tamil oldவைகல், நிச்சம்

நாள் என்ற நேரப் பொருண்மையைக் குறிக்க வைகல் என்ற சொல் பழந்தமிழில் வந்துள்ளது. ஒரு நாளில் எட்டுத் தேர்களைச் செய்யும் தச்சன் என்ற பொருள்பட ‘வைகல் எண் தேர் செய்யும் தச்சன்'(புறநானூறு) என்ற பாடல்வரி வருகின்றது. நாள்தோறும் என்பதற்கு வைகல்தோறும் என்ற தொடரும் கையாளப்பட்டுள்ளது.

'வைகல்தோறும் இன்பமும் இளமையும் எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து' (நாலடி)

அம்பின் நிழல் எப்படிக் கடந்து செல்லுமோ அதுபோல நாள்தோறும் இன்பமும் இளமையும் கடந்து செல்லும் என்பது பொருள். நிலையாமை குறித்து வருகிற அரிய கருத்து.

இங்கு வைகல்தோறும் என்பதற்கு நாள்தோறும், தினந்தோறும் என்பது பொருள். வைகல் என்ற சொல் இருக்கவே ‘நிச்சம்' என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்து விடுகிறது. இச்சொல் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே வருவதைக் காணமுடிகிறது.

"அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் / நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப" (தொல்.பொருள்). இந்நூற்பாவில் அச்சம் என்ற முதல் வரியில் வரும் சொல்லுக்கு எதுகையாக நிச்சம் என்ற சொல் வந்துள்ளது. இச்சொல்லுக்கு ‘எஞ்ஞான்றும் என்றும் நாள்தொறும்' என்றும் பொருள் காண்பர் உரையாசிரியர் (காண்க: க.பாலசுப்பிரமணியன், 2016,ப251). கலித்தொகையிலும்,

"அச்சந்தான் மாறி அசைவினான் போத்தந்து/ நிச்சம் தடுமாறும் ஆய் மகள்" என்ற வரிகளில் நிச்சம் என்ற சொல் வந்துள்ளது. புறநானூற்றிலே "நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலை பரிசில்/நச்சு வர நிரப்பல் ஓம்புமதி" (புறம்-360) என்ற வரிகளிலும் நிச்சம் என்ற சொல் வந்துள்ளது.

‘நாள்தோறும் நினக்குரிய ஒழுக்கத்தில் குன்றாதொழிக; நின்பாற் பொருள் நச்சி வருவார் வர அவர்கட்கு வேண்டும் பொருளை நிரம்ப நல்குதலைப் பாதுகாப்பாயாக' என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை உரை எழுதுகிறார்.

அடுத்து பதினெண்கீழ்க்கணக்கு

நூல்களில் ஒன்றான திருக்குறளில் நிச்சம் என்ற சொல் பொச்சாப்பு எனற சொல்லுக்கு எதுகையாக இடம் பெற்றுள்ளது.

"பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு" (குறள்-532).

‘ஒவ்வொரு நாளும் இரந்து தன் வயிறு வளர்க்கும் கொடிய வறுமை அறிவுடையான் மதிப்பைக் கெடுப்பது போல மறதி ஒருவன் புகழைக் கெடுக்கும்'. (புலவர் குழந்தை உரை).இது மட்டுமன்றி,

திருக்குறளில் நிச்சம் என்ற சொல் வடமொழி எதிர்மறை முன்னொட்டான அ-வோடு சேர்ந்து அனிச்சம் என்று மூன்று இடங்களில் வந்துள்ளது.

"மோப்பக் குழையும் அனிச்சம்" (குறள்-90)

"அனிச்சமும் அன்னத்தின்" (1120)

"வாழி அனிச்சமே!"(1111)

நிச்சம் என்பது நிரந்தரத்தைக் குறித்தால் அனிச்சம் என்பது அதற்கு எதிர் மறையான பொருளைக் குறித்தது. அனிச்சம் என்பது ஒருவகை நீர்ப்பூ. ஒரு நொடியில் வாடிவிடக்கூடியது. நிரந்தரமில்லாததுதான் அனிச்சம்.

இடைக்காலப் பக்தி இலக்கியங்களிலும் நிச்சம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

"நிச்சம் நினைவார்க்கு" (நாலா-1085)

நிச்சம் உறும் (தேவா)

"நிச்சம் என் நெஞ்சில் மன்னி"

(திருவா-உயிருண்ணி)

பெரும் எண்ணிக்கையில் நிச்சம்

என்ற சொல் எதுகை நோக்கியே கையாளப் பட்டுள்ளது.இச்சொல் தமிழ் அகராதியில் நித்ய என்ற சமஸ்கிருதத்திலிருந்து வந்த பிராகிருதச் சொல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2) வரருசியின் இலக்கண விதி

இங்கே வரருசியின் ஒரு இலக்கண விதியின் விளக்கம் குறித்துக் காண்போம். தகர யகரவேற்று நிலை மெய்மயக்கத்துடன் வரும் சமஸ்கிருதச் சொற்கள் பிராகிருத மொழியில் சகர உடனிலை மெய்மயக்கமாகத் திரிந்து வரும்.இவ்விதி மூன்றாவது பரிச்சேதத்தில் சம்யுக்த வர்ணம் (consonant clusters) என்ற பிரிவில் வருகின்றது.

ty-thy-dyaam ca- cha-jaah (27)

மேற்கண்ட விதியின்படி சத்ய என்பது சச்சம் என்றும் நித்ய என்பது நிச்சம் என்றும் பத்ய என்பது பச்சம் (paccham) என்றும் மாறும். வித்யா (vidya) என்ற சொல் (vijja) என்றும் வைத்யா என்ற சொல் வெஜ்ஜா (vejjam) என்றும் மாற்றம் பெறும். இந்த விதியின்படி நிச்சம் என்ற சொல் பிராகிருதத்திலிருந்து வந்தது என்று தெரிகிறது. வரருசியின் இலக்கணவிதிப்படி இது உறுதியாகிறது. இவ்விதியைக் கொண்டு தமிழில் வழங்கும் மேலும் சில பிராகிருதச் சொற்களைப் புரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பு நிச்சம் என்ற சொல்லே இடைக்காலத்தில் மேலும் எப்படி மாற்றம் அடைந்தது என்று பார்ப்போம்.

3). நிச்சம் > நிச்சல்

நிச்சம் என்ற சொல்லிலுள்ள

இறுதி -அம் விகுதி கெட்டு அதற்குப் பதிலாக -அல் விகுதி சேர்க்கப்பட்டது. நிச்சல் என்ற சொல் வடிவம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நாலடியார் (81) பாடல் ஒன்றில் நிச்சம், நிச்சல் ஆகிய இரு வடிவங்களும் வருவதனைக் காண முடிகிறது.

"அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்

நிச்சல் நினையுங்காற் கோக் கொலையால்-நிச்சலும்

கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்

நம்பற்க நாணுடையார்."

இரு வடிவங்களும் ஒரே பொருள் பட இங்கே வந்துள்ளன.தேவாரம் போன்ற இடைக்கால இலக்கிய மொழியிலும் நிச்சல் பெரிதாக எடுத்தாளப்படுகிறது.

"நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான்" (சம்.தேவா)

"நிச்சலும் என்னை நினையென்ற

அப்பொருள்" (திருமந்-1780)

"நிச்சலும் அடியவர் தொழுதெழு" (சம்.தேவா)

4).நித்தம், நித்தல், நிதம்

நிச்சம், நிச்சல் ஆகிய சொற்களைத் தொடர்ந்து அதோடு தொடர்புடைய நித்தம், நித்தல் போன்ற சொற்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இவ் விரு வடிவங்களும் நித்ய என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டதாக இருக்கலாம். அதாவது இவை பிராகிருதத்தின் வழியாக வந்தவை அல்ல.தமிழில் -த்ய்- என்ற மெய்மயக்கம்- த்த- என்று மாறுகிறது. இதன்படி நித்ய என்பது நித்த என்றாகி பின்னர் நித்தம் என்றாகிறது.

நித்தம், அநித்தம் ஆகிய இரு சொற்களும் மணிமேகலையில் வந்துள்ளன.

சமணரின் கடவுளான அருகனுக்கு

நித்தன் என்றொரு பெயருண்டு.

சிவனுக்கும் நித்தன் என்ற பெயருண்டு (காண்க: வின்ஸ்லோ அகராதி). நித்த விநோத எனும் தொடர் சோழர் காலக் கல்வெட்டுகளில் பிரபலம்.

"நித்த மணாளர்" (திருவா-17.3)

நித்தம் நித்தம் மாறுண்டு உலாவி

மயங்கும் நெஞ்சே" (சிவவாக்கியார்)

நித்தம் என்ற சொல்லோடு நித்தல் என்ற வடிவமும் கிடைக்கிறது. "நித்தல் விழாவணி நிகழ்க" என்று சிலம்பில் வருகிறது."நெய்யும் பாலும் தயிரும் கொண்டு/ நித்தல் பூசை செய்ய லுற்றார்" (சுந்தரர் தேவாரம்). நிச்சல், நிச்சம் நித்தல் ஆகியவை இன்றைய தமிழில் இல்லை. நிதம் என்ற வடிவமும் பாரதி பாடல் வரியில் வருகிறது.

"தேடிச் சோறு நிதம்" என்பது காண்க.

5) நித்தியமநித்ய என்ற சொல்லிலிருந்து பிற்காலத்தில் நித்தியம் என்ற வடிவமும் உருவாகிறது (ty>ttiy)

  நித்திய பூசை

  நித்திய காலம்

  நித்தியப்படி

  நித்திய தானம்

போன்ற பல சொற்கள் பிற்காலத்தில் உருவாகின்றன.

(காண்க: வின்ஸ்லோ அகராதி -669)

6) அமைச்சு, அமைச்சர்

அமைச்சு என்ற சொல் திருக்குறளில் சில இடங்களில் வருகின்றது.

"படைகுடி கூழ்அமைச்சு" (குற-381),

"அருவினையும் மாண்டது அமைச்சு" (குற -631),

"பொருத்தலும் வல்லது அமைச்சு" (குற-633).

அமைச்சு என்பதற்கு அமைச்சன் என்றே பொருள் சொல்லப்படுகிறது. அமைச்சர் என்ற சொல் சிலப்பதிகாரத்திலும் வருகிறது.

"அறைபோகு அமைச்சர் பிறன்மனை நயப்போர்" (இந்திர விழா-130) ஆமாத்ய எனும் சமஸ்கிருதச் சொல்லிலுள்ள -த்ய்- ஆகிய மெய்மயக்கம் -ச்ச்- என உடனிலை மெய்மயக்கமாக மாறிற்று. எனவே அமைச்சு சொல்லும் பிராகிருதத்திலிருந்து வந்த பழந்தமிழின் சொல்லே.

7) ந்ருத்ய > நித்தம், நிருத்தம்

ந்ருத்ய என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு நடனம், நாட்டியம் என்பது பொருள். இச்சொல் மேலே காட்டப்பெற்ற வரருசியின் இலக்கணவிதிப்படி ‘நச்ச' என்றுதான் பிராகிருதத்தில் வரும். இது தற்கால வடமொழியில் ‘நாச்' என்று வருகிறது.

ஆனால் பழந்தமிழில் ‘நித்தம்' என்றே வருகிறது. ந்ருத்ய எனும் சொல்லின் இடையில் வரும் - த்ய்-எனும் இரு மெய்களும் -த்த்- என உடனிலை நிலை மெய்மயக்கமாக மாறுகிறது. ருகரம் சமஸ்கிருத மொழியில் உயிர். அது இகரமாக மாறி நித்தம் என்றாயிற்று. பரிபாடலில் வரும் பாடல் வரிகள்:

"ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்/ நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்/அத்தக அரிவையர் அளத்தல் காண்மின்" (12,42-45)

இதன் பொருள் ‘தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய் நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால் அழகு மிக்கதாய் ஆடல் மகளிர் அளத்தலைப் பாருங்கள்.' ந்ருத்ய என்பது தமிழ் முறைப்படி நித்தம்

(ty>tt) என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.பிற்காலத்தில் இது நிருத்தம் என்றும் தமிழ்ப்படுத்தப் பட்டது.. (nRtya>niruttam). ஆடல் வல்ல சிவபெருமானை நிருத்தனே என்று திருமுறைகளில் விளிக்கின்றனர்.

"நிருத்தனை நிமலன் தன்னை"

என்பார் அப்பர். சிலம்பில் ஆடல் என்ற சொல்லே பெருமளவில் கையாளப்படுவதைக் காண்கிறோம்.

8). விச்சை, விச்சாதரர்

விச்சை என்ற தமிழ்ச் சொல்லும் பிராகிருதத்திலிருந்து வந்ததே. வித்ய என்ற சமஸ்கிருதச் சொல் விஜ்ஜ என்று மாறும். முதலில் தரப்பட்ட வரருசியின் விதியைக் காண்க. ஜ் என்பது முன் அண்ண ஒலிப்புடைய அடைப்பொலி. இவ்வொலி தமிழில் ஒலியனாக இல்லை. எனவே தமிழில் ஒலியனாக இருக்கிற சகரத்தைக் கொண்டு-ஐ விகுதி சேர்த்து விச்சை என்ற வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.விஜ்ஜா என்கிற வடிவம்தான் தமிழுக்கு அடிப்படை.வித்யா அன்று அன்று.

"குலவிச்சை கல்லாமற் பாகம்படும்"

(பழமொழி நானூறு)

"விச்சைக் கோலத்துவேண்டுவயிற் படர்தர"

(சிலம்பு-கால்)

என்று செவ்வியல் தமிழிலும்

"விச்சைமால் அமுதப் பெருங்கடலே"

என்று திருவாசகத்திலும் வருகிறது. உதயணகுமார காவியத்தில் வரும் உதயணனுக்கு விச்சைவீரன் என்ற பெயருண்டு.

விச்சாதரர் என்பதும் இதிலிருந்து வந்தது. விச்சையில் இடையில் வரும் சகரம் மூக்கொலியாகி விஞ்சை, விஞ்சையன் என்றெல்லாம் மாறி வழங்கின

9) உய்யானம்

உய்யானம் என்பது பாலிமொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொல். (மயிலை சீனிவேங்கடசாமி, 1940). இச்சொல்லுக்கு பூங்கா அல்லது மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய தோட்டம் என்பது பொருள். உய்யான கீளா என்றால் விளையாடும் இடம் என்றும் உய்யானபால என்றால் தோட்டத்தை பாதுகாப்பவர் என்றும் உய்யானபூமி என்றால் மகிழ்ச்சியான நிலப்பகுதி என்றும் பாலி அகராதியில் சொற்கள் காணப்படுகின்றன. உத்யான எனும் சமஸ்கிருதச் சொல் பிற பிராகிருதக் கிளை மொழிகளிள் உஜ்ஜாண என்றும் பாலியில் உய்யான என்றும் மாற்றமடையும்.

"கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று/ உய்யானத்திடை உயர்ந்தோர் செல்லார்" (மணி-மலர் வனம்) "உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்" (சிலம்பு-ஊர்காண்;127).

இவ்வாறு பழந்தமிழில் வரக் காண்கிறோம்.

‘உயான' என்ற வடிவமும் பிராகிருத மொழியில் கிடைக்கிறது.

மத்ய (madhya) என்ற சொல்லும்

மய்ய (மையம்) என்று பாலியில்

மாறும். மதியம், மத்தி என்பது பிற்கால வழக்காகலாம். மய்யம் என்றால் ‘நட்டநடு' என்பது பொருள்.

11) உவச்சு, உவச்சர்:

உபாத்யாய என்ற சொல் குறித்து ஐராவதம் மகாதேவன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இச்சொல்

பாலி மொழியில் உபஜ்ஜா, உபஜ்ஜாய என்றும் காணப்படுகிறது. பிற பிராகிருதங்களில் உஅஜ்ஜா என்று

உயிர் மயக்கத்துடன் சிதையும்.

உயர் மயக்கத்துக்கு வகர உடம்படு

மெய் சேர்த்து உவஜ்ஜ என்று மாறி பின்னர் தமிழில் உவச்சர் என்று ஆயிற்று. சோழர் காலத்தில் கல்வெட்டுகளில் இச்சொல் பயின்று வருகிறது. கோயில்களில் மேளம் முதலிய இசைக் கருவிகளை வாசிப்போர் உவச்சர் என்று அழைக்கப்பட்டனர். அப்பணி உவச்சுப் பணி என அழைக்கப்பட்டது. உவச்சன் பின்னாளில் ஓச்சன் என்று மாற்றம் அடைந்தது. (காண்க: வின்ஸ்லோ தமிழ் அகராதி)

முடிவுரை

தமிழில் வழங்கும் பிராகிருதச் சொற்களை அறிந்து கொள்ள அம்மொழிக்கு எழுந்துள்ள இலக்கணங்கள் நமக்குத் துணை செய்கின்றன. பிராகிருத மொழியில் பாலி உட்பட பல கிளை மொழிகள் உள்ளன. எந்தக் கிளை மொழியில் இருந்து ஒருசொல் வந்தது என்பதும் நமக்குத் தெரிய வேண்டும். தமிழில் வந்த பிறகு எவ்வாறு மாற்றம் அடைந்து வளர்ச்சி பெறுகின்றன என்பதும் கவனிக்கத் தக்கது. சொற்களின் வளர்ச்சி ஒரு நித்த விநோதம்தான்.

துணைநூல்கள்

1). பாலசுப்பிரமணியன், க.தொல்காப்பியச் சொற் பொருளடைவு, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர். (2016).

2). மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், செண்பகா பதிப்பகம், சென்னை- 17. (1940, மறுபதிப்பு, 2010)

3). Vaidyanathan ,S. Indo-Aryan loan words in Tamil, Annamalai University Annamalai nagar(1965).

- ஆ கார்த்திகேயன்

Pin It