பர்மா மீது படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயர் 1824ஆம் ஆண்டு அதற்காக இந்தியப் பட்டாளத்தை முடக்கி விட்டனர். சென்னை சிப்பாய்கள் சொன்ன சொல் கேட்பவர்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் பர்மாவுக்கு முதலாவதாக அவர்களை அனுப்பினர் ஆங்கிலேயர். அவர்கள் கப்பல் மார்க்கமாக பர்மா சென்றார்கள்.

அதன் பிறகு வங்காள சிப்பாய்களை அனுப்ப நேர்ந்தது. வங்க சிப்பாய்களோ உள் நாட்டில் சேவகம் செய்யவே விரும்பினார்கள். கடல் கடந்து அயல்நாடு செல்ல ஒப்பந்தம் கிடையாது. வங்க சிப்பாய்களில் பெரும்பாலோர் பார்ப்பனரும் இராஜபுத்திரருமே அதிகம். சாதி முறையிலும் பழக்க வழக்கத்திலும் அவர்களுக்கு பற்று அதிகம்.

கொல்கத்தாவிலே கப்பலேறி ரங்கூன் செல்லுதல் சுலபம். சிப்பாய்களின் மன நிலையை மதித்து கடல் மார்க்கம் அனுப்ப கும்பினியர் விரும்பவில்லை. பர்மாவுக்கும் வங்கத்துக்கும் எல்லைப் புறத்திலுள்ள சிட்டகாங் நகரத்துக்கு அப்பட்டாளங்களை அனுப்பினர். அங்கிருந்து தரை மார்க்கமாக படை கொண்டு போவதே உத்தேசம். இதனை ஆங்கில அதிகாரிகள் வெளியே சொல்லவில்லை.

கொல்கத்தாவுக்கு அருகே பாரக்பூர் என ஒரு நகர் உண்டு. அது ஒரு படை வீடு. அங்கே 47வது பட்டாளம் ஒன்று இருந்தது. அப்பட்டாளத்தையும் பர்மாவுக்கு அனுப்ப ஆங்கிலேயர் கருதினர். பிற நாடு சென்று போர் புரிய அச்சிப்பாய்களில் பலருக்கும் இஷ்டமில்லை. பிற நாட்டையும் பிடித்துத் தருவது என்று சிலர் கருதி நின்றனர். இந்நிலையில் பர்மிய யுத்தத்தின் விபரங்கள் இந்தியாவிற்கு எட்டலாயின.

ஆங்கிலப் பட்டாளங்களைப் பர்மியர்கள் வெட்டிக் குவித்துவிட்டனர். உயிருக்கு அஞ்சிய துருப்புகளோ கடலில் குதித்து மூழ்கிப் போக நேர்ந்தது. சேனைத் தலைவனோ சண்டையில் மாண்டு விட்டான். இந்த அவமானம் தாங்காமல் கவர்னர் ஜெனரலும் விஷமுண்டு மரித்துவிட்டான். பர்மியர்கள் வங்காளத்தின் மீதும் படையெடுத்து வருகின்றனர் என்று வதந்திகள் பரவின.

இந்நிலையில் இதனைக் கேள்வியுற்ற பின் அச்சிப்பாய்கள் பர்மா போக ஒப்பவில்லை. பட்டாளம் புறப்படுவதானால் மூட்டை முடிச்சுகளைச் சுமந்து செல்ல வாகனாதிகள் வேண்டும். வாகனச் செலவோ சிப்பாய்களையே சேர்ந்தது.

கிடைக்கக்கூடிய பற்பல வாகனங்களும் பொதிமாடுகளும் முன்னதாகவே பர்மா போய்விட்டன. பாரக்பூர் சிப்பாய்களுக்கு வாகனங்கள் கிட்டவில்லை. கிடைத்தாலும் ஒன்றுக்கு பத்தாக பணம் கொடுக்க நேர்ந்தது. இந்தத் தகவலை அறிந்த ஆங்கிலேயத் தளபதி அப்பட்டாளத்தை அணிவகுப்புக்கு அழைத்தான். போர் முனைக்குப் போயே தீர வேண்டும் என்று கட்டளையிட்டான். அதனைக் கேட்ட சிப்பாய்கள் ‘இரட்டைப்படி தருவதானால் போர்முனைக்கு செல்வோம். ஆனால் கடல் மார்க்கமாக செல்ல மாட்டோம்’ என்று கூறி விட்டனர். இதனால் ஆத்திரமுற்ற தளபதி அந்த அணிவகுப்பை கலைத்து விட்டான்.

1824-ம் வருடம் அக்டோபர் மாதம் முதல் தேதி மீண்டும் அணிவகுப்பு நடந்தது. சேனாதிபதியும் அதற்கு வந்தான். அவனுடன் பீரங்கிப் படையொன்றும் வந்தன. அணிவகுத்து நின்ற சிப்பாய்களுக்கு முன்னிலையில் ஆங்கில சிப்பாய்கள் ஆயுதபாணிகளாக நின்றனர். சிப்பாய்களுக்குப் பின்புறத்திலே பட்டாள மைதானத்தின் ஒரு மூலையின் ஆங்கில பீரங்கிப்படை ஆயத்தமாக இருந்தது.

பீரங்கிப் படை இருப்பதை அச்சிப்பாய்கள் அறியவில்லை. சேனாதிபதியின் உட்கருத்தையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

‘போர் முனைக்குப் போக வேண்டும். இல்லையேனில் ஆயுதங்களைக் கீழே வைத்து விட வேண்டும்’ என்று ஆணை பிறந்தது.

‘முடியாது’ என்றனர் சிப்பாய்கள். அதற்கு மேல் பொறுமை காக்கவில்லை அந்த பேய் பீரங்கிகள். அந்த பீரங்கிகள் அலற ஆரம்பித்தன. குண்டி மழை பொழிய சிப்பாய்கள் ஒன்றன் பின் ஒன்றாக கீழே சாய்ந்தனர். இன்னும் சிலர் ஆயுதங்களைக் கிழே போட்டுவிட்டு தூரத்திலிருந்த ஆற்றங்கரை நோக்கி ஓடினர். பிடிபட்ட மீதமுள்ள சிப்பாய்கள் தூக்கிலிடப்பட்டனர்.

ஆதாரம்: உலகை உலுக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள், ஜெகாதா 

Pin It