில் கிடைத்திருக்கக் கூடிய பிராமி எழுத்துக்கள் மூலம் தமிழர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே கற்று அறிந்தவர்களாக இருந்தனர் என்பதும் உறுதியாகி இருக்கின்றது. இந்த பிராமி எழுத்துக்கள் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்கள் என்பது இன்று இருக்கும் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், வேறு பல மொழிகளுக்கும் அடிப்படையாக இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதம் சார்ந்த புராணங்கள், இலக்கியங்கள் மூலமாகவே வரலாற்றைக் கட்டமைக்க நினைப்போருக்கும் பெரும் தலைவலியாய் இருப்பது பிராமி எழுத்துக்களே ஆகும். காரணம் அவை புராண புரட்டர்கள் குறிப்பிடும் தங்களது பழமையை அம்பலப்படுத்தி விடுகின்றன.

ஆனால் பெரும்பாலான பிராமி எழுத்துக்கள் இன்னும் படிக்கப்படவில்லை என்பதோடு அவை இன்னும் புரிந்து கொள்ள முடியாமல்தான் உள்ளன. இந்த பிராமி எழுத்துக்கள் என்பவை ஆரிய மொழிக் குடும்பத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். காரணம் ஆரியர்களுக்கு முன்பே திராவிட மொழி இருந்தது. இந்தோ ஆரிய மொழி என்பது சொற்சிதைவுடைய மொழியாகும். ஆனால் திராவிட மொழி என்பது ஒட்டுநிலை மொழியாகும். அது முற்றிலும் ஆரிய மொழிக்கு வேறுபட்டதாகும். ஆனால் மூல திராவிட மொழி தமிழ் என்ற வாதமும் முற்றிலும் தவறாகும்.

தமிழ் எழுத்துருக்கள் தோன்றுவதற்கு முன்பே ஒரு மூல மொழி இருந்திருக்கின்றது. அதில் இருந்தே தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் தோன்றி இருக்கின்றன. பிராமி எழுத்துக்கள் என்பவை இந்த வகைப்பட்ட தமிழ்மொழிக்கு முந்திய எழுத்துருவாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். காரணம் கி.மு. மூன்றாமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகங்களான மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்றவற்றிலும் பிராமி எழுத்துருக்கள் கிடைத்திருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துருக்களுக்கும், தமிழ்ப் பிராமி எழுத்துருக்களுக்கும் சில வேறுபாடு இருந்தாலும் ஆரம்பத்தில் பிராமி எழுத்துக்களை பயன்படுத்தும் இனமே இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது என்பது உறுதியாகின்றது. அவர்களிடம் இருந்தே பல்வேறு திராவிட மொழிகள் தோன்றி வளர்ச்சி அடைந்து இருக்கின்றன.

கீழடி அகழாய்வுகள் இன்று பெரிய அளவில் கவனிக்கப்படுவதற்குக் காரணம் இந்தத் தமிழ்மண் யாரின் வாழ்விடமாக இருந்தது என்பதையும், அதன் மூதாதையர் யார் என்பதும், அவர்கள் தனக்கென்று தனித்துவமான ஒரு பண்பாட்டையும், நாகரிகத்தையும் கொண்டிருந்தனர் என்பதையும் நிரூபிக்க வேண்டிய அரசியல் தேவை மற்றும் அபிலாசைகள் இன்று பெரும்பாலான தமிழர்களிடம் ஏற்பட்டிருப்பதுதான். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் தொடர்ச்சியாக சொல்லி வந்ததைத் தான் கீழடி ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. தற்போது தமிழரின் தனி அடையாளம் பார்ப்பனிய கலப்பற்று கண்டறியப்பட்டிருப்பதால் தமிழர்கள் சாதியற்றவர்களாகவும், மதமற்றவர்களாகவும், பார்ப்பனக் கடவுள்களை வணங்காதவர்களாகவும் இருந்தனர் என்பது 100 சதவீதம் உண்மையாகி இருக்கின்றது.

ஆரியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள் கிடையாது என்பதும் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கின்றது. காரணம் ஆரியர்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு கி.மு. இரண்டாம் ஆயிரம் காலப் பகுதியிலேயே வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்பதும் பொய்யான வரலாறே ஆகும். மொகஞ்சதாரோவில் வாழும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் குடிமக்கள் பெருமளவு கொல்லப்பட்டார்கள் என்று முதலில் பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த எலும்புகளை பகுப்பாய்வு செய்ததில் பெரும்பாலான மக்கள் கடுமையான இரத்தசோகை வியாதியால் இறந்தார்கள் என்பதை நிரூபித்தன. ஒரு நகர நாகரிகம் ஏன் அழிந்தது அல்லது கைவிடப்பட்டது என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கொத்துக் கொத்தாக மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள், உள்ளூர் தகராறுகள், மோசமான சுற்றுப்புறச்சூழல், வறுமை என பல காரணிகள் இதை நிர்ணயிக்கின்றன.

keezhadi antiquitiesசிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் கி.மு மூன்றாம் ஆயிரம் என்றும், ஆரியர் வருகையை கி.மு. இரண்டாம் ஆயிரம் ஆண்டு என்றும் கொண்டால், நம்மால் கீழடி நகர நாகரிகத்தை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். சிந்து சமவெளி நாகரிகத்தைப் போலவே கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாகரிகமும் நகர நாகரிகமாக உள்ளது. ஆரியர் வருகைக்கு முன்பே இந்திய துணைகண்டத்தைச் சேர்ந்த மக்கள் நகர நாகரிகத்துடனும், தனக்கென தனித்த மொழி, எழுத்து, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைக் கொண்டிருந்தனர் என்பதற்கு மேலும் ஒரு வலுவான சான்றுதான் கீழடி. இதன் மூலம் ஆரியர்கள் பூர்விக இந்திய மக்களின் நாகரிகத்தை தன்னுடைய ஆயுத பலத்தின் மூலம் அழித்து அடிமையாக்கவில்லை என்பதும், தன்னுடைய வஞ்சகமான சனாதன வருணாசிரம தத்துவத்தாலேதான் அடிமையாக்கினர் என்பதும் உறுதியாகி இருக்கின்றது.

இந்தியாவில் ஆரியர் வருகைக் காலம் கி.மு.2000-மாக இருந்தாலும் கி.மு 600 வரை கூட தமிழகத்தில் ஆரியப் பரவல் நடக்காமல்தான் இருந்துள்ளது. அதன் பிறகுதான் படிப்படியாக ஆரியர்கள் தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, அவர்களது சனாதன வருணாசிரமக் கருத்தியலைப் பரப்பி தமிழர்களை அடிமைப்படுத்தி இருக்கின்றனர். கீழடியில் ஒட்டுமொத்தமாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது. இது மிக முக்கியமானதாகும். ஒட்டுமொத்த தமிழர்களின் சிந்தனையின் மீதும் பெரும் தாக்கம் செலுத்தத் தகுதியான செய்தியாகும்.

இதுவரை சாதியாகவும், மதமாகவும் தன்னை சுருக்கிக் கொண்டு வாழ்ந்த தமிழன் இன்று அதை எல்லாம் தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்திருக்கின்றது. இத்தனை நாட்களாக பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களாக (சூத்திரர்களாக) வாழ்ந்து வந்த தமிழர்கள் தனக்கு அப்படியான இன இழிவை ஏற்படுத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தையும் கீழடி உணர்த்தி இருக்கின்றது.

அதனால்தான் பார்ப்பனக் கும்பலும், பார்ப்பன அடிவருடிக் கும்பலும் பதறுகின்றார்கள். இந்த மண்ணின் மக்களை இத்தனை நாட்களாக ஏய்த்துப் பிழைத்து வந்த தங்களின் தொழில் நடக்காது என்று உறுதியானதும் கீழடியை மோசடி என்கின்றார்கள்.

கீழடியின் மூலம் நாம் நம்முடைய வரலாற்றை அறிவியல் முறைப்படி சரியாக அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கி.மு.6 நூற்றாண்டில் தமிழ்ப் பிராமி எழுத்துருக்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால் தமிழ் இலக்கியங்களின் காலத்தை சகட்டுமேனிக்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் தள்ளிப் போடுவதற்கு கீழடி கடிவாளம் போட்டிருக்கின்றது. குறிப்பாக தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றின் காலத்தை ஐயாயிரம், பத்தாயிரம் ஆண்டுகள் என இனி அடித்துவிட முடியாது. தொல்காப்பியர் காலத்தை கி.மு. நாலாம் நூற்றாண்டு என்று சிலர் சொல்கின்றார்கள். இதுவே சந்தேகத்திற்கு உரியதுதான். காரணம் தொல்காப்பியத்தில் பார்ப்பனக் கருத்தியல்கள் குறிப்பிடப்படுகின்றன. அப்படி இருக்கும் போது பிராமி எழுத்துக்களில் இருந்து ஒரு திட்டமிட்ட இலக்கண வரையறையை சொல்லும் தொல்காப்பியம் இரண்டு நூற்றாண்டுக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிகவும் குறைவுதான். மேலும் செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று பொருத்தியது தவறானது என்பதையே கீழடி ஆய்வுகள் காட்டுகின்றன.

சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் ஆரியன் என்ற சொல் பயின்று வருகின்றது. எனவே இந்த இலக்கியங்கள் அனைத்துமே தமிழகத்தில் ஆரிய சித்தாந்தம் வளர்ச்சி அடைந்த காலப்பகுதியில் எழுதப்பட்டவை என்பது இதன் மூலம் உறுதியாகி இருக்கின்றது. அதன் காலத்தை எப்படிப் பார்த்தாலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்ல முடியாது. எனவே நமக்கான வரலாறைக் கறாரான முறையில் நாம் கட்டமைப்பு செய்ய வேண்டும்.

ஆரியத்திற்கு முந்தியே நமக்கான வரலாறு இருந்தது என்பதை நிரூபிக்க எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் காலத்தைப் பின்னோக்கி தள்ளிப் போடவும், அப்படி தள்ளிப் போட்டதற்காகவே பல புரட்டுகளை கட்டியமைக்கவும் தேவையில்லை. தற்போது நமக்கு பார்ப்பனக் கலப்பற்ற ஒரு தூய தமிழர் நாகரிகம் கிடைத்திருக்கின்றது. அது மதச் சார்பற்றதாக, சாதிய சார்பற்றதாக இருந்திருக்கின்றது. வழிபாடு தொடர்புடைய எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்பதில் இருந்தே இன்று இருக்கும் அடிமைத்தனமான வழிபாடு, குறிப்பாக உருவ வழிபாடு அன்று தமிழ் மண்ணில் நிலவவில்லை என்பது உறுதியாகி இருக்கின்றது.

மானமுள்ள தமிழர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதியையும், மதத்தையும், வழிபாட்டு முறைகளையும் தூக்கி எறியப் போகின்றார்களா? இல்லை தங்களுக்கு மானவெட்கம் எல்லாம் கிடையாது, நாங்கள் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களாக (சூத்திரர்களாக) இருப்பதையே பெருமையாக நினைக்கின்றோம் என்று சொல்லப் போகின்றார்களா? ஒரு புராதான பொதுவுடைமை சமூகத்தின் எச்சமாக கீழடி கிடைத்திருக்கின்றது. நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்ற இயக்கவியல் விதிப்படி தமிழர்கள் மீண்டும் தாங்கள் தொலைத்த அந்த ஆதி பொதுவுடைமை சமூகத்தை அதன் வளர்ச்சியடைந்த கட்டத்தில் மீட்டெடுக்க பொதுவுடைமைவாதிகளோடு இணைந்து போராட வேண்டும் என்பதைத்தான் கீழடி நமக்கு கற்றுத் தருகின்றது.

- செ.கார்கி

Pin It