joseph vadakkan 450

1957ஆவது ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் கேரளமாநிலத்தின் தேர்தல் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் கூட சிலருக்கு மகிழ்ச்சியும் சிலருக்கு அதிர்ச்சியும் ஏற்படுத்துவதாக இம் முடிவு அமைந்தது. “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி” என்ற பெயரில் அப்போது ஒரே கட்சியாக இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சியானது இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைவிட அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்று கேரள மாநிலத்தின் ஆளுங்கட்சியானது. வாக்குச் சீட்டின் வாயிலாகக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று ஆட்சியமைக்கும் உரிமையைப் பெற்றதென்பது புதிய நிகழ்வாகவும் புதிய வரலாறாகவும் உலகெங்கிலும் பார்க்கப்பட்டது. தோழர் 

ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட்டை முதலமைச்சராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த கம்யூனிஸ்ட் அரசை, ஆட்சிப் பொறுப்பில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் எவ்விதக் கூச்சமும் இன்றி காங்கிரஸ் கட்சி ஈடுபடலாயிற்று. இந்தியாவின் பிரதமராக விளங்கிய நேரு, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அவரது மகள் இந்திராகாந்தி ஆகியோரின் ஆதரவும் வழிகாட்டுதலும் இம் முயற்சிக்கு இருந்தது. ஆரோக்கியமான அரசியல் செயல்பாட்டில் ஓரங்கட்டப்பட வேண்டிய சாதியம் மதவாதம் என்ற இரண்டையும் அரவணைத்துக் கொள்வதில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

கேரள அரசுக்கெதிரான போராட்டங்களை நடத்துவதற்காக “விமோசன சமிதி” என்ற அமைப்பை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு இருந்தது. கேரளத்தின் வலுவான சாதிகளுள் ஒன்றாக விளங்கிய நாயர் சாதியினரின் “நாயர் சேவா சங்கம்” இப்போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டது. இவ் அமைப்பின் தலைவராக விளங்கிய மன்னத் பத்மநாபன் விமோசன சமிதியின் முக்கிய தலைவராகச் செயல்பட்டார்.

சாதியவாதத் தலைமையை நாயர் சேவாசங்கம் ஏற்றுக் கொண்டது போல் மதவாதத் தலைமையை, கேரள மாநிலக் கத்தோலிக்கத் திருச்சபை ஏற்றுக்கொண்டது. அகில இந்திய அளவிலான கத்தோலிக்கத் திருச்சபையின் ஆசிர்வாதமும் கேரளக் கத்தோலிக்கத் திருச்சபைக்கு இருந்தது. கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகார மையங்களில் இருந்த பேராயர்கள்,ஆயர்கள், குருக்கள்.துறவிகள், துறவினிகள் (கன்னியாஸ்திரிகள்) என்போர் தேவாலய எல்லையைக் கடந்து தம் மந்தையின் ஆடுகளை வீதிக்கு அழைத்துவரும் செயலில் துடிப்புடன் ஈடுபட்டனர்.

விமோசன சமிதி நடத்திய இப்போராட்டத்தில் பங்குபெற்ற தேவாலயக் குருக்களில் ஒருவர் வடக்கன் பாதிரியார். இவரது முழுப்பெயர் ஜோசப் வடக்கன் என்பதாகும். போராட்டக் களத்தில் ஃபாதர் வடக்கன் என்று இவரது பெயர் சற்று உரக்கவே ஒலித்தது.

இவரது தன்வரலாற்று நூல் மலையாள மொழியில் “என்றே குதிப்பும் கிதப்பும்” என்ற தலைப்பில் 1973 இல் வெளியாகியுள்ளது. பின்னர் இதன் சுருக்கப்பதிப்பு 1974 இல் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. இச்சுருக்கப் பதிப்பே இங்கு அறிமுகம் ஆகிறது. இச் சுருக்கப் பதிப்புக்கு சீர்திருத்தக் கிறித்தவ சபையின் போதகரான கே.சி.ஆபிரகாம் முன்னுரை வழங்கியுள்ளார்.

அதில், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பிரச்சினைக்குரிய ஒருவராகவே ஃபாதர் வடக்கன் இருந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவரது கிறித்தவமானது வறுமை என்ற கொடிய பாவத்திற்கு எதிராகப் போராடும் ஏழைகளின் கிறித்தவம் என்று குறிப்பிட்டுள்ளதுடன், நவீன கால கேரள அரசியலில் செயல் ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார் என்றும் பாராட்டியுள்ளார்.

தன்மதிப்பீடு

போதகர் ஆபிரகாமின் முன்னுரையில் இடம் பெற்றுள்ள இக்கருத்துக்களுடன் ஒத்துப் போவதாக நூலின் தொடக்கத்தில் சில செய்திகள் இடம் பெற்றுள்ளன. பொதுவெளியில் தம்மைக்குறித்து நான்குவிதமான கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததாக, ஃபாதர் வடக்கன் கூறுகிறார். அதன்படி

1) அவர் ஒரு கம்யூனிஸ்ட்

2) கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்

3) கத்தோலிக்கக் குரு

4) கத்தோலிக்கத் திருச்சபையின் அழுத்தமான விமர்சகர்

ஃபாதர் வடக்கனின் வாழ்க்கைப் பயணம் பல்வேறு அனுபவங்களை உள்ளடக்கியது. கத்தோலிக்கத் தேவாலயத்தின் பலிபீட உதவியாளர் (பீடத்துணைவர்), பத்திரிகை போடும் பையன், கிராமப்பள்ளி ஆசிரியர், தேவாலய உதவியாளர், விடுதலைப் போராட்டக் காலத்திய காங்கிரஸ் கட்சியின் ஊழியர், உள்ளூரளவிலான தொழிற்சங்கவாதி, நாடக ஆசிரியர், குடும்பச்சுமைகளைச் சுமப்பவர், குருத்துவப்பள்ளியின் உயரிய காத்திரமான சகோதரர், உழைப்பாளி மக்களின் பத்திரிகையாளன் எனப் பல்வேறு படிநிலைகளை அவர் கடந்து வந்துள்ளார். பொதுவாகக் கூறினால் எதைப்பற்றியும் எவரைப் பற்றியும் விமர்சனம் செய்பவராக ஒன்றுக்கொன்று முரணான குணாம்சங்கள் கொண்டவராக அவர் வாழ்ந்துள்ளார்.

பிறப்பும் குடும்பமும்

தற்போதைய கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள பழைய மலபார் பகுதியின் பழையூர் தேவாலயத்துக்கு ஏறத்தாழ 20 கி.மீ தொலைவிலுள்ள பொய்யக்காவூர் என்ற கிராமத்தில் 1919 அக்டோபர் முதல் நாளன்று இட்டுக்குறு,  குஞ்சிலா இணையரின் மகனாகப் பிறந்தவர்.

ஏழு குழந்தைகளை இவரது தாய் பெற்றெடுத்தார். இவர்களில் மூவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போயினர். எஞ்சிய நால்வரில் இவரே மூத்தவர். இவரது 12ஆவது வயதில் தாயும் அடுத்த ஆண்டில் தந்தையும் இறந்து போயினர். அநாதைகளாகிப்போன நான்கு குழந்தைகளையும் பாட்டி வளர்த்தார். ஏழாம் வகுப்புவரைதான் இவரால் படிக்க முடிந்தது. தனது 14ஆவது வயதில் தேவாலயம் நடத்திவந்த பள்ளியில் ஆசிரியரானார். 12 ஆண்டுகள் வரை அவரது ஆசிரியப்பணி தொடர்ந்தது.

பள்ளியில் பயிலும்போது படிப்பில் ஆர்வம் கொண்டவராக மட்டுமின்றி நடிப்பிலும் மேடைப்பேச்சிலும் ஆர்வம் கொண்டு அவற்றில் பரிசு பெறுபவராகவும் விளங்கினார். இவரைக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டுமென்ற தந்தையின் எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது. இருப்பினும் தமது 45ஆவது வயதில் கனடாவிலுள்ள பிரான்சிஸ் சவேரியர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

இவரது தாயும் பாட்டியும் இவரைக் குருவாக்க வெண்டுமென்று விரும்பினர். ஆனால் இவர் குருவாவதைக் காணாமலேயே இருவரும் இறந்து போயினர். இவரது தாய் காலமாகி 24 ஆண்டுகள் கழித்து நெய்யக்காவு தேவாலயத்தில் குருவாக தனது முதல் வழிபாட்டை நிகழ்த்தியபோது இதை எண்ணி, குழந்தையைப் போல கண்ணீர் விட்டு அழுதார்.

சிறு வயதிலிருந்தே மேடைப்பேச்சில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் அதை அவர் வெளிப்படுத்திய முறையையும் விரிவாகக் கூறிச்செல்லும் இவர் பின்னர் தமது பேச்சுக் களம் விரிவடைந்ததையும் பின்வருமாறு விளக்குகிறார்:

பேச்சுக்கலை

joseph 450‘தொலைதூரக் கிராமங்களில் வாழ்ந்த கிராம மக்கள் கேட்கும் சொற்பொழிவென்பது தேவாலயங்களில் ஆற்றப்படும் மறையுரைதான்.’

‘இது கத்தோலிக்கத் தேவாலயங்களில் குருக்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது. அரசியல்வாதிகள் சொற்பொழிவாற்றும் மேடைகள் கிடையாது.’

சிறுவனாக இருந்தபோதே பேச்சுக் கலையில் தமக்கு ஆர்வம் இருந்ததாகவும்,தேவாலயத்தில் பங்குக்குரு ஆற்றிய மறையுரையை அப்படியே மீண்டும் நிகழ்த்திக் காட்டியதாகவும். அண்டை வீட்டுக்காரர்களும் உறவினர்களும் பார்வையாளர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச் சிறுவயது மேடைப்பேச்சு அனுபவம்தான் அவரது நாற்பது ஆண்டு பொதுவாழ்க்கையில் குறைந்தது பத்தாயிரம் பொதுக்கூட்டங்களில் பேசும் ஆற்றலை வழங்கியது. தேர்தல்கள், மக்கள் இயக்கங்கள் நிகழும் போது நாளன்றுக்கு இருபது அல்லது முப்பது கூட்டங்களில் உரையாற்றியுள்ளார்.

கேரளத்தில் மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் அய்ரோப்பா, அமெரிக்கா, தாலாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் இவரது சொற்பொழிவுகள் நிகழ்ந்துள்ளன.

நேரு, தேபர், அசோக்மேத்தா, கிருபாளினி, எஸ்.கே.பாட்டில், பனம்பள்ளி கோவிந்தமேனன், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன் போன்றோருடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் இவரது சொற்பொழிவாற்றல் இவருக்கு வழங்கியது.

இரண்டு அல்லது மூன்று மணிநேரம் உரையாற்ற நேர்ந்தாலும் குறிப்புகள் எவையும் இவர் எடுத்துக் கொள்வதில்லை. அவ்வாறு குறிப்பெடுப்பதானது ‘கங்கையாற்றின் நீரோட்டப் பெருக்கைத் தடுக்கும் அணைகளுக்கு ஒப்பானவை’ என்கிறார்.

‘இசைக் குறிப்புகளின் துணையுடன் பறவைகள் பாடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கியே வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன. விரும்பிய திக்கை நோக்கியே நீரோடை பயணிக்கும். ஒரு சொற்பொழிவானது தூறலாகத் தொடங்கி பெருங்காற்றுடனும் இடியுடனும் கூடிய பெருமழையாக மாற வேண்டும்.பேச்சு என்ற கலையானது மனிதரின் உள்ளத்தைத் தீண்டவேண்டும்.’

‘தன்னலவாதிகள் மிகுந்த சமூகத்தில் நேர்மையும் உண்மையும் கொண்ட சொற்பொழிவானது நண்பர்களைவிட எதிரிகளை உருவாக்கும் தன்மையது. கலீலேயோ நகர் தொடங்கி கல்வாரிமலை வரை யேசுவின் சொற்பொழிவு அனுபவங்கள் இத்தகையதுதான். உரையாற்றுபவனின் நாவானது கூர்மையான முனையைக் கொண்ட வாளுக்கு ஒப்பானது. கேட்பவர்களை இரு பிரிவுகளாக்கும். உரையை விரும்பியவர்கள் பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதை விரும்பாதவர்கள் உரையாற்றியவருக்கு எதிரான எதிர்ப்பில் முனைப்புடன் ஒன்று சேர்வார்கள்.’ 

போராட்ட குணம்

அவரது ஆசிரியப்பணியில் பொருளாதார அடிப்படையில் சுரண்டலுக்கு ஆளானதையும் அவர் பதிவு செய்துள்ளார். மாதம் ஒன்றுக்கு அரசால் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் 9 ருபாய். ஆனால் அவர் பணியாற்றிய பள்ளியின் தாளாளரான பங்குத் தந்தை 9 ருபாய்க்கு கையெழுத்து வாங்கிக்கொண்டு 5 ருபாய்தான் ஊதியமாக வழங்குவார். இது அப்போது பரவலாக நடைமுறையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளின் தாளாளர்கள் ஈவு இரக்கமற்று அதிகார போதையில் திளைத்தவர்களாக இருந்தனர் என்பது அவரது வெளிப்படையான கருத்தாக உள்ளது. எவ்விதக் காரணமுமின்றி பணியிலிருந்து ஆசிரியர்களை நீக்குவதில் மகிழ்ச்சியடைபவர்களாக பள்ளிகளின் தாளாளர்கள் இருந்தனர். தனது 12 ஆண்டு ஆசிரியப் பணியில் இருமுறை பணிநீக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் அமைப்பில் அவர் ஆர்வத்துடன் ஈடுபட்டதே இதற்குக் காரணமாக அமைந்தது. 

சி.ஜே.வர்க்கீஸ் என்பவர் 1937- 38 வாக்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக இவர் தேர்தல் பணியாற்றினார். பள்ளியின் தாளாளராக விளங்கிய பங்குத்தந்தை வர்க்கீசுக்கு எதிராகப் போட்டியிட்ட நீதிக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.

தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான வர்க்கீஸ் வெற்றி பெற்றார். இதனால் ஆத்திரமுற்ற பள்ளியின் தாளாளரான பங்குக்குரு இவரை வேலைநீக்கம் செய்தார். வெற்றி பெற்ற வர்க்கீஸ் கல்வி அமைச்சராக ஆன நிலையில் அவரது ஆதரவு இவருக்கு இருந்தது. எனவே வேறுவழியின்றி இவரைப் பணியில் அமர்த்தினர்.

அடுத்து தாம் கையெழுத்திடும் ஊதியத்தொகை முழுவதையும் தரும்படி வலியுறுத்தி ஊதியப் பட்டியலில் கையெழுத்திட மறுத்தார். தலைமையாசிரியரும் பள்ளியின் தாளாளரும் ஓரணியாக நின்ற போதிலும் தமது முழு ஊதியத்தையும் பெறுவதில் இவர் வெற்றி பெற்றார்.

ஆசிரியப்பணியில் கிடைக்கும் ஊதியத்தால் மட்டுமே தம் குடும்பத்தை நடத்தமுடியாத நிலையில் ‘மாத்ருபூமி‘, ‘கோமதி‘, ‘தி இந்து‘ ஆகிய நாளிதழ்களுக்கு முகவரானார். பத்திரிகை கட்டுக்களைப் பெறுவதற்காக நாள்தோறும் 10 கி.மீ தொலைவிலிருந்த கஞ்சாணி என்ற ஊருக்கு நடந்தே சென்று வந்தார். பத்திரிகைகளை விநியோகித்துவிட்டு காலை 9 மணியளவில் தனிப்பயிற்சி நடத்த ஒரு வீட்டுக்குச் சென்றுவிட்டு 10 மணிக்குப் பள்ளிக்கூடம் சென்றுவிடுவார்.

பள்ளிக்கூடப்பணி முடிந்ததும் தொழிற்சங்கம், ராட்டைக் கழகம், காங்கிரஸ் இயக்கம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். 

காந்தியும் நேருவும் இவரை ஈர்த்த தலைவர்கள் ஆனார்கள். கதராடை அணிவதில் இவருக்கு ஈடுபாடு இருந்தது. காங்கிரஸ் எதிர்ப்பைப் பின்னர் மேற்கொண்டபோதுகூட கதர் அணிவதை இவர் நிறுத்தவில்லை.

மது குறித்த பார்வை

அதே நேரத்தில் மதுஅருந்துவதற்கு எதிரான காந்தியின் கருத்துகளை இவரால் பின்பற்ற முடியவில்லை. ஆசிரியப்பணியில் இருந்தபோது நண்பர்களுடன் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இரண்டு வருடங்கள் வரை இது நீடித்தது. பின்னர் அவர் அதனை அறவே விட்டுவிட்டார். 

1961ல் மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்தபோது சில சமூக நிகழ்வுகளில் மது அருந்துவதை மேற்கொண்டார். 1963லும் இது தொடர்ந்தது. 1964-65ல் கனடாவில் இருந்தபோது முதல்முறையாக ‘ரம்‘ குடித்தார். காலை நேரத்தில் அதிகளவில் பனி பெய்யும்போது பேராசிரியர்கள்கூட மாணவர்களுக்கு ‘ரம்‘ வழங்கினர். அவ்வப்போது மது அருந்துவது என்பதை ஒரு கெட்ட பழக்கமாக மேற்கு நாடுகளில் கருதுவதில்லை.

இவரை விருந்தினராக ஏற்றுக்கொண்ட கத்தோலிக்கத் திருச்சபையின் கார்டினல்கள், ஆயர்கள், உயர் பதவிகளில் இருந்த குருக்கள் ஆகியோர் உணவு உண்ணும்போது விஸ்கி, ஒயின் ஆகியனவற்றைப் பரிமாறினார்கள். ரகசியமாக மது அருந்துவதில் உள்ள மகிழ்ச்சியை அறியாதவர்களாக அவர்கள் இருந்தனர். ரோம் நகரில் பயின்றுவந்த குரு மாணவர்கள் அனைவருக்கும் ஒயின் வழங்குவது வழக்கம்.

தாய்நாட்டிற்குத் திரும்பியதும் மது வழங்குவதிலும் அருந்துவதிலும் உள்ள ஆர்வம் தொடர்ந்தது. இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை குடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் அதனைத் தொடர நேரிட்டது. இதற்காக, சுயகட்டுப்பாடு அற்றவர் என்று தம்மைக் கருத முடியாது என்று கூறும் ஃபாதர் வடக்கன், நண்பர்களின் கூட்டுறவோடு மது அருந்துவது என்பது நெருக்கடியான சூழல்களிலிருந்து விடுவிப்பதாகவும் நல்ல உறக்கத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது என்கிறார். மூளைச் சோர்வின்றி வழக்கமான பணியில் ஈடுபடும்போது மது தேவைப்படுவதில்லை என்பதும் அவரது கருத்தாக உள்ளது. மது அருந்தும் வேட்கையானது சில பலவீனங்களுக்கு வழிகோலும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

மூன்று அல்லது நான்கு முறை எல்லை தாண்டி அவர் மது அருந்தியுள்ளார். ஆயினும் இந்த ஆபத்திற்கு ஆட்பட்டுவிடக்கூடாது என்பதில் அவர் விழிப்புடனேயே இருந்துள்ளார். அதே நேரத்தில் இறக்கும்வரை மதுவைத் தொடமாட்டேன் என்று உறுதிமொழி எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார். உறுதிமொழி எடுப்பது என்பது கடினமான ஒன்றல்ல. அதைப் பின்பற்றுவதுதான் மிகவும் கடினமானது என்பது அவரது கருத்தாகும்.

திருமண மறுப்பு

கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்கள் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை விதிமுறைகளில் ஒன்று திருமண மறுப்பு (celibacy) . இதுகுறித்த தமது கருத்துகளை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். திருமண மறுப்பு தொடர்பான விதிமுறைகளைக் குருவாகும் முன்னர் தாம் மீறியதாகவும் இதை தன் ஆன்மீக வழிகாட்டிகளிடம் ஒத்துக் கொண்டதாகவும் கூறும் இவர், குரு மாணவராக இருந்தபோதும் குருவான பின்னரும் திருமண மறுப்பு தொடர்பான விதிமுறைகளைத் தாம் மீறியதில்லை என உறுதிபடக் கூறுகிறார்.

திருமண மறுப்பு என்பது கத்தோலிக்கக் குருக்கள் பின்பற்ற வேண்டிய கட்டாய விதிமுறையாக இன்றி விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்கவேண்டும் என்பது இவரது கருத்தாக உள்ளது. இவ்வுறுதிமொழியை ஏற்றுக்கொண்ட கத்தோலிக்கக் குருக்கள் சிலர் அதை மீறியதைத் தாம் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பான விதிமுறைகளை கட்டாயமாக்காமல் அதனை குருக்களின் விருப்பத்திற்கு உரியதாக ஆக்கிவிடவேண்டும் என்பதும் குடும்ப வாழ்வை மேற்கொள்ள விரும்புபவரை திருமணம் செய்ய அனுமதிப்பதுடன் அவர்கள் குருக்களாகத் தம் பணியைத் தொடர அனுமதித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும் இவரது கருத்தாக உள்ளது.

அரசியல் ஆர்வம்

ஃபாதர் வடக்கனின் இளமைப்பருவத்தில் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த இயக்கமாக காங்கிரஸ் கட்சி விளங்கியது. காந்தியின் தனிப்பட்ட தாக்கம் இக்கட்சியில் மேலோங்கி இருந்தது. காந்தியின் கருத்துக்கள் ‘காந்தியம்‘ என்ற பெயரில் ஒரு கோட்பாட்டுத் தகுதியைப் பெற்றிருந்தன. விடுதலைப் போராட்டக் காலத்திய காங்கிரஸ் கட்சியினால் ஈர்க்கப்பட்டிருந்தாலும் காந்தியம் குறித்த எதிர்மறையான கருத்துகளும் இவரிடம் இடம் பெற்றிருந்தன.

பொருளாதாரம் குறித்த காந்தியின் பார்வையானது காந்தியத்தின் பலவீனமான பகுதி என்பதே இவரது கருத்தாகும். ராட்டைக் கழகத்தில் இவர் வகுப்புகள் நடத்தியபோது ராட்டையின் பயன்பாடு எந்த அளவுக்கு பொருளாதாரத் தீர்வை வழங்கும் என்பதில் இவருக்கு அய்யப்பாடு இருந்தே வந்தது. காந்திய இந்தியாவை விட மார்க்சிய இந்தியா குறித்த சிந்தனையே அவரது அடிமனதில் இருந்து வந்தது. ஆனால் அப்போது கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை. 1928ல்தான் உருவானது.

சோசலிச சிந்தனை உடையவர்கள் ஒரு தனிக்குழுவாக, ‘காங்கிரஸ் சோசலிஸ்டுகள்‘ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார்கள். ஜெயப்பிரகாஷ், லோகியா, அச்சுத பர்வர்த்தன், நரேந்திர தேவ், அசோக் மேத்தா, ஈ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன் ஆகியோர் காங்கிரஸ் சோசலிஸ்டுகளாக செயல்பட்டு வந்தனர். விவசாய சங்கங்களையும் தொழிற்சங்கங்களையும் இவர்கள் உருவாக்கினர். இளைஞர் இயக்கங்களும் மாணவர் இயக்கங்களும் சோசலிச அணியை ஆதரித்தன.

இக்குழுவின் சார்பில் பிரபாதம் (விடியல்) என்ற பெயரில் மலையாள மொழியில் பத்திரிகை ஒன்று வெளியானது. இதன் ஆசிரியராக ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டும் நிர்வாகியாக ஏ.கே.கோபாலனும் இருந்தனர். இப்பத்திரிகை நிறுவனத்துடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. சவக்காடு, மெட்டிகா என்ற இரண்டு கிராம நிர்வாகப் பகுதிகளில் இப்பத்திரிகையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஏ.கே.கோபாலன் இவரிடம் வழங்கினார். இவரும் அதை ஏற்றுச் செயல்பட்டார். வெளித்தோற்றத்தில் காந்தியவாதியாகவும் உண்மையில் சோசலிஸ்டாகவும் இவரது அரசியல் வாழ்க்கை நிகழத் தொடங்கியது.

மார்க்சிய ஆதரவாளராக இருந்தபோதிலும் கத்தோலிக்கத்தின் மீதான நம்பிக்கையை இவர் கைவிடவில்லை. இது ஒரு முரணாகக் காட்சியளித்தாலும் இவரது மனிதநேய உணர்வும் உண்மையான கிறித்தவம் என்பது குறித்த இவரது மதிப்பீடும் இம்முரண்பாடு வளர்ச்சியுற்று பகையுணர்வாகாது பார்த்துக்கொண்டன.

எந்த ஒரு சமயத்தைப் பின்பற்றுபவர் ஆனாலும் இயக்கத்தைச் சார்ந்து செயல்படுபவர் ஆனாலும் அவர்களிடம் காணப்படும் ஒரு பொதுவான இயல்பு விமர்சனக் கண்ணோட்டத்துடன் தாம் சார்ந்துள்ள இயக்கத்தை அல்லது அமைப்பை பார்க்க மறுப்பது. அப்படியே பார்த்தாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் மறைப்பது ஃபாதர் வடக்கனிடம் இதற்கு நேர்மாறான பண்பு மேலோங்கி இருந்துள்ளது.

கத்தோலிக்கர்கள் சிலரிடமும் திருச்சபை அதிகாரிகள் சிலரிடமும் இடம் பெற்றிருந்த மனிதநேயமற்ற செயல்பாடுகளை இந்நூலின் தொடக்கத்தில் துணுக்குச் செய்திகளாகப் பதிவு செய்துள்ளார். இவை அனைத்தையும் ஒன்றாக்கிப் பார்க்கும்போது அவரது தன்சமய விமர்சனப் பார்வை வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக அவர் பதிவு செய்துள்ள பின்வரும் செய்திகளைக் குறிப்பிடலாம்.

தன் சமய விமர்சனம்

josep maly b00k 450தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட பெண்ணொருத்தி ரவிக்கை அணிந்து குடை பிடித்துக் கொண்டு தெருவில் நடந்து சென்றுள்ளார். இவை இரண்டு செயல்களும் தடை செய்யப்பட்ட செயல்களாக இருந்தன. இத்தடையை மீறியமைக்காக கிறிஸ்தவ நிலப்பிரபு ஒருவர், ஒரு பெண்ணை அடித்ததை இவர் நினைவு கூருகிறார்.

‘நிலத்தில் சாகுபடி செய்யும் குடியானவரையோ குடிசை போட்டு இருப்பவரையோ வெளியேற்றும் அதிகாரம் நிலப்பிரபுகளுக்கு இருந்தது. ஏழையைச் சுரண்டும் உரிமை பணக்காரனுக்கும் தொழிலாளிகளை ஒடுக்கும் உரிமை முதலாளிகளுக்கும் அடித்தள ஜாதியினரை நோகச் செய்யும் உரிமை உயர்ஜாதியினருக்கும் இருந்தது. ஒரு தேங்காய் குறைந்தாலும்கூட ஈவு இரக்கமின்றி குடியானவர்களை அடிக்கும் இஸ்லாமிய, கிருஸ்தவ நிலப்பிரபுக்கள் இருந்தனர்.’

ஏழையான ரோமன் கத்தோலிக்கக் குடும்பம் ஒன்றில் பசியாலும் நோயாலும் பாதிக்கப்பட்ட குழந்தையன்று இறந்துபோனது. பீடித்தொழிலாளியான தன் நண்பர் ஒருவருடன் சென்று இறந்த குழந்தையின் உடலை மொய்க்கும் ஈக்களையும் எறும்புகளையும் விரட்டியவாறு இரவு முழுவதும் கண்விழித்திருந்தார்.

குழந்தையின் உடல் அடக்கத்துக்கு பங்குக்குரு வரவேண்டும் என்றால் அவருக்குப் பணம் கொடுக்கவேண்டும். இறந்த குழந்தையின் உடலைச் சுமந்து செல்ல உதவுபவருக்கும் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் அக்குழந்தையின் விதவைத் தாயிடம் பணம் இல்லை.

உதவிசெய்ய யாரும் இல்லாத நிலையில் தான் வேலை பார்த்துவந்த பள்ளியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு வந்து சவப்பெட்டியைத் தாமே சுமந்தவாறு கல்லறைத் தோட்டத்திற்குச் சென்றார். அவருடன் பணியாற்றியவர்களும் மாணவர்களும் அங்குக் காத்திருந்தனர். கண்ணியத்துடனும் பக்தியுடனும் அக்குழந்தையின் பிண அடக்கம் நிறைவேறியது. இறப்புச்சடங்கை நிறைவேற்ற பணம் கேட்கும் கத்தோலிக்கக் குருக்களுக்குச் சவால் விடும் நிகழ்வாக இது அமைந்தது. தாம் இறந்துபோனால் தன் உடலை எரித்து அதன் சாம்பலைத் தன்னுடைய செயல்பாடுகள் நிகழ்ந்த பகுதிகளில் தூவும்படி தன் உயிலை நிறைவேற்றுபவருக்கு ஃபாதர் வடக்கன் அறிவுறுத்தியிருந்தார்.

கேரளத்தின் தனித்துவமான கதகளி எனும் நிகழ்த்துகலையை கத்தோலிக்கர் ஒருவர் பார்ப்பது பாவமாகக் கருதப்பட்டது. அதை மீறிப் பார்த்தவர்களுக்கு, பங்குக்குரு தண்டம் விதிப்பது வழக்கம். இவர் குருவான பின்னர், நியூயார்க் நகரில் 1965வது ஆண்டில் கதகளி நிகழ்வை முதல் முறையாகப் பார்த்துள்ளார். தற்போது விவிலியத்தை மையமாகக்கொண்டு கோட்டயம் தேவாலயம் ஒன்று கதகளி ஆட்டத்தையும் உருவாக்கியுள்ளது. கதகளியைப் போன்றே காவடி, பூரம், அகா, செண்டை, கந்தம் ஆகிய கேரளத்தின் நிகழ்த்துகலைகள் அனாத்மாவாக கத்தோலிக்கர்களுக்கு இருந்தன. கோவில் ஒன்றைக் காண நேரிட்டால் தரையில் எச்சில் துப்பும்படிக் கூறிய குருக்களும் இருந்தனர்.

கிறித்துவுக்கு எதிரானவராக 90 விழுக்காடு கத்தோலிக்கர்கள் காந்தியைப் பார்த்தனர். காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டபோது இவர் உறுப்பினராக்கிய 53 பேரில் இவர் உட்பட இரண்டு கத்தோலிக்கர்களும் அய்ந்து முஸ்லீம்களும்தான் இருந்தனர். எஞ்சியோர் அனைவரும் இந்துக்கள். இம்மூன்று சமயத்தினரும் ஏறத்தாழ ஒரே எண்ணிக்கையில் அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் கிறிஸ்தவர்கள் காங்கிரஸ்காரர்களானார்கள்.

ஆட்சியதிகாரத்தின் பக்கமே கத்தோலிக்கர்கள் இருப்பார்கள் என்பதில் சாரம் உள்ளது என்பது இவரது கருத்தாகும். ‘ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். இதே காரணத்திற்காகவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது அதை ஆதரித்தார்கள். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வரமாட்டார்கள் என்று எண்ணியதாலேயே கம்யூனிஸ்டுகளை எதிர்த்தார்கள்.

கேரளத்தில் நடந்த விமோசன சமிதி இயக்கத்தில் இவர்கள் முக்கிய பங்கு வகித்ததற்குக் காரணம் மத்தியில் அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி இருந்ததுதான். காங்கிரஸ் ஆதரவு மனநிலையே இதற்குக் காரணம். கம்யூனிஸ்டான அச்சுதமேனனின் ஆட்சியை காங்கிரஸ் ஆதரித்தமையால் கத்தோலிக்கர்கள் அவரை ஆதரித்தனர். மத்தியில் மார்க்சிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அவ்வரசை ஆதரிக்கும் மேய்ப்புக் கடிதங்களை (Pastoral Letters) ஆயர்கள் விடுப்பார்கள்.’

‘பெரும்பான்மையான கத்தோலிக்கர்கள் கண்மூடித்தனமாக, கத்தோலிக்கத் திருச்சபையின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்குக் காரணம் ஆட்சிபுரிவோர் அவர்களுக்குப் பின்னால் உள்ளார்கள் என்று அஞ்சுவதுதான். கத்தோலிக்க சமயத்தலைமை மீது பயம் இல்லையென்று ஆள்வோர் வெளிப்படுத்தினால் கத்தோலிக்கத் திருச்சபையின் நடவடிக்கைகள் குறித்து கத்தோலிக்கர்கள் கேள்வி எழுப்புவர்.’

‘கையூட்டு, கையாடல், பொய்க்கணக்கு,வரி ஏய்ப்பு, கடத்தல், பதுக்கல், கருப்புச் சந்தை போன்ற அவமானகரமான நடவடிக்கைகள் இந்தியாவில் மலிந்துவிட்டன. இது செல்வந்தர்களிடம் மட்டுமின்றி ஏழைகளிடமும் காணப்படுகின்றது. இது ஏன்?’ என்ற கேள்வியை எழுப்பும் ஃபாதர் வடக்கன் அதற்குப் பின்வரும் விடையும் அளிக்கிறார்:

“ஒரு சராசரிக் கத்தோலிக்கக் குருவோ துறவினியோ உண்மையான கடவுளை மக்கள். கண்டறியாததுதான் இதற்குக் காரணம் என்பார்கள். அப்படியானால் குருக்களும் துறவினிகளும் ஏன் பொய் கூறுகிறார்கள்? போலி ஆவணங்களை உருவாக்குகிறார்கள்? பால்மாவை கருப்புச் சந்தையில் விற்கிறார்கள்? இவையெல்லாம் கடவுளை அறியாததாலும் அவர்மீது அன்பு செலுத்தாமையாலும் நிகழ்கின்றனவா? இத் தீச் செயல்களைச் செய்யும்படி மனிதர்களைத் தூண்டுவது எது?”

“மிகப் பெரிய பாவமாகவும் பாவங்களுக்குக் காரணமாகவும் அமைவது ஏழ்மைதான்.”

“இன்றையப் பட்டினி மட்டுமின்றி எதிர்காலப் பாதுகாப்பின்மையும் கூட வறுமைதான். மக்கள்நல அரசு என்பது இன்றைக்கு மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.இப்பாதுகாப்பு இன்மையால்தான் அதிகாரிகளும் அமைச்சர்களும் கையூட்டு வாங்குகிறார்கள். இன்றையப் பசியைப் போக்கிக் கொள்ள ஏழை பொய்கூற நாளையப் பாதுகாப்பிற்காக பணக்காரர்கள் நேர்மையற்ற வழிமுறைகளை மேற்கொள்ளுகிறார்கள்.”

தனிச் சொத்தைப் பெருக்கிக்கொள்ள விழையும் முதலாளித்துவ சமூக அமைப்பே இவற்றுக்குக் காரணம் என்பதைக் குறிப்பிட ஃபாதர் வடக்கன் தவறிவிடுகிறார். “சென்மபாவம்” என்ற ஒன்றைக் கத்தோலிக்கம் வலியுறுத்தும். தென் அமெரிக்க நாட்டில் உருவான “விடுதலை இறையியல்” ஏழ்மையும் ஒரு பாவம்தான் என்று வலியுறுத்தி அதற்கு எதிரான போராட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்களிப்பு குறித்துப் பேசும். இவ் வகையில் ஏழ்மை குறித்த ஃபாதர் வடக்கனின் கருத்துக்கள் விடுதலைக்கான இறையியல் சிந்தனையுடன் ஒத்து வருகின்றன.

அரசியல் குறித்த மதிப்பீடு

பங்குக்குரு என்ற நிலையில் ஆன்மீக எல்லைக்குள் நின்றுவிடாமல் அரசியல் விழிப்புணர்வு கொண்டவராகவே இவர் இருந்துள்ளார். காங்கிரஸ் சோசலிஸ்டுகள் குறித்துக் கூறும்போது ‘மார்க்சிய மூளையின்றி காந்திய இதயம் கொண்டவர்களாகவே காங்கிரஸ் சோசலிஸ்டுகள் இருந்துள்ளனர்’ என்கிறார். அத்துடன் தேசிய அளவிலான பெருமுதலாளிகளுடன் காங்கிரஸ் கொண்டிருந்த உறவையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘மக்கள் யுத்தம்‘ என்ற பெயரில் இரண்டாம் உலகப்போரின்போது கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவை இவர் விமர்சனம் செய்துள்ளார். இம்முடிவானது இந்தியாவின் சோசலிச இயக்கத்தைப் பலவீனப்படுத்தியது என்கிறார். (இம்முடிவு தவறானது என்பதைப் பின்னர் அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமிர்தசரஸ் மாநாடு ஒப்புக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது).ஓர் ஆரோக்கியமான அரசியல் எதிர்ப்பு இயக்கம் இந்தியாவில் உருவாகாமல் போனமை குறித்து 12 காரணங்களை அவர் முன்வைக்கிறார். (பக்கம் 12-13).

இக்கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு விடை கூறுகிறார் (பக்கம் 14-15). இது தொடர்பாக அவர் எழுப்பியுள்ள வினாக்களும் விடைகளும் ஆழமானவை, விவாதத்திற்கும் உரியவை.

கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியானது சுயநலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன், பி.கிருஷ்ண பிள்ளை, அச்சுதமேனன் போன்றோரால் கட்டமைக்கப்பட்டது என்கிறார். சுயநலமும் குறுகிய மனமும் கொண்ட சில அடிமட்டத் தோழர்களின் செயல்பாடுகளால் பலர் கட்சியை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிடுகிறார். (இந்த இடத்தில் தகழி சிவசங்கரம் பிள்ளை எழுதிய ‘ஏணிப்படிகள்‘ என்ற நாவல் நினைவுக்கு வருகிறது.) இத்தகைய போக்கு எல்லா கட்சிகளுக்கும் உரித்தானது என்கிறார். ஏகே.அந்தோனி, எம்.ஏ.ஜான், சுசீதரன் போன்ற தன்னடக்கம் மிக்க தலைவர்களைக் கொண்ட கேரள இளைஞர் காங்கிரஸ் இளைஞர்களை ஈர்க்கும் அமைப்பாக இருந்துள்ளது. ஆனால் இங்கும்கூட பல இளைஞர்கள் அடிமட்டத் தலைவர்களின் போக்கால் வெளியேறிவிட்டனர் என்கிறார்.

இவையெல்லாம் ஃபாதர் வடக்கனின் தொடக்க காலப் பொதுவாழ்வின் சிந்தனைகளாக, நடவடிக்கைகளாக வெளிப்பட்டு, சிறுமை கண்டு பொங்கும் அவரது இயல்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. அடுத்துவரும் பகுதியில் அவரது வாழ்க்கைப் பயணத்தில் அவர் மேற்கொண்ட பின்வரும் மூன்று நிலைப்பாடுகளை எடுத்துரைக்கிறார்.

முதலாவது: கம்யூனிச எதிர்ப்பு முகாமில் அவரது செயல்பாடு.

இரண்டாவது: சக பயணியாக கம்யூனிஸ்டுகளுடன் அவர் மேற்கொண்ட பயணம்.

மூன்றாவதாக: கத்தோலிக்கத் தேவாலயப் பங்குக்குருவாக அவர் பெற்ற அனுபவங்கள்.

ஃபாதர் வடக்கனை மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.

A Priest’s Encounter With Revolution - An Autobiography

Joseph Vadakkan

The Christian Literature Society

தொடரும்...

Pin It