“என் பெயர் வாசுதேவன். வாசுதேவன் கொலம்பஸ்”. இப்படியாகத்தான் வாசு மற்றவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான். அதென்ன கொலம்பஸ் என்று முதல் சந்திப்பிலேயே அவனிடம் நான் கேட்டேன். அவனிடம் இருந்து இதுநாள் வரை எந்த பதிலும் இல்லை. சூட்சுமமாகச் சிரிப்பான், அவ்வளவுதான். அவனை முதலில் சந்தித்த அந்த நாளை என்னால் நிச்சயம் மறக்கவே முடியாது. ஞாயிற்றுக் கிழமை என்று நினைக்கிறேன். நான் தங்கி இருக்கும் மேன்ஷனிற்கு எதிரில் இருக்கும் டீக்கடையில் வழக்கமாக கடனுக்கு கட்டஞ்சாயாவை வாங்கி ஊதி ஊதி குடிக்கும் போது, “சார், என் பெயர் வாசுதேவன். வாசுதேவன் கொலம்பஸ்” என்ற குரல் கேட்டு தலையை உயர்த்தினேன். ஆறடிக்குக் கொஞ்சம் கூடுதலாகவே வளர்ந்திருந்தான். மாநிறம். புளூ ஜீன்ஸும், முழுக்கை வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தான். வலது கையால் இடது கை கஃப்லிங்க்ஸை உயர்த்தி மணிக்கட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

robot 340“நான் ஊருக்குப் புதுசு. தங்குவதற்கு ஒரு நல்ல இடம் வேண்டும்” என்றான். எங்கள் மேன்ஷனில் இனிமேல் ஒரு எலி கூட தங்குவதற்கு அனுமதியில்லை என்று எனக்குத் தெரியும். அப்போதுதான் வைத்தி மாமா கூறியது ஞாபகத்திற்கு வந்தது. வாசுவை மாமாவிடம் அழைத்துச் சென்றேன். தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தான். மண் மற்றும் நீர்நிலை ஆராய்ச்சிக்காக வந்திருப்பதாகவும், இரண்டு நாட்களில் பணியில் சேர வேண்டியிருக்கும் என்றும் கூறினான். வீட்டு வாசலை நெருங்கும் போது “உங்க பேரை வைத்தி மாமா கேட்டா வெறும் வாசுதேவன்னு மட்டும் சொல்லுங்க” என்ற என் வேண்டுதலை கேள்வி கேட்காமல் ஒத்துக் கொண்டான். வைத்தி மாமா வாசல் திண்ணையில் கால் நீட்டி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் வருவதைப் பார்த்தவுடன் மாமியை அழைத்தார். மாமி வாசுவை ஒரு முழு ஸ்கேன் செய்து விட்டு, ஒன்று இரண்டு என்று ஒவ்வொரு விரலாக உயர்த்தி மாடியில் இருக்கும் அறையில் தங்குவதற்கான நிபந்தனைகளை பட்டியலிட்டாள்.

மாமா திண்ணையில் இருக்கும் காலி டம்பளரை கீழே தள்ளிவிட, மாமி உடனே அதை குனிந்து எடுத்தாள். “உங்களுக்கு டிஸ்க் ப்ரொலாப்ஸ் இருக்கு மாமி. நல்லா ஓய்வெடுக்கனும். சட்டுன்னு மத்தவங்க மாதிரி இப்படி குனியவே கூடாது” என்று வாசு கூற மாமி விக்கித்துப் போனாள். வைத்தி மாமாவைப் பார்த்து “மாமா, உங்க சக்கரை அளவை கட்டுப்பாட்டிலே வைச்சுக்கவே மாட்டீங்க போல?” என்று கேட்டான். அதை ஆமோதிப்பதைப் போல மாமியும் தலை ஆட்டினாள். இப்படியாகத்தான் வாசு மாடியில் இருக்கும் அறைக்குக் அமர்க்களமாகக் குடிவந்தான்.

வாசு இங்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது படித்துக் கொண்டே இருப்பான். ஒரு நாள் நானும் அவனும் பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அடுத்த வீட்டில் இருக்கும் குழந்தை, தோளில் ஒரு பெரிய பை, வலது கையில் சாப்பாடுப் பையுடன் ஒரு தண்ணீர் பாட்டில், இடது கையில் தியான வகுப்பில் அமர்வதற்காக ஒரு பிளாஸ்டிக் பாய் சகிதமாக ஒரு போர் வீரனின் தயார் நிலையில் பள்ளிக் கூட வேனிற்காக காத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையைப் பார்த்த வாசு என்னிடம் “இந்த சின்ன வயசிலே எவ்வளவு பாரத்தை இந்தக் குழந்தை சுமக்கும். நாம எதாச்சும் அந்தக் குழந்தைக்கு நிச்சயம் உதவனும்” என்று கூறினான். இவனால் எப்படி நம் கல்வி முறையை அவ்வளவு எளிதாக மாற்ற முடியும் என்று நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

மாலை அந்தக் குழந்தை தன் வீட்டினைக் கடந்து போகும் போது, அவளை அழைத்து திண்ணையில் அமர வைத்து, பையில் இருக்கும் அனைத்து புத்தகங்களையும் வேகமாக ஒரு பக்கம் விடாமல் புரட்டிப் பார்த்தான். பிறகு தன்னையே உற்றுபார்த்த வாசுவைப் பார்த்து அந்தக் குழந்தை சிரித்தது. ஏதோ புரிந்தது போல புத்தகங்களை பையினில் அடுக்கி வைத்து “சரி மாமா, நான் வரேன்” என்று மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்குக் கிளம்பியது.

அடுத்த நாள் எவ்வளவு கூறியும் புத்தகப் பையை எடுத்துப் போகமாட்டேன் என்று அந்தக் குழந்தை பிடிவாதம் பிடித்தது. எப்படியாவது அவள் பள்ளிக்கூடத்திற்குப் போனால் போதும் என்று புத்தகச் சுமையுடன் அம்மாவும் உடன் சென்றாள். மாலை அந்தக் குழந்தை பள்ளித் தலைமை ஆசிரியருடன் வீட்டிற்கு வந்தாள். பதறியபடி பெற்றோர்கள் அவரை வரவேற்க “இது சராசரிக் குழந்தை இல்லைங்க. அப்படி ஒரு புத்திசாலித்தனம். எந்தப் பாடத்திலிருந்து கேட்டாலும் உடனே பதில் சொல்கிறாள். எங்களால் துளி கூட நம்பவே முடியவில்லை. எங்கள் பள்ளியில் இன்று முழுவதும் அவளைப் பற்றித்தான் பேச்சு. இனிமேல் அவள் விரும்பியதைப் போல புத்தகச் சுமைகள் எதுவும் இல்லாமல் பள்ளிக்கூடம் வரலாம். அதை உங்களிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்று கூற குழந்தையின் பெற்றோர்கள் பாதி மயக்க நிலையில் இருந்தார்கள். என்னைப் பார்த்து வாசு குறும்பாகச் சிரித்தது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

மாமாவின் பேத்தி பூமா பள்ளி விடுமுறைக்கு வந்திருந்தாள். மிகவும் சூட்டிகை. ஒரே நாளில் வாசுவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள். பாட்டி சமையல் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது பூமா கார்டூன் நிகழ்ச்சிக்கு மாற்றினாள். பாட்டி செல்லமான கோபத்துடன் ரிமோட்டை இடுப்பில் வைத்துக்கொண்டு காய்கள் நறுக்க ஆரம்பித்தாள். இதைப் பார்த்த வாசு பூமாவிற்காக கண்களைச் சுழற்றி கார்ட்டீனிற்கும் சமையல் நிகழ்ச்சிக்கும் சேனலை அடிக்கடி மாற்ற, பூமா விழுந்து விழுந்து சிரித்தாள். இதைப் பார்த்த மாமிக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கோ கொஞ்சம் வியப்பாகவும், பயமாகவும் இருந்தது. ஆனால் இவனிடம் ஏதோ ஒரு மந்திர சக்தி இருக்கிறது என்பதை மட்டும் நம்ப ஆரம்பித்தேன். என்னால் வாசுவைப் பற்றி எந்தவித தீர்மானத்திற்கும் உடனே வர முடியவில்லை.

தேர்தல் நேரமும் நெருங்கிக் கொண்டே இருந்தது. ஆளும் கட்சி எதிர்க் கட்சியையும், எதிர்க் கட்சி ஆளும் கட்சியையும் எதிர்த்து ஒரு நீண்ட பட்டியலையே தயாரித்து வைத்திருந்தார்கள். நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு என பஞ்சபூதங்களையும் ஆளும் கட்சி தன் பிடியில் வைத்திருந்தது. எதிலும் கையூட்டு, ஊழல், நிர்வாகச் சீர்கேடு. ஆளும் கட்சியின் பண பலத்தால் எதிர் கட்சிகளின் குரல் மக்களிடம் எடுபடவே இல்லை. தொலைக் காட்சிகளிலும், பிற ஊடகங்களிலும் ஆளும் கட்சியே முதன்மை இடத்தில் இருந்தது. அடுத்த இருபது வருடத்திற்கு ஆளும் கட்சியை எந்தக் கட்சியாலும் அசைக்கவே முடியாது என்று அரசியல் யூகங்கள் மக்களை மேலும் குழப்பியது.

இதைக் கவனித்த வாசு என்னிடம் “மக்கள் பாவம்டா, நிச்சயம் அவங்களுக்கு ஏதாவது செய்யனும்” என்றான். எனக்கு உடம்பு முழுவதும் வியர்த்தது. தேர்தலிற்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது அனைத்து தொலைக்காட்சிகளிலும், கை பேசிகளிலும், வானொலிகளிலும் ஆளும் கட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேட்டினையும் ஆதாரத்துடன் திரும்ப திரும்ப ஒலி/ஒளி பரப்பப்பட்டது. முக்கியமாக ஆளும் கட்சியின் சேனலிலும் இந்த குற்றப்பதிவு அவர்களின் நிகழ்ச்சிக்கிடையே காட்டப்பட அரசாங்கம் செய்வதறியாமல் குழம்பியது. எவ்வளவு முயன்றும் யாராலும் இதைத் தடுக்க முடியவில்லை. விண்ணில் சுழலும் தகவல் ஒளிபரப்பு விண்வெளிக் கோள்கள் அனைத்தும் மையக் கேந்திரத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற உண்மையை ரகசிய அறிக்கையாக தலைமை விஞ்ஞானி தலைமைச் செயலகத்திற்கு தெரிவித்தார். ஒரு வழியாகத் தேர்தலும் முடிந்தது. ஆளும் கட்சி படு மோசமாகத் தோற்றது. புதுக் கட்சி ஆட்சியில் அமர்ந்தது.

புதிய கட்சி பதவியேற்ற அன்றே தேர்தலுக்கு முன்பு ஏற்பட்ட குழப்பத்திற்கு யார் காரணம் என்று அறிவதற்காக ஒரு தனிக் குழு அமைத்தார்கள். நாம் ஐந்து வருடம் ஆண்ட பிறகு நமக்கும் இதுபோல ஏதாவது நடந்து விட்டால் தொடர்ந்து ஆள முடியாது என்ற அச்சத்தால் விசாரணையை துரிதப்படுத்தினார்கள். வாசுவினால் எப்படி இது சாத்தியமானது என்று நினைக்கும் போதே எனக்கு மரண பயம் பீடித்தது.

ஒரு நாள் காலை வாசுவைப் பார்க்க இரண்டு அதிகாரிகள் அவன் அறைக்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் சென்ற வாசு மறுபடியும் வீடு திரும்பவே இல்லை. அனைத்து ஊடகங்களிலும் வாசுவைப் பற்றியே செய்திகள் இருந்தது. அவசர அவசரமாக விசாரணை நடத்தப்பட்டது. ஒரே மாதத்திற்குள், அவன் மேல் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடுவதற்கான நாளையும் குறித்து விட்டார்கள். தூக்கு மேடையும் தயாரானது. “கடைசியாக நீ ஏதாவது கூற விரும்புகிறாயா” என்று தலைமை அதிகாரி வாசுவை கேட்டவுடன் “என்னை தண்டிப்பதற்கான அதிகாரம் உங்கள் யாரிடமும் கிடையாது. தண்டிக்கவும் முடியாது” என்று மட்டும் கூறினான். அவனை தூக்கிலேற்றிய பிறகு அவனுடைய உடலை யாராலும் பார்க்க முடியவில்லை. மாயமாய் மறைந்த வாசுதேவனின் உடலைப் பற்றி அனைத்து பத்திரிக்கைகளும் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு புதுப்புது கதைகளை ஜோடித்து எழுதி கல்லாப்பெட்டியை நிரப்பியது.

பூமிக்கு மேல் அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த வின்வெளிக் கலத்தில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. தலைமை விஞ்சானி வாசுவின் அருகில் வந்து “இந்தியாவைக் குறித்து உன் ஆராய்ச்சி எந்த அளவில் இருக்கிறது? நாம் கிளம்பளாமா? என்று கேட்டார். வாசு மெதுவாக “இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் என்றோ அவர்களின் பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடித்து விட்டார்கள். அதை அமுல்படுத்த ஏன் தயங்குகிறார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை ” என்று தன் காதில் வைத்திருந்த ஹெட் ஃபோனை எடுத்து தலைமை விஞ்ஞானியின் காதில் பொருத்தினான். “நமக்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. ஆண்டான், அடிமை இருக்கும்வரை இந்தப் பிளவுகள் நம்மிடையே இருக்கத்தான் செய்யும். முதலாளி, தொழிலாளி, ஏழை, பணக்காரன் என்ற சொற்களை அகராதியிலிருந்தே எடுத்துவிட வேண்டும். நாம் அனைவரும் ஓர் இனம். அதற்கான காலமும் நம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது..................”

இதை மிகுந்த எரிச்சலுடன் கேட்டுக்கொண்டிருந்த தலைமை விஞ்ஞானி இவனை இப்படியே விட்டு விட்டால், தன் தலைமைப் பதவிக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினார்.

உடனே வாசுவை கதிர் வீச்சினால் தற்காலிகமாக செயலிழக்கச் செய்து அவனின் மார்பைத் திறந்து சில சிப்ஸ்களை மாற்றினார். நினைவு திரும்பியவுடன், வாசு தனக்கான அடுத்த ஆணைக்காக கைகட்டி பணிவுடன் காத்திருந்தான். உன் பெயர் என்ன என்று தலைமை விஞ்ஞானி கேட்க உடனே “உங்களின் அடிமை 00X3490”. அடுத்த கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்” என்றான் வாசு என்ற வாசுதேவன் கொலம்பஸ்

- பிரேம பிரபா

Pin It