மாநிலக் கட்சிகள் செல்வாக்கை இழக்கும்! எல்லோரும் சிந்தியுங்கள்!

இந்திய தேசிய காங்கிரசு 1885இல் தோற்றுவிக் கப்பட்டது.

முஸ்லிம் லீக், 1906இல் தோற்றம் பெற்றது; அனைத் திந்தியக் கட்சியாக 1940வாக்கில் அது மலர்ந்தது.

திராவிடர் இயக்கம் என்கிற “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” 22.11.1916இல் நிறுவப்பட்டது. அது சென்னை மாகாணத்தில் மட்டும் செயல்பட்டது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 26.12.1925இல் நிறுவப்பட்டது. அது அனைத்திந்திய அளவிலான கட்சி.

“பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம்” 26.12.1926இல் நிறுவப்பட்டது. சென்னை மாகாணத் தில் தோன்றிய அவ்வியக்கம், தமிழகத்தில் மட்டுமே களப்பணி ஆற்றியது.

திராவிடர் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து “திராவிடர் கழகம்” என 1944 ஆகத்தில் பெயர் மாற்றம் பெற்றது.

தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் நீதிக்கட்சி என்றும் அழைக்கப்பட்டது.

அக்கட்சி, பிரிட்டிஷார் 1919இல் அளித்த அரசியல் இரட்டை ஆட்சி அதிகாரத்தின்படி, 17.12.1920 முதல் 1937 மே வரையில் சென்னை மாகாணத்தை ஆண்டது.

அக்கட்சி சென்னை மாகாணத்தின் பல பகுதி களை மட்டுமே ஆண்டது. அதில், சுதேச அரசுள் சில தனியே இருந்தன. அக்கட்சி அனைத்து இந்தியா வையும் செயல்படுகளமாக எப்போதும் கொள்ள வில்லை. இந்திய அரசைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கைக் கொள்ளவில்லை.

“பார்ப்பனரல்லாதார்” பிரிட்டிஷ் இந்தியா முழுவதிலும் இருந்தார்கள்; பிரிட்டிஷார் வெளியேறிய பிறகும் இருக்கிறார்கள்; இனியும் இருப்பார்கள். இதைக் கணக்கில் கொள்ளவில்லை.

இந்துக்களை அன்னியில் இந்துக்கள் அல்லாத - இஸ்லாமியர், சீக்கியர், கிறித்துவர், பௌத்தர், சமணர் முதலானோரும் இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள்.

“திராவிடர்கள்” வடக்கே ஒரிசா வரை ஆதிகாலந் தொட்டே  இருக்கிறார்கள்.

திராவிட மொழிகளைப் பேசுவோர் விந்திய மலை வரை பரவியிருக்கிறார்கள்.

திராவிடர் கட்சி மாகாண ஆட்சியிலிருந்த போது வெளியிடப்பட்ட “JUSTICE” ஆங்கில நாளேடு அனைத் திந்திய அளவில் வெளிவர ஏற்பாடு செய்யப்பட வில்லை.

சுயமரியாதை இயக்கம் 1928இல் நடத்திய “REVOLT” ஆங்கிலக் கிழமை இதழும் அனைத்திந்திய அளவில் வெளிவரவில்லை.

பெரியார்  அவர்கள் 1928இல், சென்னையில் நடை பெற்ற “தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில்” -“நம் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக ஆக வேண்டும்” என்று முதன்முதலாகக் கருத்தறிவித்தார்.

1937 தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசு வெற்றி பெற்றது. நீதிக்கட்சி தோல்வி அடைந்தது.

அப்போதும் “நீதிக்கட்சி அனைத்திந்தியக் கட்சியாக வளர வேண்டும்” எனப் பெரியார் அறிவித்தார், (“குடி அரசு”, தலையங்கம், 21-2-1937).

ஆனால் அப்போதும்-பிறகு எப்போதும் அதற்கான முயற்சியை அவரோ அவரது பிறங்கடைகளோ அல்லது 1949இல் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகமோ, 1972இல் தோன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ - அனைத்திந்தியக் கட்சிகளாக உருவாக்கப்பட முயற்சிக்கவில்லை.

‘இந்தி’யை எதிர்ப்பதில் அக்கறை கொண்ட திராவிடப் போர்வையைப் போர்த்திக் கொண்ட கட்சிகள் - (வருண) சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, இந்தி ஆதிக்க ஒழிப்பு, விகிதாசார வகுப்புரிமை பெறல் என் பவை அனைத்திந்தியச் சிக்கல்கள் என்று புரிந்து கொள்ளவே இன்றுவரை முயற்சிக்கவில்லை.

இக்கட்சிகளுள் 1937இல் 9 மாகாணங்களை ஆண்ட இந்திய தேசிய காங்கிரசு, 1946 முதல் 1967 வரை ஏறக்குறைய இந்தியா முழுவதையும் ஆண்டது.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி முதன்முதலில் 1957இல் கேரள மாநில ஆட்சியைக் கைப்பற்றியது.

1967க்குப் பிறகு, சி.பி.அய்., சி.பி.அய்.(எம்) முதலான இருகட்சிகளும் மாறி, மாறி கேரள மாநில ஆட்சியை நடத்தின.

ஆனால், 1952 முதல் 2014 வரையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒருபோதும் எல்லாப் பொதுவுடைமைக் கட்சிகளும் சேர்ந்து நாடாளுமன்ற மக்கள் அவையில் 100 உறுப்பினர்கள்கூட வெற்றி பெற்றுவர முடியவில்லை.

பொதுவுடைமைக் கட்சி ஆட்சி கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களோடு நின்றது.

அக்கட்சிகள் என்ன வேலைத் திட்டங்களை மேற் கொள்ளத் தவறிவிட்டார்கள் என்பதை இனியாவது பொதுவுடைமையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரசு, அகாலிதளம், சமாஜ்வாதி, ஜனதாதளம், சனதா, தேசியவாதக் காங்கிரஸ் முதலா னவை பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் என்கிற அளவில் மட்டுமே உண்மையில் வடிவம் பெற்றுள்ளன.

இந்நிலையில், பல மாநிலங்களில் பதவிக்கு வர முடியாத நிலைக்கு முதன்முதலாக 1967இல் காங்கிரசு ஆளாயிற்று, 1977இல் ஜனதா, ஜன சங்கம், லோக் தளம் கூட்டுச் சேர்ந்து 1979 திசம்பர் வரை இந்திய அரசை ஆண்டன.

1980-1989 வரை காங்கிரசும், 1989-90இல் வி.பி. சிங்கும் இந்திய ஆட்சியை ஆண்டனர். 1991-1996 வரை காங்கிரசுக் கட்சியுடன் பல மாநிலக் கட்சிகள் சேர்ந்த கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இடை யில் மாநிலக் கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு பாரதிய சனதாக் கட்சி 1999-2004இல் இந்தியாவை ஆண்டன. 2004 முதல் 2014 தொடக்கம் வரை மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரசு ஆட்சி நடைபெற்றது.

இதுவரையில் நடைபெற்ற எல்லாக் கட்சிகளின் ஆட்சிகளும் முதலாளிகளின் ஏகபோகச் சுரண்டலை வரவேற்று நிலைப்படுத்திய ஆட்சிகளே.

இந்திய ஒருமைப்பாடு என்கிற பேரால் “ஒற்றை இந்தியா” உடையாமல் ஒரே ஆட்சியின் கீழ் இந்தியா என்கிற துணைக் கண்டம் தொடர்ந்து இருக்கச் செய்வதே.

இதை எதிர்த்து ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற கோரிக்கைக்காக இந்தி கட்டாயப் பாடம் ஆக 11-9-1938இல் ஆக்கப்பட்டதை எதிர்த்த போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. குரல் கொடுத்தார்.

25-10-1939இல், பிற திராவிட மொழித் தலைவர் கள் அவரிடம் இதுபற்றிக் கேட்டவுடன், 17-12-1939 இல் “திராவிட நாடு திராவிடருக்கே” என மாற்றிக் கொண்டார். ஆனால் 30-4-1942இல் பெரியார் தலைமையில் கிரிப்ஸ் தூதுக் குழுவைச் சந்தித்த நால்வர் குழு, “பிரிட்டிஷ் அரசு, தமிழ்பேசும் மாகா ணத்தை மட்டும் தில்லி ஆதிக்கத்தலிருந்து பிரித்து, பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவர வேண்டும்” என்றே கோரியது. இதில் “சுதந்தரம்” என்பதாக ஒன்றும் இல்லை.

மேலே கண்ட கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு 1945 சூலையில் நிராகரித்தது.

அப்போதுதான், திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் 30-9-1945இல் “பிரிட்டிஷ் முதலான வெளியார் ஆதிக்கம் ஒழிந்த தனிச் சுதந்தர திராவிட நாடு தான் தி.க.வின் குறிக்கோள்” எனத் தந்தை பெரியார் அறிவித்தார்.

8-1-1940இல் பம்பாயில் முகமது அலி ஜின்னா வைச் சந்தித்த பெரியார், “எப்போதும் இந்தியாவுக்கு ஒரே அரசியல் நிர்ணய சபை என்பதை ஏற்காதீர்கள்” என்று அவரிடம் கூறினார்.

அதன் பின்னர் 1940 மார்ச்சில், “பாக்கித்தான் பிரிவினையை முன்வைத்த ஜின்னா அவர்கள், பாக்கித்தான் தனி நாட்டை 1947இல்” அடைந்தார்.

“15-8-1947 இந்தியாவுக்கு சுதந்தர நாள் தான்” எனக் கூறிய அறிஞர் சி.என்.  அண்ணாதுரை, 17-9-1949இல் “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற தனி அமைப்பை நிறுவிய போது, “அடைந்தால் திராவிட நாடு; இல்லாவிட்டால் சுடுகாடு” என முழங்கினார்.

ஆனால், அவரே தில்லி மாநிலங்கள் அவையில், “திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை தி.மு.க. கைவிட்டுவிட்டது” என்று 1963இல் அறிவித்தார்.

அதன்பிறகாவது, தி.மு.க. அனைத்திந்திய அரசியல் கட்சியாக மாறி, இந்திய அரசைக் கைப்பற்றி திராவிட இயக்கத்தின் மூலக்கொள்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கத் தவறிவிட்டார். ஏனெனில் திராவிடர் இயக்கத்தின் மூலக் கொள்கை (வருண) சாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, இந்தி ஆதிக்க ஒழிப்பு இவை ஆகும்.

இந்திய அரசைக் கைப்பற்றாமல் எந்தக் கட்சியும் எப்போதும் இவற்றை நிறைவேற்ற முடியாது.

காங்கிரசுக் கட்சி மேலே சொல்லப்பட்ட கொள்கை களை நிலைக்க வைக்கவே பாடுபட்டது.

சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா 1953இல் பிரிந்தது. மொழிவாரி மாநிலப் பிரிவினை காரணமாக 1956இல் கருநாடகம், கேரளா பிரிந்தன. எனவே 1-11-1956 முதல் 1973 வரையில் தந்தை பெரியார் “சுதந்தரத் தமிழ்நாடு” கோரினார்.

இப்போது 2014 தேர்தலில் காங்கிரசு படுதோல்வி  அடைந்துவிட்டது.

பாரதிய சனதா கட்சி 2014 தேர்தலில், திட்டமிட்டு, 543இல் 284 இடங்களைக் கைப்பற்றிவிட்டது. எந்த மாநிலக் கட்சியையும் கூட்டுச் சேர்க்காமல் தனிக்கட்சி ஆட்சியை இந்தியாவில் அமைத்துவிட்டது.

அண்மையில் 17-7-2017இல் நடைபெற்ற இந்தியக் குடிஅரசுத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ராம்நாத் கோவிந்த் என்பவரைக் குடிஅரசுத் தலைவராகவும், அடுத்து 5-8-2017 அன்று நடந்த தேர்தலில் வெங்கய்ய நாயுடுவை குடிஅரசுத் துணைத் தலைவராகவும் ஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதாவில் தோய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத் துக் கொண்டது, இன்றைய ஆளும் பாரதிய சனதாக் கட்சி.

I. எல்லா அதிகாரங்களையும் முற்றாகப் பெற்றுவிட்ட பாரதிய சனதாக் கட்சி.

II. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு கூறுகளையும் கொண்டது வல்லரசு என்பது வள்ளுவர் கொள்கை.

“இந்தத் தன்மையிலான இந்திய அரசை அமைத்து-இராமராஜ்யத்தை கி.பி.2000இல் அமைக்க வேண்டும்” என, 1948 பிப்ரவரியில் பூனாவில், ஆர்.எஸ்.எஸ். இரகசியக் கூட்டத்தில் முடிவெடுத்தது.

அந்த இலக்கை அடைவதற்கு இந்தியா முழு வதிலும் சமுதாயத்தின் எல்லா உறுப்புகளிலும் (அங்கங்களிலும்) ஊடுருவி, எல்லாத் தரப்பினரிடமும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்றும் அன்றே முடிவெடுத்தது.

இப்போது இராமராஜ்ய அமைப்பை நோக்கி இந்திய அரசு செயல்படும்.

அதைத் தடுக்க விரும்பும் அமைப்புகள் என்னென்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் எந்த மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்றாலும்,

1. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒருமைப் பாடு என்கிற பேரால் - ஒரே கலாசாரம் அல்லது பண்பாட்டைப் புகுத்துதல், பன்முகத் தன்மையை ஒழித்தல், பழக்கவழக்கச் சட்டத்தைக் காத்தல் இவற்றுக்கு வலுச்சேர்க்கும் எல்லாக் கூறுகளை யும் அடியோடு மாற்றுதல் வேண்டும்.

2. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் அவன வனுடைய தாய்மொழி வழியில் எல்லா நிலைக் கல்வியும் தரப்பட உரிமை உள்ளவனாக வாழ வழிகாண வேண்டும்.

இந்திய மொழிகளில் எல்லாத் துறை அறிவியல் மற்றும் கலைகளையும் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்க இந்திய அரசும், மாநில அரசுகளும் வழி காண வேண்டும்.

3. கல்வித் திட்டத்திலிருந்தும், அரசின் நடப்பிலிருந் தும் மதம் அறவே பிரிக்கப்பட வேண்டும்.

4. இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி அல்லது அலுவல் மொழி என்பது (Official Language) உடனே ஒழிக்கப்பட வேண்டும்.

இதற்கு உடன்பாடான எல்லாக் கட்சிகளும், வெகு மக்கள் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து-பாரதிய சனதா வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, அதே குறிக் கோளுடன் ஒருதலைமுறைக்காலம் பாடுபட வேண்டும்.

திராவிட வாக்குவேட்டை அமைப்புகள் - காங்கி ரசுடன் கூட்டு, பாரதிய சனதாக் கட்சியுடன் கூட்டு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்கிற திரைப்பட நடிகர் களுடன் கூட்டு என்று போனால் - 2019 தேர்தலோடு அவர்களின் வரலாறு முடிந்துவிடும்! எல்லோரும் சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!