பிறவியில் உயர்வு-தாழ்வு இன்றும் இருக்கிறதா?

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதா?

மதச்சார்பின்மை கல்வியில், அரசில் வந்துவிட்டதா?

தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் புதன் அன்று பிறந்தார்.

திண்ணைப் பள்ளியில் படிக்கும் போதே, சமு தாயத்தில் உயர்வு-தாழ்வு இருப்பதைத் தன் வாழ் நாளில் முதலில் கண்டார். அதற்குக் காரணம் அப்போது புரியவில்லை.

1907இல் இந்திய தேசிய காங்கிரசில் நாட்டங் கொண்டார். 1919 இறுதியில் காங்கிரசில் சேர்ந்தார்.

I. 1919இல் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியில், இந்திய தேசிய காங்கிரசின் 1919ஆம் ஆண்டுத் திட்டப்படி, வகுப்புவாரி இடஒதுக்கீடு தரும் கொள்கையைத் தமிழ்நாடு காங்கிரசு ஏற்றிடக் கோரினார்; அது ஏற்கப்படவில்லை. 1925 நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டிலும் அக்கோரிக்கை ஏற்கப்பட வில்லை. நிற்க.

II. 1. இந்து மதத்தில் பிறவியில் தீண்டாமை பின்பற்றப்படுவதையும், பிறவியில் உயர்வு-தாழ்வு இருப்பதையும் நீக்கிட தமிழ்நாடு காங்கிரசு பாடுபட வேண்டும் என, திருப்பூரில், எம்.ஜி. வாசுதேவ அய்யர் தலைமையில், 21.12.1922இல் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், பி. வரதராசலு நாயுடுவும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். அது ஏற்கப்பட வில்லை.

21.12.1922 மாலையில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசுப் பொதுக்கூட்டத்தில், “தீண்டாமையையும் சாதியையும் இராமாயணமும் மனுநீதியும் காப்பாற்றுவதால் அவற்றை எரிக்க வேண்டும்” என்று முதன்முதலில், ஈ.வெ.ரா. பேசினார்.

அன்று முதல் 1973 திசம்பர் 8, 9 சென்னை மாநாடு வரையில் - மற்றும் திசம்பர் 19, 1973 வரையில் பிறவியில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் வேற்றுமை யையும் தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டார்.

2. 03.11.1957இல் தஞ்சையில் நடைபெற்ற எடைக்கு எடை பணம் அளிக்கிற-போராட்டம் அறிவிக்கிற மாநாட்டில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள நால்வருண நடப்புக்குப் பாதுகாப்புக்குத் தரும் அரசமைப்புச் சட்டப் பகுதியை எரிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

உலக அளவில் அதுவரையில் எந்தவொரு நாட்டிலும் அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தை எரிக்க எந்த ஒரு கட்சியும் முனைந்தது இல்லை.

அத்தீர்மானப்படி, 26.11.1957இல் தமிழ்நாடு முழுவதிலும் 10,000 திராவிடர் கழகத் தோழர்கள் “பிறவியில் வருண வேறுபாட்டைக் காக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதிகள் அச்சிடப்பட்ட குறுநூலை” எரித்தனர்; 3,000 பேர் தண்டனை பெற்றுச் சிறைப்பட்டனர்.

ஆனால், உண்மையில், 2017லும் இந்திய அரச மைப்புச் சட்டத்தில், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற பிறவி வருண சாதி வேறுபாட்டுக் கும், சில இடங்களில் தீண்டாமையை அனுசரிக்கவும் பாதுகாப்பு அளிக்கிற விதிகள் இருக்கின்றனவா என்பதை, நாம் ஒவ்வொருவரும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப் பாதுகாப்பு அளிக்கிற அரசமைப்புச் சட்ட விதிகள் எவை, எவை என்பதை நிரல்படுத்தி, அவற்றுள் மூன்று விதிகளை மட்டும் எல்லோருக்கும் புரிகிற தன்மையில் தமிழில் மட்டும் எழுதுகிறேன்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 26.1.1950இல் நடப்புக்கு வந்தது. அரசமைப்புச் சட்ட விதிகளை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்திருந்தாலும் தெரிந்துகொள்ளாமல் இருந்தாலும் ஒவ்வொரு குடிமகனையும் அச்சட்டம் கட்டுப்படுத்தும். அதாவது ஒவ்வொரு குடிமகனும் அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

அப்படிப்பட்ட விதிகளின் மொத்த எண்ணிக்கை 395 ஆகும்.

அவற்றுள், (1) நால்வருணங்களையும், (2) சில இடங் களில் தீண்டாமையையும், (3) பழைய காலத்துப் பழக்கவங்களையும் இன்றும் காப்பாற்றுகிற விதிகள் எவை?

விதி : 13(1), (3)b;

விதி : 16(5);

விதி 17;

விதி 25;

விதி 26;

விதி 372(1), 372(3)Explanation - என்பவை ஆகும்.

மேலேகண்ட விதிகளுள் மூன்றை மட்டும் - தமிழில் மொழிபெயர்த்துக் கீழே தந்துள்ளேன்.

விதி 13(1) - அடிப்படை உரிமைகளுக்கு எதிரான, அடிப்படை உரிமைகளுக்கு முரணான விதிகள் : இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர் இந்தியாவில் நடப்பிலிருந்த சட்டங்களுள் எவையெவை இப்பகுதியில் கண்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வும் முரணாகவும் உள்ளனவோ அந்த அளவுக்கு அவை செல்லுபடியாக மாட்டா.

விதி 13(3)(b) - இந்தியாவில் ஏற்கெனவே நடப்பி லிருந்த சட்டங்கள், தகுதிவாய்ந்த ஒரு சட்டமன்றத் தாலோ அல்லது தகுதி வாய்ந்த மற்றொரு அதிகாரம் படைத்த அமைப்பாலோ - இச்சட்டம் நடப்புக்கு வரு முன்னர் செய்யப்பட்ட சட்டம் என்று பொருள்படும். அச்சட்டம் ஏற்கெனவே நீக்கப்படாமலிருந்தால் ஒழிய அப்படிப்பட்ட சட்டம் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடப்பில் இல்லாமல் இருந்தாலும் எந்தப் பகுதியிலும் அச்சட்டம் நடப்பில் இருந்ததில்லை என்றாலும், அச்சட்டம் இன்றும் செல்லும்.

விதி 372(1), 372(3) Explanation (விளக்கம்) என்பதில் சொல்லப்பட்டிருப்பதும், மேலேகண்ட செய்தி தான். எனவே அவ்விதியின் மொழிபெயர்ப்பு இங்கே தரப்படவில்லை.

விதி 17 - தீண்டாமை அகற்றம் : “தீண்டாமை” அகற்றப் பட்டிருக்கிறது. அதை எந்த வடிவத்தில் அனுசரிப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. “தீண்டாமையை” எந்த வகை இயலாமையை உண்டாக்கும் விதத்தில் செயல் படுத்தினாலும் அது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

தீண்டாமை அகற்றம் பற்றிய இந்த விதியில், இரண்டு இடங்களில் தீண்டாமை என்கிற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் தீண்டாமை என்ற சொல் மட்டும் மேற்கோள் குறிக்குள் வைக்கப்பட்டிருக் கிறது. அது ஏன்?

ஏன் என்றால், “எல்லா இடங்களிலும் தீண்டாமை போகாது என்கிற உட்பொருளை வைத்துத்தான் அச் சொல்லை மேற்கோள் குறிக்குள் அமைத்துள்ளனர், அரசமைப்புச் சட்டத்தை எழுதிய கர்த்தாக்கள்” என, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விளக்கம் கொடுத்துள்ளது.

அந்த இடம் தான் இந்துக் கோவில்களில் கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை (அ) கர்ப்ப கிரகம் ஆகும்.

இந்திய அரசமைப்பில் வேறு எந்த விதியிலும் எந்த ஒரு சொல்லும் இப்படி மேற்கோள் குறிக்குள் வைக்கப் படவில்லை. உலகிலுள்ள எந்த நாட்டுச் சட்டத்திலும் ஒரு சொல் இப்படி மேற்கோள் குறிக்குள் வைக்கப்பட வில்லை.

ஏனெனில் வேறு எந்த மத நடப்பிலும் அந்த மதத்தில் பிறந்த ஒருவன் (அ) ஒருத்தி ‘தீண்டப்படாதவர்’ என்று அந்தந்த மத நூல் கூறவில்லை.

ஆனால் மனுநீதி, இந்து மதத்தில் பிறந்த ஒருசாராரை “சண்டாளர்கள் என்றும், தீண்டப்படாதவர்கள்” என்றும் கூறுகிறது.

கோவில் கருவறையில் “குறிப்பிட்ட பிறவி உட்சாதிப் பிரிவார் தான் இந்து கோவிலில் அர்ச்சகர் ஆகமுடியும்” என அரசமைப்புச் சட்ட விதி 16(5) கூறுகிறது. நிற்க.

அடுத்து, விதி 25(1) மதத்தை நம்பவும், தடங்க லின்றிப் பின்பற்றவும், செயற்படுத்தவும், பரப்புரை செய்ய வும் - பொது அமைதிக்காப்பு, ஒழுக்கம், உடல்நலம் (Health) இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள மற்றவற்றுக்கு உட்பட்டு, எல்லா மக்களும் சமமான உரிமை உள்ள வர்கள் ஆவர்.

சட்டம் 25(2) ஏற்கெனவே நடப்பிலுள்ள சட்டம் இப்போதும் பின்பற்றப்படுவதை இந்த விதியிலுள்ள எந்தப் பகுதியும் தடுக்காது. மேலும்,

(அ) மதத்தைப் பின்பற்றுவதுடன் தொடர்புள்ள எந்தப் பொருளாதார - அரசியல் மற்றும் மதச்சார்பற்ற செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதையும் (அ) கட்டுப்படுத்து வதையும்

(ஆ) சமூக நலம், சமூகச் சீர்திருத்தம் பொதுவான இந்துக் கோவில்களை இந்து மதத்தைச் சார்ந்த எல்லா வகுப்பினருக்கும் பிரிவினருக்கும் திறந்துவிடல் இவற்றைச் செய்வதை இந்த விதி தடுக்காது.

இந்த விதிகள் 25, 26 இப்படி அமைக்கப்பட ஏற்பாடு செய்தவர் மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி ஆவார். அவருடைய கட்டளையைத் தலை மேல் வைத்துக் கொண்டு, அண்மையில் மறைந்த அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவினரைத் தில்லியில் நேரில்பார்த்துப் பேசினார். மேலை நாட்டு மதச்சார்பின்மை - அதாவது கல்வியிலிருந்து மதத்தைப் பிரிக்கும் கொள்கையும் அரசிலிருந்து மதத்தைப் பிரிக்கும் கொள்கையும் ஆன மேலைநாட்டு மதச்சார்பற்ற விளக்கம் (Western Secularism) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாமல் அவர் தடுத்துவிட்டார். இது தந்தை பெரியாருக்கும் தெரியும்.

மேலும், (1) 1860இல் வெள்ளையரால் தொகுக்கப் பட்ட இந்துச் சட்டம் (Hindu Law) என்பதில், 2017லும், “இந்துக்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டி ருக்கிறார்கள். அவை முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவையாகும். மேலும் அவர்கள் மூவாயிரம் உள்சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெளிவாக உள்ளது.

இதற்கு ஆதாரம் (2) மனுஸ்மிருதி, (3) பராசரஸ் மிருதி, (4) யக்ஞவல்க்ய ஸ்மிருதி முதலானவை.

மேலேகண்ட ஸ்மிருதிகள், ஆகமங்களைத்தான் - கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் இந்தியப் பெரும் பரப்பில் ஆட்சிசெய்த எல்லா அரசர்களும் பின்பற்றினர்.

தமிழ்நாட்டில் பழைய பாண்டியர் காலம் முதல் கி.பி.1320 வரை ஆண்ட பாண்டியர் காலம் வரை இதையே பின்பற்றினர்.

அதற்குப்பின் தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட இஸ்லாமியரும் தென்பகுதியை ஆண்ட மராட்டியரும் நாயக்கரும் இதையே பின்பற்றினர்.

வெள்ளையர் காலத்தில், கி.பி.1773இல் அரசப் பிரதிநிதி வாரன்ஹேஸ்டிங்ஸ் வெளியிட்ட ஒழுங்குமுறைச் சட்டப்படி, மேலே கண்ட இந்து மத நூல்கள் சட்ட அதிகாரம் பெற்றன.

வெள்ளையன் வெளியேறிய பிறகு, மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டமும்,

1.            நால்வருணங்களின் பெயர்களைச் சட்டத்தில் எழுதா மலே-பிறவி நால்வருண வேறுபாட்டைக் காப்பாற்று கிறது.

2.            பழைய பழக்கவழக்கச் சட்டங்களைக் காப்பாற்றுகிறது.

3.            மதச்சார்புள்ள கல்வியையும் மதச்சார்புள்ள அரசை யும் காப்பாற்றுகிறது.

இவையெல்லாம் டாக்டர் அம்பேத்கருக்கு நன்கு தெரியும்.

அதனால்தான், 2.9.1953இல், தில்லி மாநிலங்கள் அவையில், பின்வருமாறு டாக்டர் அம்பேத்கர் பேசினார்.

“..... இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிக்க எவரேனும் முன்வந்தால், நான் அதை எரிக்க முதல் ஆளாக இருப்பேன். அச்சட்டம் எனக்கு வேண்டாம். அது யாருக்கும் உதவாது” என்றே பேசினார்.

மேதை அம்பேத்கர், திடுமென 6.12.1956இல் மறை வுற்றார்.

அம்பேத்கர் எரிக்க விரும்பிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை, 26.11.1957இல் 10,000 பெரியார் தொண்டர்கள் எரித்தனர்; 3,000 பேர் ஒரு மாதம் முதல் 3 ஆண்டுகள் சிறைப்பட்டனர்.

சிறைக்குள்ளேயே அய்வர் மாண்டனர்; சிறைக்கு வெளியே 13 பேர் மாண்டனர்.

தந்தை பெரியார் 24.12.1973இல் மறைந்தார். அவர் மறைந்து 43 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகி விட்டன.

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் 26.11.1957இல் நடைபெற்றது. அது நடந்து ஏறக்குறைய 60 ஆண்டு கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நம் சமுதாய நிலை இழிவானதே.

தந்தை பெரியாரின் கொள்கை வெற்றிக்கு உரிய வழிகோலிட பெரியார் -  அம்பேத்கர் இயக்கத்தினர் சூளுரைப்போம், வாருங்கள்!

Pin It

திருநெல்வேலி சைவர்களின் கையாயுதமாயிருந்து கொண்டு பார்ப்பனப் பிரசாரஞ் செய்து கொண்டிருக்கும் “லோகோபகாரி” என்னும் பத்திரிகையானது, தனது சூன் 12ஆம் நாள் பத்திரிகையில், “குடிஅரசி”ன் கூற்று என்னும் தலையங்கத்தில், திருடர்க்கழகு திருநீறடித்தல் என்று குடி அரசில் எழுதியிருப்பதால், “குடிஅரசு” பகிரங்கமாக மன்னிப் புக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எழுதியிருக்கிறது.

நாம் இதுவரை எவ்விதத் தப்பிதமும் செய்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய சமயம் நேரவில்லையானாலும், தவறுதல் என்று தோன்றினால் மன்னிப்புக் கேட்க எப்பொழு துமே தயாராய் இருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் எவ்விதத்திலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாகச் சிறிதும் விளங்கவில்லை. அதாவது “திருநீறு” என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடு வது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால், “திருடர்க்கழகு திருநீறடித்தல்” என்பது நன்றாய் விளங்கும். இல்லாவிட்டால் மூடர்க்கழகு என்றாவது விளங்கும்.

எப்படி எனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவது கடவுளின் அருளைப் பெறவாம். அதை இடு கின்றவர்கள் கருதுவதும், தாங்கள் எவ்வளவு அக்கிர மக்காரர் ஆனாலும் திருநீறிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய் கைலாயம் சித்தித்துவிடும் என்பதே யாகும்.

இதற்கும் ஆதாரமாக திருநீறின் மகிமையைப் பற்றிச் சொல்லுகின்ற “பிரமோத்திர காண்டம்” என்னும் சாத்திரத்தில், ஒரு பார்ப்பனன் மிக்க அயோக்கியனாகவும் கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பஞ்சமா பாதகமான காரியங்கள் செய்துகொண்டே இருந்து, ஒருநாள் ஒரு புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத் தனமாய் அவன் மனைவியைப் புணர்ந்ததாகவும், அந்த சண்டாளன் அதை அறிந்து, அந்தப் பார்ப்பானை ஒரே குத்தாகக் குத்திக்கொன்று அப்பிணத்தைச் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எரித்துவிட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை, அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப்பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்திற் தள்ளிக் கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில் சிவகணங்கள் இரத்தின விமானத்துடன் வந்து, அந்தப் பார்ப்பனனை எமதூதர்களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்துக் கைலாயத்திற்குப் பார்வதி இடம் கொண்டு போனதாகவும், எமன் வந்து இவன் மாபாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க, நீங்கள் கைலாயத்திற்கு எப்படிக் கொண்டு போகலாம்? என்று வாதாடினதாகவும், அதற்கு சிவ கணங்கள், இந்த பார்ப்பான் மீது சற்று திருநீறு பட்டுவிட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத்திற்கு அருகனானதினால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும், இதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் பார்த்து, “இந்தப் பார்ப்பான் ஒருநாளும் திருநீறு பூசவில்லை.

ஆதலால் இவனுக்கு மோட்சமில்லை” என்று சொல்லி வாதாடி, சிவகணமும், எமகண மும், எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கைச் சொன்னதாகவும், பிறகு சிவன் இந்தப் பார்ப்பனன் உயிருடன் இருக்கும் வரை மகா பாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக் குத்திக் கொன்று சுடு காட்டில் இவன் பிணத்தை எரித்து விட்ட போது மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம்பலின் மீது நடந்துவந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும்போது அதன் காலில் பட்டிருந்த அந்த சாம்பலில் கொஞ்சம் பிணத்தின் மீது பட்டுவிட்டதால் அவனுக்குக் கைலாயத்தில் இடம்கொடுக்க வேண்டிய தாயிற்றென்று சொல்லி, எமனைக் கண்டித்தனுப்பிவிட்டு பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப் பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால், திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து, நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள். அந்த சாத்தி ரத்தின் அடுத்த அத்தியாயத்தில் அத்திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு அந்த முறைப்படி இட்டால் இதில் எழுதக்கூடாத மகா பாதகங்கள் செய்வ தினால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்றும், அவன் பிதிர்கள் செய்த பாவங்கள்கூட நீங்கி,  நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதியிருக்கின்றது.

இவை “பிரமோத்திர காண்டம்” 14ஆவது, 15ஆவது அத்தியாயத்தில் உள்ளன. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது அதாவது பேராசைக்காரராகவாவது, மூடராகவாவது இருக்காமல் வேறு என்னவாய் இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கும் வேலையை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்.

தவிர, நாம் முன் எழுதியதற்காக வருத்தமடைந்த, திரு. நெல்லையப்ப பிள்ளை அவர்கள் வேளாளன் திருநீறு பூசினால்தான் மோசட்த்திற்கருகனென்றும், மற்றவன் பூசினால் அருகராகாரென்றும் கருதிக் கொண்டிருப்பவர். உதாரணமாக, திருநெல்வேலி ஜில்லா முதலாவது சுயமரி யாதை மகாநாட்டில் திருநீறு பூசிய யாவரும் கோவிலுக்குள் போகலாம் என்ற தீர்மானம் வந்த காலத்தில், 2000 பேர் உள்ள கூட்டத்தில் ஆட்சேபித்தவர் இவர் ஒரே ஒருவராவார்.

ஆகவே, “திருடர்க்கழகு திருநீறடித்தல்” என்று எழுதிய விஷயத்தில், இவருக்குச் சிறிதுகூட கோபம்வர நியாயமே இல்லை. ஒரு சமயம் “லோகோபகாரி”க்கு மனவருத்த மிருக்குமானால், அது திருடர்க்கு அல்லது மூடர்க்கு என்று ஒரு திருத்தம் கொண்டுவந்தால் ஒப்புக்கொள்ள நாம் தயாராக இருக்கறோம்.

- ஈ.வெ.ரா.

(“குடிஅரசு”, 15.6.1930)

Pin It

மாநிலக் கட்சிகள் செல்வாக்கை இழக்கும்! எல்லோரும் சிந்தியுங்கள்!

இந்திய தேசிய காங்கிரசு 1885இல் தோற்றுவிக் கப்பட்டது.

முஸ்லிம் லீக், 1906இல் தோற்றம் பெற்றது; அனைத் திந்தியக் கட்சியாக 1940வாக்கில் அது மலர்ந்தது.

திராவிடர் இயக்கம் என்கிற “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” 22.11.1916இல் நிறுவப்பட்டது. அது சென்னை மாகாணத்தில் மட்டும் செயல்பட்டது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 26.12.1925இல் நிறுவப்பட்டது. அது அனைத்திந்திய அளவிலான கட்சி.

“பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம்” 26.12.1926இல் நிறுவப்பட்டது. சென்னை மாகாணத் தில் தோன்றிய அவ்வியக்கம், தமிழகத்தில் மட்டுமே களப்பணி ஆற்றியது.

திராவிடர் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து “திராவிடர் கழகம்” என 1944 ஆகத்தில் பெயர் மாற்றம் பெற்றது.

தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் நீதிக்கட்சி என்றும் அழைக்கப்பட்டது.

அக்கட்சி, பிரிட்டிஷார் 1919இல் அளித்த அரசியல் இரட்டை ஆட்சி அதிகாரத்தின்படி, 17.12.1920 முதல் 1937 மே வரையில் சென்னை மாகாணத்தை ஆண்டது.

அக்கட்சி சென்னை மாகாணத்தின் பல பகுதி களை மட்டுமே ஆண்டது. அதில், சுதேச அரசுள் சில தனியே இருந்தன. அக்கட்சி அனைத்து இந்தியா வையும் செயல்படுகளமாக எப்போதும் கொள்ள வில்லை. இந்திய அரசைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கைக் கொள்ளவில்லை.

“பார்ப்பனரல்லாதார்” பிரிட்டிஷ் இந்தியா முழுவதிலும் இருந்தார்கள்; பிரிட்டிஷார் வெளியேறிய பிறகும் இருக்கிறார்கள்; இனியும் இருப்பார்கள். இதைக் கணக்கில் கொள்ளவில்லை.

இந்துக்களை அன்னியில் இந்துக்கள் அல்லாத - இஸ்லாமியர், சீக்கியர், கிறித்துவர், பௌத்தர், சமணர் முதலானோரும் இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள்.

“திராவிடர்கள்” வடக்கே ஒரிசா வரை ஆதிகாலந் தொட்டே  இருக்கிறார்கள்.

திராவிட மொழிகளைப் பேசுவோர் விந்திய மலை வரை பரவியிருக்கிறார்கள்.

திராவிடர் கட்சி மாகாண ஆட்சியிலிருந்த போது வெளியிடப்பட்ட “JUSTICE” ஆங்கில நாளேடு அனைத் திந்திய அளவில் வெளிவர ஏற்பாடு செய்யப்பட வில்லை.

சுயமரியாதை இயக்கம் 1928இல் நடத்திய “REVOLT” ஆங்கிலக் கிழமை இதழும் அனைத்திந்திய அளவில் வெளிவரவில்லை.

பெரியார்  அவர்கள் 1928இல், சென்னையில் நடை பெற்ற “தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில்” -“நம் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக ஆக வேண்டும்” என்று முதன்முதலாகக் கருத்தறிவித்தார்.

1937 தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசு வெற்றி பெற்றது. நீதிக்கட்சி தோல்வி அடைந்தது.

அப்போதும் “நீதிக்கட்சி அனைத்திந்தியக் கட்சியாக வளர வேண்டும்” எனப் பெரியார் அறிவித்தார், (“குடி அரசு”, தலையங்கம், 21-2-1937).

ஆனால் அப்போதும்-பிறகு எப்போதும் அதற்கான முயற்சியை அவரோ அவரது பிறங்கடைகளோ அல்லது 1949இல் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகமோ, 1972இல் தோன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ - அனைத்திந்தியக் கட்சிகளாக உருவாக்கப்பட முயற்சிக்கவில்லை.

‘இந்தி’யை எதிர்ப்பதில் அக்கறை கொண்ட திராவிடப் போர்வையைப் போர்த்திக் கொண்ட கட்சிகள் - (வருண) சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, இந்தி ஆதிக்க ஒழிப்பு, விகிதாசார வகுப்புரிமை பெறல் என் பவை அனைத்திந்தியச் சிக்கல்கள் என்று புரிந்து கொள்ளவே இன்றுவரை முயற்சிக்கவில்லை.

இக்கட்சிகளுள் 1937இல் 9 மாகாணங்களை ஆண்ட இந்திய தேசிய காங்கிரசு, 1946 முதல் 1967 வரை ஏறக்குறைய இந்தியா முழுவதையும் ஆண்டது.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி முதன்முதலில் 1957இல் கேரள மாநில ஆட்சியைக் கைப்பற்றியது.

1967க்குப் பிறகு, சி.பி.அய்., சி.பி.அய்.(எம்) முதலான இருகட்சிகளும் மாறி, மாறி கேரள மாநில ஆட்சியை நடத்தின.

ஆனால், 1952 முதல் 2014 வரையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒருபோதும் எல்லாப் பொதுவுடைமைக் கட்சிகளும் சேர்ந்து நாடாளுமன்ற மக்கள் அவையில் 100 உறுப்பினர்கள்கூட வெற்றி பெற்றுவர முடியவில்லை.

பொதுவுடைமைக் கட்சி ஆட்சி கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களோடு நின்றது.

அக்கட்சிகள் என்ன வேலைத் திட்டங்களை மேற் கொள்ளத் தவறிவிட்டார்கள் என்பதை இனியாவது பொதுவுடைமையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரசு, அகாலிதளம், சமாஜ்வாதி, ஜனதாதளம், சனதா, தேசியவாதக் காங்கிரஸ் முதலா னவை பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் என்கிற அளவில் மட்டுமே உண்மையில் வடிவம் பெற்றுள்ளன.

இந்நிலையில், பல மாநிலங்களில் பதவிக்கு வர முடியாத நிலைக்கு முதன்முதலாக 1967இல் காங்கிரசு ஆளாயிற்று, 1977இல் ஜனதா, ஜன சங்கம், லோக் தளம் கூட்டுச் சேர்ந்து 1979 திசம்பர் வரை இந்திய அரசை ஆண்டன.

1980-1989 வரை காங்கிரசும், 1989-90இல் வி.பி. சிங்கும் இந்திய ஆட்சியை ஆண்டனர். 1991-1996 வரை காங்கிரசுக் கட்சியுடன் பல மாநிலக் கட்சிகள் சேர்ந்த கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இடை யில் மாநிலக் கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு பாரதிய சனதாக் கட்சி 1999-2004இல் இந்தியாவை ஆண்டன. 2004 முதல் 2014 தொடக்கம் வரை மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரசு ஆட்சி நடைபெற்றது.

இதுவரையில் நடைபெற்ற எல்லாக் கட்சிகளின் ஆட்சிகளும் முதலாளிகளின் ஏகபோகச் சுரண்டலை வரவேற்று நிலைப்படுத்திய ஆட்சிகளே.

இந்திய ஒருமைப்பாடு என்கிற பேரால் “ஒற்றை இந்தியா” உடையாமல் ஒரே ஆட்சியின் கீழ் இந்தியா என்கிற துணைக் கண்டம் தொடர்ந்து இருக்கச் செய்வதே.

இதை எதிர்த்து ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற கோரிக்கைக்காக இந்தி கட்டாயப் பாடம் ஆக 11-9-1938இல் ஆக்கப்பட்டதை எதிர்த்த போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. குரல் கொடுத்தார்.

25-10-1939இல், பிற திராவிட மொழித் தலைவர் கள் அவரிடம் இதுபற்றிக் கேட்டவுடன், 17-12-1939 இல் “திராவிட நாடு திராவிடருக்கே” என மாற்றிக் கொண்டார். ஆனால் 30-4-1942இல் பெரியார் தலைமையில் கிரிப்ஸ் தூதுக் குழுவைச் சந்தித்த நால்வர் குழு, “பிரிட்டிஷ் அரசு, தமிழ்பேசும் மாகா ணத்தை மட்டும் தில்லி ஆதிக்கத்தலிருந்து பிரித்து, பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவர வேண்டும்” என்றே கோரியது. இதில் “சுதந்தரம்” என்பதாக ஒன்றும் இல்லை.

மேலே கண்ட கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு 1945 சூலையில் நிராகரித்தது.

அப்போதுதான், திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் 30-9-1945இல் “பிரிட்டிஷ் முதலான வெளியார் ஆதிக்கம் ஒழிந்த தனிச் சுதந்தர திராவிட நாடு தான் தி.க.வின் குறிக்கோள்” எனத் தந்தை பெரியார் அறிவித்தார்.

8-1-1940இல் பம்பாயில் முகமது அலி ஜின்னா வைச் சந்தித்த பெரியார், “எப்போதும் இந்தியாவுக்கு ஒரே அரசியல் நிர்ணய சபை என்பதை ஏற்காதீர்கள்” என்று அவரிடம் கூறினார்.

அதன் பின்னர் 1940 மார்ச்சில், “பாக்கித்தான் பிரிவினையை முன்வைத்த ஜின்னா அவர்கள், பாக்கித்தான் தனி நாட்டை 1947இல்” அடைந்தார்.

“15-8-1947 இந்தியாவுக்கு சுதந்தர நாள் தான்” எனக் கூறிய அறிஞர் சி.என்.  அண்ணாதுரை, 17-9-1949இல் “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற தனி அமைப்பை நிறுவிய போது, “அடைந்தால் திராவிட நாடு; இல்லாவிட்டால் சுடுகாடு” என முழங்கினார்.

ஆனால், அவரே தில்லி மாநிலங்கள் அவையில், “திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை தி.மு.க. கைவிட்டுவிட்டது” என்று 1963இல் அறிவித்தார்.

அதன்பிறகாவது, தி.மு.க. அனைத்திந்திய அரசியல் கட்சியாக மாறி, இந்திய அரசைக் கைப்பற்றி திராவிட இயக்கத்தின் மூலக்கொள்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கத் தவறிவிட்டார். ஏனெனில் திராவிடர் இயக்கத்தின் மூலக் கொள்கை (வருண) சாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, இந்தி ஆதிக்க ஒழிப்பு இவை ஆகும்.

இந்திய அரசைக் கைப்பற்றாமல் எந்தக் கட்சியும் எப்போதும் இவற்றை நிறைவேற்ற முடியாது.

காங்கிரசுக் கட்சி மேலே சொல்லப்பட்ட கொள்கை களை நிலைக்க வைக்கவே பாடுபட்டது.

சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா 1953இல் பிரிந்தது. மொழிவாரி மாநிலப் பிரிவினை காரணமாக 1956இல் கருநாடகம், கேரளா பிரிந்தன. எனவே 1-11-1956 முதல் 1973 வரையில் தந்தை பெரியார் “சுதந்தரத் தமிழ்நாடு” கோரினார்.

இப்போது 2014 தேர்தலில் காங்கிரசு படுதோல்வி  அடைந்துவிட்டது.

பாரதிய சனதா கட்சி 2014 தேர்தலில், திட்டமிட்டு, 543இல் 284 இடங்களைக் கைப்பற்றிவிட்டது. எந்த மாநிலக் கட்சியையும் கூட்டுச் சேர்க்காமல் தனிக்கட்சி ஆட்சியை இந்தியாவில் அமைத்துவிட்டது.

அண்மையில் 17-7-2017இல் நடைபெற்ற இந்தியக் குடிஅரசுத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ராம்நாத் கோவிந்த் என்பவரைக் குடிஅரசுத் தலைவராகவும், அடுத்து 5-8-2017 அன்று நடந்த தேர்தலில் வெங்கய்ய நாயுடுவை குடிஅரசுத் துணைத் தலைவராகவும் ஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதாவில் தோய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத் துக் கொண்டது, இன்றைய ஆளும் பாரதிய சனதாக் கட்சி.

I. எல்லா அதிகாரங்களையும் முற்றாகப் பெற்றுவிட்ட பாரதிய சனதாக் கட்சி.

II. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு கூறுகளையும் கொண்டது வல்லரசு என்பது வள்ளுவர் கொள்கை.

“இந்தத் தன்மையிலான இந்திய அரசை அமைத்து-இராமராஜ்யத்தை கி.பி.2000இல் அமைக்க வேண்டும்” என, 1948 பிப்ரவரியில் பூனாவில், ஆர்.எஸ்.எஸ். இரகசியக் கூட்டத்தில் முடிவெடுத்தது.

அந்த இலக்கை அடைவதற்கு இந்தியா முழு வதிலும் சமுதாயத்தின் எல்லா உறுப்புகளிலும் (அங்கங்களிலும்) ஊடுருவி, எல்லாத் தரப்பினரிடமும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்றும் அன்றே முடிவெடுத்தது.

இப்போது இராமராஜ்ய அமைப்பை நோக்கி இந்திய அரசு செயல்படும்.

அதைத் தடுக்க விரும்பும் அமைப்புகள் என்னென்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் எந்த மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்றாலும்,

1. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒருமைப் பாடு என்கிற பேரால் - ஒரே கலாசாரம் அல்லது பண்பாட்டைப் புகுத்துதல், பன்முகத் தன்மையை ஒழித்தல், பழக்கவழக்கச் சட்டத்தைக் காத்தல் இவற்றுக்கு வலுச்சேர்க்கும் எல்லாக் கூறுகளை யும் அடியோடு மாற்றுதல் வேண்டும்.

2. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் அவன வனுடைய தாய்மொழி வழியில் எல்லா நிலைக் கல்வியும் தரப்பட உரிமை உள்ளவனாக வாழ வழிகாண வேண்டும்.

இந்திய மொழிகளில் எல்லாத் துறை அறிவியல் மற்றும் கலைகளையும் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்க இந்திய அரசும், மாநில அரசுகளும் வழி காண வேண்டும்.

3. கல்வித் திட்டத்திலிருந்தும், அரசின் நடப்பிலிருந் தும் மதம் அறவே பிரிக்கப்பட வேண்டும்.

4. இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி அல்லது அலுவல் மொழி என்பது (Official Language) உடனே ஒழிக்கப்பட வேண்டும்.

இதற்கு உடன்பாடான எல்லாக் கட்சிகளும், வெகு மக்கள் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து-பாரதிய சனதா வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, அதே குறிக் கோளுடன் ஒருதலைமுறைக்காலம் பாடுபட வேண்டும்.

திராவிட வாக்குவேட்டை அமைப்புகள் - காங்கி ரசுடன் கூட்டு, பாரதிய சனதாக் கட்சியுடன் கூட்டு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்கிற திரைப்பட நடிகர் களுடன் கூட்டு என்று போனால் - 2019 தேர்தலோடு அவர்களின் வரலாறு முடிந்துவிடும்! எல்லோரும் சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

Pin It

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதில் தமிழக அரசும், நடுவண் அரசும் தமிழக மக்களை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டன, உச்சநீதிமன்றம் 22.8.2017 அன்று தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை, தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET - நீட்) அடிப் படையில்தான் நடைபெற வேண்டும் என்று தீர்ப்பு கூறிவிட்டது. அதன்படி 24.8.2017 முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு நடுவண் அரசு ஒரு அவசரச் சட்டத்தின் மூலம், விரும்பாத மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளித்தது. ஆனால் தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து நிலையான விலக்குப் பெறுவோம் என்று தொடர்ந்து உறுதியளித்துக் கொண்டே இருந்தது. அதனால் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு பற்றிக் கவலைப்படாமல் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெற்று, அதன்மூலம் மருத்துவப் படிப்பில் சேரும் நம்பிக்கையுடன் படித்தனர்.

ஆனால் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை என்கிற நிலையால் பனிரெண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேருவதற்குரிய அதிக மதிப்பெண் பெற்றுள்ள - மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த பல ஆயிரம் மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு தகர்க்கப்பட்டுவிட்டது. இம்மாணவர்களும் இவர் களின் பெற்றோரும் தமிழக அரசாலும் இறுதியில் நடுவண் அரசாலும் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.

மனுநீதி போன்ற இந்துமத சாத்திரங்களின் பெய ரால் இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பான், சத்திரி யன், வைசியன் ஆகிய மேல் சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருந்த கல்வியை 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் கைப்பற்றுவதற்கான ஆளும்வர்க்கத்தின் நடவடிக்கையே நீட் தேர்வு கட்டாயம் என்பதாகும், கீழ்ச்சாதி மக்களாகவும் உழைக்கும் மக்களாகவும் உள்ள ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் மருத்துவக் கல் லூரியில் சேருவதற்கான வாய்ப்பை “நீட்” பறித்து விட்டது.

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் உயிரியல் பாடப் பிரிவில் மாநிலப் பாடத் திட்டத்தில் 4.2 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி னார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் வெறும் 4,675 பேர் எழுதினர். 7.5.2017 அன்று நடைபெற்ற நீட் தேர்வை தமிழ்நாட்டில் 83,859 பேர் எழுதினர். இவர்களில் 32,570 பேர் மருத்துவப் படிப்பில் சேரு வதற்கான தகுதி-தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவிக் கப்பட்டது.

நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டு அரசு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 27,212 பேர் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் முதல் இருபது இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களில் 15 பேர் சி.பி.எஸ்.இ.யில் படித்தவர்கள். மருத்துவப் படிப்பில் அரசின் பொதுக் கலந்தாய்வுக்காக உள்ள மொத்த இடங்கள் 3534 ஆகும். இதில் பத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு ஒப்படைக்கும் 860 இடங்களும் அடங்கி உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிருவாக ஒதுக்கீட்டின்கீழ் 715 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டுவரை நிருவாக ஒதுக்கீட்டு இடங்களை மருத்துவக் கல்லூரிகளே ஏலத்தில் விடுவது போல் அதிக தொகை செலுத்துவோர்க்கு விறப்னை செய்து வந்தன. ஆனால் இந்த ஆண்டு நடுவண் அரசின் ஆணைப்படி, நிருவாக ஒதுக்கீட்டு இடங்கள் தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தமிழக அரசின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் 3534 இடங்களில் இந்த ஆண்டு நீட் அடிப்படையின் காரணமாக, மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2,224 பேரும், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1310 பேரும் மருத்துவப் படிப்பில் சேருகின்றனர். கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 30 பேர் மட்டுமே சேர்ந்தனர் என்பதை ஒப்பிடும்போது, நீட் என்பது சி.பி.எஸ்.இ.யில் படிக்கும் மேல்சாதி - நகர்ப்புற - பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் நலன்களுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்பது அப்பட்டமாகப் புலப் படுகிறது. சி.பி.எஸ்.சி. படித்த 1310 மாணவர்களில் 64 விழுக்காட்டினர் 2015-16 ஆண்டில் 12ஆம் வகுப்பை முடித்தவர்கள்; கடந்த ஓராண்டில் நீட் தேர்வுக்காகப் பல இலட்சம் செலவு செய்து தனியார் பயிற்சி நிறுவனங் களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.

அரசு நடத்திய கலந்தாய்வு மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் கள் தமிழ்நாட்டில் வாழ்வதாகப் பொய்யான இருப்பிடச் சான்று பெற்ற பிற மாநிலத்தவர்கள் என்கிற அதிர்ச்சி யான செய்தி வெளியாகி உள்ளது. இந்த முறைகேட்டுக் குத் தமிழக அரசு அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக் கொண்டு உடந்தையாக இருந்திருக்கிறார்.

Neet exam strike 600அதேபோன்று மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேரும் 2,224 மாணவர் களில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பை முடித்தவர்கள் 1,281 பேர். மீதி 943 பேர் இதற்கு முந்தைய கல்வி ஆண்டில் (2015-16) பனிரெண்டாம் வகுப்பை முடித்து, மருத்துவப் படிப்பில் இடம் கிடைக் காததால், தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களில் பல இலட்சம் செலவிட்டு, நீட் தேர்வுக்காக ஓராண்டுப் படித்தவர்கள், அதாவது இவர்கள் 44 விழுக்காட்டினர். நீட் தேர்வு இருக்காது என்று தமிழக அரசு உறுதி யளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே ஓராண்டை ஒதுக்கி நீட் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களில் 943 பேர் மருத்துவப் படிப்பில் இடம்பெற்றுள்ளனர். இனி நீட் கட்டாயம் என்று ஆகிவிட்ட நிலையில், அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், அரசின் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் 3534 இடங்களில் 90 விழுக் காட்டுக்கு மேற்பட்ட இடங்களை பனிரெண்டாம் வகுப்பை முடித்த பின், ஓராண்டு நீட் சிறப்பு பயிற்சி பெறும் பணக்கார வீட்டு மாணவர்களே கைப்பற்றுவார்கள் என்பது உறுதி, ஏனெனில் முன்பு, பனிரெண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வின் மதிப்பெண்ணை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக, மாணவர்களுக்கு ஓராண்டுக் காலம் (Improvement System) வழங்கப் பட்டிருந்த போது, கூடுதலாக ஓராண்டு தனியாகப் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் படித்தவர்களே மருத்துவப் படிப்பில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றினர். அதனால் அந்த மேம்படுத்தல் வாய்ப்பு அரசால் நீக்கப்பட்டது.

நீட் முறை வருவதற்குமுன் கடந்த ஆண்டுவரை மருத்துவப் படிப்பில் பெரும்பாலான இடங்களைப் பல இலட்சம் உருவா செலவிட்டு தனியார் மேனிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்த மாணவர்களே கைப்பற்றினர். 2009 முதல் 2016 வரையிலான எட்டு ஆண்டுகளில் 29,000 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதே சமயம் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 278 பேர் மட்டுமே சேர்ந்தனர். 2016ஆம் ஆண்டில் 48 பேர் சேர்ந்தனர். ஆங்கில வழிக் கல்வியையும் தனியார் கல்விக் கொள் ளையையும் தமிழ்நாட்டு அரசும், அரசியல் கட்சிகளும் ஊக்குவித்து, சமூக நீதியைக் கொன்று மருத்துவக் கல்வி கிராமப்புற - நகர்ப்புற ஏழை, எளிய, கீழ்நிலை நடுத்தரக் குடும்பங்களுக்கு எட்டாக்கனி ஆக்கிவிட்ட கொடுமை சமூகநீதியின் தாயகம் என்று கூறப்படும் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. மேலும் தமிழக அரசு, கல்விக் கொள்கையடிக்கும் தனியார் மேனிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கு உரிய பாடங்களை நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும் 12ஆம் வகுப்பு பாடங்களையே நடத்திய கேட்டினைத் தடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 23, தனியார் 10, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 8 என மொத்தம் 41 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சாதாரண வசதி கொண்ட குடும்பத்தின் மாணவன் முட்டி மோதி மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றாலும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது, ஏனெனில் அரசுக் கல்லூரி யில் ஆண்டுக்கட்டணம் ரூ,13,600; தனியார் ஒதுக் கீட்டு இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் நான்கு இலட்சம்; தனியார் மருத்துவக் கல்லூரியின் நிருவாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.12.50 இலட்சம் என்று அரசு நிர்ணயித் துள்ளது. எட்டு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 1328 இடங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக் கட்டணம் இருபது இலட்சத்துக்குமேல், எனவே கல்விக் கொள் கையை ஒழிப்பதற்காக என்று கூறி, கொண்டுவரப் பட்ட நீட் முறை மேலும் கல்விக் கொள்ளையை வளர்ப்பதற்காகவே இருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட நீட் விலக்கு கோரும் சட்டத்துக்கு நடுவண் அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பதுடன் அதுபற்றி எந்தக் கருத்தும் கூறாமல் கள்ளமவுனம் காத்தது. இறுதியில் ஓராண்டுக்கு மட்டும் விலக்குகோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தெரி வித்தது. தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தெரிவித்தது. தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்குச் சட்ட அமைச்சர், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தன. ஓராண்டுக்கு விலக்கு உறுதியாகிவிட்டது என்று எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில், நடுவண் அரசு உச்சநீதி மன்றத்தில், “ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு தர இயலாது. எனவே தமிழக அரசின் அவசரச் சட்டத் துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது” என்று கூறி, தமிழக மக்கள் மீது வெடிகுண்டை வீசியது.

நடுவண் அரசின் சுகாதாரத் துறைக்கான நாடாளு மன்ற நிலைக்குழுவின் 92ஆம் அறிக்கை 2016 மார்ச்சு 8 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அதில் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதில் பங்கேற்க விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. எனவே தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று இப்போது நடுவண் அரசு கூறுவது தமிழக மக்களை ஒடுக்கும் கொடிய செயலாகும்.

தன்னுடைய மாநிலத்தில் எந்த முறையில் கல்வி வழங்க வேண்டும்; தேர்வுகள் நடத்த வேண்டும்; உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை கூட மாநில அரசுக்குக் கிடையாது என்று சொல்வது மாநில உரிமையைப் பறிப்பது ஆகும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான தாகும். ஆகவே கல்வியை 1977க்குமுன் இருந்தது போல் மாநில அதிகாரப் பட்டியலில் சேர்ப்பதன் மூலமே கல்வியில் நடுவண் அரசின் ஆதிக்கத்தைத் தடுக்க முடியும்.

Pin It

chandra sataraji 350ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பாரதிய சனதா கட்சியின் கைக்கு 2014இல் இந்திய ஆட்சி சென்றது முதல், அதன் மூலக்கொள் கையான இந்துத்துவத்தைப் பரப்பவும், நிலைநாட்டவும் நரேந்திர மோடி அரசு தீவிரமான நடவடிக்i ககளை எடுத்து வருகிறது. இதற்காக சனநாயக நெறி முறைகளுக்கும், இந்தியாவில் மொழிவழியில் அமைந் துள்ள பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளுக் கும் எதிராகச் செயல்பட்டு வருகிறது. மோடி அரசு தன்னு டைய செயல்களைத் தேசியம், தேசபக்தி என்ற பெயர் களால் நியாயப்படுத்தி வருகிறது.

மோடி ஆட்சியின் இந்துத்துவப் பாசிச கருத்து களுக்கும், செயல்பாடுகளுக்கும் எதிராகக் கருத்துரைப் போரையும், எதிர்ப்போரையும் தேச விரோதிகள். தேசத் துரோகிகள் என்று முத்திரைக் குத்துகிறது, இதில் உள்ள கொடுமையான செய்தி என்னவெனில் பா.ச.க. வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எவரும் சுதந்தரப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், பிரித்தானிய ஆட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர் என்கிற வரலாற்று உண்மையாகும்.

அரசு எனும் கட்டமைப்பின் முதன்மையான கூறு களில் ஒன்றாக விளங்கும் உயர்நீதித்துறை, இந்துத்துவத்தை நிலைநாட்டுவதற்காக மோடி ஆட்சியில் முக மூடியாகப் பயன்படுத்தப்படும் தேசபக்திக்கு ஆதரவாகத் தீர்ப்புகளை வழங்கி வருகிறது. 30.11.2016 அன்று உச்சநீதிமன்றம், “மக்களிடையே தேசபக்தியை வளர்ப் பதற்காகத் திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கு வதற்கு முன் ஜனகணமன எனும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்; அப்போது திரையரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்தது. இந்த நடைமுறை இந்தியா முழுவதும் பின்பற்றப்படுகிறது. தேசிய உணர்வை, பொழுதுபோக்கு இடமான திரையரங்குகள் வாயிலாக வளர்த்தெடுப்பது என்கிற சிந்தனையும், நடைமுறையும் கேலிக்கூத்தானது என்று பலதரப் பினரும் கண்டித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம். முரளீதரன் 25.7.2017 அன்று வந்தே மாதரம் பாடலைக் கல்வி நிலையங்களில் வாரம் ஒருமுறையும், அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற் சாலைகள் ஆகியவற்றில் மாதம் ஒருமுறையும் பாட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் தனியாக ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாகக் கல்வி நிலையங்களிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் ஜனகணமன எனும் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது. இந்த தேசிய கீதத்துக்கு தேசிய உணர்வை ஊட்டும் வல்லமை அற்றுப்போய்விட்ட தால், வந்தே மாதரம் என்கிற பாடலைப் பாட வேண்டும் என்று நீதிபதி முரளீதரன் நினைக்கிறாரா? முசுலீம் களை எதிரிகளாகக் கருதும் அடித்தளத்தின் மீது 1882 இல் ஆனந்தமடம் நாவலில் பங்கிம் சந்திர சட்டர்ஜி யால் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலைப் பாடுவது இந்துத்துவக் கோட்பாட்டுக்கு அரண்சேர்க்கும் என்று நீதிபதி முரளீதரன் கருதுகிறாரா?

2017 பிப்பிரவரியில் பா.ச.க.வின் செய்தித் தொடர் பாளர் அஷ்வினி உபாத்தியாய் என்பவர், தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் தேசியப் பாடலைப் (வந்தே மாதரம்) பரப்புவதற்காக ஒரு கொள்கை வகுக்குமாறு நடுவண் அரசுக்கு ஆணையிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக் கை விசாரித்த உச்சநீதிமன்றம், “அரசமைப்புச் சட்டத் தில் பிரிவு 51-ஏ-வில் தேசிய கீதம், தேசியக் கொடி குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. தேசியப் பாடல் என்பது குறித்து அதில் எதுவும் குறிப்பிடாத காரணத் தால், தேசியப் பாடல் குறித்து எந்தவொரு ஆணை யையும் பிறப்பிக்க முடியாது” என்று கூறி, அந்த வழக் கைத் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றுகின்ற அதிகாரம் உயர்நீதிமன்றத்துக் குக் கிடையாது. இந்த உண்மை நீதிபதி முரளீதரனுக் குத் தெரியாதா? தெரிந்திருந்தும் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று ஆணையிட்டிருப்பது, இந்துத் துவ வெறியால் அவர் மண்டை வீங்கியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி (1838-1894) 1882இல் எழுதிய ஆனந்த மடம் எனும் நாவல் 1763-1800 காலத்தில் வங்காள நவாப் ஆட்சிக்கு எதிராக இந்து இளைஞர்கள் புரட்சி நடத்தியதாக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை. அதனால், முசுலீம் எதிர்ப்பு இந் நாவலில் விரவிக்கிடக்கிறது. இந்நாவலில் இடம் பெற் றுள்ள வந்தே மாதரம் பாடல் அய்ந்து பத்திகளைக் கொண்டது. முதல் இரண்டு பத்திகள் வங்கத்தின் இயற்கை வளத்தையும் எழிலையும் வியந்துரைக் கின்றன. அடுத்த மூன்று பத்திகள் வங்கதேசத்தைத் துர்க்கையாக உருவகப்படுத்தி வணங்குவதாகும்.

1905ஆம் ஆண்டு இந்தியாவை ஆண்ட கர்சன் பிரபு, வங்காளத்தை இந்து-முசுலீம் என்கிற மத அடிப் படையில் இரண்டாகப் பிரிப்பதாக அறிவித்தார். வங் காளத்தில் இதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி இப்பிரிவினையைக் கடுமை யாக எதிர்த்தது. இந்தப் பின்னணியில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டது. வங்க இந்து தேசியத்திற்காக எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடல் இந்திய தேசியத்திற்கான பாடலாக மாறியது.

ஆனால் அப்பொழுதே முசுலீம்கள் இதை ஏற்க மறுத்தனர். 1908 திசம்பர் 30 அன்று அமிர்தசரசில் நடைபெற்ற அனைத்திந்திய முசுலீம்லீக் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய சையத் அலி இமாம் ஒரு மதப்பிரிவினரின் முழக்கமான வந்தே மாதரம் இந்திய நாட்டின் தேசிய முழக்கமாவதை ஏற்க முடியாது என்று அறிவித்தார். ஆயினும் காங்கிரசின் மேடைகளிலும் போராட்டங்களிலும் வந்தே மாதரம் முழங்கப்பட்டது. இந்திய சுதந்தரத்தின் - தேசியத்தின் குறியீட்டுச் சொல் லாக வந்தே மாதரம் விளங்கியது.

1937இல் நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி சென்னை மாகாணம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்நிலையில் காங்கிரசுக் கட்சியின் செயற்குழு, சட்டமன்றங்களில் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஏனெனில் இந்து ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டில் காங்கிரசு இருந்தது. வந்தே மாதரம் பாடலைச் சட்டமன்றங்களில் பாடுவதற்கு முகமது அலி ஜின்னா தலைமையில் முசுலீம்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

இச்சிக்கல் குறித்து நேரு, தாகூரின் கருத்தைக் கேட்டார். முதல் இரண்டு பத்திகளை ஏற்கலாம். பின் உள்ள மூன்று பத்திகள் மத உணர்வைப் பாதிக்கும் என்பதால் தவிர்த்துவிடலாம் என்று தாகூர் கூறினார். அப்போது காங்கிரசில் இருந்த ஜின்னா இதை ஏற்க மறுத்தார். 1937இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரசு மாநாட்டில் நேரு, முதல் இரண்டு பத்திகளைப் பாடலாம்; ஆனால் அது கட்டாயம் இல்லை; விருப்பம் இல்லா தவர்கள் தவிர்த்துவிடலாம் என்று கூறினார்.

சிறையிலிருந்து தப்பி இந்தியாவை விட்டு வெளி யேறிய சுபாஷ் சந்திர போஸ் பர்மாவை அடித்தள மாகக் கொண்டு பிரிட்டிஷாரை விரட்டியடிப்பதற்காக உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் தாகூர் எழுதிய ஜனகணமன - தேசிய கீதமாகப் பாடப்பட்டது. 1940 முதல் ஜனகணமன - தேசிய கீதம் இந்தியாவில் செல்வாக்குப் பெற்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கான அவை 1946 முதல் 1949 வரை கூடியது. இந்துத்துவ வாதிகள் வந்தே மாதரம் பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக்கிட முயன்றனர். ஆனால் நேரு தலைமை யிலான முற்போக்குவாதிகள் தாகூரின் ஜனகணமன பாடலைத் தேசிய கீதமாக்கிட விரும்பினர். அதனால் அரசமைப்புச் சட்ட அவையில் தேசிய கீதம் எது என்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Anandamatt book 350இந்தியா குடியரசாவதற்கு இரண்டு நாள்களுக்கு முன் - 24.01.1950 அன்று அரசமைப்புச் சட்ட அவையின் தலைவராக இருந்த இராசேந்திர பிரசாத் ஜனகணமன எனும் தாகூரின் பாடல் தேசிய கீதமாக இருக்கும்; அதே சமயம் ஜனகணமன பாடலுக்கு இணையான அங்கீகாரம் வந்தே மாதரம் பாடலுக்கும் கொடுக்கலாம் என்று அறிவித்து, தேசிய கீதம் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்திய நாட்டு விடுதலைக்காகக் கடுகளவும் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ். இன்று தேசபக்திக்கு உரிமை கொண்டாடுவதுடன், அதனுடைய கருத்தை ஏற்காதவர்களைத் தேசத் துரோகிகள் என்று பழித்து வருகிறது. 1980கள் வரையில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.இன் தலைமை அலுவலகத்தில் சுதந்தர நாள், குடியரசு நாள்களில் இந்திய தேசியக் கொடிய ஏற்றி ஜனகணமன எனும் தேசிய கீதத்தைப் பாடிய தில்லை. அப்போது எங்களுடைய காவிக்கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியையும் வணங்கமாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். காரரான யோகி ஆதித்யநாத் உ.பி.யின் முதலமைச்ச ரானதும், உத்தரப்பிரதேசத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசின் நிதி உதவியுடன் செயல்படு கின்ற 8000 மதரசாக்களில் ஆகத்து 15 சுதந்தர நாளில் தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாட வேண்டும்; அதை வீடியோப் பதிவு செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் இசுலாமியர் தேசபக்தி இல்லாதவர்கள் என்று வி.த. சாவர்கரும், எம்.எஸ். கோல்வார்க்கரும் சொன்னதை இப்போதும் உ.பி.யின் பா.ச.க. அரசு தன்னுடைய கருத்தாகக் கொண்டு உள்ளது என்பது புலனாகிறது. 18 கோடி மக்களாக உள்ள முசுலீம்கள் நாள்தோறும் அவர்களுடைய தேசபக்தியை மெய்ப் பித்துக் காட்ட வேண்டிய அச்சுறுத்தலான நிலையில் நரேந்திர மோடி அரசால் வைக்கப்பட்டுள்ளனர்.

வந்தே மாதரம் என்ற முழக்கம் சுதந்தரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே தேசிய உணர்வும், ஒற்று மையும் உருவாகிட ஒரு காரணமாக இருந்தது. பல்லா யிரக்கணக்கில் சாதாரண மக்கள் இந்த உணர்வால் உந்தப்பட்டு சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது உண்மையே! ஆனால் இந்தத் தேசிய உணர் வைப் பார்ப்பன-பனியா மேல்சாதி ஆதிக்கவர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கருவி யாகப் பயன்படுத்திக் கொண்டது.

1921இல் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் எம்.என். ராய் காங்கிரசுக் கட்சி பெருவணி கர்களின் முதலாளிகளின் (Merchants and Manufacturers) நலனுக்கான கட்சியாக இருக்கிறது என்று எச்சரித்தார். 1922இல் சிங்காரவேலர் “யாருக்கான சுதந்தரம் இது?” என்று கேள்வியை எழுப்பினார். தேசியம் என்பது பற்றி பெரியார் 1.9.1929 குடிஅரசு ஏட்டில், “சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமா னால், இந்தியாவில் தேசியமென்கிற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத் தார், அதாவது மேல்சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக் குத் தாசர்களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டுவரும் ஒரு பாதகமும், அபாயகரமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்” என்று திட்டவட்டமாக எழுதினார்.

எனவே நீதிபதி முரளீதரன் வந்தே மாதம் பாட வேண்டும் என்று கூறுவது இந்து தேசியத்தின் பேரால் வெகுமக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு வஞ்சகச் சூழ்ச்சியே ஆகும்.

Pin It