ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பாரதிய சனதா கட்சியின் கைக்கு 2014இல் இந்திய ஆட்சி சென்றது முதல், அதன் மூலக்கொள் கையான இந்துத்துவத்தைப் பரப்பவும், நிலைநாட்டவும் நரேந்திர மோடி அரசு தீவிரமான நடவடிக்i ககளை எடுத்து வருகிறது. இதற்காக சனநாயக நெறி முறைகளுக்கும், இந்தியாவில் மொழிவழியில் அமைந் துள்ள பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளுக் கும் எதிராகச் செயல்பட்டு வருகிறது. மோடி அரசு தன்னு டைய செயல்களைத் தேசியம், தேசபக்தி என்ற பெயர் களால் நியாயப்படுத்தி வருகிறது.
மோடி ஆட்சியின் இந்துத்துவப் பாசிச கருத்து களுக்கும், செயல்பாடுகளுக்கும் எதிராகக் கருத்துரைப் போரையும், எதிர்ப்போரையும் தேச விரோதிகள். தேசத் துரோகிகள் என்று முத்திரைக் குத்துகிறது, இதில் உள்ள கொடுமையான செய்தி என்னவெனில் பா.ச.க. வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எவரும் சுதந்தரப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், பிரித்தானிய ஆட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர் என்கிற வரலாற்று உண்மையாகும்.
அரசு எனும் கட்டமைப்பின் முதன்மையான கூறு களில் ஒன்றாக விளங்கும் உயர்நீதித்துறை, இந்துத்துவத்தை நிலைநாட்டுவதற்காக மோடி ஆட்சியில் முக மூடியாகப் பயன்படுத்தப்படும் தேசபக்திக்கு ஆதரவாகத் தீர்ப்புகளை வழங்கி வருகிறது. 30.11.2016 அன்று உச்சநீதிமன்றம், “மக்களிடையே தேசபக்தியை வளர்ப் பதற்காகத் திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கு வதற்கு முன் ஜனகணமன எனும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்; அப்போது திரையரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்தது. இந்த நடைமுறை இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது. தேசிய உணர்வை, பொழுதுபோக்கு இடமான திரையரங்குகள் வாயிலாக வளர்த்தெடுப்பது என்கிற சிந்தனையும், நடைமுறையும் கேலிக்கூத்தானது என்று பலதரப் பினரும் கண்டித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம். முரளீதரன் 25.7.2017 அன்று வந்தே மாதரம் பாடலைக் கல்வி நிலையங்களில் வாரம் ஒருமுறையும், அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற் சாலைகள் ஆகியவற்றில் மாதம் ஒருமுறையும் பாட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் தனியாக ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
நீண்டகாலமாகக் கல்வி நிலையங்களிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் ஜனகணமன எனும் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது. இந்த தேசிய கீதத்துக்கு தேசிய உணர்வை ஊட்டும் வல்லமை அற்றுப்போய்விட்ட தால், வந்தே மாதரம் என்கிற பாடலைப் பாட வேண்டும் என்று நீதிபதி முரளீதரன் நினைக்கிறாரா? முசுலீம் களை எதிரிகளாகக் கருதும் அடித்தளத்தின் மீது 1882 இல் ஆனந்தமடம் நாவலில் பங்கிம் சந்திர சட்டர்ஜி யால் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலைப் பாடுவது இந்துத்துவக் கோட்பாட்டுக்கு அரண்சேர்க்கும் என்று நீதிபதி முரளீதரன் கருதுகிறாரா?
2017 பிப்பிரவரியில் பா.ச.க.வின் செய்தித் தொடர் பாளர் அஷ்வினி உபாத்தியாய் என்பவர், தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் தேசியப் பாடலைப் (வந்தே மாதரம்) பரப்புவதற்காக ஒரு கொள்கை வகுக்குமாறு நடுவண் அரசுக்கு ஆணையிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக் கை விசாரித்த உச்சநீதிமன்றம், “அரசமைப்புச் சட்டத் தில் பிரிவு 51-ஏ-வில் தேசிய கீதம், தேசியக் கொடி குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. தேசியப் பாடல் என்பது குறித்து அதில் எதுவும் குறிப்பிடாத காரணத் தால், தேசியப் பாடல் குறித்து எந்தவொரு ஆணை யையும் பிறப்பிக்க முடியாது” என்று கூறி, அந்த வழக் கைத் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றுகின்ற அதிகாரம் உயர்நீதிமன்றத்துக் குக் கிடையாது. இந்த உண்மை நீதிபதி முரளீதரனுக் குத் தெரியாதா? தெரிந்திருந்தும் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது, இந்துத் துவ வெறியால் அவர் மண்டை வீங்கியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி (1838-1894) 1882இல் எழுதிய ஆனந்த மடம் எனும் நாவல் 1763-1800 காலத்தில் வங்காள நவாப் ஆட்சிக்கு எதிராக இந்து இளைஞர்கள் புரட்சி நடத்தியதாக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை. அதனால், முசுலீம் எதிர்ப்பு இந் நாவலில் விரவிக்கிடக்கிறது. இந்நாவலில் இடம் பெற் றுள்ள வந்தே மாதரம் பாடல் அய்ந்து பத்திகளைக் கொண்டது. முதல் இரண்டு பத்திகள் வங்கத்தின் இயற்கை வளத்தையும் எழிலையும் வியந்துரைக் கின்றன. அடுத்த மூன்று பத்திகள் வங்கதேசத்தைத் துர்க்கையாக உருவகப்படுத்தி வணங்குவதாகும்.
1905ஆம் ஆண்டு இந்தியாவை ஆண்ட கர்சன் பிரபு, வங்காளத்தை இந்து-முசுலீம் என்கிற மத அடிப் படையில் இரண்டாகப் பிரிப்பதாக அறிவித்தார். வங் காளத்தில் இதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி இப்பிரிவினையைக் கடுமை யாக எதிர்த்தது. இந்தப் பின்னணியில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டது. வங்க இந்து தேசியத்திற்காக எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடல் இந்திய தேசியத்திற்கான பாடலாக மாறியது.
ஆனால் அப்பொழுதே முசுலீம்கள் இதை ஏற்க மறுத்தனர். 1908 திசம்பர் 30 அன்று அமிர்தசரசில் நடைபெற்ற அனைத்திந்திய முசுலீம்லீக் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய சையத் அலி இமாம் ஒரு மதப்பிரிவினரின் முழக்கமான வந்தே மாதரம் இந்திய நாட்டின் தேசிய முழக்கமாவதை ஏற்க முடியாது என்று அறிவித்தார். ஆயினும் காங்கிரசின் மேடைகளிலும் போராட்டங்களிலும் வந்தே மாதரம் முழங்கப்பட்டது. இந்திய சுதந்தரத்தின் - தேசியத்தின் குறியீட்டுச் சொல் லாக வந்தே மாதரம் விளங்கியது.
1937இல் நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி சென்னை மாகாணம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்நிலையில் காங்கிரசுக் கட்சியின் செயற்குழு, சட்டமன்றங்களில் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஏனெனில் இந்து ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டில் காங்கிரசு இருந்தது. வந்தே மாதரம் பாடலைச் சட்டமன்றங்களில் பாடுவதற்கு முகமது அலி ஜின்னா தலைமையில் முசுலீம்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.
இச்சிக்கல் குறித்து நேரு, தாகூரின் கருத்தைக் கேட்டார். முதல் இரண்டு பத்திகளை ஏற்கலாம். பின் உள்ள மூன்று பத்திகள் மத உணர்வைப் பாதிக்கும் என்பதால் தவிர்த்துவிடலாம் என்று தாகூர் கூறினார். அப்போது காங்கிரசில் இருந்த ஜின்னா இதை ஏற்க மறுத்தார். 1937இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரசு மாநாட்டில் நேரு, முதல் இரண்டு பத்திகளைப் பாடலாம்; ஆனால் அது கட்டாயம் இல்லை; விருப்பம் இல்லா தவர்கள் தவிர்த்துவிடலாம் என்று கூறினார்.
சிறையிலிருந்து தப்பி இந்தியாவை விட்டு வெளி யேறிய சுபாஷ் சந்திர போஸ் பர்மாவை அடித்தள மாகக் கொண்டு பிரிட்டிஷாரை விரட்டியடிப்பதற்காக உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் தாகூர் எழுதிய ஜனகணமன - தேசிய கீதமாகப் பாடப்பட்டது. 1940 முதல் ஜனகணமன - தேசிய கீதம் இந்தியாவில் செல்வாக்குப் பெற்றது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கான அவை 1946 முதல் 1949 வரை கூடியது. இந்துத்துவ வாதிகள் வந்தே மாதரம் பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக்கிட முயன்றனர். ஆனால் நேரு தலைமை யிலான முற்போக்குவாதிகள் தாகூரின் ஜனகணமன பாடலைத் தேசிய கீதமாக்கிட விரும்பினர். அதனால் அரசமைப்புச் சட்ட அவையில் தேசிய கீதம் எது என்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தியா குடியரசாவதற்கு இரண்டு நாள்களுக்கு முன் - 24.01.1950 அன்று அரசமைப்புச் சட்ட அவையின் தலைவராக இருந்த இராசேந்திர பிரசாத் ஜனகணமன எனும் தாகூரின் பாடல் தேசிய கீதமாக இருக்கும்; அதே சமயம் ஜனகணமன பாடலுக்கு இணையான அங்கீகாரம் வந்தே மாதரம் பாடலுக்கும் கொடுக்கலாம் என்று அறிவித்து, தேசிய கீதம் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்திய நாட்டு விடுதலைக்காகக் கடுகளவும் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ். இன்று தேசபக்திக்கு உரிமை கொண்டாடுவதுடன், அதனுடைய கருத்தை ஏற்காதவர்களைத் தேசத் துரோகிகள் என்று பழித்து வருகிறது. 1980கள் வரையில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.இன் தலைமை அலுவலகத்தில் சுதந்தர நாள், குடியரசு நாள்களில் இந்திய தேசியக் கொடிய ஏற்றி ஜனகணமன எனும் தேசிய கீதத்தைப் பாடிய தில்லை. அப்போது எங்களுடைய காவிக்கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியையும் வணங்கமாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியது.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். காரரான யோகி ஆதித்யநாத் உ.பி.யின் முதலமைச்ச ரானதும், உத்தரப்பிரதேசத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசின் நிதி உதவியுடன் செயல்படு கின்ற 8000 மதரசாக்களில் ஆகத்து 15 சுதந்தர நாளில் தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாட வேண்டும்; அதை வீடியோப் பதிவு செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் இசுலாமியர் தேசபக்தி இல்லாதவர்கள் என்று வி.த. சாவர்கரும், எம்.எஸ். கோல்வார்க்கரும் சொன்னதை இப்போதும் உ.பி.யின் பா.ச.க. அரசு தன்னுடைய கருத்தாகக் கொண்டு உள்ளது என்பது புலனாகிறது. 18 கோடி மக்களாக உள்ள முசுலீம்கள் நாள்தோறும் அவர்களுடைய தேசபக்தியை மெய்ப் பித்துக் காட்ட வேண்டிய அச்சுறுத்தலான நிலையில் நரேந்திர மோடி அரசால் வைக்கப்பட்டுள்ளனர்.
வந்தே மாதரம் என்ற முழக்கம் சுதந்தரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே தேசிய உணர்வும், ஒற்று மையும் உருவாகிட ஒரு காரணமாக இருந்தது. பல்லா யிரக்கணக்கில் சாதாரண மக்கள் இந்த உணர்வால் உந்தப்பட்டு சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது உண்மையே! ஆனால் இந்தத் தேசிய உணர் வைப் பார்ப்பன-பனியா மேல்சாதி ஆதிக்கவர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கருவி யாகப் பயன்படுத்திக் கொண்டது.
1921இல் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் எம்.என். ராய் காங்கிரசுக் கட்சி பெருவணி கர்களின் முதலாளிகளின் (Merchants and Manufacturers) நலனுக்கான கட்சியாக இருக்கிறது என்று எச்சரித்தார். 1922இல் சிங்காரவேலர் “யாருக்கான சுதந்தரம் இது?” என்று கேள்வியை எழுப்பினார். தேசியம் என்பது பற்றி பெரியார் 1.9.1929 குடிஅரசு ஏட்டில், “சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமா னால், இந்தியாவில் தேசியமென்கிற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத் தார், அதாவது மேல்சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக் குத் தாசர்களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டுவரும் ஒரு பாதகமும், அபாயகரமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்” என்று திட்டவட்டமாக எழுதினார்.
எனவே நீதிபதி முரளீதரன் வந்தே மாதம் பாட வேண்டும் என்று கூறுவது இந்து தேசியத்தின் பேரால் வெகுமக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு வஞ்சகச் சூழ்ச்சியே ஆகும்.