அண்டார்டிகாவில் விமானி இல்லாமல் பறக்கும் விமானங்கள் அறிவியல் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ட்ரேசர் அல்ட்ரா ட்ரோன்கள் (Windracer Ultra UAV) என்று பெயரிடப்பட்டுள்ள விமானங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இவை கடல்சார் சூழல் மண்டலங்களையும் பனிப்பாறைகளையும் ஆராயும். இப்பரிசோதனைகளை நடத்த விஞ்ஞானிகள் அடங்கிய ஆய்வுக்குழு அண்டார்டிகாவில் இருக்கும் ராதர (Rothera) என்ற மிகப் பெரிய பிரிட்டிஷ் ஆய்வு நிலையத்திற்கு சென்றுள்ளது.

கார்பன் உமிழ்வைக் குறைக்கும் விமானங்கள்

 ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துவதால் 90% கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க முடியும். இந்த விமானம் இரட்டை என்ஜின்களைக் கொண்டது. பத்து மீட்டர் அளவுள்ள இது நூறு கிலோகிராம் வரை சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் பெற்றது. விமானத்தை தரையில் இருந்து மேலெழுப்ப அல்லது இறக்க தானியங்கி விமானி வசதி (auto pilot facility) உள்ளது. இதனால் விமானி இல்லாமலேயே விமானத்தைப் பறக்க வைக்க அல்லது தரையிறக்க முடியும்.pilotless droneஇதில் பொருத்தப்பட்டுள்ள உணரிகளைப் பயன்படுத்தி ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை தகவல்களைத் திரட்ட முடியும். விமானியுடன் உள்ள இரட்டை என்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள் அதிக செலவு பிடிக்கக் கூடியது. அவை அதிதீவிர காலநிலையில் அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசத்தில் பல சவால்களை எதிர்கொள்கின்றன.

ஆளில்லாத விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான பறத்தல் நேரமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தென் துருவத்தில் உள்ள கண்டத்திட்டுகள், கடலும் வளிமண்டலமும் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பது பற்றி ஆராயும்.

இதற்காக இவற்றில் செயற்கை நுண்ணறிவுத் திரள் (Swarm) தொழில்நுட்ப வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி பல்நோக்கு ஆளில்லா விமானங்கள் ஒருங்கிணைந்து தானியங்கி முறையில் செயல்படும். இதன் மூலம் பெரும்பரப்பில் ஆய்வுகளை நடத்த முடியும். இங்கிலாந்து துருவ ஆய்வுக்கழகத்தின் கீழ் செயல்படும் பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்பின் (BAS) இயற்கை சூழல் கவுன்சில் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு அறிவியல் ஆய்வுகள் அனைத்தையும் தானியங்கி முறையில் மாற்றுவதன் மூலம் 2040ல் கார்பன் உமிழ்வை சுழிநிலைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

தடைகளைத் தாண்டி பறக்கும் விமானம்

“தொழில்நுட்ப ரீதியிலான இத்தகைய முன்னேற்றங்கள் வரவேற்கத்தக்கது. அண்டார்டிகாவில் பனிப்பாறைகளில் நிகழும் மாற்றங்கள், இது உலக மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள துருவப்பகுதி அறிவியல் ஆய்வுகள் புதிய உயர் தொழில்நுட்ப தரவு சேகரிப்பு வசதிகளைப் பெற வேண்டும். இவ்வகையில் இது முதல் முயற்சி” என்று வளிமண்டலத் தரவுகளை ஆராயும் பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்பின் புவியியல் நிபுணர் டாக்டர் டாம் ஜோர்டன் (Dr Tom Jordan) கூறுகிறார்.

என்ஜின்களில் ஒன்று அல்லது உதிரி பாகங்கள் பழுதுபட்டால் குறைந்த எண்ணிக்கையில் மாற்று உதிரிப் பொருட்களை பயன்படுத்தி பழுது நீக்கம் செய்து தொடர்ந்து பறக்கும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதியுதவி புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வருங்கால பறத்தலுக்கான சவால் (Innovate UK’s Future Flight 3 Challenge) என்ற அரசுத்துறை சாராத பொது அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இத்திட்டம் உட்பட பிற பதினாறு ஆய்வுத் திட்டங்களுக்காக 73 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியுள்ளது. மனிதனின் குறுக்கீடுகளால் சூழல் மண்டலங்கள் பேரழிவை சந்தித்து வரும் நிலையில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் ஆளில்லாத இந்த விமானங்கள் அண்டார்டிகாவின் மோசமாகி வரும் பனிப்பாறைகளையும் அங்கு வாழும் எண்ணற்ற உயிரினங்களையும் காக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/world/2024/feb/03/pilotless-drones-being-tested-in-antarctica-for-use-in-scientific-research?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It