lightening rainமுதுபெரும் சங்கப்புலவர் ஒளவையாரால் எழுதப்பெற்று குறுந்தொகையில் 158வது பாடலாகத் தொகுக்கப்பட்ட பாடலின் முதல் அடியே மேற்கண்ட தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகை நூல் அழகிய இலக்கிய நயம் கொண்டது. புலவர் பெருமக்கள் பலர் தனித்தனியே பாடி இயற்றிய அகப்பொருள் செய்யுட்களைக் கொண்டு தொகுக்கப் பெற்றது.

காட்சிப் பொருளையும் கருத்துப் பொருளையும் ஒருங்கே அமைத்து ஒளவையார் இப்பாடலைப் பாடியுள்ளார். ஒரு பெருமழைக்கால இரவு நேரத்தில் அளாவளாவ வந்த தலைவனைக் கண்டு அஞ்சிய தலைவி, தலைவன் கேட்க மழையை நோக்கிப் பாடுவதாக இப்பாடலை ஒளவையார் அமைத்துள்ளார்.

“நெடுவரை மருங்கிற் பாம்புபட விடிக்கும்

கடுவிசை யுருமின் கழறுகுர லளைஇக்

காலொடு வந்த கமஞ்சூழ் மாமழை

ஆரளி யிலையே நீயே பேரிசை

இமயந் துளக்கும் பண்பினை

துணையில ரளியர் பெண்டிறிஃ

தலைவன் இடர் மிகுந்த காட்டினிடையே ஆறுகள் பலவற்றைக் கடந்து வருவதாலும் பெருமழைக் காலங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருகி ஆபத்து மிகும் என்பதாலும் விரைந்து மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அஃது தாமதமானால் இடர்மிகக் கொள்ள நேரிடும் என்றம் பொருள்பட இப்பாடல் அமைந்துள்ளது.

சங்க இலக்கியங்களில் இதுபோன்ற கருத்துக்கள் அமைந்த பல பாடல்கள் பல புலவர்களால் பாடப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். ஆனாலும் இந்த குறுந்தொகைப் பாடலில் ஒரு அருமையான உட்கருத்து மிக அழகாகப் பதியப்பட்டுள்ளது. இப்பாடலில் முதல் வரியை நீங்கள் படிக்கும் போது என்ன தோன்றுகிறது என்றால் மழைக்காலங்களில் இடியுடன் கூடிய பெருமழை பொழியும். அம்மழையின் இடியோசை கேட்டு பாம்புகள் இறந்துபடும் என்பதாகும். இக்குறுந்தொகை நூலைப் பதிப்பித்த டாக்டர். உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் பாடலுக்குப் பொருள் விளக்கம் கொடுக்கும்போது, “பாம்பு பட இடிக்கும்” - என்பதற்குப் பாம்புகள் இறந்து படும்படி இடி இடிக்கும் எனப்பொருள் கொள்கிறார். ஆனால் பாம்புகளுக்கு செவிப்பறை கிடையாது என்பதும் உணர்தலால் வருகின்ற அறிவினைக் கொண்டே பாம்புகள் அறிந்து நடந்து கொள்கின்றன எனவும் அறிவியல் நமக்கு உணர்த்துகிறது.

மழைக் காலங்களில் கனமழை காரணமாக மலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வெள்ள நீரானது அனைத்தையும் புரட்டி இழுத்துச் செல்லும்பொழுது கூட உயிர் பிழைக்க வேண்டி வெள்ள நீரில் மிதந்தபடி மற்ற உயிரினங்களைப் போலவே பாம்புகளும் தப்பிச்செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். பாடலில் கூறுவது போல மழைக்காலத்தில் பாம்புகள் இடியால் இறக்க நேரிட்டால் இந்நேரம் உலகத்தில் பாம்புகளே இல்லாமல் போயிருக்கும். அப்படியானால் இடியோசை கேட்ட பாம்பு இறப்பது எப்படி? சங்க காலப் புலவர்கள் இயற்கை நிகழ்வுகளைப் பதிவு செய்பவர்கள். செய்யுட்களில் பொய் புனைந்து எழுத மாட்டார்கள். அப்படி என்றால் அவ்வையின் இக்கருத்துக்கு என்னதான் பொருள்?

இருக்கு வேதம் இதற்கான விடையைக் கூறுகிறது. இருக்கு வேதகால ரிஷிகள் மழைக்கடவுளான இந்திரனைப் புகழ்ந்து பாடியிருக்கும் பல பாடல்களில் இப்பொருளுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கு வேதகால ரிஷிகள் பாடிய துதிப்பாடல்கள் பலவற்றில், “இந்திரன் தன் வச்சிராயுதத்தால் பாம்பைக் கொன்று நீரை விடுவித்தான்” என பாடியுள்ளனர். அஹி எனப்படும் தென்பாம்பு மழை நீரினைத் தேக்கி வைத்துக் கொண்டு விடுவிக்காமல் இருந்ததாகவும், இதனால் ஏற்படும் வறட்சியால், ஆறுகள், குளங்கள் வறண்டு விடுவதாகவும், கால்நடைகள், உயிரினங்கள் நீரின்றித் துயரடைகின்றன எனவும் ரிஷிகள் இந்திரனைத் துதித்துவேண்ட, அவன் (இந்திரன்) தன்னுடைய வச்சிராயுதத்தால் அஹியை (பாம்பு)க் கொன்று நீரை விடுவித்தான் என்று பாடல்கள் இயற்றியுள்ளனர்.

இருக்குவேதம் மண்டலம் - II, 52:வது பாடலில் ரிஷி சவ்ய ஆங்கிரசன் இந்திரனை நோக்கி இவ்வாறு கூறுகிறார்.

“இந்திரனே! நீரை தடைசெய்த, வானின் மேல் மண்டலத்திலே சயனித்திருந்த பரந்து விரிந்தவனான விருத்திரனுடைய தாடையை நீ உன் வஜ்ராயுதத்தால் வீழ்த்தினாய்!”

இருக்குவேதம் மண்டலம் - I, 32:3இல் “மகவான் தன் ஆயுதமான வஜ்ராயுதத்தை எடுத்தான். அதனால், அவன் மேகங்களின் நடுவில் தோன்றிய அகியைக் கொன்றான்.” என்று வருகிறது.

மேலும் ரிஷி ஹிரண்யஸ்தூபன் இந்திரனை நோக்கிக் கூறுவதாக இருக்கு வேதம் - I, 32: 12வது பாடலில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. இந்திரனும் விருத்திரனும் போர் செய்யுங்கால், விருத்திரனால் ஏவப்பட்ட மின்னலும், முழக்கமும் சொரியப்பட்ட மழையும் இடியேறும் அவனை - இந்திரனைத் துன்புறுத்தவில்லை.

அகி-என்பது பழங்காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு வகை மிருகம். இங்கு பாம்பு என்று பொருள் கொள்கிறார். ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிபித் அவர்கள். இந்திரன் கொன்றொழித்த அடிமைகளிலும் (தாசர்களிலும்) அசுரர்களிலும், விரித்திரனும் அகியும் இருவேறு உருவங்கள் என்றும் விரித்திரனும் அகியும் பின்னர் ஒன்றென மயங்கின எனவும் அறிஞர் குணா தன்னுடைய வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தென்கோளரைக்குள் (Southern Hemisphere) காணும் தென்பாம்பு (Hydra) என்னும் உடுவின் உருவகமே அகி என்னும் உடுக்கூட்டம். ஞாயிறு வேனில் முடங்கலில் இருக்கையில், மழைநாளில் தொடுவானத்திற்கு மேலே எழுகின்ற உடுக்கூட்டமே தென்பாம்பு. விரித்திரனும் அதே உடுவின் இன்னோர் உருவகமாகும். இதன் நடுப்பகுதிக்கு மேலே வேனில் முடங்கல் இருந்ததையும், சுருண்டு கிடந்த பாம்பையத்த அம் மீனின் ஊடே வான்நடுவரை சென்றதையுமே விரித்திரனைப் பற்றிய அக்கதை சுட்டுவதாக அறிஞர் குணா கூறுவார். சூன் 21 அன்று ஞாயிறு வேனில் முங்கலுக்கு வருகையில், தென்மேற்குப் பருவக்காற்றால் மழைக்காலம் ஆரம்பிக்கும். இத் தென்மேற்குப் பருவமழை சூன் 1 அன்று கேரளத்தில் தொடங்கும். இடியுடன் கூடிய மழைக்காலம் தொடங்கும் இக்கார்காலத்திலேயே பெருமழையின் போது இடியானது பாம்பு பட இடிக்கும் என ஒளவையார் தனது பாடலில் வைத்துப் பாடியுள்ளது விளங்கும். கார்காலம் தொடங்கி விட்டதை அறிந்து தலைவன் வரும் பாதை இடையூறு மிக்கதாக இருக்கும் என்று எண்ணி திருமணம் விரைவாக நடக்க வேண்டி தலைவி வருந்துவதாக பாடலை அமைத்துள்ளார்.

சங்க இலக்கியங்களில் மேற்கண்ட கருத்திலமைந்த பல ஒப்புமைப்பாடல் வரிகளை நாம் காணலாம்.

“நாகத் தணங்குடை யருத்தலை யுடலி வலனேர், பார்கலி நல்லேறு திருதரும்,”

“ஈர்ங்குரல ருமினார்கலி நல்லேறு, பாம்பு கவினளிக்கும்,”

“கேழ்கிள ருத்தி யரவுத்தலை பனிப்பப் படுமழை யுருமி னுரற்றுகுரல்”

என்ற நற்றிணை பாடல்களாலும் அறியலாம்.

மழையானது பாம்பை வருத்தி மலையைத் துளக்குதல் “யாங்குச் செங்வாங்கொறோழி யோங்குகழைக் காம்புடை விடரகஞ் சிலம்பப் பாம்புடன், றோங்குவரை மிளிர வாட்டி வீங்கு செலற் கடுங்குர லேற்றோடு கனைதுளி தலைஇப் பெயலானதே வானம்” என்று மழை பாம்பை வருத்தி மலையைத் துளக்கும் நிகழ்வு நற்றிணை 51-வது பாடல் வரிகளிலும் வருகிறது. இதேபோன்று பரிபாடல் முழுவதிலும் வானியல் கருத்துக்கள் நிரம்ப உள்ளதை நாம் படித்து உணரலாம்.

தொல் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த தமிழ் நான்மறையின் பெரும் பகுதி வான் இயற்பாடுகளையும் அரிய வான் நிகழ்வுகளையும் பற்றியதாயிருந்தது. நாள் மீன்களையும், கோள் மீன்களையும் அவற்றைப் பற்றிய கணக்குகளையும் தமிழ் மறை அறிந்த சங்கப் புலவர்கள் அக்கருத்துக்களையே உள்ளுறையாக வைத்துப் பாடல்கள் இயற்றியுள்ளனர். செய்யுளில் வரும் கடவுளர்கள் அனைவரும் வானியல் நிகழ்வைக் குறிக்கும் மறை பொருள் குறியீடுகள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். காலப்போக்கில் தமிழ் நான்மறையானது மக்களின் அறிவுத் தளத்திலிருந்து மறக்கடிக்கப்பட்டு காணாமலே போய்விட்டது. இருந்தாலும் தமிழ் மூல மறையின் வானியல் கருத்துக்கள் வேத நூல்களில் குறிப்பாக இருக்கு வேதத்தின் பல பாடல்களில் தொகுக்கப்பட்டுள்ளதை உணர்ந்து அதனை மீட்டெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

துணை நூல்கள்:

  1. குறுந்தொகை (மூலமும் உரையும்) - டாக்டல். உ.வே.சாமிநாதர் அய்யர் பதிவு
  2. வள்ளுவத்தின் வீழ்ச்சி - அறிஞர் குணா
  3. சக்கரவாளக்கோட்டம் - அறிஞர் குணா
  4. ரிக்வேதம் - அலைகள் வெளியீட்டகம், சென்னை
  5. மதுரை தமிழ் பேரகராதி - சந்தியா பதிப்பகம்

பொ.சிவசங்கரன், இ.ஆ.ப.,

Pin It