1739 மார்ச் 13 அன்று இரவு வில்லியம் ஹெர்ஷல், பாத் (Bath) நியூ கிங் தெருவில் (New King Street) உள்ள தன் வீட்டின் புறக்கடைத் தோட்டத்தில் தொலைநோக்கியைக் கொண்டு வானை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஜீட்ட டோரி (Zeta Tauri) என்ற நட்சத்திரத்திற்கு அருகில் மங்கலான ஒரு பொருளைக் கண்டுபிடித்தார். அதை பல இரவுகள் உற்று நோக்கியபோது அது நட்சத்திரங்களின் பின்புலத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
ஒரு வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக அவர் முதலில் நினைத்தார். ஆனால் அது தொலைவில் உள்ள ஒரு கோள் என்று பிறகு தெரிந்தது. பல காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அதற்கு அவர் யுரேனஸ் (Uranus) என்று பெயர் வைத்தார். இந்த சாதனை அவருக்கு ராயல் சங்க உறுப்பினர் பதவி, நைட்ஹுட் பட்டத்தைத் தேடிக் கொடுத்தது. தொடர்ந்து நடந்த ஆய்வுகள் இந்தக் கோள் தனித்துவமானது என்பதை எடுத்துக் காட்டியது.
வில்லியம் ஹெர்ஷல் இந்த கோளை ஆராய்ந்ததன் 200ம் ஆண்டு நிறைவின் நினைவாக அவரது இல்லத்தில் நினைவுக் கல் நாட்டும் திட்டம் உள்ளது.
ஹெர்ஷல் ஆகஸ்ட் 25 1822ல் காலமானார். அவரது நினைவாக அவருடைய இல்லத்தில் உள்ள கண்காட்சியில் அவர் யுரேனஸை உற்றுநோக்கி எழுதிய குறிப்புப் புத்தகம் மற்றும் வால் நட்சத்திரங்களை கண்டுபிடித்தவரும் விஞ்ஞானி என்ற நிலையில் சம்பளம் பெற்ற முதல் பெண்மணியுமான அவரது சகோதரி காரலைன் (Caroline) எழுதிய விண்மீன்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.
அகச்சிவப்புக் கதிர்களின் முதல் கண்டுபிடிப்பு, செவ்வாய் கோளின் துருவ முனைகள் பற்றிய ஆய்வு, முன்பு உற்றுநோக்கப்படாத சனியின் நிலவுகள் பற்றிய ஆய்வுகள் போன்றவை ஹெர்ஷலின் சாதனைகளாகப் போற்றப்படுகின்றன. என்றாலும் யுரேனஸை கண்டுபிடித்ததே அவரது மிக பெரிய சாதனை என்று கருதப்படுகிறது.
வில்லியம் ஹெர்ஷல், அவரை ஆதரித்த மூன்றாவது ஜார்ஜ் மன்னரிருக்கு நன்றி சொல்லும் விதம் ஜியார்ஜியன் விண்மீன் அல்லது ஜியார்ஜியன் சிடஸ் (Georgium Sidus) என்று பொருள் தரும் பெயரை யுரேனஸ் கோளிற்கு வைக்க முதலில் விரும்பினார். என்றாலும் இப்பெயர் இங்கிலாந்திற்கு வெளியில் ஒப்புக் கொள்ளப்படவில்லை. அதனால் யுரேனஸ் என்ற பெயர் ஏற்கப்பட்டது. இந்தப் பெயர் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவில்லை.
நம் சூரிய குடும்பத்தின் மற்ற கோள்கள் நுனி முதல் அடிவரை உள்ள அச்சில் சுழலும்போது யுரேனஸ் அதன் பக்கவாட்டில் சுழல்கிறது. சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை என்றாலும் இது சூரியக் குடும்பத்தின் மிகக் குளிர்ச்சியான கோள். அதிதீவிர பருவநிலைகளைக் கொண்டது. இதன் ஒவ்வொரு துருவமும் முழு இருளில் பல காலங்களுக்கு மூழ்கும் முன் பல பத்தாண்டு கால சூரிய ஒளியில் தொடர்ந்து வெந்து உருகுகிறது.
அங்கு துருவப்பகுதிக்கு அருகில் சூரியன் மறையும்போது பிறக்கும் ஒரு மனிதன் இலையுதிர்கால இருளில் காணாமல் போவார். முதல் வசந்தகால சூரியனைக் காண அவர் 42 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்தக் கோளே ரோமானியக் கடவுளின் பெயருக்கு பதில் கிரேக்கக் கடவுளின் பெயரைப் பெற்ற முதல் கோள். கிரேக்க புராணத்தில் இது ஜூஸ் (Zeus) என்ற கடவுளுடைய தாத்தா பெயரைக் குறிக்கிறது. இது போல பல தனித்துவமான சிறப்புகள் இருந்தாலும் இதை ஆராய வியப்பூட்டும் வகையில் மிகக் குறைந்த முயற்சிகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது வரை ஒரே ஒரு ஆய்வுக்கலன் மட்டுமே யுரேனஸை ஆராயச் சென்றுள்ளது. 1986 வாயேஜர் 2 விண்கலன் சூரிய மண்டலத்தை ஆராயும் சுற்றுலாவின்போது இதைக் கடந்து சென்றது. அப்போது இது பொருண்மை நிறைந்த, தனக்கென்று சிறப்புப் பண்புகள் எதுவுமற்ற, ஹைடிரஜன், ஹீலியம், மீத்தேன் வாயுக்கள் உள்ள வளிமண்டலம், செழுமையான நிலவுகள் அடங்கிய, காந்தப்புலம் அதிகமாக காணப்படும் வெளிர் நீல உலகைக் கொண்டது என்று தெரியவந்தது.
அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி வரும் பத்தாண்டில் யுரேனஸை ஆராய விண்கலனை அனுப்ப நாசாவிற்குப் பரிந்துரைத்துள்ளது. இந்த அகாடமி ஒவ்வொரு பத்தாண்டிலும் அமெரிக்கா முன்னுரிமை கொடுக்க வேண்டிய திட்டங்களைப் பரிந்துரை செய்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் வெளியிடப்படும் ஆய்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விவரங்களுடன் இருக்கும். “இது மகிழ்ச்சி தரும் செய்தி. யுரேனஸ் போல சூரியக் குடும்பத்தில் மிகக் குறைவாக அறியப்பட்டவை மிக சிலது மட்டுமே. வியாழன், சனி, மிகத் தொலைவில் உள்ள ப்ளூட்டோ (Pluto) போன்றவற்றுடன் உட்பகுதியில் உள்ள கோள்களை ஆராய பல மின்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது போன்ற வானியல் வேறுபாடுகளே நம் சூரிய மண்டலத்தை உருவாக்கியுள்ளது” என்று லெஸ்ட்டர் (Leicester) பல்கலைக்கழக கோளியல் விஞ்ஞானி லீஃப் ஃப்ளெட்சர் (Prof Leigh Fletcher) கூறுகிறார்.
விண்வெளியியலாளர்கள் சூரியக் கோள்களை மூன்று அடிப்படைப் பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். பாறைகள் நிறைந்த உட்பகுதிக் கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் மற்றும் வெளியில் ராட்சச வாயுக் கோள்களான வியாழன், சனி ஆகியவை ஒரு பிரிவு. பெரும்பாலான பிரம்மாண்ட உலகங்கள் ஹைடிரஜன் மற்றும் ஹீலியத்தால் ஆக்கப்பட்டுள்ளன. சூரிய மண்டலத்தின் விளிம்பில் யுரேனஸ், நெப்டியூன் (Neptune) ஆகியவை உள்ளன. இவை இரண்டும் சூரியனிடம் இருந்து முறையே வெகுதொலைவில் அமைந்துள்ள இரண்டாவது மற்றும் முதலாவது கோள்கள்.
வியாழன், சனிக்கோள்கள் போல யுரேனஸ் மற்றும் நெப்டியூன் பெரியவை இல்லை என்றாலும் அவை பனிப்பொருட்களால் ஆக்கப்பட்டவை. அதனால் அவை பனிக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோள்களின் வளிமண்டலத்திலும் உட்பகுதியிலும் மிதமிஞ்சிய மீத்தேன், நீர் மற்றும் பனிக்கட்டியை உருவாக்க உதவும் மூலக்கூறுகள் உள்ளன. இது தவிர 2006ல் கோள் என்ற நிலையில் இருந்து மாற்றப்பட்டு குள்ளக் கோள் என்று பன்னாட்டு வானியல் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ப்ளூட்டோ போன்றவை இதில் அடங்கியுள்ளன.
இந்தப் பண்புகள் சுவாரசியமானவை என்றாலும் கவனத்தைக் கவரும் வகையில் புதிரானவை அல்ல. இவை போல மற்ற கோள்களையும் சூரிய மண்டலத்திற்கு வெளியில் விண்மீன்கள் சுற்றி வருகின்றன. “இயற்கை இந்த வடிவமைப்பில் கோள்களை உருவாக்க விரும்புகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் ராட்சச பனிக்கோள்கள் ஏன் அதிகமாக உள்ளன என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று சாந்தா குரூஸ் (Santa Cruz) கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனதன் ஃபாட்னி (Jonathan Fortney) கூறுகிறார்.
யுரேனஸ் சூரியனிடம் இருந்து 1.8 பில்லியன் மைல்/2.8 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றுகிறது. நெப்டியூன் 2.8 பில்லியன் மைல்/4.5 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுகிறது. இதில் சூரியனுக்கு அருகில் இருப்பதால் யுரேனஸ் மீது விஞ்ஞானிகளின் கவனம் திரும்பியுள்ளது. வழியில் இருக்கும் வியாழன் கோளை தாழ்வாகச் சுற்றிவந்து அதன் மூலம் கிடைக்கும் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி யுரேனஸ் கோளுக்கு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிர்களுக்கு விடை கிடைக்குமா?
இதனால் ஆய்வுக்கலன் அதிக கருவிகள், எரிபொருளை எடுத்துச் செல்ல முடியும். இது நீண்ட கால ஆய்வுக்கு உதவும். வியாழன் கோளுக்குச் செல்ல 2031 அல்லது 2032 ஆகிய ஆண்டுகள் சிறந்தது என்று வானியல் தரவுகள் கூறுகின்றன. இத்திட்டம் ஐரோப்பிய விண்வெளி முகமை போன்ற மற்ற சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். கோளை ஆராயும்போது அதன் நிலவுகளுக்கு அருகில் சென்று அவற்றையும் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகள் இதன் மிதமிஞ்சிய குளிர்ச்சி, இதன் பக்கவாட்டு சுழற்சி, மற்ற கோள்களுக்கு மைய அச்சு துருவப்பகுதிகளில் உள்ளபோது இதன் அச்சு பக்கவாட்டில் இருப்பதற்கு காரணம் போன்ற பல புதிர்களுக்கு விடை தரும் என்று நம்பப்படுகிறது.
“தோன்றியது முதல் இதன் உட்பகுதியில் வெப்பம் இல்லை. இதுவே இதை சூரிய மண்டலத்தில் இதை மிகக் குளிர்ந்த கோளாக மாற்றுகிறது. நெப்டியூன் சூரியனிடம் இருந்து பெறும் வெப்பத்தை விட குறைவான அளவு வெப்பத்தை உமிழ்கிறது. ஆனால் யுரேனஸில் இவ்வாறு நிகழ்வதில்லை. இதற்குக் காரணம் பிரம்மாண்ட விண்கல் கடந்த காலத்தில் மோதியதாக இருக்கலாம். இதனால் இதன் வெப்பம் முழுவதும் வெளித்தள்ளப் பட்டிருக்கலாம்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இயற்பியலாளர் பேராசிரியர் பாட்ரிக் எர்வின் (Prof Patrick Irwin) கூறுகிறார்.
சூரிய மண்டலத்தின் புதிர் நிறைந்த கோளாகக் கருதப்படும் யுரேனஸை ஆராயும் இத்திட்டம் விண்வெளி ஆய்வுகளில் ஒரு புதிய சரித்திரம் படைக்கும் என்று நம்பப்படுகிறது.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2022/jul/16/uranus-mission-space-exploration-nasa?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்