விண்வெளியில் மனிதர்கள் சுற்றிப்பார்க்க பூகோளத்திற்கு அருகில் இருக்கும் ஒரே இடமென்றால் அது நிலவு மட்டுமே. 1960 காலகட்டத்திற்குப் பிறகு சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் நிலவில் காலடி வைத்து காலனி அமைக்க முயன்று கொண்டிருந்தனர். அமெரிக்கா அப்பல்லோ திட்டத்தின் பெயரில் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தது, சோவியத் ஒன்றியம் லூனா (Luna - என்பதற்கு லத்தீன் மொழியில் நிலவு என்று பொருள்) என்ற திட்டத்தின் பெயரில் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தது. இவ்விரண்டு வல்லரசு நாடுகளுக்கும் நிலவில் யார் முதலில் காலடி வைப்பது என்ற புவிசார் அரசியல் போட்டி அப்போது நிலவியது. ஒருவகையில் 'நான் தான் முதலில் செல்வேன்' என்ற மேன்மை (prestige) மிகுந்த போட்டியும் அவர்களின் பனிப்போருக்கு நடுவில் சூடுபிடிக்க நடந்தது.அப்போட்டியின் விளைவாக மனிதன் வடிவமைத்த கருவி (Probe) ஒன்று 1959 -ல் நிலவில் தரை தொட்டு இறங்கியது, அதனை முதலில் செய்து காட்டியது அன்றைய சோவியத் ஒன்றியம்.
இதுவரையில் அமெரிக்க விண்வெளி அறிஞர்கள் மட்டுமே நிலவில் காலடி வைத்திருக்கிறார்கள். 1969ல் முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தார் அவரைத் தொடர்ந்து Buzz Aldrin இறங்கினார், Michael Collins என்பவர் கட்டுப்பாட்டு பெட்டகத்தின் உள்ளே இருந்தார். அங்கே அவர்கள் புகைப்படங்கள் எடுத்து அமெரிக்க கொடியை நட்டு இருக்கிறார்கள்.
"We choose to go to the Moon" மிகவும் புகழ்பெற்ற இந்த சொற்றொடரை கூறினார் அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி. உலகெங்கும் 650 மில்லியன் மக்கள் நிலவில் இறங்கிய காட்சியை தொலைக்காட்சியில் கண்டு களித்தனர்.
ஆனால், அமெரிக்கா அறிஞர்கள் நிலவில் தரையிறங்கிய காட்சிகளை ரஷ்யா நம்ப மறுக்கிறது என்பது வேறு விடயம். ஹாலிவுட்டில் ஏதோ செட் போட்டு படம் எடுப்பது போல எடுத்து விட்டார்கள் என்ற நம்பிக்கை ரஷ்யா மக்களிடையே இருக்கிறது.
இன்றளவும் சில அமெரிக்க மக்கள் கூட இதனை நம்ப மறுக்கிறார்கள். காற்று இல்லாத ஓரிடத்தில் எப்படி கொடி பறக்க முடியும், நிலவில் அவர்கள் எடுத்த புகைப்படத்தில் ஒரு விண்மீன் கூட ஏன் தெரியவில்லை? என்பது சிலரது கேள்விகளாக இன்றும் உள்ளது. நிலவில் எடுத்த புகைப்படத்தில் அமெரிக்க கொடி காற்றில் அசைவது போல எடுக்கப்பட்டிருக்கும். (உண்மை சரிபார்ப்பு தகவல்கள் - BBC/ conspiracy theories.)
நிலவை முதலில் தொட்டது ஆம்ஸ்ட்ராங் இல்லை என்று நம் தமிழ் கவிஞர்கள் கூட வேறு விதத்தில் நம்ப மறுத்தார்கள்.
"சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்டராங்கா?
சத்தியமாய் தொட்டது யார்
நான் தானே!"
என்று கதாநாயகியை நிலவாக கற்பனை செய்து கதாநாயகன் நிலவைத் தொடுவது போல் சத்தியம் செய்து பாடல் வரிகள் எழுதினார் கவிப்பேரரசு.
நிலாவில் மனிதன் காலடி வைப்பதற்கு முன் நிலாவில் ஆயா வடை சுட்ட புனைவு கதைகள் நம்மூரில் இருந்தது.
நடிகர் விவேக் வேடிக்கையாக காதல் கிசு கிசு திரைப்படத்தில் இவ்வாறு பேசுவார்.
"வெளிநாட்டுக்காரன் நிலாவுல கால் வச்ச நேரத்துல, ஒரு ஆயா நிலாவுல கால் நீட்டி உக்கார்ந்து வடை சுட்டுக்கிட்டு இருக்கு ன்னு சொல்லி கொடுத்து தான் எங்களுக்கு சோறு ஊட்டி விட்டாங்க.
அமெரிக்கா கார்ன் கம்யூட்டர் கண்டுபிடிச்ச அதே நேரத்தில நாங்க நோட்புக்குல மயில் இறக்கைய வச்சி அது குட்டி போடுமா ன்னு பாத்துக்கிட்டு இருந்தோம் ஐயா"
அன்றைய 80, 90 -களின் காலகட்டம் நமக்கு அப்படி தான் இருந்தது என்பது ஆணித்தரமான உண்மை.
உலகெங்கும் நாடு பிடிக்கும் போட்டியில் ஆதிக்கத்தை சொலுத்திய அக்மார்க் ஆண்டப் பரம்பரை ஐரோப்பிய நாடுகள் தங்களின் காலனியை தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா என் அனைத்து கண்டங்களிலும் விரிவு படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஏனோ நிலவில் மட்டும் ஓர் காலனியை ஏற்படுத்தும் போக்கு அவர்களுக்கு எடுபடவில்லை என்பது இன்றுவரை நமக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
கடைசியாக டிசம்பர் 14,1972 -ல் நிலவில் இருந்து மனிதர்கள் வெளியேறினார்கள். அதாவது அமெரிக்காவின் அப்பல்லோ-17 விண்கல வானூர்தி நிலவில் இருந்து பூகோளத்திற்கு திரும்பிது. இதற்கு பிறகு நிலவுக்கு மனிதர்கள் செல்லவில்லை.
எழுபதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகள் வரை மாறி மாறி நிலவுக்கு விண்கலம் செலுத்திய அமெரிக்காவும், ரஷ்யாவும் சற்றே ஓய்ந்திருந்தார்கள். இவர்களைத் தவிர மூன்றாவதாக உலகில் எந்த நாடும் மனிதர்கள் உருவாக்கிய கருவிகளை நிலவுக்கு ஆய்வுகள் செய்ய அனுப்பவில்லை.
21ஆம் நூற்றாண்டில் வேகமெடுத்த நிலா தொடும் போட்டி;
விண்வெளித் துறையில் தனக்கென்று தனியே ஆய்வுகளைச் செய்ய விண்வெளித் துறையை உருவாக்கிய சீனா (China Academy Of Space Technology சுருக்கமாக CAST.) யாருமே எதிர்பார்க்காத வகையில் நிலவைத் தொடும் திட்டங்களை தொடங்கி இருந்தது.
அக்டோபர் 24, 2007 -ல் சீனா ஏவிய Chang'e-1 probe என்ற விண்கல கருவி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பறந்து புகைப்படங்கள் எடுத்தது.
சீன விண்வெளி அறிஞர்கள் அனுப்பிய சீன பாடல்களை அங்கு ஒலிக்க விட்டது. Chang'e 1 probe என்பது நிலவில் தரையிறங்கும் திட்டம் கிடையாது. இரண்டு மாதங்கள் கழித்து அந்த கருவி நிலவின் மேற்பரப்பில் முட்டி விழுந்தது. அந்நேரத்தில் சீனாவின் அம்முயற்சி மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்போது அத்திட்டத்தின் மதிப்பு 180 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
சீனா ஒருபுறம் நிலவின் ஆய்வுகளை செய்ய தொடங்கிய நேரத்தில் இந்தியாவும் நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இஸ்ரோ சந்திராயன் (Chandrayaan-1) திட்டத்தை தீட்டியது. (சந்திராயன் என்பது சமஸ்கிருத சொல்)
22, அக்டோபர் 2008 -ல் இந்தியா ஏவிய விண்கலம் நிலவில் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. பல இந்தியர்கள் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். சந்திராயன் திட்டம் உலகெங்கும் பேசு பொருளாக மாறியது. சந்திராயன்-1 திட்டத்தின் இயக்குனராக தமிழ் வழியில் பயின்ற டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இருந்தார் என்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தது.
இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் '21ஆம் நூற்றாண்டின் விண்வெளி தொடக்கம்' என்றே கருதினார்கள். சந்திராயன்-1 திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 85 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. இதே ஆண்டில் இந்தியா ஏவிய விண்கலம் ஒன்று 10 செயற்கை கோள்களை ஏவிச் சென்றது. அதற்கு அடுத்த ஆண்டில் இந்தியாவில் விண்வெளி திட்டத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிதி ஒதுக்கியது இந்திய ஒன்றிய அரசு.
இந்தியாவில் மக்கள் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நிலையில் உள்ளார்கள், மனித கழிவுகள மனிதர்களே அகற்றும் நிலை உள்ள நாட்டில் அதற்காக இயந்திரங்கள் கண்டுபிடிக்கவில்லை. கழிவுநீர் வடிகால்களை தூய்மை செய்ய இன்றளவும் மனிதர்கள் உள்ளே இறங்கி வேலை செய்யும் நிலை இருக்கிறது. ஆனால், விண்வெளித் துறைக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிட வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
சந்திராயன்-1 விண்கல வானூர்தியில் (Spacecraft) இந்திய அறிஞர்கள் செலுத்திய கருவிகள் மட்டும் பயணம் செல்லவில்லை. அதில் நாசாவின் அளவிடும் கருவியான Moon Mineralogy Mapper உட்பட 11 அறிவியல் கருவிகளை ஏந்திச் சென்றது. இக் கருவிகள் எடுத்த புகைப்படங்கள், மற்றும் நிலவின் மேற்பரப்பை அளவிட்ட மாதிரிகளை ஆய்வு செய்த அறிஞர்கள் நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் (Hydroxyl Molecules) இருக்கிறது என்பதை உறுதி செய்தார்கள். அதாவது நிலவின் மேற்பரப்பில் மிகவும் நுண்ணிய அளவில் தண்ணீராக இல்லாமல் மூலக்கூறு படிவங்களாக உள்ளது.
இதற்கு முன்னர் அப்பல்லோ மற்றும் லூனா திட்டங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நிலா ஒரு வறண்ட நிலப்பரப்பு என்றே கருதினார்கள். அந்த ஆய்வுகளின் போக்கை மாற்றிக் காட்டியது சந்திராயன் திட்டம். சில மாதங்கள் கழித்து அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சீனாவின் முயற்சி நீண்டு கொண்டே போனது. Chang'e என்ற திட்டத்தின் பெயரில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. டிசம்பர் 14, 2013ல் Chang'e 3 probe நிலாவில் மிகவும் மென்மையாக (Soft Landing) தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. கிட்டத்தட்ட இது 40 ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் சாதனையை முறியடிக்கப்பட்டது.
சந்திராயன்-1 திட்டத்தைத் தொடர்ந்து அதன் அடுத்தகட்டமாக நிலவில் தரையிறங்கும் திட்டமிடலாக Orbiter, Lander and Rover போன்ற இயந்திர ஊர்தி கருவிகளுடன் சந்திராயன்-2 திட்டம் முழு வீச்சில் நடைபெற்றது.
இறுதியாக சந்திராயன்-2 நிலவில் கால் பதிக்கும் திட்டமாக 22 சூலை 2019 -ல் விண்ணில் ஏவப்பட்டது. அந்த நேரத்தில் இந்தியாவில் அரசியல் நிலையும் மாறி இருந்தது. சந்திராயன்-1 ன் மனநிலையை விட சந்திராயன்-2 க்கு சமூக வலைத்தளங்களிலும் வரவேற்பு உயர்வாக இருந்தது. சந்திராயன்-2 விண்வெளியில் ஏவப்பட ஒரு வாரத்தில் அதன் பயணத்தை நிறுத்தி இருந்தது இஸ்ரோ. சரியாக ஒருமாத கால பயணத்திற்கு பிறகு செப்டம்பர் 7ஆம் நாளில் நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து மெதுவாக நிலவில் இறக்குவது என பரபரப்பான நிலையில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாடு நிலையத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள் பொறியாளர்கள்.
இந்த பரபரப்புகளுக்கு நடுவே இந்தியாவின் நிலவைத் தொடும் காட்சிகளை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூர் கட்டுப்பாடு அறையின் பார்வையாளர்கள் பகுதியில் அவரது புகைப்பட கலைஞர்கள் புடைசூழ நேரடியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.
நிலவின் மேற்பரப்பை தொடுவதற்கு வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில் Lander தனது கட்டுப்பாட்டை இழந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஏதோ ஒன்றை இழந்ததை போன்ற மனநிலையை அடைந்தது. இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கண்ணீர் விட்டு சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்தது என்றார். அவருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அன்றைய நாளில் சந்திராயன்-2 சரியாக நிலவில் தரையிறங்கி இருந்தால் அது நிலவில் இறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை அடைந்திருக்கும்.
நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது. நிலவுக்கு பூகோளம் போல் வளிமண்டல அழுத்தம் கிடையாது. ஆதலால் அங்கே காற்றழுத்த வான்குடை மிதவை (parachute) மூலம் எதையும் இறக்கிவிட முடியாது. ஆதலால் நிலவில் தரையிறங்கும் ஊர்தியை மிகவும் குறைந்த வேகத்தில் மெதுவாக இயக்க வேண்டும் இதனை ஆங்கிலத்தில் Powered descent அழைக்கபடுகிறது. மேலிருந்து கிடைமட்டமாக ஊர்தி இயக்கப்படுகிறது.
விக்ரம் லேண்டர் எந்த இடத்தில் விழுந்து நொறுக்கியது என்பது குறித்த தகவல் அப்போது யாருக்கும் தெரியாது. இரண்டு மாதங்கள் கழித்து நம் சென்னைய சேர்ந்த IT guy சண்முக சுப்பிரமணியன் என்பவர் நாசாவின் நிலவு புகைப்படங்களை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் விக்ரம் லேண்டர் கிடக்கிறது என்றார். அதனை நாசாவும் உறுதி செய்தது.
சந்திராயன்-2 திட்டத்தின் செலவு 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. அமெரிக்காவின் பார்வையில் இந்த செலவு என்பது மிகவும் குறைந்த செலவு. ஹாலிவுட்டில் ஒரு விண்வெளித் திரைப்படம் எடுக்கவே 140 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவு ஆகும்.
சந்திராயன்-2 தோல்வியில் இருந்து பல தகவல்களை சேகரித்து கொண்டு உடனடியாக சந்திராயன்-3 திட்டத்தை தொடங்கிவிட்டது இந்தியா.
நிலவில் மனிதர்களை மீண்டும் தரையிறங்க வைக்கும் நாசாவின் புதிய Artemis திட்டம்;
விண்வெளியில் உள்ள பிற கோள்களில் உயிர் வாழ வழி இருக்கிறதா, அண்டவெளியில் வேறெங்காவது பூகோளம் போல அமைப்பு உள்ளதா என்ற சிந்தனை விண்வெளி ஆய்வில் பங்கெடுக்கும் நாடுகளுக்கு இல்லாமல் இருந்ததில்லை.
சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் நிலவுக்கு மீண்டும் மீண்டும் விண்கலம் ஏவ தொடங்கிய காலத்தில் அமெரிக்காவும் தனது பழைய திட்டத்தை தூசி தட்டி புதுப்பிக்க தொடங்கியது. அப்பல்லோ திட்டம் நிறைவடைந்து 50 ஆண்டுகள் கழித்து நிலவில் நகரும் ஊர்திகள் மற்றும் மனிதர்களை மீண்டும் அழைத்துச் செல்லும் திட்டத்தை தீட்டியது.
21ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நிலவுத் திட்டத்திற்கு Artemis என்ற புதிய பெயரை வைத்தது நாசா. Artemis என்பது கிரேக்க புராணத்தில் வேட்டையாடும் ஓர் பெண் கடவுளின் பெயர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. புதிதாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் செயல்பட தொடங்கியது நாசா. எடுத்த எடுப்பிலேயே நிலவில் மனிதர்களை கால் பதிக்கும் திட்டம் தற்போது இல்லை. Artemis I, II, III, IV என நான்கு கட்டங்களாக செய்து முடிக்க தீர்மானிக்கப்பட்டது.
முதலாவதாக Artemis-I திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவிட்டு மீண்டும் பூகோளம் திரும்பிவிடும். அது ஆளில்லா விண்கல வானூர்தி சோதனை திட்டம் என்று அழைக்கப்படும்.
பிறகு இரண்டாவதாக Artemis-II திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule உள்ளே விண்வெளி அறிஞர்கள் அமர்ந்து பயணம் செய்வார்கள் ஆனால், நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இது நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிவிட்டு மீண்டும் பூகோளம் திரும்பிவிடும் என்பது தான் திட்டம். இவ்விரண்டாவது திட்டம் 2025ல் ஏவப்படுவதாக இருந்தது ஆனால், தற்போது அது 2026 -க்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக Artemis -III திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule -ல் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி அறிஞர்கள் SpaceX வடிவமைத்து கொடுக்கும் 'Starship Human Landing System' மூலமாக நிலவின் தென் துருவத்தில் காலடி வைப்பார்கள் (Moonwalk) மீண்டும் அதே Starship Human Landing System மூலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிற்கும் Orion Spacecraft Capsule திருப்பி விடுவார்கள். பிறகு அங்கிருந்து பூகோளப் பயணம் மேற்கொள்ளப்படும்.
நான்காவதாக ஏவப்படும் Artemis-IV திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft ல் செல்லும் அறிஞர்கள் சில காலம் நிலவில் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொள்வார்கள். அதாவது பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தற்போது நடப்பது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்படும்.
Artemis திட்டத்தில் நிலவுக்குச் செல்ல நான்கு விண்வெளி அறிஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறது நாசா.
Artemis-II Commander Reid Wiseman
Artemis-II Pilot Victor Glover
Artemis-II Missions Specialist Christina Koch and Canada's Jeremy Hanson.
அந் நால்வரில் ஒருவர் பெண், ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்காக Space Launch System - SLS என்ற மிகப்பெரிய திறன்மிக்க விண்கலத்தை (Rocket) வடிவமைத்தது நாசா. இதன் மூலம் நிலவுக்கு மட்டும் இல்லாமல் ஆழ்ந்த விண்வெளி ஆய்வுகளுக்கும் (Deep Space Exploration) இதனை பயன்படுத்த முடிவு செய்தது.
SLS (Space Launch System) திறன் வாய்ந்த விண்கலத்தின் உற்பத்திக்கு பல தனியார் நிறுவனங்கள் பங்கெடுத்தன. மொத்தம் 1,100 தனியார் நிறுவனங்கள் (Rocket Assembly and Configuration) இதற்காக வேலை செய்தன. "ஆயுர்வேத மூலிகையாலே உள்நாட்டிலே தயாரானது" என்ற விளம்பர பாடல் வரிகளுக்கு ஏற்ப நாசா பெருமை கொண்டது.
நாசாவின் Space Launch System கீழ்க்கண்டவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.
Core Stage
RS-25 Engines
Boosters
Integrated Spacecraft/Payload Element
Exploration Upper Stage
The SLS Team
இதன் முதன்மை பாகங்கள Core Stage -ஐ போயிங் நிறுவனம் செய்து கொடுக்கிறது. இதில் 4 விண்கல உந்துவிசை இயந்திரங்களை (RS-25 Engine) L3 Harris Technologies நிறுவனம் வடிவமைத்தது. இவ்வகை இயந்திரங்கள் தரையில் இருந்து ஏவப்பட்ட எட்டாவது நிமிடத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சென்றுவிடும்.
Orion Spacecraft Capsule -ஐ வடிவமைத்து வழங்குவது Lockheed Martin நிறுவனம் ஆகும். (அமெரிக்காவின் பிரபல போர் வானூர்திகளான F-35 -ஐ உற்பத்தி செய்யும் நிறுவனம்)
Artemis -I திட்டத்தின் அனைத்து வேலைப்பாடுகளும் முடித்தப் பின், பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 2022 செப்டம்பர் மாதத்தில் Artemis -I விண்ணில் ஏவப்பட நாட்குறிப்பிடப்படது.
கடைசி நிமிடத்தில் திரவ நைட்ரஜன் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டது அதனால் விண்கல ஏவுதல் தள்ளிப் போனது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு செல்வதால் இதனை மிகவும் நேர்த்தியாக செயல்படுத்த வேண்டும் என்பதில் நாசா உறுதியாக இருந்தது.
நவம்பர் 16, 2022 அதிகாலை 1:47 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது Artemis-I. விண்வெளிப் பயணத்தை தொடங்கிய ஆறாவது நாளில் Orion Spacecraft Capsule ஆனது நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பல கோணங்களில் நிலவை புகைப்படங்கள் எடுத்து நாசாவின் கட்டுப்பாடு அறைக்கு அனுப்பியது. விண்கல வானூர்தி செல்ல வேண்டிய உச்சகட்ட தொலைவு 268,563 மைல்கள் வரை சென்றது.
நிலவின் சுற்றுப்பாதையில் ஏதேனும் விண்வெளி கதிர்வீச்சு இருக்கிறதா என்பதை அளவீடு செய்ய 34 Radiation Sensor -களை உள்ளே வைத்திருந்தார்கள்.
25 நாட்கள் நிலவின் அருகில் சுற்றிக்கொண்டிருந்த Orion Spacecraft -ஐ பூகோளம் திரும்ப டிசம்பர் 5ஆம் நாள் கட்டளை பெறப்பட்டது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் டிசம்பர் 11 நாளில் பாஜா கலிபோர்னியா பசுபிக் பெருங்கடலில் (Splashdown) விழுந்து இறங்கியது.
Artemis -I திட்டத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருக்கிறது நாசா.
(தரவுகள்; https://www.nasa.gov/mission/artemis-i/)
நிலவில் வெற்றிவாகை சூடிய சந்திராயன்-3
சந்திராயன்-2 தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்திராயன்-3 திட்டத்தின் நிலவு பயணம் சூலை 14, 2023ல் குறிக்கப்பட்டது. இஸ்ரோ விண்கலம் ஏறுவதற்கு முன்னர் இஸ்ரோ அறிஞர்கள் ராகு கேது பெயர்ச்சி காலம் கூட பார்த்தார்கள் என்ற செய்தி கூட உலவியது.
விண்ணில் ஏவப்பட்ட நாற்பதாவது நாளில் ஆகஸ்ட் 23, 2023ல் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மிகவும் மென்மையாக தரையிறங்கியது.
சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் சில கருவிகளையும் ஏந்திச் சென்றது. நிலவின் வெப்பநிலையை அளவிடும் Chandra Surface Thermophysical Experiment sensor.
நிலவு அதிர்வுகளை கண்டறியும் கருவியான Instrument for Lunar Seismic Activity.
நிலவில் உள்ள காலநிலையை அளவிட Langmuir Probe
மற்றும் நாசாவின் விண்வெளி கருவியான Laser Retroreflector Array அதனுடன் சென்றது.
இந்தியாவின் சாதனை உலகெங்கும் பேசுபொருளாக மாறியது. நிலவில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை சேர்த்தது இந்தியா.
சந்திராயன்-2 திட்டத்தை விட சந்திராயன்-3 திட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் மூர்க்கத்தனமான ஆதரவு கூடியிருந்தது. சந்திராயன்-2ஐ நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி சந்திராயன்-3 நிலவைவ் தொட்ட நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.
"India is on the Moon" என்று பெருமையுடன் கூறினார் பிரதமர் மோடி. மாநாடு முடிந்த கையோடு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி நேரடியாக இஸ்ரோ தலைமையகம் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் இஸ்ரோவின் வெற்றிக்காக "Thank You Modi Ji" என்று பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் அவரது ஆதரவாளர்கள்.
சந்திராயன்-3 திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 80 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது.
கவிஞர்கள் தங்களின் கற்பனையில் பலவகையான கவிதைகள்/பாடல் வரிகள் நிலவைப் பற்றி எழுதலாம். ஆனால் மனிதர்கள் அங்கு வாழவே தகுதியற்ற இடம் என்பது விண்வெளி ஆய்வுகள் செய்யும் நாடுகளுக்கு தெரியும். அங்கு பெரும் பாறைகளும் பள்ளங்களும் தான் உள்ளன. சூரியன் முழுமையாக தெரியும் நேரத்தில் நிலாவின் பகல் பொழுதின் வெப்பநிலை 127°C எட்டும். இரவு வேளையில் அங்கு வெப்பநிலை -173C° எட்டும். ஆனாலும் அங்கு என்ன இருக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து செய்வதன் மூலமே அது இவ்வுலகிற்கு தெரிய வரும்.
வணிக அடிப்படையில் பார்த்தால் நிலவுக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்வது தேவையற்ற பெரும் செலவு என்றே பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர். இன்னொரு வகையில் பார்த்தால் நிலவில் மனிதர்கள் அனுப்பிய விண்வெளி கலன்கள் ஆங்காங்கே உடைந்து நொறுக்கி (debris) குப்பை போல் கிடக்கின்றது.
தங்கள் நாட்டின் வளர்ச்சியை உலகிற்கு வெளிக்காட்டும் புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதி தான், நிலாவுக்கு செல்லும் போட்டி விண்வெளியில் நடக்கிறது.
(References; Space.com, Wikipedia, NPR news, NASA, ISRO.)
தொடரும்.
- பாண்டி