writer noolagam"என் கதைகளில் கதைகளே கிடையாது. கதைகளில் இருந்து கதையைப் புறந்தள்ளியவை என் கதைகள்" என்று சொன்ன எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார் (ஜூலை 31, 2020).

ஒன்றுபட்ட தஞ்சையின் காவிரி தீரத்தில், 1940 ஜூலை 23இல் ஓர் வேளாண் குடும்பத்தில் பிறந்தார். வேளாண்மையும், நெசவும் செழித்த மயிலாடுதுறை - கூறைநாடு அவரது பூர்வீகம். "பூம்புகார் என் தாயார் வீடு, அந்தக் காலங்களில் சீர்காழி, பூம்புகார் போன்ற இடங்களைச் சுற்றியிருக்கிறேன்.

எங்களம்மா கூட பூம்புகாருக்கு காவேரிக்கரையோரமா நடந்தே போகிற பழக்கம் உண்டு. அங்குக் கண்ட இளமைக்கால நினைவுகள்தான் என் கதைகளில் வருகிறது" என்று அவரே தான் பிறந்து வளர்ந்த சூழலைக் குறிப்பிடுவார்.

பள்ளிப்பருவத்தில் சா. கந்தசாமியின் குடும்பம் சென்னைக்குப் புலம்பெயர்ந்தது. வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பயின்று, பின்னர் சென்னை மத்திய பாலிடெக்னிக்கில் ஆட்டோமொபைல் பட்டயப்படிப்புப் படித்தார். பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி.யில் பரிசோதனைக் கூடத்தில் முதலில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றி இணை இயக்குநர் நிலையில் விருப்ப ஓய்வு பெற்றார்.

சா.க. பதின் பருவம் தொடங்கி நூல்களைக் கற்பதில் ஆர்வமுடன் இருந்தார். வெ.சாமிநாதசர்மாவின் நூல்களை விரும்பி வாசித்ததைக் கூறுவார். 1964 தொடங்கி சென்னை கன்னிமரா நூலகத்தின் தீவிர வாசகராக இருந்தார்.

புத்தக வாசிப்பு போலவே ஓவியம் தீட்டுவதிலும் தொடக்கம் முதலே ஆர்வமுடன் விளங்கினார். பின்னர் சிற்பம், இசை, திரைப்படம், கலைகள் எனத் தன் எல்லைகளை விரிவாக்கினார். தமிழ்ச் சூழலில் இலக்கியத்தைப் பிற நுண்கலைகளோடு சேர்த்து அணுகியவர் அவர். அசோகமித்திரன் திரைப்படத்துறையை எழுத்தோடு இணைத்துப் பார்த்ததைப்போல சா.க. செயலாற்றினார். பெரியாரின் தொடர்புறவால் திராவிட இயக்கம், தமிழுணர்வில் சா.க. ஈடுபாடு கொண்டார். என்றாலும், இலக்கியத்தில் தனக்கெனத் தனித்தன்மையை நிலை நாட்டினார்.

சென்னை நண்பர்களுடன், ‘கசடதபற' இதழைத் தொடங்கி நடத்திய அனுபவம் இவரை நவீன இலக்கியத்தில் நிலை நிறுத்தியது. இவர் மௌனியின் தொடர்ச்சியாக தன்னைக் கருதியதுண்டு. சமூகம் சார் சிக்கல்களைக் காட்டிலும், மனித மனம் சார் சிக்கல்களை முதன்மைப்படுத்தினார்.

இவரது சிறுகதைகள் வித்தியாசமான களங்களைத் தொட்டது. பாலுணர்வு, மனவிகாரங்கள் பல கதைகளில் மையம் கொண்டன. தன் போக்கில் வாழ்க்கை நிகழ்வுகளை நடத்திக் காட்டியது இவரது எழுத்து.

1960களில் தமிழ் எழுத்துலகில் கலை கலைக்காக, கலை மக்களுக்காக என நிகழ்ந்த விவாதப் புள்ளியில் முகிழ்த்தது சா.க.வின் படைப்பு வாழ்க்கை, அவர் இரண்டுக்கும் நடுவாகவும், பாலமாகவும், ஒரு விதத்தில் பதிலாகவும், தன் படைப்புகளை அமைத்துக் கொண்டார் எனலாம்.

எனினும் புரிகிறமாதிரி எழுதுவது, வாழ்க்கையை நுணுகிப் பார்ப்பது, மக்களை, அவர்தம் மொழியைப் பதிவு செய்வது என்பதில் உறுதியாக இருந்தார்.

நிறைய நாவல்கள் எழுதினார், சாயாவனம். அவன் ஆனது, தொலைந்து போனவர்கள், ஏரிக்கரையிலே, எட்டாவது கடல், விசாரணைக் கமிஷன், சொல்லப்படாத நிஜம், வான்கூவர், இன்னொருமனிதன், ரம்பையும் நாச்சியாரும் போன்ற நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.

சா.க.வுக்கு முன் அடையாளமாக அமைந்தது ‘சாயாவனம்’ அவரின் முதல் படைப்பு. இருபது வயதில் எழுதியது. இலக்கிய வட்டம் வெளியீடாக வந்தது. அவரின் ஆகச்சிறந்த படைப்பு இது எனலாம். காவிரிக் கரையோரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் வேளாண் வாழ்விலிருந்து தொழிற்கருவி வாழ்வுக்கு மாறுவதை நுட்பமாகச் சித்தரிப்பார்.

கரும்பாலைச் சக்கரங்களில் அரைபடும் பல்லுயிர்களைக் கவனப்படுத்தினார். வனம் - காடு அழிவில் நாடு வாழுமா? எனும் உள்ளக் குமுறலை சூழலியல் கவனம் பெறாத 1970களில் மையப்படுத்தியது நாவல். நகரம் x கிராமம், வேளாண்மை x தொழிற்சாலை என்ற முரண்கள் பண்பாட்டு நிலவியல் அடையாளங்களுடன் துலக்கம் பெற்றது.

1998-இல் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ‘விசாரணைக் கமிஷன்’ இன்றைய நம் அதிகார வர்க்கம் பற்றிய விசாரணையாக அமைந்தது. ஓர் எளிய குடும்பம் காவல், நீதி, தொழிற்சங்கம், சமூகம் ஆகியவற்றால் எப்படி அலைக்கழிக்கப் படுகிறது என்பதை அவரவர் நியாயங்களுடன் வெளிப்படுத்தும் நாவல் இது.

மனித உணர்வுகள், மனச்சிக்கல்கள், முரண்பாடுகள், நடுத்தட்டு மக்கள் உணர்வுகள், ஏழை, எளிய, உதிரிப்பாட்டாளிகள் நிலை ஆகியவற்றை இவர்தம் கதைகள் பிரதிபலித்தன.

எழுத்து மரபும், வாய்மொழி மரபும், இவரின் எழுத்தில் கலந்தன. நாட்டார் வழக்காறுகள் பல இயல்பாக இடம்பெற்றன. "மொழி என்பது அலங்காரமாக இருக்கக்கூடாது என்பது என் கொள்கை. அண்ணா, கருணாநிதி, லா.ச.ரா இவர்களைப் படிச்சதுனால் ஏற்பட்ட விளைவு, மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்" எனக் கூறிய சா.க. மிக இயல்பான, மிரட்டல் இல்லாத, வாசகனை அரவணைத்துக் கொள்ளும் முறையில் எழுதினார்.

தன் தோற்றம் போலவே எழுத்தும் பகட்டும் அல்லாததாக இருக்க விரும்பினார். நூற்றைம்பதுக்கும் குறையாத சிறுகதைகள் எழுதிய அவர், அவற்றில் ஆகச்சிறந்த கதைகளையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதித்துச் சென்றார் எனலாம். இரணியவதம், கிழக்கு பார்த்த வீடு, மாயவலி, ஆறுமுகசாமியின் ஆடுகள் முக்கியமானவை.

அனைத்துத் தரப்பிலும் கொண்டாடப்பட்ட அவரின் சிறுகதை 'ஒரு தக்கையின் மீது நான்கு கண்கள்' - மீன் பிடிக்கும் ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்குமிடையேயான மனப் போராட்டமே கதை. பெரியவர், சிறியவர் என்ற தலைமுறை இடைவெளி நுட்பமாகக் கதையில் வெளிப்படும்.

புகழ்பெற்ற ‘கடலும் கிழவனும்’ நாவலின் சிறுதுளிபோல வாழ்வைப் பந்திவைப்பதில் இக்கதை மிளிர்கிறது.

சா.க. சமகால நிகழ்வுகளை தன் எழுத்துக்களில் வரலாற்றுச் சரடாகப் பதிவிடும் வழக்கம் உடையவர். ‘ஆறுமுகசாமியின் ஆடுகள்’ சிறுகதையில், ஆறுமுகசாமியின் அப்பா கலியபெருமாள் டிரைவராக இருப்பவர்.

ஊரிலிருந்து சென்னை அறிவாலயம் திறப்பு விழாவிற்கு தொண்டர்களை வேனில் அழைத்துச் செல்கிறார். திரும்பி வரும்போது திண்டிவனத்தில் ஒரு இயக்கத்தின் சாலைமறியல் போராட்டம். வேன் தாக்கப்படுகிறது.

கீழே இறங்கிப் போகும் அவர்மீது வெட்டிய மரம் விழுகிறது. மரணமடைகிறார். இந்த இரண்டையும் போகிற போக்கில் சொல்லி விடுகிறார். அப்புறம் கட்சியினரால் ரூபாய் ஐயாயிரம் நிதி கிடைப்பது, அதை வைத்து வங்கியில் ஆட்டு லோன் வாங்குவது. விதவை பெரியநாயகியும், பள்ளிப்படிக்கும் சிறுவன் ஆறுமுகசாமியும், அவற்றைப் பாடுபட்டு வளர்ப்பது, ஆறுமுகத்துக்கு படிப்பின் மீதுள்ள மோகத்தால் பாடப்புத்தகங்களைப் படித்துக் கொண்டே ஆடுகள் மேய்ப்பது, அந்த வழியே வந்த ஒரு காவல் துறை சப் இன்ஸ்பெக்டர் பத்து ஆடுகளை, ஆடுவாங்கும் நபர்களிடம் சொந்த ஆடுகள் எனச் சொல்லி மேய்ந்த ஆடுகளை திருட்டுத்தனமாக விற்று பணம் வாங்கிச் சென்று விடுவது, ஆறுமுகசாமி இதனை அறியாமல் வெகுளியாக ஆடுகளைத் தேடிக் கொண்டிருப்பதோடு கதை முடியும்.

கூடவே இதில் வரும் பண்ணைக்காவல் முனியாண்டித்தேவரை அச்சு அசல் தஞ்சை வாசத்தோடு காட்டுவார். சுருட்டு பிடிப்பது, இடுப்பு வேட்டிக்கு பச்சைக் கலர் பெல்ட் போட்டிருப்பது இன்றைக்கும் தஞ்சை மிராசுகளின் அடையாளம். இப்படி ஒரு கதைக்குள் நடப்புக் காலத்தின் குணாதிசயங்களை சா.க. அட்சரம் பிசகாமல் பதிவு செய்கிறார்.

அதேபோல பள்ளிக்கூடம், பிள்ளைகள், ஆசிரியர்கள் அநேகம் கதைகளில் இடம் பெறுகின்றனர். கிராமத்துச் சிறுவர்களின் எண்ண ஓட்டங்களை சா.க. அற்புதமாகச் சித்தரிப்பார். ‘விசாரணைக் கமிஷன்’ நாவலில் கூட கதாநாயகன் தங்கராசு அவன் மனைவி ருக்மணியை ஆசிரியையாகத்தான் படைத்திருப்பார்.

சா.க. தொடர்ந்து எழுதினார். விமர்சித்தார். கரடுமுரடாகத் தெரிவார். சுபாவமும் அப்படித்தான். யாரையும் எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார். கலை உள்ளம் படைத்தவராக இருந்தார். ஜெயகாந்தனின் தோழராக அவர் சபையில் வீற்றிருந்தார்.

அவரைப் போலவே எழுத்தாளர் கர்வமும் இவரிடமிருந்தது. திராவிட இயக்கச் சார்பு என்பதில் உறுதியோடு நின்றார். அதுமட்டுமல்லாமல் தமிழ் இன, மொழி உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்.

முன்பு சொன்னதுபோல ‘விசாரணைக் கமிஷன்' நாவலிலும் பல உண்மை நிகழ்வுகள் சுட்டப் பெறுவதைக் காணலாம். ‘அண்ணாகிட்ட கையெழுத்து வாங்கப்போறேன்' எம்.ஜி.ஆரை கட்சியவிட்டு நீக்கிட்டாங்க’ இந்திரா காந்திய சுட்டு கொன்னுட்டாங்க' ‘ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்' என்று அரசியல் நிகழ்வுகள் பதிவாவதைச் சுட்டலாம்.

இந்த நாவல் போக்குவரத்து ஊழியர்கள், காவல் துறை மோதல் அதன் உடன் விளைவுகள், தொழிலாளர் போராட்டம், தொழிற்சங்கம், அரசுநிலை, விசாரணைக் கமிஷன் எனும் கண்துடைப்பு ஏமாற்று என முழுக்க அரசியல் நாவலாகவே அமைகின்றது.

கூடவே தங்கராசு. ருக்மணியின் காதல் வாழ்வு, பிரியம், குழந்தையின்மை எனும் சிக்கலும் அது சார்ந்த மன உளைச்சலும் சா.க.வால் சித்தரிக்கப்படுகின்றது.

கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஆவணப்படம், இலக்கியத் தொகுப்புகள் என்று தொடர்ந்து இயங்கினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை அறிந்தவராக இருந்தார். எனினும் தமிழ் மொழியின் மீது தீராப்பற்றுக்கொண்டவராகவும் இருந்தார்.

‘சுடுமண் சிலைகள்' இவரின் அரிய படைப்பு. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் பற்றிய இவரது ஆவணப் படங்கள் தனித்துவமிக்கவை.

கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றார். பல படைப்புகள் - விசாரணைக் கமிஷன் உட்பட தொலைக்காட்சித் தொடராக வெளி வந்தன.

சாயாவனம், சூரியவம்சம், விசாரணைக் கமிஷன் ஆகியவை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. சாகித்திய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், நேஷனல் புக் டிரஸ்ட் உறுப்பினராகவும் இருந்து செய்த பணிகள் முக்கியமானவை.

அதே போல அவர் தொகுத்த நூல்களும் கருதத்தக்கவை. தமிழில் தன்வரலாறுகள், புலம் பெயர்வு குறித்தும் இறுதியாக ரயில் பயணம் குறித்த கதைகள் தொகுப்பும் தனித்துவமிக்கவை.

"சா.கந்தசாமியின் கதைகளும் நாவல்களும் அற்புதமாக அமைந்துவிட்டன என்று காணும்போது தமிழர்கள் எத்தனைதான் குப்பைப்பத்திரிகைகளுக்கு அடிமைப் பட்டிருந்தாலும் இலக்கியரீதியாக அதிஷ்டசாலிகள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது" என்ற க.நா.சு.வின் மதிப்பீடு கருதத்தக்கது.

அறுபதாண்டுகள் எழுத்து, இயக்கம் எனப் பயணித்தவர் தன் பயணத்தை நிறைவு செய்துகொண்டார். சா.க. எனும் சாகா எழுத்துக்கலைஞர் என்றும் நினைக்கப்படுவார்.

- முனைவர் இரா. காமராசு