ஜப்பானில் உள்ள BSI-TOYOTA Collaboration Center (BTCC) அண்மையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை மூளையின் அதிர்வலைகளைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மூளை தன்னுடைய கட்டளைகளை மின் துடிப்புகளாக வெளியிடுகிறது. இந்த மின் துடிப்புகள் வலிமை குறைந்தவை.  மைக்ரோ வோல்ட்டுகளில் இவை அளக்கப்படுகின்றன. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டார்ச் செல்லின் மின் அழுத்த வலிமை 1.5 வோல்ட். ஒரு மைக்ரான் என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். 125 மில்லி செகண்டுகளே நீடிக்கக்கூடிய மூளையின் அதிர்வுகள் கூட இந்த சக்கரநாற்காலியின் இயக்கத்தை கட்டுப்படுத்துமாம்.

மூளை-இயந்திர ஒருங்கிணைப்பு (brain-machine interface) துறையில் அண்மைக்காலமாக விரிவான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. முதியோர்களும் உடல் ஊனமுற்றோரும் பிறரை உதவிக்கு அழைக்காமலேயே தங்களுடைய சக்கர நாற்காலியை கட்டுப்படுத்தி இந்த உலகத்துடன் உறவாட இந்த ஆய்வுகள் வழிசெய்கின்றன.

தற்போது உபயோகத்தில் இருக்கும் சக்கரநாற்காலிகள் மூளையின் அதிர்வுகளை ஏற்று செயல்பட சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த புதிய சக்கரநாற்காலியில் blind signal separation, space-time-frequency filtering technology ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒரு கூட்டு அதிர்வு பல்வேறு அதிர்வுக்கூறுகளாக பிரித்தறியப்படுகிறது. இதனால் மூளையின் கட்டளைகள் 125 மில்லிசெகண்டுநேரத்திலேயே உணர்ந்துகொள்ளப்படும். மண்டையின் மேல்தோலில் மின்வாய்களைப் பொருத்தி மூளையின் மின் தூண்டல்கள் ஏற்கப்படுகிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தன்னுடைய மூளை அதிர்வுகளை  ஒரு மின்னணுப்பலகையில் அவரே காணமுடியும். காலப்போக்கில் உபயோகிப்பாளரின் பழக்கவழக்கங்களை இந்த கருவி உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது என்பது வியப்பான செய்தி. 95 சதவீதம் துல்லியமான இந்த சக்கரநாற்காலி முன்னோக்கிச் செல்லுதல், வலதுபுறம் திரும்புதல், இடதுபுறம் திரும்புதல் ஆகிய இயக்கங்களை விரைவாகச் செய்கிறது.

ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மின் தூண்டல்களின் உதவியால் கை கால் இயக்கங்கள் சார்ந்த கட்டளைகளை நிறைவேற்ற மட்டுமே இந்த சக்கரநாற்காலி தற்போது பயன்பட்டு வருகிறது. காலப்போக்கில் மூளையின் உணர்ச்சிகளையும் அதனால் வெளியிடப்படும் அதிர்வலைகளையும் உணரும் வகையில் இந்த சக்கரநாற்காலியில் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். மருத்துவத்துறையையும் செவிலியர் பணியையும் ஒருங்கிணைத்து இந்த சக்கரநாற்காலி ஏற்கக்கூடிய கட்டளைகளை விரிவுபடுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தூரத்தையும் காலத்தையும் கணிக்கும் மூளையின் திறன் அபாரமானது. எதிரே வரும் வண்டியின் தூரத்தையும் அது நம்மை அடைய  எடுத்துக்கொள்ளக்கூடிய காலத்தையும் நமது மூளை வெகுவிரைவில் கணக்கீடு செய்து கொள்கிறது. அதற்கேற்ப நாம் வழியில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறோம். தூரம், காலம் இவையனைத்தும் தகுந்த மின்வாய்கள் மூலம் பிரித்தறியப்படுவதால் இந்த சக்கர நாற்காலியின் செயல்பாடு இதுவரை எந்தக் கருவியாலும் எட்டப்படாத 95 சதவீதம் துல்லியமானது.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090629101848.htm

தகவல்:மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It