குடியுரிமைத் திருத்தச் சட்டம் - குடியுரிமை பதிவேடு - தேசிய மக்கள் தொகைப் பதிவேடுகளில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி)

தற்போது சுப்ரமணிசாமி அயோத்தி வரலாறும் இந்து மறுமலர்ச்சியும் என்ற நூல் எழுதியிருக்கிறார். இந்த நூலில், ‘இந்திய நாட்டினுடைய வரலாற்றை புராணங்களின் அடிப்படையில் எழுத வேண்டும். நமக்கு முன் நமது வரலாற்றை எழுதியவர்கள் நமது அந்நியர்கள். நாம் எழுதுகிற வரலாறு புராணங்களின் வரலாறாக இருக்க வேண்டும்’ என்று சுப்ரமணியசாமி எழுதியுள்ளார். சுப்ரமணியசாமி எதனடிப்படையில் இப்படி எழுதுகிறார்? எதனால் புராணங்களின் படி இந்தியாவை வரையறுக்க வேண்டும்? என்று கூறுகிறார்.

golwalkar bunch of thoughtsஇந்த சிந்தனை யாரிடமிருந்து சுப்ரமணியசாமிக்கு வருகிறது? ஆர்.எஸ்.எஸ்-இன் குரு கோல்வாக்கரின் சிந்தனையில் இருந்து தான் சுப்ரமணிய சாமிக்கு இந்த கருத்து வந்துள்ளது. ஆக குரு கோல்வாக்கர் இவர் கூறுவதுபோல் புராணங்களின் அடிப்படையில் இந்து இராஷ்டிரத்தை வரையறுக்கிறார். எப்படி வரையறுக்கிறார்? புராண அடிப்படையில் இந்து தேசத்தை எப்படி வரையறுப்பது? கோல்வாக்கரின் மொழியிலேயே கூறுகிறேன்:

“நமது தாய்நாடு எவ்வளவு தூரம் பரந்து, விரிந்து கிடக்கிறது என்பதைத்தான் நமது புராணங்களும் இதிகாசங்களும் சுட்டிக் காட்டுகின்றன.

இன்றைய ஆப்கானிஸ்தான், நமது பழைய உபகானஸ்தான்; மகாபாரதத்தில் வரும் சால்யா, ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்தவரே. நவீன காபூலும், காந்தாரமும் அன்றைக்கு ‘காந்தார தேசமாக’ இருந்ததுதான். அந்த நாட்டை (ஆப்கானிஸ்தான்)ச் சார்ந்தவர் தான், கவுரவர்களின் தாயாகிய காந்தாரி. ஈரான் கூட ஆரிய தேசமே. அதன் முந்தைய அரசன் ரேஷாஷா பெலாவி முஸ்லீமாய் இருந்தார் என்பதைவிட ஆரியராக இருந்தார் என்பதுதான் உண்மை... கிழக்குப் பகுதியைப் பார்த்தால், பர்மா என்பது நமது பழைய பிரதேசமே... தெற்கே திரும்பினால், இலங்கை மிக நெருங்கிய தொடர்புடையது. இந்தியா என்ற பெரும் நிலப் பரப்பிலிருந்து எப்போதுமே வேறுபடுத்திப் பார்க்கப்படாதது திபெத். நமது ‘திரி வாஸ்தவம்’ தான் நமது தலைவர்களால் சீனப் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. அது பரமேஸ்வரின் கைலாயம்; கடவுளின் பூமி.” (ஆதாரம்: Bunch of thoughts என்ற கோல்வாக்கரின் தமிழ்மொழி பெயர்ப்பு நூலான ‘சிந்தனைக் கொத்து’ நூல்)

தனித் தனி நாடுகள் உருவாகிய பிறகும் எவ்வித வரலாற்று சான்றுகளும் இன்றி புராணங்களில் வரும் பெயர்களை எடுத்துக் கொண்டு வேறு நாடுகளுடன் வெவ்வேறு மொழிகளில் ஒலிக்கும் பெயர்களை மட்டுமே தொடர்புபடுத்தி, அதையே வரலாறு என்கிறார் கோல்வாக்கர்

நாடுகளுக்கான எல்லைகளை நாம் ஏற்க முடியாது என்று கூறும் கோல்வாக்கர், அது மனசாட்சிக்கு செய்யும் துரோகம்; வெட்கக் கேடு என்று எழுதுகிறார்.

“இன்றைய அரசியல் எல்லைகள்தான் நமது முழுமையான தாயகத்தினைக் குறிக்கிறது என நாம் நினைப்போமானால், நமது மனசாட்சிக்கு துரோகம் செய்தவர்கள் ஆவோம். இப்படி ஒப்புக் கொண்டால் நமது அறிவுக்கு இதைவிட வெட்கக்கேடு ஏது மில்லை.” (ஆதாரம்: மேற் குறிப்பிட்ட அதே ‘சிந்தனைக் கொத்து’ நூல்)

கோல்வாக்கரின் வரையறையில் சீனாவும் ஈரானும் இந்து நாடுகள்; அந்த நாடுகளின்மீது படையெடுத்து, இந்தியாவுடன் இணைக்க வேண்டும் போலிருக்கிறது. அதற்கு ஆதாரம் புராணங்கள்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் வாழும் இந்துக்களை இங்கே அழைத்துக் கொள்ளவும், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ‘அன்னியர்கள்’ என்ற உளவியலைக் கட்டமைப்பது தான். குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடியுரிமைத் தேசியப் பதிவேடுகளை செயல்படுத்துவதுதான் நோக்கம்.

புராணங்களை வரலாறுகளாக்கும் ஒரு கூட்டம் இந்த நூற்றாண்டிலும் வெட்கமின்றி எழுதுகிறது; பேசுகிறது.

பா.ஜ.க.வை எதிர்த்தால் - பார்ப்பனர்களை விமர்சித்தால் - எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் ‘இந்திய எதிர்ப்பாளர் (anti-Indian) என்று வசைப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். திமிரும், பார்ப்பன ஆணவமும் கொழுத்து திரிகிறது இந்தக் கூட்டம். அதிகார மமதையில் ஊறி நிற்கும் ‘சங்கி’ பார்ப்பனர்கள், ‘இந்தியா’ என்பதையே ஏற்றுக் கொள்ளாத ‘தேச பக்த’ கும்பல், பா.ஜ.க.விலிருந்து சங் பரிவார் துணை அமைப்புகள் வரை ‘இந்தியா’ என்பதை ஏற்பதே இல்லை. ‘பாரதிய’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துவார்கள். ‘அவாள்’ கண்ணோட்டத்தில் ‘இந்தியா’ என்பது ‘தீட்டு’. கோல்வாக்கர் இந்தியா என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார். அந்த அடிப்படையிலேயே ‘இந்தியா’ என்ற சொற்றொடரும் அரசியல் சட்டமும் அவர்களுக்கு கசக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பிரகடனத்திலும் ‘இந்தியா’ என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்துவது கிடையாது. ஆர்.எஸ்.எஸ். கொள்கை அறிக்கை என்ன கூறுகிறது?

“இந்து சமூகத்திலுள்ள பல்வேறு கூட்டத்தாரையும் ஒன்றுபடுத்துவது, ‘தர்மம்’, ‘சான்ஸ்கிருதி’ என்ற அடிப்படையில் இந்து சமூகத் துக்கு புத்துயிர் ஊட்டி புணருத்தாரணம் செய்வது, ‘பாரத் வர்ஷத்’தின் பன்முக வளர்ச்சியை சாதிப்பது என்பதே ‘சங்’கத்தின் நோக்கங்களும், இலட்சியங்களும் ஆகும்”.

- இந்த கொள்கை அறிக்கையில் ‘இந்தியா’ என்ற சொல்லே இடம் பெறவில்லை. இந்து சமூகம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

இவர்களுக்கு கொள்கை வகுத்துத் தந்த கோல்வாக்கருக்கு ‘இந்தியா’ பற்றிய கருத்து என்ன?

“பாரதியா என்பது நம்முடைய பழமையான பெயர். நமக்கு நினைவு தெரியாத காலம் முதல் இந்தப் பெயர் இருந்திருக்கிறது. வேதத்தில்கூட இந்தப் பெயர் இடம் பெற்றுள்ளது. நமது புராணங்கள்கூட, நமது தாய்நாட்டை ‘பாரத்’ என்றும் நமது மக்களை ‘பாரதியர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் ‘பாரத்’ என்பது ‘இந்து’ என்பதுதான்.

இன்று பாரதியம், பாரத் என்ற சொற்கள் கூட தவறான பொருளில் பயன்படுத்தப் படுகின்றன. இந்தியா - இந்தியர் என்ற சொல்லுக்கு மாற்றாக அதைப் பயன்படுத்துகிறார்கள். ‘இந்தியன்’ என்ற சொல் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி போன்ற பல்வேறு சமூகத்தவரையும் சேர்த்துத் தான் குறிக்கிறது. நம்முடைய சமூகமான ‘இந்து’வை மட்டும் குறிப்பதில்லை. ‘பாரதிய’ என்ற சொல்லை மற்ற சமூகத்தினiரையும் இணைத்துக் கொள்ளும் சொல்லாக குறிப்பிடுகிறார்கள். எனவே தான், இந்து என்ற குழப்பமில்லாத சரியான சொல்லையே இப்போது நாம் பயன்படுத்துகிறோம். (ஆதாரம் : கோல்வாக்கர்-ஆர்.எஸ்.எஸ். அதிகார பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ ஏடு 1.12.1449)

பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைப்புகளை எடுத்துக் கொண்டாலும் சரி, ஆர்.எஸ்.எஸ் இன் துணை அமைப்புகளை எடுத்துக் கொண்டாலும் சரி அவைகள் பாரதிய என்றுதான் இருக்குமே தவிர இந்தியா என்று எந்த அமைப்பின் பெயரிலும் வராது. இந்தியா என்ற சொல்லையே ஏற்க மறுக்கின்ற ஒரு கூட்டம் தான் இந்தியாவில் Anti indian, Anti Indian என்று பூணூலைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கோல்வாக்கர் கூறுகிறார்:

“இன்று பாரதியம், பாரத் என்ற சொற்கள் கூட தவறான அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். இந்தியா, இந்தியன் என்று பயன்படுத்துகிறார்கள். இந்தியன் என்ற சொல் இங்கே வாழுகிற முஸ்லிம், பார்சி, கிருத்துவர்களையும் சேர்த்துத் தான் குறிக்கிறது. நம்முடைய சமூகமான இந்துவை மட்டும் குறிப்பது கிடையாது. நம்முடைய சமூகத்தை மட்டும் குறிப்பிடும் பாரதிய என்ற சொல்லை மற்ற சமூகத்தினரையும் குறிப்பிடும் சொல்லாக குறிப்பிடுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு. எனவே ‘பாரதியம்’ என்று குறிப்பிடுவதா இந்தியன் என்று குறிப்பிடுவதா என்ற குழப்பம் உள்ளது எனவேதான் நாம் இப்போது குழப்பமே இல்லாத ‘இந்து’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்" என்று எழுதி வைத்திருக்கிறார்.

தேசியக் கொடியைப் பற்றி எழுதுகிறார், ‘ஏற்கெனவே நமக்கான காவிக் கொடி ஒன்று உள்ளது. அதை விட்டுவிட்டு இப்போது ஏன் புதிதாக ஒரு தேசியக் கொடியை உருவாக்க வேண்டும்' என்றும் அவர் எழுதுகிறார். இதை 1.12.1919 organiser இல் அவர் எழுதியிருக்கிற கருத்து. கோல்வாக்கர், ஜெர்மனில் ஹிட்லர் பேசிய இனவாதம் தான் சரியானது என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

கோல்வாக்கர் மீண்டும் கூறுகிறார், ‘ஜெர்மன் இனப் பெருமை இன்று உலகம் முழுதும் பேசப்படுகின்றது. அது தனது தூய்மையான கலாச்சாரத்தைக் காக்க யூதர்களை வெளியேற்றி உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதான் ஒரு இனத்தை பெருமை யாக்கும் மிக உயர்ந்தபட்ச நடவடிக்கை’. இஸ்லாமியரை வெளியேற்றுவதில் தான் இந்து இனத்தின் பெருமை அடங்கியிருக்கிறது என்பதை கூறுவதற்கு ஹிட்லர் ஆட்சியை காரணம் காட்டுகிறார்’, கோல்வாக்கர்.

ஆதாரங்களுடன் நாம் எடுத்துக் காட்டுகிறோம்; சவால் விட்டுக் கேட்கிறோம்; இதை உங்களால் மறுக்க முடியுமா? அரசியல் சட்டத்தையே தேசியக் கொடியையோ நாட்டின் எல்லை வரையறைகளையோ ஏற்க முடியாது என்ற உங்களின் உண்மையான கொள்கைகளை மக்களிடம் வெளியே வந்து பேசுவீர்களா?

கோல்வாக்கர் கூறுகிறார்:

“ஆழமான வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு இனங்களையும் கலாச்சாரங்களையும் ஒன்றுபடுத்தவே முடியாது என்பதை ஜெர்மன் நிரூபித்திருக்கிறது. இந்துஸ்தானத்தில் வாழும் நமக்கு இது ஒரு படிப்பினை”.

ஆக ஹிட்லர் பேசிய இனவாதத்தை சரி என்று அப்படியே எடுத்துக் கொண்டு கோல்வாக்கர் ‘We or our nationhood defined’இல் பதிவு செய்திருக்கிறார். தற்போது சமஸ்கிருதத்திற்குப் பதிலாக இந்தியைத் திணிக்கிறார்கள். இந்தி திணிப்பை பற்றி பெரியார் சொல்கிறார், இந்தியை ஏன் பார்ப்பனர்கள் திணிக்கிறார்களென்றால், இந்தியைத் திணிப்பதன் மூலம் சமஸ்கிருதத்தை இந்த நாட்டிற்குள் கொண்டு வருவதன் முன்னோட்டமே, என்று 1920களிலேயே எழுதியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இனுடைய அதிகாரப்பூர்வ கருத்து அதாவது கோல்வாக்கர் மொழிக்கொள்கையில் என்ன சொல்கிறார், “சமஸ்கிருதம் நமது ஆட்சி மொழியாகும் வரை இந்திக்கு முன்னுரிமை கொடுத்து நமது ஆட்சி மொழியாக நமது வசதிக்காக வைத்துக் கொள்ளலாம்”. (As a solution to the problem ofAs a solution to the problem of‘Lingua franca’ till the time Sanskrit takes that placewe shall have to give priority to Hindi on the score of convenience). சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக வரும் வரை வசதிக்காக நாம் இந்தியை ஆட்சி மொழியாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்பதுதான் அவருடைய மொழிக் கொள்கையாக இருக்கிறது.

மோடி ஆட்சியில், மாநிலங்களின் உரிமையை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் பேசி வருகிறோம். மொழிக் கொள்கை, கல்வி, ஜி.எஸ்.டி இப்படி மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் மோடியோ, பாஜகவோ புதியதாக உருவாக்கவில்லை. இவையெல்லாம் கோல்வாக்கரின் சித்தாந்தத்தில் இருந்து இந்த சிந்தனைகள் வருகின்றன. மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நேரத்தில் 1957 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்களாக இந்தியா பிரியக் கூடாது ஒற்றை தேசமாக இந்தியா இருக்க வேண்டும் என்று கூறியவர்கள் ஜன சங்கத்தினர்.

1957 ஆம் ஆண்டு ஜன சங்கத்தின் தேர்தல் அறிக்கையில், “ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை திருத்தி கூட்டாட்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரே நாடு என்று பிரகடனப் படுத்துவோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கோல்வாக்கரும் கூறியிருக்கிறார். இந்தியாவை ஒற்றை தேசமாக மாற்றுவோம் என்பது ஆர்.எஸ்.எஸ் இன் கொள்கை. ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவான ஜன சங்கத்தின் கொள்கையும் அது தான்.

- தொடரும்

Pin It