திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், நொச்சிக்குளம் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம் கிராமம். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 480 க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன.

ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் உள்ளதால் அந்த வகையில் இக்கிராமம் பாலின சமத்துவ கிராமமாக உள்ளது.

egrl krishnapuramஇந்தியாவிலேயே சிறப்புமிக்க பகுதியாக இக்கிராமம் அமையக் காரணம் இப்பகுதி புவிக்காந்த மையத்தின் மிக அருகில் அமைந்துள்ளது.

1991 ஆம் வருடம் புவிக்காந்த ஆய்வு மையம் இங்கு தனது ஆய்வுகளை துவக்கியது. புவிக் காந்தப்புலத்தின் ஏற்ற இறக்கங்கள் ஆய்வுகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வு மையம் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தினைக் கொண்டது.

பூமியின் சுற்றுப்புறத்தின் அருகில் உள்ள மின்புலம் மற்றும் காந்தப் புலத்தை அளவீடு செய்து ஆய்வு செய்யும் சோதனைக் கருவிகள் கொண்டதாக இம்மையம் அமைந்துள்ளது.

நாம் வாழும் பூமியானது வட தென் துருவங்களைக் கொண்ட காந்தமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நமது பூமியின் காந்தப் புலமானது சூரியனிடமிருந்து வரும் தீங்கான கதிர் வீச்சுகளையும் சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் புயல்களையும் தடுத்து உயிர்கள் வாழ நமக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.

இயற்பியல் ஆய்வு முனைவர் பட்ட படிப்புக்கான ஆய்வுக்கான இடமாக புவிக்காந்த ஆய்வு மையத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினத்தின் போது. கல்லூரி பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கருத்தரங்கமும் இங்கு நடைபெறுகிறது.

புவிக் காந்த மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளதால் பூமியின் காந்தப்புலம் மற்றும் சுற்றுப்புறத்தின் பருவநிலை மாற்றங்கள் வானிலை தொடர்பான துல்லியமான ஆய்வுகளுக்கு ஏற்ற இடமாக கிருஷ்ணாபுரம் கிராமம் அமைந்துள்ளது. நவீன நூலகம் ஒன்றும் இந்த ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது.

புவிக்காந்தம் தொடர்புடைய ஆய்வுகள் மூலம் தரவுகளை மேம்படுத்தி தரவுகள் அனைத்தும் தலைமையிடமான நவி மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் மூலம் 1992-ல் இங்கு அதிகத் திறனுடைய மீடியம் அதிர்வெண் ரேடார் அமைப்பு நிறுவப்பட்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாம் அனைவரும் நமது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புவிக்காந்த ஆய்வு மையத்தினை பார்வையிட அழைத்துச் சென்றால் இந்திய அறிவியல் உலகின் அற்புதங்களை நேரில் காணலாம். கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறலாம்.

அறிவியல் உண்மைகளின் வழி நடக்க இதுபோன்ற ஆய்வு மையங்கள் நிச்சயம் வழிகாட்டும்.

- பவித்ரா பாலகணேஷ், மாதவன் குறிச்சி - 628206, திருச்செந்தூர் தாலுகா

Pin It