1.  இராமன் முள்ளிப்பள்ளம், மைசூர்

“ ஸ்மைல் ப்ளீஸ் “ இந்த புதினத்தைப் படிக்கையில் எனக்கு தோன்றியது : சிந்தியுங்கள் ப்ளீஸ் : என்ற சொற்களே.

கிருஷ்ணன் தென் இந்தியா முழுவதும் பந்தாடப்படுகிறான். இது ஒரு வாழ்வு. ஸ்போர்ட்ஸ் வாழ்வு. அவன் தலித் என்பதால்.

கிருஷ்ணன் வாழ்வு அப்படி. அவன் போட்ட தேநீர், அவன் தொட்ட பணம்,அவன் தொட்ட உணவுப் பொட்டலம் எல்லாம் தூக்கி குப்பையில் வீசப்படுகிறது. ஏனெனில் அவன் பிறப்பு அப்படிப்பட்டது. சரி திருப்பூரை விட்டு ஹைதராபாத் சென்றால் போதையின் உச்சத்தில் ரமேஷ் கூட அவனை இழிவு படுத்துகிறான். ரமேஷ், இராஜ்குமார் கிருஷ்ணன் மூவரும் செகந்திராபாத் மோண்டா மார்க்கெட் அருகே லாட்ஜில் ரூம் போட்டு தங்கி ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று குரூப் போட்டோ எடுக்கின்றனர்.அவர்கள் தொழில் தொடர்பாக செல்லும் பள்ளிகளுக்கு மட்டுமல்ல.அவர்கள் பொழுது போக்காக போகும் எல்லா இடங்களுக்கும் நம்மையும் அழைத்துச் செல்கிறார் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன்.

செகந்திராபாத் க்ளாக் டவர் அருகே,அல்லது டேங்க் பண்டில் கடலை விற்கிறான் ஒருவன். மூங்கில்கூடையில் கடலை பரப்பி மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி கடலை விற்கிறான். அவர் வர்ணிப்பதில் நாம் காண்பது கடலை மட்டுமல்ல மண்ணெண்ணெய் விளக்கின் மணத்தையும் உணர்கிறோம். கிருஷ்ணன்கருப்பு. சமஸ்கிருத மொழியில் கிருஷ்ணா என்றால் கருப்பு. நம் நாயகன் கிருக்ஷ்ணனும் கருப்பு. அவன் ஆழ் மனதில் எப்போதுமே ஒரு கனவு தேவதை வருகிறாள். அவனை வாட்டுகிறாள். ஆனந்த பவனில் சிற்றுண்டி உண்ணுகையில் வரும் தமிழ்ப்பெண், மோண்டா மார்க்கெட் காய்கறி சந்தையில் அவன் முரட்டுக் காளையிடம் இருந்து காப்பாற்றும் தமிழ்ப் பெண் இன்னும் பலர் நனவிலும் கனவிலும் அவனை பாதிக்கின்றனர்.

ஆனால் நேர்மையான அவன் தன் நிறத்தை அவ்வப்போது பார்த்து தனக்கும் பெண் கிடப்பது ஒரு சூதாட்டம், என நினைக்கிறான், குடும்ப வாழ்வே ஒரு சூதாட்டம் என கருதுகிறான்.

திடீரென நம்மை மோண்டா மார்க்கெட் சந்தடியிலிருந்து இயற்கை அழகு சூழ்ந்த கேரளா அட்டப்பாடியில் வீசி எறிகிறார் ஆசிரியர். நம் உடலுக்கு அடிபடவில்லை. ஆனால் உள்ளம் கொந்தளிக்கிறது. ஆனந்த கொந்தளிப்பு. மக்கள் நெரிசல் மிக்க ஹதராபாத் செகந்திராபாத் காட்சியிலிருந்து நாம் கேரளாவின் சோலைகளுக்கு வருகிறோம். போட்டோ கிராபராக இருந்த கிருஷ்ணன் சினிமா ப்ரொஜெக்டரை தூக்கி கொண்டு அலைகிறார். பல ஊர்களில்,கிராமங்களில், காட்டுப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கு படம் போட்டு காட்டுகிறார் கிருஷ்ணன். அவரது எண்ணங்கள், மனத் திரை காட்சிகளே நீண்ட கதையாகிறது. பேருந்தில் பயணிக்கையில் சக பயணிகள் உரையாடலை கிருஷ்ணன் கேட்கையில் நிலம் அபகரிக்கப்படும் செய்திகள், சிறுவன் ஒருவன் கைப்பிடி அரிசி எடுத்ததற்காக அடிக்கப்படுவது ஊர்த் திருவிழா செய்திகள் அனைத்தையும் நாம் அறிகிறோம். கிருஷ்ணன் வாயிலாக நாம் சமூகத்தை பார்க்கிறோம். ஆம் ஹைதராபாத் அரசியலையும் பார்க்கிறோம் ரம்ஜான் அல்லது விநாயகர் ஊர்வலம் வைத்து ரகளை செய்கின்றனர் அப்பாவி மக்களை கொன்று முதலமைச்சரை மாற்றுகின்றனர். எல்லாமே சிந்தனைகளின் தொடர்ச்சி, எண்ணங்களின் நீரோட்டம்.

. ரமேஷ் கஞ்சா சிகரெட் பிடித்து கலர் கலர் கனவு காண்கிறார். ஆனால் கிருஷ்ணன் நனவே ஒரு வானவில், ஏழு நிறங்களை கொண்டது. ஹைதராபாத் லாட்ஜில் சிகரெட் வாடையை முகரும் நாம் அட்டப்பாடியில் சாராய வாடையை முகருகிறோம் மனிதனின் விசித்திரமான அசிங்கங்களோடு இயற்கை அழகையும் காட்டுகிறார். கிருஷ்ணனை படைத்த ஆசிரியரும் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர். எழுத்துக்களின் மூலம் காட்சிகளை காட்டுகிறார்.

கடுங்குளிர் கேரள வனப் பகுதியில் போர்த்திக் கொள்ள சாக்கு தருகின்றனர் ‘’ போர்வை இல்லையா’’ எனக் கேட்கிறார் கிருஷ்ணன் ‘’ சாதி அறியாமல் போர்வை இல்லை’’ என்கின்றனர். நீர் கேட்கிறார் கிருஷ்ணன் சாதி அறியாமல் நீர் இல்லை என பதில். கிருஷ்ணனின் தொடர்ந்த சிந்தனைகளே கதை.

ஒரு முறை ப்ரொஜெக்டர் இல்லாமல் கேரளா வருகிறார் கிருஷ்ணன். புற்று நோய் பீடிக்கப்பட்ட பொன்னம்மாளை குணப்படுத்த இயற்கை மருத்துவரிடம் அழைத்து வருகிறார். நமக்கும் ஏராளம் செய்திகள் கிடைக்கின்றன. கிளிகள், மயிகள், புளியங்காய்கள், அடர்த்தியான பூமி, மேயும் ஆடு மாடுகள் பொன்னம்மாளுக்கு அருள் தந்தன. எல்லோரும் கடவுள் தரும் அருள் குறித்து எழுதுகிறார்கள்.ஆனால் சுப்ரபாரதி மணியன் அவர்கள் இயற்கை தரும் அருள் குறித்து எழுதுகிறார்.

தமிழன் பாண்டிய நாட்டான் கேரளாவில் சினிமா காட்டக் கூடாது என துரத்துகின்றனர். ஆனால் கிருஷ்ணன் ஓடுபவரல்ல. மீண்டும் திருப்பூர். மீண்டும் போட்டோ கிராஃபர் தொழில். நேபாளப் பெண்ணை போட்டோ எடுக்கிறார். அவளைச் சுற்றி வருகிறார். நாளடைவில் அவளும் அவரைச் சுற்றுகிறாள். சினிமா பாணியில் ஒரு நாள் இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்வதை காட்டுகிறார். எப்போது ஐ லவ் யு சொன்னார்கள் எப்போது திருமணம் ஆனது எதையும் காட்டாமல் அவர்கள் குடும்பத்தை காட்டுகிறார். கதையில் வரும் இராமசந்திரனுக்கு பல பெண் தோழிகள் ஆனால் கிருஷ்ணன் ஏக பத்தினி விரதன். இது மட்டும் நகை முரண் அல்ல தனது கருத்த நிறத்தை நொந்து கொண்ட கிருஷ்ணன் சிவத்தஅழகியான நேபாள பெண்ணை மணப்பதும் ஒரு நகை முரண். கனவுக்கன்னி நனவில் வந்தாள்.

கிருஷ்ணனின் வாழ்வு ஒவ்வொரு சராசரி ஓரம் கட்டப்பட்டவனின் வாழ்வு. கிருஷ்ணனுடன் சேர்ந்து பணியாற்றிய ரமேஷும், இராஜ்குமாரும் திணறி ஆடுகையில் கிருஷ்ணன் மட்டும் ஈர்ப்பு சம நிலை தடுமாறாமல் தொடர்ந்து முன்னேறுகிறார். அவன் மீது காட்டப்பட்ட காழ்ப்புணர்ச்சி அவனை உந்தி மேலே உயர்த்துகிறது. அனலை மின்சாரமாக மாற்றுவது போல. அவன் மூலம் தொழிலாளி வர்க்க அரசியல், முதலாளிகளின் சொகுசான வாழ்க்கை முறை அனைத்தையும் பார்க்கிறோம்.

எண்ணங்களின் தொடர்ச்சியே கதை, காலம், இடம், பயணம் மாறி மாறி நம்மை தட்டாமலை ஆட்டுகிறது. வாழ்க்கையே அப்படித்தானே. ஆனால் எல்லா காலத்திலும். எல்லா இடங்களிலும் எல்லா பயணங்களிலும் கிருஷ்ணன் தொடர்கிறான். அவன் சிந்தனைகளில், அவன் எண்ணங்களில் நாம் பல ரக வாழ்க்கையை பார்க்கிறோம்.

இலக்கியம் பத்தாம் நூற்றாண்டு மன்னர் பெருமை காட்டுவது அல்ல. நமது கால மக்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை காட்டுவதே நீதி சார்ந்த இலக்கியம். ஆம் இலக்கியத்திலும் அநீதி சார் இலக்கியம் நீதி சார் இலக்கியம் உள்ளது.

அந்தப் பணியை திறம்பட செய்துள்ளார் ஆசிரியர் சுப்ரபாரதி மணியன் அவர்கள். இந்த நூல் தமிழ் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.

- இராமன் முள்ளிப்பள்ளம், மைசூர்

( இராமன் முள்ளிப்பள்ளம், சிறுகதைகள் , நாவல்கள் என்று 8 நூல்கள் வெளியிட்டுள்ளார். பாரதி புத்தகாலயம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன)

2. ஸ்மைல் ப்ளீஸ் – கேள்விகளால் நிரம்புகிறது: முத்தழகு கவியரசன்

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் படைப்புகளை இந்தச் சட்டகத்திற்குள் தான் அடைக்கப்பட வேண்டும் என்ற முடிவிற்குள் வருவது சுலபமல்ல. எல்லா வகையான மையக் கருக்களைத் தன் படைப்புகளுக்குள் கொண்டு வருகிறார். முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவைகள், அவரின் எழுத்து. நகர வாழ்க்கையில் மனிதர்கள் படும் அவலங்களைப் பல படைப்புகள் பேசியிருக்கிறது. சாயங்களினால் மக்கள் அவதிப் படுவது தெரிந்தாலும், அதைத்தவிர வேறுவழியில்லை என்னும் கதியில், துயரங்கள் வாழ்க்கையை விழுங்கி விடுகிறது.

கதையின் மையங்களை எடுத்தாளும் போது, சிக்கலான பார்வை அல்லாமல், ஒரே குத்துவெட்டுப் பார்வையில் அவை அமைந்திருக்கும். ஆனால், அம்மையக் குத்து வெட்டு கதாபாத்திரங்களின் வழியாக, அதோடு தொடர்புக்கொண்டு செல்கிற இடமெல்லாம் புதியக் காட்சிகளையும், அதற்கான களத்தையும் விவரித்து, ஒரு முழுமையான கேள்வி வளையத்திற்குள் அப்படைப்பை உருவாக்கித் தருவார். அதற்குள், எல்லாவிதமான சுற்றுச்சூழல், மனநிலை வேறுபாடுகள், தனியார் அமைப்புகளின் ஒருசார்ப்பு நிலை, தொழிலாளர்களின் துயரங்கள், குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு, கொட்டடிமைத் தனம் முதலிய பல வகையான பொருண்மைகளை இணைத்திருப்பார்.

இவ்விணைத்தலின் பிம்பங்களாக, நம்முன் தோன்றுவது கேள்விகளே. ஏன் மனிதர்கள் இப்படியாக இருக்கிறார்கள். யார் இச்சூழ்நிலைக்குள் தள்ளியது. அளவுக்கு அதிகமாக இலாபம் ஈட்டினாலும், தொழிலாளர்களின் துயரத்திற்கான, உயர்விற்கான கேள்விக்குப் பதில் அங்கில்லை. அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் அவர் கொண்டு வந்திருக்கும் படைப்பு ஸ்மைல் ப்ளீஸ்.

இந்நாவல் துயரங்களிலேயே ஊறிப் பின் இன்பவியலின் முடிவிற்குள் காலடி எடுத்துவைக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலங்களில், பெறப்படும் தகவல்கள் ஒரு சமநிலைத் தன்மைக்கு வராமல், முரண்டு பிடித்திருக்கிறது. தொடக்கமே காக்கையொன்று தன் கூட்டிற்காக அலறுகிறது. மரங்கள் வெட்டப்படுகிறது.

ஒரு கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு அதன் வழியாக, எல்லாவற்றையும் வாழ்வியலோடு ஒரு பெரிய திரைப்படத்தை உருவாக்கிக் காட்டுவதென்பது அசாத்தியமான ஒன்று. மூன்று பிரிவாக, முப்பத்திரண்டு அத்தியாயங்கள் இடம் பெற்றிருக்கிறது. எண்பதுகளின் காலத்தை உள்ளடக்கிய இந்நாவல் பல்வேறு இடங்களில் பலரின் அனுபவத்தை வாசிக்கக் கொடுக்கிறது. ஒருப்பக்கம் வறட்சியான, கண்ணிற்கு இணக்கமில்லாத மக்களையும், ஊர்களையும் காட்சிப்படுத்தினாலும், அடுத்துக் காட்டப்படும் நிலப்பரப்புகள் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. கேரளாவிற்கே பயணம் செய்வதுபோல் உள்ளுணர்வில் புதுமையைக் கொண்டு வந்துவிடுகிறது.

அதேநேரத்தில் மன அழுக்குகளைப் பாத்திரங்களின் வழியாக கடத்தியது ஒரு வகையென்றாலும், பிறரை ஏமாற்றுவது – அதன் வழியாக உயர்வு நிலைக்கு தங்களைத் தயார் செய்வது, போலியான பிம்பத்தையும் எடுத்துக் காமிக்கிறது.

சாதி ரீதியான பார்வை, அடக்கு முறை மனித வாழ்வில் எளிமையாக அதன் தாக்கம் செயல்படுகிறது. செகந்திராபாத் நகரத்தின் இட அமைப்பும், மக்களின் இயல்பான அரசியல் அறிவு, சினிமாக்காரர்கள் வந்தால் யாருக்கு என்ன பிரயோஜனம். அவர்கள் வருவதற்கு வேண்டுமென்றால் கலவரங்களும், வன்முறையும், யாரென்று தெரியாத ஒருவர் உயிர்பலி ஆவதும்தான் நடந்தேறும். மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் அமையாது என்னும் உரையாடலும், அக்காலக்கட்ட மக்களின் மனநிலை இப்படியாகத் தொடங்குகிறது.

தாழ்த்தப்பட்டவன் என்று அரசாங்கம் முத்திரைக்குத்திய ஒருவனின் வாழ்வு போராட்டம், எல்லா இடங்களிலும் சிதைபடுகிறது. கிருஷ்ணன், ரமேஷ், இராஜ்குமார் இம்மூவரும் செகந்திராபாத்திற்கு போட்டோ எடுக்கச் செல்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடம் சென்று, அதுவும் தனியார் பள்ளிக்கூடம் தான் அவர்களின் முதன்மைத் தேர்வும் கூட. ஏனென்றால் பணம் கட்டாயம் கிடைத்துவிடும். அரசுப் பள்ளியென்றால் கிடைப்பது சிரமமே என்று புரிந்துகொள்கிறார்கள். பிர்லா மந்திர், மோண்டோ காய்கறிச் சந்தை என பல இடங்கள் காட்சிக்குள் வருகிறது.

இதில் சில பகுதிகளைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அதாவது சீனிவாச இராமானுஜம் மற்றும் ராஜ்குமாரின் இடையேயான உரையாலும் கவனிக்கப்பட வைக்கிறது. பிராமணர்கள் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்குப் பேசப்படும் மொழியினைக் கற்றுக்கொள்கிறார்கள். பிழைக்கவும் செய்கிறார்கள். தமிழர்கள் அப்படி அல்ல. தள்ளாடுவார்கள். அவர்களுக்கு அது கடினமாகப் போய்விடுகிறது.

சிலப் பகுதிகளுக்கு, குறிப்பிட்ட சாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் கிடைக்கிறது. காலமாற்றம் அதை நீக்கியது என்றாலும் கேள்விக்கு உள்ளாக்கவே முனைகிறது. போட்டோ எடுத்து, வருமானத்தை ஈட்டும் நினைப்பு இலாபகரமாக இல்லை. மற்ற நேரங்களில் தங்கியிருக்கும் லாட்ஜில் சீட்டாட்டம் வெகு விமர்சையாக களைக்கட்டும். ரமேஷ் அதில் ஐக்கியமாகிறான். புதியவர்கள் அறிமுகம் இராஜ்குமாருக்கு பெருங்கவலை முடிவில் வந்துவிடுகிறது. அவர்களின் வழியாக போதைப் பொருளுக்கு ஆட்படுவதை நினைத்து. இப்படி அடுக்கடுக்காக சம்பவங்கள் கதைக்குள் ஊடுபயிராக இணைத்துக்கொண்டே செல்கிறது.

அயல் தேசங்களுக்கு வேலை நிமித்தமாக செல்லும் போது மொழிப் பிரச்சனை கட்டாயம் வரும். தபால் அலுவலகத்தில் மணியாடர் அனுப்பும் போது கிருஷ்ணன் மீது ஒரு கரிசனத்தை ஏற்படுத்தி விடுகிறது. தொடக்கக் காலத்தில் பனியன் கம்பெனியில் சாதியை முன்வைத்து அவன் முதலாளி தொடுக்கும் வார்த்தைக் கடுப்புகள், பாதிப்புக்கு உள்ளாக்க வைக்கிறது. அதன் பலனாகத் தன்னுடைய சித்தப்பாவை இழந்ததுதான் மிச்சம். தொழிற் நகரங்களில் சாதியப் பாகுபாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும், மறைமுகமாக, அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே, அங்கிருந்து விடுபட்டு இந்தத் தொழிலில் இவர்களோடு பயணம். கற்றும் கொள்கிறான். வாரச் சம்பளம் எதிர் பார்ப்பது சரிபட்டு வராது. இவ்வேலையில் வருமானம் வித்தியாசமானது. பணம் வீட்டிற்கு அனுப்ப ஏதுவாக இராஜ்குமாரே உதவி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் கலவரங்கள் அரங்கேறுகிறது. யாரோ அரசியல் தலைவரைச் சுட்டுக் கொன்றதால் களபரம் ஆகிறது. போட்டோ எடுக்கப்போகும் பள்ளியும் அடைக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. இதற்குமேலும் இங்கிருப்பது, தாக்குப்பிடிப்பது கடினம் என்று ஊருக்குத் திரும்ப முனைகிறார்கள். இங்கே இராஜ்குமாரின் மன நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டிற்கு பணம் அனுப்ப உதவுகிறான். ஆனால், மறுநாள் கிளம்ப ஏதுவாக அனைத்தையும் தயார் செய்தாலும், மதுவோடு இறுதி நாளை நிறைவு செய்யலாம் என்று கருதி, சீட்டாட்டத்தோடு மதுவும் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது. அந்த விளையாட்டில் வெற்றிப்பெற்றவரை சவாரி தூக்க வேண்டும். மூட்டு வலியால் அவதிப்படும் ரமேஷ் வெற்றிப்பெற்றாலும், அங்கு கிருஷ்ணன் நீ கீழ்சாதி பயதான. மட்டமான சொற்களால் தாக்கப்படுகிறான். நன்குப் பழக்கமானவர்களானாலும், சாதிப் படிமநிலை ஆழ்மனதில் ஊறிப்போயே இருக்கிறது வேதனைதான். தன் வாழ்வில் அடுத்தக்கட்ட நகர்விற்குச் செல்லும் போதெல்லாம், வறுமையோடு சாதிய வலிகளையும் தாண்ட வேண்டிய சூழ்நிலை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

போட்டோகிராபர், சினிமா புரொஜக்டர் வைத்து கேரளாவில் பல இடங்களுக்குச் சென்று திரைப்படம் போட்டுக் காண்பிக்கும் வேலை, பின் அடுத்தக்கட்ட நகர்வென தன் வாழ்வு முன்னேற்றத்தைப் போராடி வெல்கிறான். சேப்பங்காடு பகுதிக்குச் சென்று படம் போடுகிறான். அங்கு காடுகளில் வேலைசெய்யும் தமிழர்கள் இருக்கிறார்கள். இரவு முழுவதும் படம் போடுகிறான். வருமானம் சொல்லும் படியாக இல்லை. கங்காணி ஒருவரின் ஆளுமையில் அடிமைத்தனமாக இருக்கிறார்கள்.

நிலப் போராட்டம் அங்கு நடைபெறுவது கதைக்குள் வருகிறது. பெரிய பாறைகளையும், நிலத்தையும் விவசாயத்திற்குப் பண்படுத்திய தமிழர்கள் வெளியேற வேண்டுமென நிலைமைக் கட்டுக்குள் வராமல் நீள்கிறது. அரசாங்கம் முட்டுகிறதே தவிர கேரள மக்கள் கூட சிலர் ஆதரவாக இருக்கிறார்கள் என்கிற தகவலோடு, ஆதிவாசிகளுக்கு நிலத்தை ஒப்படைக்கவும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மக்கள் மலேரியா மற்றும் நரபலிக் கொடுக்கப்பட்ட செய்தியும் வரலாற்றை ஆராய முனைகிறது. சரியான போக்குவரத்து இல்லை. பாகுபாடுகள் தண்ணீரிலும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு ஊராகச் செல்வது, அதுவும் கேரளா என்றால் பின்னாட்களில் சகித்துக் கொள்ளக்கூடிய மனமோடும், வெறுப்போடும் மாறிப் போகிறான், கிருஷ்ணன்.

சாதியத்தை வெளிக்காட்டல் : நாவலில் இதுபற்றியக் குறிப்புகள் அத்தியாயங்களுக்குள் விரவிக் கிடக்கின்றன. அவற்றில், நாங்கள் காலம் காலமாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டுமென்று, அந்நில உரிமையாளர் கிருஷ்ணனின் அண்ணன், அண்ணி குடும்பத்தை வெளியேற்ற முற்படுகிறார். அண்ணியின் மறுப்புப் பதிலாக பத்தாயிரத்தை நோக்கி எதிர்பார்க்கிறாள். இதனால் சிறிய பிரளயம் வெடிக்கிறது. குடும்ப வறுமை, உடன் இணைந்த ரமேஷ், ராஜ்குமாரின் வாழ்வின் போக்கும் வெவ்வேறு கோணத்திற்குச் செல்கிறது.

இருப்பினும் முதன்மைக் கதாபாத்திரமாக வரும் கிருஷ்ணன் எங்கெங்கெல்லாம் செல்கிறானோ, அங்கெல்லாம் கதையின் வீரியம் விரிகிறது. அது அவனுக்கு ஒரு பாடமாகவும் சொல்லிக் கொடுக்கிறது. அந்த வகையில், “அந்த சக்கிலிய எதுக்கு பேங்க் கூட்டிட்டுப் போற. சிவக்கண்ணன் பொறியில் மாட்டிக்கொண்டவன் போல விழித்தான். அவன் கழுத்தில் லேசாக வியர்வை வழிந்தது. பேங்குகூட்டு போறதுன்னு விவஸ்தை இல்லையா. அந்த சக்கிலி பையன் லட்சுமிகரமான பணத்தையெல்லாம் தொட்டுட்டு வந்து நமக்கு தரதா”பக்21. அதைப்போன்று, மலையாளிகளுக்குப் படம்போட்டு காட்டினாலும், அம்மக்களின் வேறுபாடான மனமும் கவனிக்க வைக்கிறது. “ஏன் ஒரு போர்வை கொடுக்க மாட்டீங்களா”. கொடுக்கலாம். நீங்க என்ன சாதிசனம் தெரியாது. குடுத்து என்ன பண்றது. எல்லாம் கூட பழகி விசாரித்துதான் இருப்பாங்களா. என்ன சாதியா இருந்தாலும், ஒரு முறை இருக்கு இல்ல”பக்106. இரவுப்பகலாக அலைந்தவனுக்கு மாண்பு என்பது பறிக்கப்பட்டிருக்கிறது. “என்ன வேண்டும் என்றாள். தண்ணீர்.. வெள்ளம்.. மீண்டும் குடிக்க என்றான். இருக்கு நீ என்ன சாதியோ. நாங்க எப்படி தண்ணீர் கொடுக்கிறது, குடிக்கிறது. நாங்க எல்லாம் கட்டுப்பாடாக இருக்கிறாங்க” பக்125. இவ்விதப் பாகுபாடுகள், முரண்கள் அதிகமாகவே சிதறுண்டு போயிருக்கிறது.

இறுதியாக, ஷர்மிலி – யோகநாதன்- ராமச்சந்திரன் - கீதா கணேசன் என பல பாத்திரங்களோடு பின்னி பிணைகிறது. இங்கேயும் முரண்கள் ஏராளமாக, குமரன் சிலை இடத்தில் நடக்கும் காட்சிகள் ஒருவிதமான ஆணாதிக்கச் சிந்தனையை கேள்விக்கேட்க வைக்கிறது. ஷர்மிலி நேபாள பெண்ணெனக் காட்டப்படுகிறாள். அவள் ஆட்டோ ஓட்டுகிறாள். இடம் பெயர்ந்து வரக்கூடிய மக்களுக்கு உண்டான பிரச்சனை. தங்கள் பகுதியில் இச்செயல்பாடு முழுமனதாக ஏற்றுக்கொள்ளாத, ஆண் ஆட்டோகாரர்களின் நிலையை உன்னிப்பாகக் கவனிக்க வைக்கிறது. இப்பிரச்சனையை எப்படியோ புகைப்படம் எடுத்தவன், நிருபர் ஒருவரிடம் விற்று விடுகிறான். நல்ல வருமானம். அடுத்த நாள் செய்திகளில் இப்புகைப்படம் வெளியாகியும், நான்தான் இப்புகைப்படத்தை எடுத்தேனென்று பலரிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறான். இவ்விசயம் வெளியே தெரிந்தால் ஆபத்து. உள்ளூர்காரன் என்றால் பரவாயில்லை. வெளியூர்காரன் என்பதால் பாதிப்பென ஒருவரின் மூலம் தெரியவர நிலைமையைப் புரிந்துகொண்டான். சமநிலை மனம் இங்கே கேள்விக்குறியாகிறது.

சாதிய மனநிலைக் கொண்ட பனியன் கம்பனி முதலாளியான மணிவண்ணன் இறப்பு நிகழ்வுக்கு கிருஷ்ணன் புகைப்படம் எடுக்கச் செல்கிறான். அங்கே இறந்தவனின் பேரனோடு சில உரையாடல்கள் – அதைச் சமூக சிந்தனைப் பின்னணியிலிருந்து, சிந்திக்க வேண்டியிருக்கிறது. தன்னையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அச்சிறுவன் விருப்பம் கொள்கிறான். ஆனால் இறந்து கிடப்பவரோடு அல்ல. அவரிடம் நிறைய புண்கள் இருக்கிறது என்று.

பணத்தால் செல்வ செழிப்பான வளர்ச்சி, வசதியான குடும்ப அமைப்பை உருவாக்கினாலும், சாதிய மனநிலை இல்லாமல், சிறுவயதிலிருந்து கிருஷ்ணனை, சிவக்கண்ணன் பேங்கிற்கு அழைத்துச்செல்லும்போது, அச்சொல்லைப் பயன்படுத்தாமல் மனிதநேயத்தோடு நின்றிருந்தால், பதிலும் – முடிவும் வேறொரு கோணத்தில் நிலைத்திருக்கும். புற்றுநோய்க்காக வைத்தியம் பார்க்க கேரளப் பகுதிக்கு வரும் பொன்னம்மாளை அம்மு குட்டி வரவேற்கும் விதமும், அதற்கு நேர்மாறாக பாண்டி நாட்டுக்காரன் எங்கள் பகுதிக்கு திரைப்படம் போட வரக் கூடாது என்று துரத்தும் நாட்டாமை ஒருவரின் போக்கும், இருநிலை மன இடர்பாடுகளை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிகமான, கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கிறது, இந்நாவலில். அது தேவையும் கூட.

- முத்தழகு கவியரசன், திருநெல்வேலி

(ஸ்மைல் ப்ளீஸ் நாவல் Rs 230 பரிதி பதிப்பகம் வெளியீடு , ஜோலார்பேட்டை 72006 93200)