கீற்றில் தேட...

மூர்க்கனே யாயினும் அறிவிற் குறையினும்
பார்ப்பனன் உயர்வெனச் சாத்திரம் சொன்னதை
ஒப்பிய மனதுடன் குமைந்திடும் உழைப்போர்
தப்பும் வழியைத் தேடா வண்ணம்
உயர்வெனப் போற்றிப் பார்ப்பனர் புகழ்வர்
மயங்கிடாது எதிர்க்கும் அறவோர் தம்மைப்
பண்பிலன் என்றே தூற்றித் திரிவர்
நுண்ணிதின் அறியும் இயற்கை நியதியாய்
அறிவுத் திறனோ பொதுவாய் இருக்கையில்
செறிவாய் வாய்ப்பைப் பார்ப்பனர் பெறுவது
எங்ஙனம் என்றிடின் நெருப்பில் பட்ட
குங்கி லியமாய் மறைவர் நொடியினில்

 (பார்ப்பனர்கள் மூர்க்கர்களாக இருந்தாலும் அறிவிலிகளாக இருந்தாலும் அவர்கள் உயர்வானவர்களே என்று (மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, பகவத் கீதை போன்ற) சாத்திரங்கள் சொல்லுவதை ஏற்றுக் கொண்டு குமைந்து கொண்டு இருக்கும் உழைக்கும் மக்கள், உண்மை நிலையை அறியும் சிந்தனை ஏற்படா வண்ணம், அவர்களைப் (பார்ப்பனர்கள்) புகழ்ந்து பேசுவார்கள். அப்படிப்பட்ட பொய்யுரையில் மயங்காத அறவோர்களைப் பண்பில்லாதவர்கள் என்று தூற்றியும் திரிவார்கள். இயற்கை நியதியை நுணுக்கமாய் அறியும் பொழுது அறிவுத் திறன் என்பது அனைத்து வகுப்பினருக்கும் பொது என்று தெளிவாய் விளங்கும். அப்படி இருக்கையில் பார்ப்பனர்கள் மட்டும் செறிவான வாய்ப்பபை எப்படிப் பெற முடிகிறது என்று (பார்ப்பனர்களிடம்) வினாவைத்  தொடுத்தால் நெருப்பிலே இடப்பட்ட சாம்பிராணியைப் போல நொடியினில் மறைந்து விடுவார்கள்.)

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)