ஜப்பானின் மாஜிக் புல்லட். கடந்த அறுபது ஆண்டுகளாக ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதிய ஒரு தொழில்நுட்ப அதிசயம். 1964ல் ஒரு நாள். ஷிங்கன்சன் புல்லட் இரயில் சேவையின் தொடக்கம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆரம்பம். உலகில் ஒரு புதிய பொருளாதார சக்தியின்... ஜனநாயகத்தின் உயிர்த்தெழுதலை பறைசாற்றியது.

Shinkansen lineup at Niigata Depotஅறுபது ஆண்டுகளுக்கு முன்பு

அக்டோபர் 1, 1964. காலை மணி ஆறு. இரண்டு இரயில்கள் எதிரெதிர் திசைகளில் உலகின் ஒரு துணிச்சலான கன்னிப் பயனத்தைத் தொடங்க தயாராக இருந்தன. இந்த புதிய போக்குவரத்து சேவையின் ஆரம்பம் இரண்டாம் உலகப் போரினால் சீரழிந்திருந்த ஜப்பான், இராணுவ சக்தி படைத்த ஒரு நாடு என்ற நிலையில் இருந்து அந்நாட்டை உலகளாவிய பொருளாதார வலிமை என்ற நிலைக்கு உயர்த்தியது. முன்னேற்றம் அதன் அடையாளமாக மாறியது.

அந்த கன்னிப் பயணத்தில் அழகான ஆடைகளை அணிந்திருந்த ஜப்பானிய ஆண், பெண், குழந்தைகள் அந்த இரயிலின் ஜன்னல் வழியாக சுழலும் ஓசையுடன் கிராமத்துக் காற்று உள்ளே வருவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இரயில் போக்குவரத்தில் அது வரை வரலாறு காணாத வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த இரயிலின் ஓட்டத்தினால் துடித்த தங்கள் மனதையும், நடுங்கிய நரம்புகளையும் அமைதிப்படுத்த பயணிகளில் சிலர் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

பயணம் முடிந்து இரண்டு இரயில்களும் அவை சென்று சேர வேண்டிய டோக்கியோ மற்றும் ஒசாகா இரயில் நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததைப் பார்க்க மக்கள் கூடினர். அன்றும் இன்று போலவே இரயில்கள் துல்லியமான நேரத்தில் காலை பத்து மணிக்கு 320 மைல் பயணத்தை முடித்துக் கொண்டு உரிய இடங்களுக்கு வந்து சேர்ந்து பயணிகளை இறக்கி விட்டன. முன்பு இப்பயணத்திற்கு ஏழு மணி நேரமானது. ஆனால் புல்லட் இரயில்கள் இதே தூரத்தை நான்கே மணி நேரத்தில் கடந்தன.

இன்று இது நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவை என்னும் மகுடத்தில் ஒளிரும் அணிகலன்.

ஆனால் அன்று போரினால் அழிந்த, நாட்டின் மீட்கப்பட்ட செழுமைக்கு உதவும் விமான, சாலைப் போக்குவரத்து வளர்ச்சிக்கு இடையில் இந்த சேவை ஒரு அராஜகமான செலவு என்று கடும் விமரிசனங்கள் எழுந்தன. ஜப்பானுக்கு உள்ளே ஷிங்கன்சன் என்றும், வெளியில் புல்லட் இரயில் என்றும் அழைக்கப்படும் இந்த சேவை இப்போது நாட்டின் ஒரு வழக்குச் சொல்லாக மாறி விட்டது.

நாட்டின் முதன்மையான நான்கு தீவுகளை இணைக்கும் இந்த சேவை 1,800 மைல் நீண்ட வலையமைப்பை உடையது. மணிக்கு 200 மைல் வேகத்தில் ஓடுகிறது. 1965ல் 18வது வயதில் டோக்கியோவில் இருந்து கயோட்டோவிற்கு தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் சென்ற, முதல் புல்லட் இரயில் பயணத்தை “அது மிக மென்மையான ஒரு பயணம். இரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கடந்து செல்லும் இயற்கைக் காட்சிகளை வைத்தே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது” என்று நீண்ட கால ஜப்பான்வாசி மார்க் ஷ்ரய்பர் (Mark Schreiber) மகிழ்வுடன் நினைவுகூர்கிறார்.

இந்த இரயில் சேவையின் 25வது ஆண்டு நிறைவின்போது மார்க் இதன் வரலாற்றை ஒரு ஜப்பானிய இதழில் “ஜப்பான் அதன் இரயில்களை எப்போதும் நேசிக்கும் ஒரு நாடு. இது பற்றிய பெருமிதமும் உற்சாகமும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றக் கூடியது” என்று எழுதினார்.

ஒரு அதி வேக இரயில் சேவையை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துவது என்பதற்கு ஜப்பானின் புல்லட் இரயில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. டக்கேடோ சேவை (Tokaido line) என்று அழைக்கப்படும் டோக்கியோ-நகோயா-ஒசாகா (Tokyo-Nagoya-Osaka) சேவை மூலம் மட்டும் 6.4 பில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர் என்று மத்திய ஜப்பான் இரயில்வே கூறுகிறது. இது வரை இந்த சேவையில் விபத்தால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

இதன் சராசரி காலதாமதம் என்பது ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒன்பது நாட்கள் முன்பு இந்த புல்லட் இரயில் திட்டம் முடிக்கப்பட்டது.

“புல்லட் சேவையின் தொடக்கம் மற்றும் 1964 ஒலிம்பிக் போட்டி - ஜப்பான் மீண்டெழுந்து உலகின் முன்னணி நாடாக மாறுகிறது என்பதை உலகிற்கு உணர்த்தியது” என்று கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழக ஜப்பானிய பிரிவின் இருக்கை இல்லாத பேராசிரியரும், ஷிங்கன்சன் புல்லட் இரயில் முதல் நவீன ஜப்பான் (Shinkansen: From Bullet Train to Symbol of Modern Japan.) என்ற நூலின் ஆசிரியருமான கிறிஸ்டோபர் ஹுட் (Christopher Hood) கூறுகிறார்.

குவிந்த பாராட்டுகளுடன் புல்லட் இரயில் நிர்வாகம் அதன் செயல்களை நிறுத்தி விடவில்லை. டோக்கியோ-ஒசாகா பயண நேரம் மணிக்கு 178 மைல் வேகத்துடன் 2 மணி 22 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. 1964ல் சராசரி 60,000 பேர் பயணம் செய்த இத்திட்டத்தில் 2013ல் 4,24,000 பேர் பயணம் செய்தனர். சூழல் கவலைகள், மலிவான விமானப் பயண வசதிகளின் வருகையால் இதன் அடுத்த தலைமுறை இரயில் திட்டங்கள் தாமதமாகியுள்ளன.

புதிய திட்டங்கள்

சூவோ ஷிங்கன்சன் (Chuo Shinkansen) என்று அழைக்கப்படும் புதிய சேவை 2027ல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. டோக்கியோவை நகோயா என்ற மத்திய நகரத்துடன் இணைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் இப்போது உள்ள ஒரு மணி 34 நிமிட நேரப் பயணம் 40 நிமிடமாகக் குறையும். இந்த தடத்தில் ஓடும் இரயில்களின் வேகம் அதிகபட்சம் மணிக்கு 300 மைல்கள்.

முன் மொழியப்பட்டுள்ள பாதையில் உள்ள மென்மையாண நில அமைப்பு மற்றும் மண்ணின் தன்மை காரணமாக வழியில் கட்டப்படும் ஒரு குகையின் கட்டுமானப் பணிகளால் இத்திட்டம் மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தாமதமாகும். அதனால் இதன் வணிகப் பயன்பாடு 2034ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சம், நம்பகத் தன்மை, முக்கிய நகரங்களை இணைக்கும் வசதி போன்றவையே புல்லட் இரயில்களின் வெற்றிக்குக் காரணம்.

புல்லட் இரயில்களை ஜப்பான் இயக்காமல் இருந்திருந்தால் இது போன்ற சேவைகள் உலகில் வேறெங்கும் தொடங்கப்பட்டிருக்காது. “புல்லட் இரயில்கள் நகரங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தியுள்ளது. அந்த காலத்தில் பட்டுப் பாதை மற்றும் ரோமானியர்களின் சாலைக் கட்டுமானம், பொருளாதாரம், கலாச்சாரம், நாகரீகத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்தது. இதுபோல இப்போது இந்த புல்லட் இரயில்கள், செல்லும் வழியில் உள்ள நகரங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது” என்று இந்த சேவைகளை ஆண்டிற்கு பத்து முறை பயன்படுத்தும் போக்குவரத்து கொள்கை நிபுணரும் டோக்கியோ பல்கலைக்கழக தேசிய பட்டப் படிப்பு கழகத்தின்இமெரெட்டிஸ் (emeritus) பேராசிரியருமான ஷைஜ்ரு மொரிச்சி (Shigeru Morichi) கூறுகிறார்.

இமெரெட்டிஸ் பேராசிரியர் பதவி என்பது ஓய்வு பெற்ற பின் அந்த கல்வி நிறுவனத்திற்கு ஆற்றிய அரும்பணிகளுக்காக ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதை பட்டம். “இந்த இரயில்கள் ஜப்பானை நேசிக்கும் மக்களின் சுருக்கமான வடிவம். செய்யும் பணியில் பெருமை கொள்வது, மற்றவர்களுக்கு சேவை செய்வது, திறமையைச் சார்ந்திருப்பது போன்ற பண்புகளின் வெளிப்பாடு” என்று இருபது ஆண்டுகளாக இபுல்லட் இரயில்களில் ஆங்கில மொழி அறிவிப்புகளை வெளியிடும் டோன பர்க் (Donna Burke) கூறுகிறார்.

உழைப்பிற்கும் உயர் தொழில்நுட்பத் திறனுக்கும் உலகிற்கே முன் மாதிரியாக உள்ள ஜப்பான் என்ற நாட்டின் சாதனைகளின் கிரீடத்தில் இந்த புல்லட் இரயில் ஒரு பொன்னிறகு!

மேற்கோள்: https://www.theguardian.com/world/2024/sep/29/japans-magic-bullet-60-years-of-the-train-that-helped-rebuild-the-idea-of-a-country?

சிதம்பரம் இரவிச்சந்திரன்