சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

இந்தியாவை ஒற்றை சர்வாதிகார மதவெறி ஆட்சியை நோக்கி இழுத்துசென்ற பாசிச சக்திகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் உறுதியாக்கியிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் உணர்த்தும் பாடங்கள் என்ன?

1.         ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே மோடி என்ற ஆணவத்திற்கு மக்கள் சம்மட்டி அடிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தமுறை நானூறு இடங்கள் என்று முழங்கிவந்த பாஜக, கடந்த முறை பெற்ற இடங்களை விட 59 இடங்களை இழந்திருக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக.mk stalin and rahul gandhi 6402.         தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது மாநில உரிமைகளை கொள்கை அளவில் அங்கீகரித்துள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளில் முதன்மையாக உள்ள இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, மாநில உரிமைகளை அந்த அறிக்கை உரத்துப் பேசுகிறது. ஒற்றை ஆட்சிப் பார்வையில் மாநில உரிமைகளை தனது அதிகாரத் திமிரில் காலில் போட்டு மிதித்து வந்த மோடி மாநிலத்துக்கு ஏற்றார் போல் மாநிலப் பிரச்சனைகளை முன்வைத்து பேசினார். இந்தியா முழுவதும் சென்ற மோடியால் ஒரே கொள்கைகளையும், சாதனைகளையும் பேச முடியவில்லை.

3.         பாரதிய ஜனதா கட்சிக்கு அடையாளம் தரக்கூடிய கட்சியை புறந்தள்ளி கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பம் இப்போது உடைந்து நொறுங்கி விட்டது. கடவுள் அவதாரமாகக் கூறிக் கொண்டவர் தனது வாரணாசி தொகுதியிலேயே நான்கு சுற்றுவரை பின்தங்கியது உலகம் முழுவதும் பேசு பொருளானது.

4.         ஆட்சி அமைக்கக்கூடிய எண்ணிக்கையை மக்கள் மோடிக்கு தரவில்லை என்ற நிலையில் அவர் பதவி விலகியிருக்க வேண்டும். பதவிக்காகவே நான் கடவுளின் அவதாரம் என்று அரிதாரம் பூசிக் கொண்டவரிடம் நாம் அந்த பண்பை எதிர்பார்க்க முடியாது தான்.

5.         மோடிக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த மாநிலக் கட்சிகள் இந்த தேர்தலில் தோல்வியைப் பரிசாகப் பெற்றுள்ளனர். அ.இ.அ.தி.மு.க, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த பட்டியலில் வருகின்றனர். ஒன்றிய ஆட்சியின் மக்கள் விரோத – மதவெறி திட்டங்களுக்கு கண்களை மூடிக்கொண்டு ஆதரவைத் தெரிவித்தவர்கள் இவர்கள்.

6.         வட நாட்டு தேசிய ஊடகங்கள், பாஜகவின் ஊதுகுழலாகவே இந்த தேர்தலில் செயல்பட்டனர். இந்தியா கூட்டணியை உளவியல்ரீதியாக நிலைகுலைய வைக்க அவர்கள் அவிழ்த்துவிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தவிடுபொடியானது.

7.         இஸ்லாமியர்கள் வெறுப்பை முன்வைத்து இந்துக்களின் ஓட்டை அறுவடை செய்துவிடலாம் என்ற மோடியின் நம்பிக்கையை மக்கள் தகர்த்தெறிந்து விட்டார்கள்.

8.         பாஜகவின் கோட்டையாக திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 43 இடங்களை இந்தியா கூட்டணி வென்றுள்ளது. பாஜகவுக்கு கிடைத்த இடங்கள் 33 மட்டுமே. தேர்தலுக்கு முன்பே அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிமுடித்து வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என்ற திட்டமும் தூள்தூளானது. அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே பாஜக வேட்பாளர் லல்லுசிங், சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஸ்பிரசாத்திடம் தோற்றிருக்கிறார். ராம பகவான் தனது சொந்தக் கட்சி வேட்பாளரையே காப்பாற்ற முன்வரவில்லை. வாக்கு வித்தியாசம் 54,567.

9.         யாதவ், முஸ்லிம்களின் கட்சியே சமாஜ்வாதி என்ற பிம்பத்தை அகிலேஷ்யாதவ் இம்முறை தகர்த்தார். அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சி என்பதை உணர்த்த யாதவ் சமூகத்தை சேர்ந்த 5 வேட்பாளர்களை மட்டுமே அவர் களமிறக்கினார். அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 27 வேட்பாளர்களை களமிறக்கியதோடு, இரண்டு பொதுத் தொகுதியிலும் இரண்டு தலித் வேட்பாளர்களை களமிறக்கினார். அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பவர் சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஸ்பிரசாத் ஒரு தலித் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு தலித் வேட்பாளரான சுனிதா வெர்மா மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனாலும் தலித்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற பொது நோக்கத்துக்காக கை கோர்த்து நிற்கிறார்கள் என்ற செய்தி மாநிலம் முழுவதும் கொண்டுசென்றது. இந்து ஆங்கில நாளேட்டில் 05.06.2024இல் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை. இது தமிழ்நாட்டையும் உத்தரப்பிரதேசத்தையும் ஒப்பிட்டுக்காட்டியுள்ளது. இரண்டு கட்சிகளுமே மதவாதத்தை வீழ்த்த சமூகநீதியை களத்துக்கு கொண்டு வந்தது தான் இப்போது கிடைத்திருக்கிற வெற்றி என்று அக்கட்டுரை கூறுகிறது.

10.       மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றாலும், அவரது சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து விட்டது என்று பலரும் இப்போது சுட்டிக்காட்டி வருகிறார்கள். குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் ஆலோசகராக இருந்த சுதேந்திரநாத் குல்கர்னி என்பவர், இந்து ஆங்கில நாளேட்டுக்கு 05.06.2024 அன்று எழுதியுள்ள கட்டுரையில் ”மோடி கடந்தகால மோடி அல்ல; சிதைந்த பிம்பத்தோடு அவர் பிரதமராக வருகிறார். கடந்த காலங்களைப் போல இனி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்த முடியாது. அரசியல் சட்டத்தை சிதைத்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் அவருக்கு ஆப்பு வைத்து விட்டார்கள்” என்று அந்த கட்டுரை கூறுகிறது.

11.       இந்த தேர்தலில் சமூகநீதி எனும் ஒளிச்சுடரை ஏந்தி பல இளைஞர்கள் களத்துக்கு வந்தார்கள். உதயநிதி ஸ்டாலின், ராகுல்காந்தி, அகிலேஷ், பிரியங்கா, தேஜஸ்வி உள்ளிட்ட இளைஞர்கள் மதவாதத்துக்கு எதிராக களத்துக்கு வந்துள்ளனர். ஜூன் 4 ஆம் தேதிக்கு பின்னர் திமுக காணாமல் போய்விடும் என்று மோடி கூறினார்.

12.       இப்போது நாற்பது தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு. ஆனால் பாஜக வேட்பாளர்களின் டெபாசிட் தான் காணாமல் போயிருக்கிறது. இந்த வெற்றிக் களத்தை சாதித்த பெருமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கே உண்டு. இதில் உதயநிதியின் தீவிரப் பரப்புரையையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியா கூட்டணியை சேதாரம் எதுவுமின்றி, இணைந்த கரங்களாக வழிநடத்திச் செல்லும் வழிமுறைகளில் இந்தியாவுக்கே மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாக திகழ்கிறார்.

2004ஆம் ஆண்டுக்கு பிறகு நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்து மதவாத சந்தர்ப்பவாத சக்திகளை வீழ்த்தியிருக்கிறார். ஆளும் பாசிச பாஜகவை எதிர்த்து கொள்கை போராட்டம் நடத்தும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு மட்டும் இருந்தது. இப்போது வட மாநிலங்களிலும் இந்த போராட்டம் தொடங்கியிருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. மதம் பிடித்த காட்டு யானையை மக்கள் சக்தி என்ற அங்குசம் இந்த தேர்தல் களத்தில் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. மாநிலங்களை ஒடுக்கும் ஒற்றை இந்தியா கூச்சலையும் மவுனமாக்கி இருக்கிறது இந்த மக்கள் சக்தி!

- விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It