இட ஒதுக்கீடு என்பது அரசுத் துறைகளில் குறைப் பிரதிநிதித்துவம் கொண்டவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வழி என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இட ஒதுக்கீட்டிற்கான மேற்காணும் சட்ட வடிவம் ஓர் இரவில் வந்து விடவில்லை. அதற்கான தொடக்கத்தை கண்டறிய பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பக்கங்களுக்குச் செல்ல வேண்டும்.

ஆளும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு தர இயலாது என ஆங்கிலேயர்களைப் போர்க்களத்தில் எதிர்த்த மன்னர்களை 19 ஆம் நூற்றாண்டின் பாதிவரை காண இயலுகிறது. அதன் பின்னர் இந்தியாவில் ஆழமாக வலுப்பெற்று விட்ட ஆங்கிலேயர்களிடம் மனுப்போடும் முறை தொடங்கியது. மனுப்போடுவது, அரசியல் ரீதியான அடையாளப் போராட்டங்களை மேற்கொள்ளுவது என்ற முறைக்கு ஆட்சி அதிகார உரிமைப் போராட்டம் மாறியது. அவற்றை எல்லாம் சமாளித்து இரண்டாம் உலகப்போர் வரை இந்தியாவின் ஆட்சி உரிமையை ஆங்கிலேயர்களால் தக்க வைக்க முடிந்தது.

1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிச் சென்ற பின்னர், ஆட்சி உரிமை முழுக்க முழுக்க இந்தியர்களிடம் வந்து சேர்ந்தாலும், இந்தியர்கள் அனைவருக்கும் உரிமை பகிர்ந்தளிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் அண்ணல் அம்பேத்கர் மிகத் தெளிவாக இருந்தார். சுதந்திரம் பெற்ற பின்னர், உயர்சாதியிடம் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரப் பகிர்வு படிப்படியாக கிடைக்கும் என அம்பேத்கர் அசட்டையாக இருக்கவில்லை. 1919 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி அன்று சவுத் போரோ கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பித்த முதல் ஆங்கிலேயர்கள் வெளியேறும் வரை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை பெற்றுவிட அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்து சமூகம் தீண்டத்தக்கவர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் ஆகிய இருபிரிவாக பிரிந்து கிடக்கிறது என்று அம்பேத்கர் தனது அறிக்கையில் முன்வைத்ததை கருத்துக்களை, சவுத் போரோ கமிட்டி ஏற்றுக்கொண்டது.narsimha rao and vp singh1930 களில் நடந்த வட்ட மேஜை மாநாடுகளிலும், அம்பேத்கர் வலியுறுத்திய ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவ கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி மத்திய மாநில சட்டமன்றங்களில் இரட்டைத் தொகுதி முறையை அறிமுகப் படுத்த ஆங்கிலேய அரசு ஒத்துக்கொண்டது. ஆனால் காந்தி ஒத்துக்கொள்ளவில்லை. இரட்டைத் தொகுதி முறை இந்தியர்களைப் பிளக்கும் முயற்சி என்றார். ஏற்கனவே இந்து சமூகம் பிரிந்து தான் கிடக்கிறது. எங்களுக்கு உரிய பிரிதிநிதித்துவத்தை தாருங்கள் என்றார் அம்பேத்கர். பின்னர் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையில் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது.

எப்போதெல்லாம் ஒடுக்கப்பட்ட தரப்பிடமிருந்து பிரதிநிதித்துவ கோரிக்கை எழுகிறதோ, அதற்கான எதிர்வினை உயர்சாதி இந்துக்களிடம் இருந்து வரும். பின்னர் அரசியல் போராட்டம், சட்டப் போராட்டம் என பலமுனைகளில் போராடியே, இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்திற்கான உரிமையை நிலைநாட்டும் சட்டரீதியான நிவாரணம் என அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது. அதன்படி சமூகரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தர தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு அதிகாரமும் கடமையும் உண்டு. யார் சமூக ரீதியாக பின் தங்கியவர்கள் எனத் தீர்மானிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உண்டு. சுதந்திரத்திற்குப் பிந்தைய அனைத்து அரசுகளும் அந்தப் பொறுப்பை நியாயமாக நிறைவேற்றினார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு அரசுக்கும், ஒவ்வொரு நிர்ப்பந்தம் இருந்தது. ஒவ்வொரு அரசுக்கும் ஒவ்வொரு கொள்கை இருந்தது. இடையே தேர்தல்கள் வந்தன.

சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது அம்பேத்கரின் கொள்கை. சமூக ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது உயர்சாதியைச் சேர்ந்த சிலரின் வாதம். அரசியலமைப்பு நிர்ணய சபையிலும் இது விவாதிக்கப்பட்டது. விவாதங்களின் முடிவில் சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்பு வரைவுக் குழு ஏற்றுக்கொண்டு, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற தெளிவான வரையறை அரசியலமைப்புச் சட்டத்திலும் சேர்க்கப்பட்டது.

இருப்பினும் இதுகுறித்த விவாதங்கள் ஓயவில்லை. அரசியலமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த சில மாதங்களில், நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக அன்றைய தமிழ் நாட்டின் இட ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு பொங்கி எழுந்த போராட்டத்தின் விளைவாக அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகக் திருத்தப்பட்டு, 15(4) எனும் புதிய பிரிவு சேர்க்கப் பட்டது. அதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, நடைபெற்ற விவாதத்தில் பொருளாதார அளவுகோலும் பேசப்பட்டதுண்டு. ஜனசங்கத்தைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி பொருளாதார அளவு கோலையும் இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொடுத்த நிலையில், வாக்களிப்பிற்கு விடப்பட்டது. பொருளாதார அளவு கோல் என்பதற்கு எதிராக 243 வாக்குகளும், பொருளாதார அளவுகோல் என்பதற்கு வெறும் 5 வாக்குகளுமே ஆதரவாகக் கிடைத்தது. சமூக ரீதியான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு தற்காலிக வெற்றி கிடைத்தது.

இந்திய அரசியலில் தார்மிக அடிப்படையும், தரவுகளும் மட்டுமே இட ஒதுக்கீட்டை தீர்மானிக்கும் கருவிகளாக இருக்கவில்லை. யாருக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பதில் ஒட்டுக்களும் அரசியலதிகாரமும் மிக முக்கியப்பங்கு வகித்தன.

SC, ST வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, பாதுகாக்கப் பட்ட போதிலும், OBC வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கனவாகவே இருந்தது. அதைச் சாத்தியப் படுத்தும் முயற்சியின் தொடக்கமாக காகா கலேல்கர் ஆணையம் வந்தது. ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உயர்சாதியினரின் ஏகபோக ஆதரவைப் பெற்றதாக இருந்தது. விளைவாக கலேல்கர் ஆணைய பரிந்துரைகளால் பயனேதும் ஏற்படவில்லை. 1970 களில் மொரார்ஜி தேசாய் அரசு ஆட்சிக்கு வந்தது. வட இந்தியாவில் காங்கிரசுகு எதிராகா திரண்ட கட்சிகளின் பின்னால் OBC வகுப்பினர் திரண்டர். அதன் விளைவாக மொரார்ஜி தேசாய் ஆட்சிக்காலத்தில் மண்டல் ஆணையம் வந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வந்த இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மண்டல் குழு அறிக்கைக்கு வேலை இல்லாமல் போனது. அதே காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஆதரித்த கட்சிகள் வளர்ந்தன. அதன் தலைவர்கள் அம்மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றனர். அதே வேளையில் உயர்சாதி வகுப்பினரின் கோபத்திற்கு உள்ளானர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வி.பி.சிங் புதிய கட்சியைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் உயிர்பெற்றன. தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். ஒன்றிய அரசு சார்ந்த வேலை வாய்ப்புகளில் 27% இடங்களை OBC வகுப்பினருக்கு ஒதுக்க மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டுப் பரிந்துரை பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை நிலை நாட்டும் விதமாக இருந்தாலும், உயர் சாதி மக்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் எந்த பலனும் இல்லாததால் உயர்சாதியினர் நிறைந்த வட இந்தியாவில் நகர்ப்புறங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியது.

எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மண்டல் கமிஷனின் பரிந்துரையை செயல்படுத்தப் போவதாக வி.பி. சிங் அறிவித்தார். மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தினால், வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வோம். என வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தலைவரான அத்வானி எச்சரிக்கை விடுத்தார். இத்திட்டத்தை அமல் படுத்த கூடாதென்று அத்வானி தலைமையில் வட இந்தியாவில் பல மதக்கலவரங்களும், தீக்குளிப்பு, உயிர்ப்பலி என பல்வேறு போராட்டங்களும் நடந்தேறின. மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக உயர் சாதியினர் ஓரணியில் நின்றனர். உயர்சாதியினரின் ஆதரவைப் பெற்ற காங்கிரஸும் பாஜகவும் இரு கட்சிகளாக பிர்ந்து நின்றன. எதிர்ப்பை மீறி வி.பி. சிங் மண்டல் ஆணைய பரிந்துரைகளை ஏற்பதாக அறிவித்தார். அதை செயல்படுத்த அலுவலக குறிப்பாணையை பிறப்பித்தார். நாட்டில் அதிகாரத்தில் OBC வகுப்பினரையும் பங்குதாரராக்கி இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுவானதாக மாற்றினார்.

‘‘பணத்தால் மட்டும் எந்த சமுதாயத்தையும் முன்னேற்றிவிட முடியாது. அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கப்பட்டால் மட்டுமே அவர்களால் முன்னேற முடியும். அதற்கு தேவையான அதிகாரத்தில் பங்கைக் கொடுக்க நாங்கள் தயாராகி விட்டோம். நீதியின் ஆண்டான இந்த ஆண்டில், அம்பேத்கரின் நினைவாக பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருக்கிறோம். அதனால் எவ்வளவு பேர் பயனடைவார்கள் என்பது குறித்து இப்போது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையை கணக்கில் கொண்டால் ஒரு விழுக்காட்டினருக்கு மட்டும் தான் அரசு வேலை கிடைக்கிறது. அந்த வேலைவாய்ப்புகளில் நான்கில் ஒரு பங்கு எவருக்கேனும் தரப்பட்டால், அது அவர்களது பொருளாதாரத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் கூட, அது பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கை அல்ல. இந்த விஷயத்தில் எங்கள் பார்வை மிகவும் தெளிவானது. அதிகாரக் கட்டமைப்பில் அதிகாரிகள் எனப்படுபவர்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். முடிவெடுக்கும் நடைமுறையில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அத்தகைய அதிகாரக் கட்டமைப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடமளிக்க விரும்புகிறோம். இந்த நாட்டை நடத்திச் செல்லும் பொறுப்பை ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் அளிக்க விரும்புகிறோம்’’ என்று வி.பி.சிங் 1990 ஆண்டில் தனது சுதந்திர தின உரையில் கூறினார். இறுதியில் OBC வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வி.பி. சிங் உறுதி செய்தார்.

ஆனால் ​​காங்கிரஸ் OBC வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இந்த நடவடிக்கையை ஆதரிக்கத் தவறியது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைத் தடுக்க வறுமை, பொருளாதார பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என பழைய பிரச்சினையை மீண்டும் எழுப்பியது. 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று தனது மக்களவை உரையில், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி OBC ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான பொருளாதார அளவுகோல்களை சேர்ப்பதற்காக வாதிட்டார். பொருளாதார அளவுகோல்களை வி.பி. சிங் அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றார்.

"குறிப்பிட்ட வகுப்பினருக்குள்ளே நீங்கள் உதவ விரும்புகிறீர்கள். குறிப்பிட்ட வகுப்பில் உள்ள, ஏற்கனவே நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு உதவ விரும்புகிறீர்களா? உண்மை என்னவென்றால், ஒரு வகுப்பிற்குள் உதவி செய்ய விரும்பினால், அது அந்த வகுப்பின் ஏழைகளுக்குச் செல்ல வேண்டும்” என்று பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான வாதத்தை முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் என்ற நிலையில் முன் வைத்தார். இதற்கு முன் பலர் பொருளாதார அளவுகோல் அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசினாலும், ஆட்சியமைக்க வாய்ப்பிருக்க கூடிய கட்சித் தலைவர் என்ற நிலையில் இருந்த ஒருவர் இட ஒதுக்கீடு விவாதத்தில் பொருளாதார அளவுகோலை நுழைத்த முதல் நிகழ்வு இதுவாகும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மண்டல் அறிக்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தாலும், சீதாராம் கேசரி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதை பாராட்டினர். காரணம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வலிமை மிக்க வாக்கு வங்கியாக வளர்ந்துவிட்டபடியால், அவர்களை முழுமையாகப் புறக்கணிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது.

மண்டல் ஆணைய அறிக்கை OBC வகுப்பினரை ஓரணியில் திரட்டியதென்றால், அவர்களுக்கு எதிராக உயர்சாதியினரையும் ஒரணியில் திரட்டியது. OBC இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்தன. OBC இட ஒதுக்கீடு நாட்டையே சீரழித்துவிடும் என்ற பிரச்சாரங்கள் உயர்சாதியினரால் மேற்கொள்ளப்பட்டன. 27% OBC இட ஒதுக்கீடு தரப்பட்டால் அரசு வேலைகளில் 49.5 விழுக்காடு இடங்கள் SC, ST, OBC வகுப்பினருக்கு மட்டுமே தரப்படும் என்ற நிலை உருவானதால், உயர்சாதியினர் தங்கள் வேலை உரிமை பாதிக்கப்படும் என நினைத்தனர். OBC இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதியினர் போர்க்கோலம் பூண்டிருந்தனர். இட ஒதுக்கீட்டு அறிவிப்பு வெளியானபோது வி.பி.சிங் பிரதமர். ஒன்றிய அரசு அதிகாரிகள் அனைவரும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால், மண்டல் ஆணைய பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று வி.பி.சிங் அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே அந்த ஆணையை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசுத் துறைகளில் பணியாற்றும் உயர்சாதிகளைச் சேர்ந்த 40,000 முதல் நிலை அதிகாரிகள் வெளிப்படையாகவே அறிவித்தனர். அந்த அளவுக்கு வி.பி.சிங்கின் நடவடிக்கையை உயர்சாதியினர் வெறுத்தனர்.

OBC வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதுமே அதற்கு எதிராக உயர்சாதி மக்களும் மாணவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியான உடனேயே அதற்கு எதிரான போராட்டம் வெடித்தது. அந்த ஆண்டின் செப்டம்பர் 19-ஆம் தேதி தில்லியில் தேசபந்து கல்லூரி மாணவர் ராஜிவ் கோஸ்வாமி இட ஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளித்தார். அதைத் தொடர்ந்து வி.பி.சிங்கின் முடிவால் தங்களின் அரசாங்க வேலை குறித்த கனவு கலைந்து விட்டதாக கருதிய உயர்சாதி மாணவர்கள் பலர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். வட மாநிலங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீக்குளித்தனர். அவர்களில் 62 மாணவர்கள் உயிரிழந்தனர். வட இந்தியா முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. கடைகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. போராட்டங்களும், பேரணிகளும் பெருமளவில் நடந்தன. 6 மாநிலங்களில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் மட்டும் 50 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வி.பி. சிங் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்த வந்த சந்திரசேகர் ஆட்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. புதிய தேர்தல் வந்தது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. நரசிம்மராவ் பிரதமரானர். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதால், வெகுண்டெழுந்த உயர்சாதியை அமைதிப்படுத்த, வி.பி.சிங் அரசின் அலுவலக குறிப்பாணையை திருத்தி, SC, ST, OBC அல்லாத வகுப்பைச் சார்ந்த ஏழைகளுக்கு 10% EWS இட ஒதுக்கீடு தரும் வகையில், திருத்தங்களுடன், 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி, புதிய ஆணையை வெளியிட்டார்.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் வி.பி. சிங் அரசால் அரசாணை வெளியிடப்பட்டு, சரியாக ஒரு ஆண்டு கழிந்து உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவதற்கு எதிராக ஏற்கனவே இந்திரா சஹானி எனும் வழக்கறிஞர் வழக்குத் தொடுத்திருந்தார். அவ்வழக்கு விசாரணையில் இருந்தபோதே, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நீர்த்துபோகச் செய்யு நரசிம்மராவ் வெளியிட்ட அரசாணையை எதிர்த்தும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இரண்டு வகையாக இட ஒதுக்கீடுகளும் செல்லுமா செல்லாதா என ஒரே உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணை முடிவில் வி.பி. சிங் அரசின் ஆணை செல்லும் எனவும், நரசிம்மராவ் அரசின் ஆணை செல்லாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

- சு.விஜயபாஸ்கர்

Pin It