கீற்றில் தேட...

பார்ப்பனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி நவம்பர் 3-ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று உள்ளது. பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். பட்டியல்- பழங்குடி சமூகங்களின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல பார்ப்பனர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வேண்டுமென்று அந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நடந்த பல விவாதங்களிலும், தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாகவும், பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வாழ்ந்து வருவது போலவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பார்ப்பனர்களின் பாதுகாப்புக்கு என்ன கேடு வந்துவிட்டது என இப்படிக் கேட்கிறார்கள் என்ற எண்ணம் பலருக்கும் எழக்கூடும். ஏனென்றால் பார்ப்பனர்கள் வீட்டில் பால் பாக்கெட் கெட்டுவிட்டால் கூட, ஆவின் ஊழியர்களே வீடு தேடிச் சென்று புதிய பால் பாக்கெட்டை டோர் டெலிவரி செய்துவிட்டு வரும் அளவுக்கு சுகபோகமாகத்தான் வாழ்கிறார்கள். தில்லை நடராஜர் ஆடுகிறாரோ இல்லையோ, அவரை வைத்து பார்ப்பனர்கள் ஆடும் அடாவடி ஆட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பார்ப்பனர்கள் கோயில் நகைகளைத் திருடினால் எடைக்குறைப்பு, சிலைகளை திருடினால் மாயம் என்று செய்திகளை திரித்து வெளியிட வைக்கும் அளவுக்கு அதிகார பலம் மிக்கவர்களாகத்தான் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனர்களை ஒடுக்குகிறார்கள், நசுக்கிறார்கள், அதற்குப் பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகாலமாக அனுபவித்து வரும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை, தமிழ்நாடு தவிர்த்துவிட்டு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இப்போதும் அவர்களால் அனுபவிக்க முடிகிறது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அது இயலவில்லை என்ற ஆதங்கத்தில் போடும் கூச்சலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு பார்ப்பன உறுப்பினர் கூட இல்லை. பாஜக போன்ற கட்சிகளின் சார்பாக நிறுத்தப்படும் பார்ப்பன வேட்பாளர்களையும் தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்து விடுகிறார்கள். ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 25.8 விழுக்காடு. மக்கள்தொகையில் இவர்கள் எண்ணிக்கை 10 விழுக்காட்டைக் கூட தாண்டாது. மக்கள் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருப்பவர்கள் 25.4 விழுக்காடு மட்டுமே. மோடி தலைமையிலான 71 பேரைக் கொண்ட அமைச்சரவையில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 47 பேர் மட்டுமே. ஆனால் மக்கள்தொகையில் இவர்கள் 90 விழுக்காடு. பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்களே எஞ்சியவர்கள்.

ஆட்சியதிகாரத்தில் மட்டுமல்ல, ஒன்றிய அரசின் அதிகார மையத்திலும் நீண்டகாலமாக பார்ப்பனர்களே அதிக ஏகபோக இடங்களை அனுபவித்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்த தரவுகளே இதை உறுதிப்படுத்துகின்றன. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் செயலாளர்களாக உள்ள 89 பேரில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மூவர். பிற்படுத்தப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. எஞ்சிய 85 பேர் உயர்ஜாதியினர். கூடுதல் செயலாளர்கள் 93 பேரில் பட்டியல் சமூகத்தினர் ஆறு பேர். பழங்குடி சமூகத்தினர் 5 பேர். பிற்படுத்தப்பட்டவர் ஒருவர் கூட இல்லை. எஞ்சியவர்கள் உயர்ஜாதியினர். இணைச் செயலாளர்கள் 275 பேரில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 41 பேர் மட்டுமே. எஞ்சியவர்கள் உயர்ஜாதியினர்.

குறிப்பாக 2023 அக்டோபரில் ‘யங் இந்தியா’ வெளியிட்ட தரவுகளின்படி, குடியரசுத் தலைவர் மாளிகையின் 49 செயலாளர்களில் 39 பேர் பார்ப்பனர்கள். துணைச் செயலாளர்கள் 7 பேருமே பார்ப்பனர்கள். கேபினட் செயலாளர்கள் 20 பேரில் 17 பேர் பார்ப்பனர்கள். ஒன்றிய பாதுகாப்புத் துறை அலுவலர்கள் 1,579 பேரில் 1,300 பேர் பார்ப்பனர்கள். ஒன்றிய நிதி அமைச்சகத்தின் அலுவலர்கள் 1008 பேரில் 942 பேர் பார்ப்பனர்கள். ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் அலுவலர்கள் 274 பேரில் 254 பேர் பார்ப்பனர்கள். ஒன்றிய சமூக நல மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அலுவலர்கள் 208 பேரில் 132 பேர் பார்ப்பனர்கள். இப்படி எந்தத் துறையைத் தொட்டாலும் அது பார்ப்பனர்களால் நிரப்பப்பட்ட துறையாகவே உள்ளது. ஏனென்றால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3,600 பேரில் 2,750 பேர் பார்ப்பனர்கள். ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் 27 பேரில் 25 பேர் பார்ப்பனர்கள். வெளிநாட்டு தூதர்கள் 140 பேரும் பார்ப்பனர்கள். பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் 116 பேரில் பார்ப்பனர்கள் 108 பேர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் பார்ப்பனர்கள் 306 பேர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 26 பேரில் பார்ப்பனர்கள் 23 பேர்.

மிகச் சமீபத்தில் கூட, ஒன்றிய நிதிநிலை அறிக்கை அச்சிடப்படுவதற்கு முன்பாக, வழக்கமாக நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பார்ப்பன நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது துறை சார்ந்த சகாக்களுக்கு அல்வா கொடுக்கும் புகைப்படம் வெளியானது. அந்த படத்தில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தினர் இல்லையே என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் ராகுல் காந்தி. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், உங்களில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தினர் என நிருபர்களைப் பார்த்து அவர் கேள்வி எழுப்பியபோது, ஒருவர் கூட தலை அசைக்கவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டைத் தவிர்த்துவிட்டு, அகில இந்திய அளவில் ஊடகத்துறையையும் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சிகளின் 90 விழுக்காடு ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், நிருபர்கள் பார்ப்பனர்களே. தமிழ்நாட்டில் மட்டும்தான் நிலைமை வேறாக உள்ளது.

பட்டியல் சமூகத்தினர் எங்குமே இல்லையா என்றால், ஒரேயொரு இடத்தில் மட்டும் இருக்கிறார்கள். பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கான நலத்துறையின் நாடாளுமன்றக் குழு 2023ஆம் ஆண்டில் அளித்த தரவுகளின்படி, ஒன்றிய அமைச்சகங்களில் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவோரில் 37 விழுக்காடு பட்டியல் சமூகத்தினர். 7.4 விழுக்காடு பழங்குடி சமூகத்தினர். அங்கே மட்டும் பார்ப்பனர் ஒருவர் கூட இல்லை. கோயில்களையும், அரச உயர் பதவிகளையும், நீதித்துறையையும், அரசாங்க பொறுப்புகளையும் பெரும்பகுதி அபகரித்து வைத்திருக்கிற பார்ப்பன சமூகம், ஜாதியின் பெயரால் தினம் தினம் வன்கொடுமைகளுக்கு ஆளாகிற சமூகங்களின் பாதுகாப்புக்கு இருக்கும் சட்டத்தை, கேட்பது இடஒதுக்கீட்டை அழிக்க உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றதைப் போலத்தான் உள்ளது. பார்ப்பனர்களின் இந்த நீலிக்கண்ணீரை தமிழ்நாடு ஒருபோதும் நம்பாது.

- ர.பிரகாசு