தேவைப்படும் நேரத்தில் கிரகணத்தை ஏற்படுத்தி சூரியனை ஆராயும் புதிய திட்டத்திற்காக விண்கலன்களை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். ப்ரோப-3 (Proba-3) என்ற இந்த இரட்டை ரோபோட் செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொலைவில் பூமியைச் சுற்றும். சூரியனில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் இடையூறுகளை ஆழத்தில் அறிய இதில் ஒன்று மற்றொன்றில் இருந்து பார்க்கும்போது சூரியனை ஆராய முடியும்.
An impression of the European Space Agency’s double-satellite Proba-3 mission. Photograph: ESA-P. Carril
இவற்றில் லேசர்கள், ஒளி உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் பல மணி நேரம் நீளும் சூரிய கிரகணத்தை உருவாக்க முடியும். இந்த கிரகணங்களை ஆராய்வதன் மூலம் சூரியனைப் பற்றிய ஆய்வுகளில் ஒரு மாற்றம் ஏற்படும். சூரியனால் ஆற்றல் தொடர்புகள், வழியறியும் செயற்கைக்கோள்கள் மற்றும் புவி சார் தொழில்நுட்பங்களில் ஏற்படுத்தும் பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஈர்ப்பு அலைகள், சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கோள்கள், கருந்துளைகளை ஆராய இது ஒரு முன் மாதிரியாக அமையும். “தொழில்நுட்ப ரீதியில் சவால்கள் நிறைந்தது. இதை சரியாகச் செய்வது சுலபமானதில்லை. ஆனால் அதிக பயன் தருவது” என்று இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் (UCL) சேர்ந்த சூரியனை ஆராயும் இயற்பியலாளர் பிரான்சிஸ்கோ டியேகோ (Francisco Diego) கூறுகிறார்.
ஒன்றுடன் மற்றொன்று சேர்ந்து செல்ல வசதியாக இவ்விரு ஆய்வுக்கலன்களும் துல்லியமாக ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்க உதவும் பல சிக்கலான உணரிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இத்திட்டப் பணிகளை முழுமை செய்ய பத்தாண்டுகள் ஆனது. ஒன்றில் இருந்து மற்றொன்று 144 மீட்டர் தூரத்தில் இருக்கும்படி இவை பூமியைச் சுற்றி வரும். இதனால் இவை 144 மீட்டர் நீளமுள்ள ஒற்றை ஆய்வுக்கலனாக செயல்படும்.
“இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் அவற்றின் சரியான சுற்றுவட்டப் பாதையில் சுற்றும்போது இரண்டாவது செயற்கைக் கோளில் இருந்து தெளிவாகத் தெரியும் வகையில் சூரியனை மறைக்கும் விதத்தில் முதல் செயற்கைக்கோளில் இருந்து ஒரு வட்டு (disc) வெளிப்படும். இதனால் சூரியன் மறையும். இதை இரண்டாவது செயற்கைக் கோளில் இருந்து ஆராயலாம். இதன் விளைவாக உருவாகும் கிரகணம் ஒரு நாளில் ஆறு மணிநேரம் நீடிக்கும்” என்று திட்ட மேலாளர் டேமியன் கலானோ (Damien Galano) கூறுகிறார்.
நிலவு சூரியனைக் கடந்து செல்லும்போது பூமியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அப்போது நிலவு, கண்ணைக் கூசவைக்கும் சூரிய ஒளியை மறைக்கிறது. வெப்பம் மிகுந்த கரோனாவை மட்டும் தெரியும்படி செய்கிறது. கரோனா என்பது சூரியனின் புலனாகும் பரப்பிற்கு மேல் அதன் வளிமண்டலத்திற்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வெளிப்புற அடுக்கு. இத்திட்டத்தின் உதவியுடன் கரோனாவை நன்கு ஆராய முடியும்.
வானில் இருந்து கிரகண ஆராய்ச்சி
துரதிஷ்டவசமாக முழுமையான சூரிய கிரகணம் பூமியில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சராசரியாக நிகழ்கிறது. இதைக் காண விஞ்ஞானிகள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. வானிலையின் கருணையால் மட்டுமே கிரகணத்தை நன்கு பார்க்க முடியும். அதை ஒரு சில விநாடிகள் மட்டுமே உற்றுநோக்க முடியும். விரிவான ஆய்வுகளுக்கு இந்த நேரம் போதுமானதாக இல்லை.
வான் தொலைநோக்கிகளுடன் இணைத்து கிரகணத்தை ஏற்படுத்தி சூரிய ஒளியை நேரடியாகத் தடுக்கும் கரோனாகிராஃப் (Coronagraph) போன்ற கருவிகளால் உட்புற கரோனாவை விரிவாக ஆராய முடிவதில்லை.
“உயர் வெப்பநிலை நிலவுவதால் உட்புற கரோனாவை ஆராய்வதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சூரியனின் பரப்பில் வெப்பநிலை சுமார் 6,000 டிகிரி. கரோனாவில் வெப்பநிலை ஒரு மில்லியன் டிகிரி. இது ஒரு முரண்பாடு. சூரியனிடம் இருந்து விலகும்போது வெப்பநிலை குறைய வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை” என்று கரோனா பரிசோதனைப் பிரிவுக்கான முதன்மை ஆய்வாளர் ஆண்ட்ரே ஜூக்கோவ் (Andrei Zhukov) கூறுகிறார். உட்புற கரோனாவை அதிக நேரம் ஆராயும்போது சூரியனின் பரப்பு மிகுந்த வெப்பமாகவும் கீழ்ப்பகுதிகள் குறைந்த வெப்பத்துடன் இருப்பது ஏன் என்பதற்கும் விடை கிடைக்கும்.
விண்வெளி வானிலை, வழியறியும் தொழில்நுட்பம், ஆற்றல் பகிர்மானம், மற்ற தொழில்நுட்பங்களை சூரியன் பாதிக்கிறது. “சூரியனை நன்கறிவது வருங்கால ஆய்வுகளுக்கு முக்கியமானது. அரிதாக சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டம் பெற்ற வாயு மற்றும் காந்தப்புல மேகங்கள் வெடித்து சிதறுதல் (coronal mass ejection) ஏற்படுகிறது. அப்போது சூரியனால் பெருமளவில் ப்ளாஸ்மா விண்வெளியில் வெளித்தள்ளப்படுகிறது.
இது பூமியின் மேல்வளிமண்டலத்தை அடையும்போது அரோரா என்னும் துருவ வெளிச்சங்களை ஏற்படுத்துகிறது. அரிதாக இது ஆற்றல் பகிர்மானத்தை பாதிக்கிறது. பொதுவாக நாம் பூமியின் வளி மண்டலம் மற்றும் பூமியைச் சுற்றியுள்ள ஆற்றல் மிக்க கதிரியக்கப் பட்டைகளான வான் ஆலன் பட்டைகளால் (Van Allen radiation) பாதுகாக்கப்படுகிறோம்” என்று டியோகோ கூறுகிறார்.
ஒரு புதிய அத்தியாயம்
ஆனால் ஆழ் விண்வெளியில் கதிரியக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. மனிதனை நிலவுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பும்போது சூரிய கரோனாவின் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் விண்வெளி வீரர்களை தீங்கு தரும் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம். இந்த ஆய்வு சூரிய இயற்பியலுக்கும் அப்பால் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
பறத்தல் பற்றிய ஆய்வு விவரங்களுக்கு இத்திட்டம் ரோபோட்டிக் கலன்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும். இதன் மூலம் மிகச் சில சிறிய செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி ராட்சச செயற்கைக் கோளின் வேலைகளைச் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கைக்கோள் குழுக்கள் மூலம் கருந்துளைகள், சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கோள்கள், ஈர்ப்பு அலைகளை ஆராயலாம்.
இத்தொழில்நுட்பம் வருங்கால விண்வெளி ஆய்வுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்