வரலாறு என்பது நிகழ்காலத்தில் கிடைக்கும் கடந்தகால நிகழ்வுத் தரவுகளின் அடிப்படையில் கடந்த காலத்தை எழுதிப் பார்ப்பது. தற்போதைய சூழலில் இல்லாத அதாவது ஒருபோதும் தங்கள் சாதிகளுக்கு இல்லாத சாதிய வரலாற்றை எழுதிப் பார்த்து ரசிக்கும் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதி குறித்ததான பெருமிதங்களை, புகழை, வீரத்தை எழுதிக் கொள்கின்றன. இல்லாத பெருமிதங்களை, புகழை, வீரத்தை எழுதிக் கொள்கின்றன. அதனடிப்படையில் ஒரு மூடர் கூட்டத்தைத் தன்வயப்படுத்திக் கொள்கின்றன. இது சங்க காலத்திலேயே இருந்தது. அன்று அரசர்கள் தங்கள் வரலாற்றைச் சங்கப் பாடல்கள் வழியாக எழுதி வைத்துக் கொண்டனர். அதன் தொடர்ச்சி இன்றும் நீண்டு கொண்டிருக்கின்றது.

வரலாற்று அறிஞர் காப்லிட்ஸ் அவர்கள் “மனித குலத்தின் முன்னேற்றத்தில் புலன்கள்தானம் முதன்மையான பாத்திரம் வகிக்கின்றன என்றும் அறிவு இரண்டாம் பட்சமான மிகவும் கீழ்ப்பட்ட பாத்திரம்தான் விகிக்கின்றன என்று 1870 - 1880 ஆண்டுகளின் பிற்பகுதியில்ஒரு கட்டுரை எழுதினார்- இக்கட்டுரையின் தலைப்பு மனதும் புலன்களும். காப்லிட்சின் கூற்று சரியா? தவறா என்கிற ஆய்வுக்குள் செல்வதை விட, இந்தக் கூற்று வரலாற்று நூலை எழுதுவதில் அப்பட்டமாகப் பிரததிபலிப்பதைக் காணலாம்.

இந்திய வரலாறு பல முகங்களைக் கொண்டது. பல வகைகளைக் கொண்டது. அதாவது சாதியம் அடிப்படையிலான பன்முக வரலாறு. இந்தியாவுக்கென்று ஓர் ஒற்றை வரலாற்றை எழுதுவது சாத்தியமற்றது. பல சாதிய, இன, மத வரலாறுகளின் தொகுப்பான ஓர் இந்திய வரலாறே இங்கு சாத்தியம். இதனடிப்படையிலேயே இந்திய சூழலில் வரும் எந்தவொரு வரலாற்று நூலையும் அணுக வேண்டும் என்பது எனது கருத்து. இது வரலாற்று நூலுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான படைப்புகளுக்கும் பொருந்தும். காரணம், இது பல சாதிய, தேசிய இனங்களின் இந்தியா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் தக்கலையில் நடைபெற்ற (சூலை 23, 2022) புத்தக விமர்சன கூட்டத்தில் எழுத்தாளர் குமரி ஆதவன் அவர்கள் எழுதிய “தெற்கில் விழுந்த விதை “ என்கிற நூலை ஆய்வு செய்திடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். ஆனால் அக்கூட்டத்தில் நான் விரும்பியபடி பேச இயலவில்லை. காரணம் அது மத மற்றும் சாதிய அமைப்பு சார்ந்த இலக்கிய அமைப்பு. அக்கூட்டத்தில் பேச முடியாத விசயங்களைக் கட்டுரையாக எழுதிட அப்போதே முடிவு செய்தேன்.

இந்திய வரலாறு என்பதே மகத்துவங்கள் ஏதுமற்றவற்றின் வரலாறாகத்தான் இருக்கிறது. வைதீக மதம் அல்லது பார்ப்பனிய மதம் கோலோச்சத் தொடங்கிய ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்திய துணைக் கண்டம் சாதிக் கோமரங்களின் சுடுகாடாக இருந்தது. பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்கிற சாதிய மனநோய் மனநிலைகள் முற்றிய ஒரு துணைக் கண்டமாக இந்தியா என்று இன்று அழைக்கப்படும் இத் துணைக் கண்டம் அமைந்திருந்தது. அத்தகைய முற்றிய மனநோய்களின் முதன்மைக் கூடாரமாகக் கேரளா விளங்கியது. இங்குதான் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் தங்களை நம்பூதிரி பார்ப்பனர் என்று அழைத்துக் கொண்டதோடு அனைத்து மட்டங்களிலும் தங்களை முதன்மையானவர்களாக நிலை நிறுத்திக் கொண்டனர். நிலை நிறுத்திக் கொண்டதோடு, சாதிய படிநிலைகளைப் பலமாக நிறுவி உழைக்கும் வர்க்கத்தைக் கீழாக்கவும் செய்தனர். கி.பி. 1498 ல் வாஸ்கோடமாவின் வருகைக்குப் பிறகு இந்தக் கோமரத்தாடிகளின் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வந்தது.

இதற்குச் சில வெள்ளை ஆட்சியாளர்களும், கிறிஸ்தவ ஊழியர்களும் காரணமாக அமைந்தனர். அரசதிகாரம், அரசியல் செல்வாக்கு நிறைந்த அவர்களால் கூட இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. ஏன் சுதந்திரம் கிடைத்து, நாமெல்லோரும் சமம் என்று கூறும் அரசியலமைப்புச் சட்டம் உருவான பிறகும் கூட இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. சங்க இலக்கிய காலம் முதலே சேர நாடு மிகவும் சிறப்பு பெற்ற ஒரு நாடாக விளங்கி வந்தது. பல்வேறு குறுநில மன்னர்கள் வாழ்ந்து வந்தாலும் தனித்துவம் சார்ந்து அந்நிலப்பரப்புகளை அவர்கள் ஆட்சி செய்து வந்தனர். சங்க காலத்தின் பிற்பகுதியில் மூவேந்தர்களின் நாடு பிடிக்கும் வேட்கையில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதோடு, அருகிலிருந்த சிறுசிறு நாடுகளையும் போரிட்டு தங்கள் வசம் வைத்துக் கொண்டன.

சங்க இலக்கிய காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் ஆசீவகம், சமண, பௌத்தம், சைவம், வைணவம், மதங்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தன. இவற்றை விடவும் பெரும்பான்மையாக நடுகல் வழிபாடு அதாவது முன்னோர் வழிபாடு அதிகமாகக் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியை இன்றும் தமிழகத்தில் காணலாம். சங்க இலக்கிய பாடல்களில் இடம்பெற்றுள்ள பல பாடல்களின் கருத்துக்கள் ஆசீவகம், புத்தம், சமணம், சைவம். வைணவம், வேலன் (முருகன் வழிபாடு என்றும் கூறுகின்றனர்) மதங்களின் கருத்துக்கள் என்பதைத் தற்கால ஆய்வுகள் நிறுவி வருகின்றன. அத்தகைய சூழலில் சங்க இலக்கிய காலத்திற்கு முன்னரே அதாவது புத்த அரசன் அசோகனின் காலத்தில் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக சமணர்கள், அவர்களைத் தொடர்ந்து பௌத்தர்கள் தென்னிந்தியா, தென்னிலங்கை மற்றும் ஆசிய நாடுகளை நோக்கி இடம்பெயர ஆரம்பித்தனர். பைிளில் குறிப்பிடப்படும் மோசே கூட புத்த மத சீடர் என்றும் புத்த மதத்தைப் பரப்ப அவர் மேற்குலக நாடுகளை நோக்கிச் சென்றதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. அப்படிச் செல்லும்போது புத்தரின் முடியைக் கொண்டு சென்று பௌத்தத்தைப் பரப்பியதாகவும், அந்த வழியில் வந்தவரே இயேசு கிறித்து என்றும் அவ்வாய்வு பேசுகிறது.

ஆனால், இவ் இடப்பெயர்வு தமிழக அல்லது தென்னிந்திய வரலாற்றில் பல்வேறு வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்தியது. அதேவேளை மிகப்பெரிய அழிவையும் கொண்டு வந்தது. அது இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்த ஆரியர் மூலமாகத் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது. தொழில் முறையாலும், நில முறையாலும் பிரிந்திருந்த தமிழ்ச் சமூகத்தை மேலும் பிரித்துத் தனிமைப்படுத்திட காரணமாக அவர்கள் அமைந்தனர். சங்க காலத்திற்கு முன்னரே ஆரியர் வருகை ஆரம்பமாகி விட்டதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. .

ஆரியர்கள் பற்றிய பல்வேறு குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. அவர்கள் குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்யவில்லை என்பதற்குச் சங்க இலக்கியங்கள் ஆதாரமாக இருக்கின்றன. முதலில் நாம் ஆரியர் என்றவுடன் பார்ப்பனர்களை மட்டும் கருத்தில் கொள்ளக் கூடாது. காரணம், தமிழகத்திற்கு வந்த அனைவரையுமே தமிழர்கள் ஆரியர்கள் என்றே அழைத்துள்ளனர். இவர்களில் சிலர் பறை அடிப்பவர்களாக, போர் வீரர்களாக, தூதுவர்களாக இருந்துள்ளனர்.

இனி நூலுக்குள் செல்வோம். இந்நூலில் மொத்தம் 33 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் அத்தியாயம் “யாருக்காக இந்தச் சுனை ஓயாமல் அழுகிறது” என்கிற கவித்துவமான தலைப்புடன் தனது கருத்துக்களைப் பேச ஆரம்பிக்கிறது. இதற்கடுத்த அத்தியாயம், “திருவிதாங்கூர் நாடு”. இத் தலைப்பில் அக்கால திருவிதாங்கூர் நாட்டின் வரலாறு ஆதாரப்பூர்வமாகப் பேசப்படுகிறது. அன்றைய ஆதிக்கச்சாதிகளின் கொடுங்கோல் தன்மைகள், அரசும் அவர்களுக்கு ஆதராவக இருந்தது. மலையாள மொழியின் உருவாக்கம், இராமன் திருவடி என்கிற மன்னனுக்கு வாரிசு இல்லாமல் போவதன் மூலம் தன்னுடைய சகோதரி மகனான இரவிவர்மனை (வீர கேரளன்) அரசாட்சியில் இருத்துதல், உழைப்பாளிகள் மன்னர்களாலும், அதிகார, ஆதிக்கச்சாதி வர்க்கங்களால் சுரண்டப்படுவதோடு, பல இன்னல்களையும் அடைந்ததைப் பேசுகிறது.

அத்தோடு கேரள நாட்டை சுவாமி விவேகானந்தர் “பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்று கூறியதையும் இவ் அத்தியாயம் பேசுகிறது. இந்தத் திருவிதாங்கூர் என்கிற அத்தியாதத்தில் இரண்டு விசயங்கள் எனக்கு நெருடலையும், பிறரைப் போலவே இந்நூலாசிரியரும் தவறான தகவலைப் பதிவு செய்திருப்பதாகவும் தோன்றியது. அதில் முதலாவது, திருவிதாங்கூர் அரசர் இராமன் திருவடி என்பவர் தனக்கு வாரிசு இல்லாமல் போனதால் தன்னுடைய சகோதரி மகனான வீரகேரளனை ஆட்சிப் பெறுப்பில் அமர்த்தியதாகக் கூறுவது. இரண்டாவது சுவமி விவேகானந்தர் கேரள நாடு குறித்துக் கூறியது.

முதலாவது விசயத்தில் எழுத்தாளர் குழப்பமடைந்துள்ளதாகவே தெரிகிறது. காரணம், குடும்பத்தில் மூத்தவர் மட்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஏனைய சகோதரர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ வேண்டும் என்பது அக்கால நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் குல வழக்கமாக இருந்தது. இதைத் தெளிவாக வேறொரு இடத்தில் (பக்கம் 30) குறிப்பிடும் எழுத்தாளர் இவ்விடத்தில் இதனை அரசர் திருவடி ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுவது சரியாகப்படவில்லை. மேலும், இவ்வழக்கம் அதாவது மூத்த ஆண் மட்டும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் நாயர் சமூகத்திலும் சமீப காலம்வரை வழக்கில் இருந்தது.

அடுத்தது, சுவாமி விவேகானந்தர் கேரளம் பற்றிக் கூறியது. கி.பி. 1892 அல்லது 1893க்குப் பிறகு (சிகாகோமாநாட்டுக்குப் பிறகு என்கிற தகவலும் இருக்கிறது) கேரளா வந்த சுவாமி விவேகானந்தர் கேளராவில் திருவனந்தபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது ”நாம் அனைவரும் இந்துக்கள். ஆகவே நாம் அனைவரும் இந்துக்களாக ஒன்றுபட வேண்டும்” என்று கூறியதாகவும், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மனோன்மணியம் சந்தரம்பிள்ளை அவர்கள் ”நாங்கள் இந்துக்கள் கிடையாது. நாங்கள் சைவர்கள், உங்கள் வழிபாடுகளுக்கும் எங்கள் வழிபாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. எங்கள் கடவுள் சிவன். உங்கள் கடவுள் இராமன்” என்று வாதிட்டதாகவும்? இதனால் கூட்டத்தை இடையில் விட்டு சுவாமி விவேகாந்தர் வெளியேறியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. மேலும் மற்றுமொரு தகவல் சுவாமி விவேகானந்தர் மனோண்மணியம் சுந்தரர் இல்லத்திற்குச் சென்றதாகவும், அங்கு வைத்து இருவருக்கும் இத்தகைய வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ சுவாமி விவேகானந்தரின் “நாங்கள் இந்து” என்கிற கருத்துக்கு எதிரான கருத்தை ஒரு தமிழர் முன் வைத்துள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு ஆதாரமாக இன்னும் ஒன்றிரண்டு தகவல்களைக் கூறலாம் என்று கருதுகிறேன். தற்போதும் கூட சைவ மடாதிபதிகள் தங்களை இந்துக்களாக ஏற்றுக் கொள்வதில்லை. பேர்சிவல் ப்பியர் என்கிற ஆங்கிலேயர் எழுதிய “இந்திய வரலாறு, பாகம் இரண்டில்” சுவாமி விவேகானந்தர் குறித்த ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார். இதனைச் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப் பிறகு அதாவது 1893 க்குப் பிறகான காலகட்டத்தைச் அதாவது மேற்கு வங்கத்தில் நடைமுறையிலிருந்த சாதியக் கொடுமைகள் பற்றிப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், ”சாலையில் நடக்கும்போது பெங்காலிய பார்ப்பனர்கள் மானியமான மனிதர்கள். ஆனால், வீடுகளில் அவர்கள் சாதியவாதிகளாகவே இருந்தார்கள்” என்று பதிவு செய்கிறார். தாகூர் அவர்களும் முதலாளி வீட்டுக் குழந்தைக்குப் பாலூட்டிய ஒரு வேலைக்காரியைப் பற்றியும், பிற்காலத்தில் அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூட அனுமதிக்காத சாதிய மனநிலையையும் பதிவு செய்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் சாதி என்பது மிகக் கொடூரமாகச் செயல்பட்டு வந்தது. அது திருவிதாங்கூரில் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அப்படியிருக்க சுவாமி விவேகானந்தர் கேரளாவின் சாதிய கொடுமைகளைப் பார்த்து, மனம் வெதும்பி இப்படிக் கூறினார் என்று ஆய்வாளர்கள் கூறுவது எற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மேலும், ஓர் உதிரி தகவலாக எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் த. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தான் எழுதிய “வரலாற்றுப் பாதையில்” என்கிற நூலில் வாஞ்சிநாதன் குறித்த அபத்தமான செய்திகளைப் பதிவு செய்துள்ளார். வாஞ்சிநாதன், ஆஷ்துரை குறித்து ஆ. சிவசுப்பிரமணியம், மருத்துவர் நா. ஜெயராமன் ஆகியோர் சிறந்த ஆய்வு நூல்களை எழுதியுள்ளனர். அதனை இந்த முற்போக்கு எழுத்தாளர் படிக்கவில்லை.அதுகூடப் பராவாயில்லை வாஞ்சிநாதன் எழுதிய கடிதத்தைக் கூட இவர் படிக்கவில்லை என்பது ஆச்சரியமே. அப்படிப் படித்திருந்தால் இப்படி தவறான தகவலைப் பதிவு செய்திருக்க மாட்டார். “தெற்கில் விழுந்த விதையின்“ ஆசிரியரும் தனக்குக் கிடைத்த தகவலை ஆராயமல் அப்படியே பதிவு செய்துள்ளதாகவே தோன்றுகிறது.

மேலும் இந்நூல் கேரளா அதாவது திருவிதாங்கூர் சமஸ்தானம் குறித்த பல்வேறு தகவல்களைப் பதிவு செய்கிறது. உண்மையிலேயே இது பாராட்டுக்குரியது. மார்த்தாண்ட வர்மாவுக்கும் பப்புத்தம்பி, இராமன் தம்பி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட அரசதிகாரப் போட்டி, அதில் பப்புத் தம்பி, இராமன் தம்பி இருவரும் கொல்லப்படுதல், இவர்களுக்குத் துணையாக இருந்த எட்டு வீட்டுப் பிள்ளை மார்களைக் கொன்று அவர்கள் வீட்டப் பெண்களை மீனவர் கிராமத்தில் கொண்டு ஏலம் விடுதல் போன்ற பல்வேறு செய்திகளை இந்நூல் பதிவு செய்கிறது. வரலாற்று நூலைப் பிறர் எளிதில் அணுகக் கூடிய வகையில் எழுதுவது என்பதும், அதனை வாசகர் எளிதாகப் புரிந்து கொள்வது என்பதும் மிகவும் கடுமையான செயல். ஆனால் இந்நூல் அதனை மிக எளிமையாக்கி ஒரு கதையைப் படிப்பதைப் போன்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஆதாரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால் இந்நூலை ஓர் ஆய்வு நூலாகக் கருத முடியாது. ஒரு புனைவாகவே கருத முடியும்.

பக்கம் 49 ல் “ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே பாபிலோன், எகிப்து. சீனம், ரோமாபுரி போன்ற நாடுகள் இந்தியாவுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன” என்கிற செய்தியை இந்நூலாசிரியர் கூறுகிறார். இதில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா என்கிற நாடு கிடையாது. மேலும், மேலை நாட்டு வாணிகத் தொடர்பு என்பது அன்றைய தென்னிந்தியாவை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய நாடுகளுடனேயே இருந்தது. இதனையும் நூலாசிரியர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இல்லை, தற்போது இந்தியா என்று சொன்னால் மட்டுமே புரியும், ஆகவே இந்தியா என்று நூலாசிரியர் குறிப்பட்டுள்ளதாகக் கொண்டாலும் அவர் அடிக்குறிப்பாகவோ அல்லது அடைப்புக் குறிக்குள்ளோ இது குறித்த தகவலைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

குளச்சல் போர், அதன் மூலம் தேவசகாயம் பிள்ளைக்கும் டிலனாயிக்கும் இடையில் எற்பட்ட உறவு, தேவசகாயம் பிள்ளைக்கு எற்பட்ட துயரங்கள், அன்றைய சாதிய நடைமுறைகள், தன்னுடைய தந்தையரான நம்பூதிரி பார்ப்பனர் தேவசகாயம் பிள்ளையையும், அவரது சகோதரியையும், தாயையும் விட்டு தன்னுடைய ஊருக்குச் சென்று விடுதல் போன்ற சம்பவங்கள் தேவசகாயத்தின் மனிதல் மிகப்பெரிய தாக்கத்தை எற்படுத்தி அவரைக் கிறித்தவ மதம் தழுவச் செய்தன என்கிற தகவலை இந்நூல் பதிவு செய்கிறது. ஆனால், அது குறித்த விரிவான தகவல்கள் இல்லை. இப்பகுதி மேலோட்டமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முந்தைய அத்தியாயங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சாதியக் கொடுமையைப் பேசியதால் இவ்விடத்தில் அதனைப் பேசாமல் எழுத்தாளர் தவிர்த்திருப்பார் போலும். இருப்பினும், ஆதிக்கச்சாதியில் பிறந்த தேவசகாயம் ஏன் கிறித்தவராக மாறினார். அதற்கான காரணங்கள் என்ன என்பதனைச் சான்றுகளை இந்நூல் ஆவணப்படுத்தியிருக்குமானால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மேலும், தேவசகாயம் வடக்கன்குளம் பரலோக மாதா ஆலயத்தில் சென்று திருமுழுக்கும் எடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு ஞானத்தந்தையாக ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர் இருந்தார். அத்தோடு நூலாசிரியர் தேவசகாயம் என்பது பெயர் தமிழ்ப் பெயர் என்கிறார் (பக்கம் 71). ஆனால் இப்பெயர் தமிழ்ப் பெயரல்ல. வடமொழிச் சொல். அதுபோல சில இடங்களில் “இந்து மதம்” என்கிற சொல்லையும் நூலாசிரியர் பயன்படுத்துகிறார். அதாவது ”நீலகண்டன் மன்னனையும், நம்பூதிரிகளையும், இந்து மதத்தையும் பழித்துரைத்தான்” (பக்கம் 85, 88) என்று பதிவு செய்கிறார். தேவசாயம் பிள்ளையின் காலத்தில் இந்து மதம் என்று ஒரு மதம் கிடையாது. ஆனால் நூலாசிரியர் சில இடங்களில் இவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறார். வரலாற்றாசிரியர் சாண்ட்ரியா பிஃப்ரீடாக் 1980 ல் எழுதிய கட்டுரையில் “எப்போதும் இந்தியர்கள் தங்களை அவர்களின் சாதியால் அடையாளப்படுத்திக் கொள்பவர்களாகவே இருந்தார்கள்”என்று குறிப்பிடுகிறார். மேலும், கீழைத்தேயவியலாளரும் உலோகவியலாளருமான எச்.எச். வில்சன்; சுரங்க வேலைகளுக்காகக் கல்கத்ததாவில் நியமிக்கப்பட்டார். அவர் 1819ல் வங்காள மொழியில் ஒரு சமஸ்கிருத அகராதியை வெளியிட்டார். அந்த அகராதி “இந்து” என்ற சொல்லை ஒரு மதம் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. இப்படியிருக்க நூலாசிரியர் அக்கல கட்ட வரலாற்றை விவரிக்கிற போதுகவனமாக வார்த்தைகளைக் கையாண்டிருக்க வேண்டும். இதனைப் படிக்கும் சாதாரண வாசகன் அக்காலத்திலேயே இந்து மதம் என்கிற ஒரு மதம் இருந்ததாகக் கருதிக் கொள்ளும் அபத்தம் ஏற்படும். இதனையும் இந்நூலாசிரியர் தவிர்த்திருக்கலாம்.

இது போன்ற சில தவறுகளைத் தவிர்த்துப் பாரக்கிறபோது இந்நூல் சிறந்தவொரு நூலே.

மேலும் புனிதர் தேவசகாயம் குறித்த அல்லது அவரது மத மாற்றம் குறித்த சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக மதம் மாறிய தேவசகாயம் ஏன் தனது பெயரோடு பிள்ளை என்கிற சாதிப் பெயரை இணைத்துக் கொண்டார்? இதனைச் சாதிப் பெயர் அல்ல என்று சிலர் வாதிடலாம்.

ஆனால், தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்கிற நூல், “குழந்தை எனப் பொருள்படும் சொல். தமிழ்நாட்டில் இது வேளாளர்களுக்குரிய பட்டப் பெயராகும். அண்மைக் கால கணக்கெடுப்புகளில் அகமுடையார், அம்பலக்காரர், கோல்லர், இடையர், நாயர், நோக்கன், பணிசவன், பணிக்கன், பறையன், சாயக்காரன். செம்படவன், சேனைக்குடியர் ஆகேிய சாதியாருக்குரிய பட்டப் பெயராக இது பதியப்பட்டுள்ளது. தேவதாசிகளின் ஆண் சந்ததியினரும் பிள்ளை என்கிற பட்டத்தைத் தரித்துக் கொள்கின்றனர். ஐரோப்பியரிடம் பட்லராகப் பணி புரியும் பல பறையர்கள் பிள்ளை என்ற பட்டப் பெயரைத் தங்கள் பெயரோடு இணைத்துக் கொள்கின்றனர். வேளாளர் போல நடிக்கும் குற்றம் புரியும் குறவர்கள் கூட இப்பட்டத்தைத் தரித்துக் கொள்கின்றனர்“ மேலும் ‘பிள்ளைக் கூட்டம் என்கிற சாதியினைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது எட்கர் தர்ஸ்டன் அவர்கள், வடஆர்க்காடு கையேட்டில் வேசி மக்களானவாணியர் பிரிவினர் என்று என்று பதியப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் (மேலது, பக்கம் 218). அத்தோடு பிள்ளையார்பட்டி என்கிற பிரிவைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, நாட்டுக்கோட்டை செட்டிகளின் புறமணக்கட்டுப்பாடுடைய கோயில் (குலம்) ஒன்றின் பெயர் என்றும் குறிப்பிடுகிறார். (தென்னிந்திய குலங்களும் குடிகளும், தொகுதி ஆறு, பக்கம் 217 -218)

தேவசகாயம் தனது பெயருக்குடுத்த பிள்ளை என்ற அடையைப் பயன்படுத்திட அவரது ஞானத்தந்தையாக இருந்த ஞானப்பிரகாசம் பிள்ளை காரணமாக இருக்கலாம். ஆனாலும், சாதியை எதிர்த்து மதம் மாறிய தேவசகாயம் இந்தச் சாதிப் பெயரை மறுத்திருக்க வேண்டும். இது கூடப் பரவாயில்லை. போப்பாண்டவர் இவருக்குப் புனிதர் பட்டம் வழங்குகிறபோது அதாவது இந்தச் சாதிப் பெயரை அகற்றியிருக்க வேண்டும். அகற்றியிருக்கலாம். ஆனால் பத்திரிகை, நோட்டீஸ் போன்ற அச்சுப்பிரதிகள் அனைத்தும் தேவசகாயம் பிள்ளை என்றே குறிப்பிட்டிருந்தன. அதுவும் நடைபெறவில்லை. தற்போது அந்தச் சாதி அடையாளம் தவிர்க்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. இங்கே கிறித்தவத்தில் இருக்கும் போதகர்கள் மற்றும் பாதிரியார்களிடம் சாதிய மனப் பிறழ்வு எப்படி வேரோடிப் போயுள்ளது என்பதை நானறிவேன்.

வடக்கன்குளம் தேவாலயம் ஒரு காலகட்டம் வரை டவுசர் பள்ளி, டவுசர் தேவாயலம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. காரணம் மதம் மாறிய நாடார்களுக்கும், வெள்ளாளர்களுக்கும் இடையிலான சாதிய ஏற்றத் தாழ்வு காரணமாக அத்திருச்சபையின் நடுவே ஒரு சுவர் எழுப்பப்பட்டது. அதனாலேயே இத்திருச்சபை டவுசர் திருச்சபை என அழைக்கப்பட்டது. இவ்வாறு சாதிய ஆதிக்கம் நிலைபெற்ற ஒரு திருச்சபையில் சென்று தேவசகாயம் அவர்கள் திருமுழுக்குப் பெறவேண்டிய காரணம் என்ன? பத்மநாபபுரத்தைச் சுற்றிலும் எவ்வளவோ திருச்சபைகள் இருந்தனவே. இதற்கும் சரியான விளக்கம் இல்லை.

மேலும், தேவசகயாத்தின் மரணம் அல்லது கொலையைச் சுற்றி ஏராளமான கதைகள் அதாவது அதிசயங்கள் புனையப்பட்டுள்ளன. அதனை இந்நூலும் வழி மொழிகிறது. இது ஏன்? தற்போதும் பல சாமியார்கள் குறித்துப் பல்வேறு புனைவுகள் புனையப்படுகின்றன. இவ்வாறு ஒரு மனிதரைக் குறித்துப் புனித பிம்பங்களைப் புனைகிறபோது, அம்மனிதர்கள் சக மனிதர்களை விட்டு அந்நியப்பட்டுப் போகிறார்கள் என்பதை மத நிறுவனங்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மறந்து போகின்றனர். அம்மனிதனைப் போல நாமும் வாழ முடியும் என்கிற நம்பிக்கைய இன்மையை இச்செயல்கள் மனிதர்களிடையே ஏற்படுத்துகின்றன. இது ஒருவகையில் நல்ல விசவயங்கள் பரவுவதைத் தடை செய்கிறது என்பதை மத அமைப்புகள் ஏன் உணரவில்லை. மத நிறுவனங்களுக்குப் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறதா? அதற்காக இப்படிப்பட்ட புனைவுகளைப் புனைந்துரைக்கின்றனவா?

புனிதர்களின் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் அதிசயங்களில் பெரும்பாலானவை சக மனிதர்களாலும் செய்யக் கூடியதே. அதற்காகவே இத்தகைய புனிதர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனைத் திருச்சபைகள் கவத்தில் கொண்டு புனிதர்களின் நல்ல செயல்பாடுகளைப் பரப்புரை செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது பரப்புரை செய்கிற மனிதர்களும் நல்லவர்களாக நடந்து கொள்தல் வேண்டும். இல்லையேல் எந்த அதிசயமும் செல்லுபடியாகாத ஒன்றாக, காலப் போக்கில் வழிபாட்டிற்குரிய ஒன்றாக மாறி விடும்.

தேவசகாயம் அவர்களது மத மாற்றத்தால் திருவிதாங்கூரில் நிகழ்ந்த மாற்றங்கள் எதையுமே இந்நூல் பட்டியலிடவில்லை. இந்நூல் தேவசகயாத்தின் மத மாற்றம் ஏற்படுத்திய தாக்கங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பதிவு செய்யவில்லை. தேவசாயம் அவர்களின் வாழ்க்கை குறித்து, அவருடன் பயின்ற, அவருடன் சிறையில் இருந்த தொம்மை முத்துப் புலவர் இயற்றியதாகக் கூறப்படும் சுவடியும் நம்பிக்கைக்குரியதாகக் காணப்படவில்லை. காரணம் அச்சுவடி மார்த்தாண்ட வர்மா குறித்து புகழ்ந்து பேசுகிறது. தேவசகாயத்தின் மரணத்திற்குக் காரணமான, அவரை ஊர் ஊராக இழுத்தச் சென்று துன்பறுத்தக் காரணமான மார்த்தாண்ட வர்மா குறித்து அச்சுவடி புகழ்ந்து பேசுவது இச்சுவடியின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது. மேலும் ரோமுக்கு அனுப்பப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ள அறிக்கையிலும் தேவசகாயம் குறித்த தெளிவான பதிவுகள் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தெற்கில் விழுந்த விதையான தேவசகாயம் பிள்ளை மூலமாகக் கிறித்தவம் முளைத்தெழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லை என்பது துயரமே. ஆனாலும், இந்நூல் சிறந்ததொரு நூலே. அக்கால கட்ட சாதியக் கொடுங்கோன்மையை அறிந்து கொள்ள உதவும். மேலும், இந்நூலாசிரியர் இந்நூல் மத மோதலை உருவாக்கி விடக் கூடாது என்கிற கவலையில், அக்கறையில் இந்நூலை எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.

- பி.எஸ்.ராஜேஷ்