மஞ்சள் கொத்து, கரும்பு, பச்சரிசி, வெள்ளம், நெய், புதிய மண் பானை, விரகு, மாவிலை, குருத்தோலை தோரணம் இவைகள்தான் பொங்கல் விழாவுக்கான குறைந்தபட்ச தேவை. இந்தப் பொருட்கள் தமிழகத்தில் அனைத்து ஊரகப்பகுதிகளிலும் மிகக் குறைந்த விலைக்கோ அல்லது விலையில்லாமலோ கிடைத்துவிடக் கூடியதாகும். இயற்கையையும், முன்னோர்களையும், கால்நடைகளையும் போற்றும் விழாவாக பொங்கல் விழா மிகுந்த கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி விழா என்று கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா வேறுபட்டது.
இவ்விழா வெறும் அறுவடைத் திருவிழா மட்டுமல்ல அறுவடைக்குக் காரணமான இயற்கையை, இயற்கைகைக் காத்து நமக்களித்த முன்னோர்களை நன்றிப் பெருக்கோடு நினைவு கூறும் விழா.
தமிழர்களின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை உலகுக்குப் பறைசாற்றும் விழா. உழைப்பும், நன்றி உணர்வும் தமிழர்களின் இரு கண்கள். இதை உணர்த்தும் விழாதான் பொங்கல் பெருவிழா.
முதல்நாள் விழா போக்கிப் பொங்கல், வீட்டை தூய்மைப் படுத்தி பொங்கல் விழாவுக்குத் தயாராகும் விழா.
இரண்டாம் நாள் ஞாயிறு (சூரியன்) தொடங்கி இயற்கையைப் போற்றும் பொங்கல் விழா.
மூன்றாம் நாள் முன்னோர்களைப் போற்றி வழிபடும் விழா, கால்நடைகளுக்குப் பொங்கலிடும் விழா. அய்யனார் தொடங்கி அன்மையில் வாழ்ந்து மறைந்த அனைத்து முன்னோர்களையும் நினைவு கூர்ந்து வீட்டிலும், ஊர் தெய்வக் கோவிலிலும் வழிபாடு நடத்தி, கால்நடைகளுக்குப் பொங்கலிட்டு போற்றும் விழா. திருவள்ளுவர் நம் முன்னோராதலால் இத்தினத்தையே திருவள்ளுவர் தினம் என்று நாம் அழைக்கிறோம்.
நான்காம் நாள் காணும் பொங்கல் விழா. உறவுகளும், நட்புகளும் கண்டு மகிழும் விழா. சமூக ஒற்றுமையைப் பறைசாற்றும் விழா.
இப்பொங்கல் விழாக்களின் நோக்கம் தெளிவானது. வெவ்வேறு பொருள் கற்பிக்க முடியாதது. வெவ்வேறு தத்துவங்களைக் கூறி மக்களை குழப்ப முடியாதது. தமிழர்களின் இவ்விழாவினால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எவ்வித ஆதாயமும் இருக்க முடியாது. எல்லா விழாக்களின் மூலமும் ஆதாயத்தை அறுவடை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எளிய தமிழ் மக்களின் அறுவடைத் திருவிழாவுக்குள் புகமுடியவில்லை. அதோடு மட்டுமல்லாமல், பார்ப்பனியம் நுழைய முடியாத ஒரே விழாவாக இவ்விழா உள்ளது. பார்ப்பனியச் சடங்குகளுக்கு வேலையில்லாத இவ்விழாவை அழித்தொழிக்கும் நோக்கில் இந்திய அரசு இவ்விழாவின் மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏறு தழுவுதல் என்னும் சல்லிக்கட்டு விழாவின் மீது வெவ்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பார்ப்பனிய கருத்தியலோடு நம்மால் ஒன்று படமுடியாது.
வெறும் பீட்டா அமைப்போடு மட்டும் இத்தடையை நாம் நோக்க முடியாது. இந்திய அரசின் வஞ்சக பார்ப்பனிய சிந்தனை அப்பட்டமாக வெளிப்படுகிறது. சல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடுவதாகக் கூறிக்கொண்ட பா.ச.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, இதே சல்லிக்கட்டு நிகழ்வை ஒட்டி தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதிலிருந்து இவ்விழாவின் மீதான பார்ப்பனிய வெறுப்புணர்வை பார்க்க முடிகிறது. ஒருபுறம் தடையை மீறி சல்லிக்கட்டு நடைபெற்றால் பா.ச.க. ஆதரிக்கும் என்று கூறிக் கொள்கிறார் தமிழிசை. மறுபுறம் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்கிறார் சுப்பிரமணியசாமி. இருவரும் ஒரே கட்சிக்குள்தான் இருக்கிறார்கள்.
பீட்டா என்ற அமைப்பின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மோடியின் இந்திய அரசு நுழைந்து கொண்டு தமிழர்களை வஞ்சிக்கும் வேலையிலும், அதேநேரம் தங்களுக்கும் இத்தடைக்கும் எந்த தொடர்புமில்லை என்பதுபோலவும் நடந்து நாடகமாடி வருகிறது.
நிலப்பறிப்புக்காக பல முறை அவசரச் சட்டம் கொண்டுவந்த இந்திய அரசு, இரண்டாண்டுகளுக்கும் மேலாக சல்லிக்கட்டு விடயத்தில் தீர்வு காண முடியாமல் இருக்கிறது என்றால் அது தமிழர்களை எமாற்றும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது.
தமிழர்கள் பார்ப்பனிய இந்துக்கள் அல்ல என்ற கருத்துக்கு வலுசேர்க்கும் பொங்கல் விழாவை சிதைக்கும் வேலையில் இந்திய அரசு தொடர்ந்து முயல்கிறது.
நமது பொங்கல் விழாவை மகர சங்கராந்தி விழா என்றே தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்கள் கூட அழைக்கத் தொடங்கியுள்ளனர். மகர சங்கராந்தி என்பது ஒரு ஆண்டு தொடக்கத்திற்கான நிகழ்வு. பொங்கல் விழா என்பது ஒரு பண்பாட்டு விழா. ஆண்டுத் தொடக்கத்தில் தமிழர்கள் கொண்டாடும் விழாவையும், ஒரு நிகழ்வையும் ஒன்றுபடுத்தி பேசிவருவது இந்திய ஆட்சியாளர்கள் தமிழர் பண்பாட்டை சிதைக்க நினைக்கும் முயற்சியாகும். தமிழர்களின் புத்தாண்டையே மகர சங்கராந்தி என்று பெயர்மாற்றி வடநாட்டில் கொண்டாடி வருகிறார்கள். தமிழர்களின் அறிவியல் பார்வையை அழித்தொழித்து, இந்துத்துவ சாயம் பூசும் பார்ப்பனிய முயற்சியைத்தான் இந்திய அரசு தொடர்ந்து செய்துவருகிறது. பொங்கல் விழாவுக்கு கட்டாய விடுமுறை அல்ல என்று அறிவித்தது, சல்லிக்கட்டுக்குத் தடை, காளையை காட்சிப் பட்டியலில் சேர்த்தது, சமற்கிருத விழாக்களை தமிழகத்தில் திணிப்பது, இந்தியை வலுக்கட்டாயமாக தமிழக அரசு அலுவலகங்களில் திணிப்பது, மருத்துவ, பொறியியல் துறைகளுக்கான மாநில கல்வி உரிமையில் தலையிடுவது என தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழாக்களின் மீதும் இந்திய பார்ப்பனிய பாரதிய சனதா அரசு போர் தொடுத்திருப்பதாகவே தெரிகிறது.
அறிவியல் பார்வையில், பண்பாட்டுப் பார்வையில் தமிழர்களின் சிறந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் இவ்விழாவை இந்திய அரசின் கெடுபிடிகளால் தடுத்துவிடவோ, சிதைத்துவிடவோ முடியாது என்பதை தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் வெளிப்படுத்தி வருகிறது.
சல்லிக்கட்டுக்காக நடந்து வரும் இப்போராட்டங்கள் தமிழர்களின் தனித்த அடையாளத்தைக் காப்பதற்கான முயற்சியாக மட்டும் பார்க்காமல், தமிழர்களின் வேளாண் நிலங்களை, நீர் ஆதாரங்களை, உழவர்களின் வாழ்வியலை, தமிழர்களின் உரிமைகளை, தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான முன் முயற்சியாகவும் பார்க்க வேண்டும். சல்லிக்கட்டு விழாவின் பொருட்டு தமிழர்களாக ஒன்றுபட்டுள்ள இளைஞர் கூட்டத்தை பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகளுக்கு எதிரானவர்களாக மாற்ற வேண்டியது தமிழக முற்போக்காளர்களின் பணி. பீட்டா என்ற ஒற்றை அமைப்புக்கு மட்டும் எதிரானவர்களாக இல்லாமல் நம் வளங்களை உரிஞ்சத் துடிக்கும் இந்திய மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிரானவர்களாகவும் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பார்ப்பனியச் சடங்கு இல்லாமல், மூடப பழக்க வழங்கங்கள் இல்லாமல் தமிழர்கள் கொண்டாடும் ஒரே பண்பாட்டுத் திருவிழா பொங்கல் விழா மட்டுமே. இவ்விழாவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்களும், பெரியவர்களும் சேர்ந்து கொண்டாடும் விழாவாக இது உள்ளது. எந்த முன்னேற்பாடும் தேவைப்படாமல் தன்னெழுச்சியாக ஊரகப்பகுதிகளில் இவ்விழா இளைஞர்களால் நடத்தப்படுகிறது. சாதி, சமயம் வேறுபாடு இல்லாமல் எல்லோரும் சமம் என வலியுறுத்தும் இவ்விழாவை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது நமது கடமையாகும். சிறந்த பண்பாடு மிக்க இவ்விழா மூலமாக தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றுபட்டு தீமையை, பிரிவினை சக்தியை அழித்தொழிக்க உறுதி எடுத்துக்கொள்வோம்.
- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர், பேராவூரணி