பெரியார் இந்த பூமிக்கு வந்தபோது
எங்கள் அலமாரிகளில் கடவுள்களிருந்தார்கள்.
அவர்கள் யாரும் எங்களை பெயர் சொல்லி அழைக்கவில்லை.
அழைப்பதற்கான பெயர்களை யாரும் உச்சரிக்கவில்லை.
சாதிகள் பெயர்களை திருடிக் கொண்டது.
ஏதோ மிருகங்களின் பெயரால் எங்களை அழைத்தபோது
அவமானங்களால் எரிந்தோம் அத்துமீறிய கோபங்கள்
சமையலறை நெருப்போடு அணைந்து போனது.
யாரும் எதிர்பாராத நாளில் காற்றைப் போல மழையைப் போல
எங்கள் பெயர் அழைக்கப்பட்டபோது
பெரியார் வந்துக் கொண்டிருந்தார் எங்கள் தெருக்களில்
வெளிச்சம் நட்பாக பார்த்தது.
பெரியார் கைகள் தோள்களில் விழுந்தபோது
எங்கள் கால்களுக்கு செருப்பு நுழைந்தது.
எங்கள் கால்கள் பாதைகளைத் தேடி பயணமானது.
அவர் எங்கள் வீட்டில் நுழைந்தபோது
கடவுளிருந்த அலமாரிகளில் புத்தகங்கள் குடியேறின.
நாங்கள் வாசிக்கத் தொடங்கினோம்.
கடவுள்கள் எங்கள் புத்தகங்களில் கரையான்களாக நுழைந்தனர்.
பெரியார் சொன்னார் சுரண்டுபவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கும்படி..
நாங்கள் பழைய அவமானங்களிலிருந்து எழுந்தோம்.
உடைந்து போகாத பெரும் வனமாய்...
வீடுகளில் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின.
இன்று பெரியார் ஆகாயமாக விரிந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கடவுள் சாயையுள்ள மனிதனுக்கு நாங்கள் பிச்சையிட்டுக் கொண்டிருப்பதை...
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பெரியார் பூமிக்கு வந்தபோது...
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்