shambala 450அரசியல் நாவல் என்ற கருத்தியல் தெளிவற்றுப் பல பொருள் தருவதாக இருக்கிறது. ஏனென்றால் அரசியல் என்ற கருத்தியலே அப்படிப்பட்டது. அரசியல் என்பது ஓர் அரசினை மேலாண்மை செய்வதில் பயன்படும் வழிமுறைகளும், யுத்திகளும் என்பார்கள். மேலும் அரசியல் அறிவியல் என்பது அதிகாரத்தின் அறிவியல். அதிகாரத்தைப் பற்றியும் அதிகாரத்தை அடைதல் பற்றியும் ஆய்வுசெய்யும் அறிவியல்.

இந்தச் செயல்பாட்டில் மக்களும் அங்கம் வகிக்கிறார்கள். இன்று அரசியல் என்ற சொல் ஆங்கிலத்தைப் போலவே தமிழிலும் வேறு சொற்களோடு ஒட்டி வேறு கருத்தியலைத் தருகிறது: வாக்கு அரசியல், சுற்றுச்சூழல் அரசியல், பெண்ணிய அரசியல். எனவே அரசியல் நாவல் என்ற சொற்றொடரிலுள்ள அரசியல் எதைக் குறிக்கிறது? 

இன்னொரு பார்வையும் இருக்கிறது: சிலர் அரசியல் என்ற கருத்தியலையே அனைத்தையும் உள்ளடக்கத்தக்கதாக விரிவாக்கி இலக்கியமும், ஏன் வாழ்க்கை அனைத்துமே அரசியல்தான் என்பார்கள். கலைக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற வாதத்தை ஜார்ஜ் ஆர்வெல் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஆகவே, அரசியல் நாவல் என்றால் என்ன என்று வரையறை தருவதும் அதன் கூறுகள் எவை என்று பட்டியல் இடுவதும் எளிதில்லை. இன்றைய நவீன உலகின் சிக்கலான எந்திரத்தனத்தில் மனிதன் என்ன செய்கிறான், எப்படி வாழ்க்கைச் சிக்கல்களை எதிர்கொள்கிறான் என்று காட்டுவதுதான் ஒரு நாவலின் நோக்கம் என்றால், அரசியல் எனும் இலக்கியவகையும், மனிதன் ஓர் அரசியல் சூழலை எப்படி எதிர்கொள்கிறான் என்று காட்டவேண்டும். அப்படியானால் அதன் உள்ளடக்கமாக இருக்க எவற்றிற்குத் தகுதி? அதன் பின்புலம் எப்படி இருக்கவேண்டும்? சமகாலத்து அரசியல் நிகழ்வுகள், கோட்பாட்டு மோதல்கள், அரசியல்வாதிகள், மக்களின் எதிர்வினை ஆகியவை உள்ளடக்கமாக இருக்கும்; அவற்றிற்கு ஏற்ற கதைமாந்தரும் இருப்பர். அதேபோலப் பின்புலம் சமகாலத்து அரசியல் சூழலைக் கொண்டிருக்கும்.

நாவலாசிரியர் ஒரு நடுவு நிலையை எடுத்துக் கொள்ள முடியாது. ஜார்ஜ் ஆர்வெல்லும், ஆல்டஸ் ஹக்சிலியும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை, தங்கள் கொள்கையை, விளக்கவே தங்கள் நாவல்களைப் படைத்தார்கள். ஷம்பாலாவைப் படைத்த தமிழவனுக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அவர் படைத்த கதைமாந்தரும் அரசியல் சூழலை வெவ்வேறு வழிகளில் எதிர் கொள்கிறார்கள்.

தனது ரிபப்ளிக்கில் இலட்சிய அரசியல் பேசுகின்ற பிளேட்டோவும், அரசனும் அரசும் எப்படி இருக்கவேண்டும் என்று கற்பிக்கும் வள்ளுவரும், அரசு என்ன என்ன யுத்திகளைத் தான் பிழைக்கக் கையாளவேண்டும் என்று சொல்லும் அர்த்தசாஸ்திரமும் முதல் அரசியல் நூல்கள் என்றால், அரசியல் நாவல் என்பது விக்டோரியா பேரரசியின் பிரதமர் டிஸ்ரேலியின் படைப்பில் தொடங்குகிறது. ஜோசப் கான்ரட், ஸ்டென்டால், ஆர்தர் கோஸ்லர், ஏற்கனவே குறிப்பிட்ட ஆர்வெல், ஹக்சிலி ஆகியோர் அரசியல் நாவலாசிரியர்கள் என்று அறியப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய அரசியல் நாவலாசிரியர்களில் முல்க்ராஜ் ஆனந்த், சல்மான் ருஷ்டி, நயன்தாரா சைகல் ஆகியோர் முக்கியமானவர்கள்.

அரசியல் நாவலை ஒரு இலக்கிய வகையாகக் கருதி அதற்குக் கோட்பாட்டை வகுத்தவர்கள் ஸ்பியர் (1923) முதல் இர்விங் ஹவ் (1957) வரை பல திறனாய்வாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல் நாவலுக்குத் தருகின்ற வரையறைகள், அதில் காணப்படும் கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழவனின் ஷம்பாலாவை வாசிக்கலாம்.

அரசியல் நிகழ்வுகள், அமைப்புகள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஒரு கதையாடல் தொனியில் விமர்சிக்கும் நாவல்களை அரசியல் நாவல்கள் என்பார் ஒரு கோட்பாட்டாளர். இந்நாவல்களில் அரசியல் கோட்பாடு அல்லது சித்தாந்தம் ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும். கோட்பாடுகளுக்கு இடையேயான மோதல்கள் இந்நாவல்களுடைய கதைப்பின்னலின் ஓர் அங்கமாக இருக்கலாம். சட்டமியற்றல், ஆட்சி, அது தரும் அதிகாரம், அதனைக் கையாளும் அல்லது அதற்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள், அதிகார மையங்கள், அமைப்புகள் ஆகியனவும் இதில் இடம் பெறும். அரசியல் (கொள்கை) பிரச்சாரம், சீர்திருத்தம் ஆகியன இந்நாவல்களின் நோக்கங்களாக இருக்கும். நாவலாசிரியரின் அரசியல் நம்பிக்கை அல்லது கோட்பாடு அவரது சார்பு அல்லது எதிர்ப்புநிலை அவர் அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் விவரித்துப் பகுப்பாய்வு செய்வதில் வெளிப்படும். நாவலாசிரியர் சில வேளை ஜார்ஜ் ஆர்வெல் 1984 இலும் ஹக்சிலி பிரேவ் நியூ வொர்ல்டிலும் பயன்படுத்தியிருப்பதைப் போல அதீதக் கற்பனை உலகு எனும் யுத்தியைத் தனது கொள்கையை வெளிப்படுத்தப் பயன்படுத்தலாம்.

தமிழவனுடைய ‘ஆடிப்பாவை போல’ என்ற நாவலைப்போலவே ஷம்பாலாவும் இரட்டைக் கதையோட்டங்களைக் கொண்டது. அந்த நாவலில் இரண்டு கதையோட்டங்களும் அவ்வப்போது குறுக்கிட்டுக் கொள்கின்றன. ஆனால் ஷம்பாலாவில் இறுதியில் சந்திப்பின் தொனிமட்டும் கேட்கிறது. இரண்டும் வெவ்வேறு அரசியல் களங்களைக் காட்டுவதால் இவ்வமைப்பு இருக்கிறதோ? ஆடிப்பாவையை அரசியல் நாவலாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் சமகாலக் கதையை அது சொல்லவில்லை.

எனவே அது வரலாறாக ஆகி விடுகிறது. ஷம்பாலாவின் இரு கதையோட்டங்களுமே அரசியலை, இன்றைய- இருபத்தோராம் நூற்றாண்டு இந்திய அரசியலின் திருவிளையாடல்களை மையமாகக் கொண்டுள்ளன. ஒருபக்கம் கோட்பாடுகளின் மோதல்; இன்னொரு பக்கம் ஒரு தனியாளினுடைய- அதுவும் அடாவடித்தனமும் மூர்க்கமும் நிறைந்த ஒருவனுடைய - அதிகார ஆசையும், அதிகாரக் குவிப்பும் இலக்காகக் கொண்டிருக்கும் ஹிட்லருடைய எழுச்சி.

இரண்டிலுமே இன்றைய அரசியல் களத்தில் மக்களாட்சித் தத்துவத்துக்குக் குழிபறிக்கும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். சொல்லப்போனால் கேள்வி கேட்பாரற்றுக் கோலோச்சும் சுதந்திரப் பறிப்பு. நாவலுக்கு அறிமுகமாகத் தரப்பட்டிருக்கும் மேற்கோளான சிறுகுறிப்புகளும் (epigraphs) செய்தித்தாள் பகுதியும் இதனை வெளிப்படுத்துகின்றன. 

கோட்பாட்டு மோதலில் அமர்நாத்தின் தனியுரிமை மீறப்படுவது இன்றைக்குத் தனிமனிதனின் ஒவ்வோர் அசைவும் நாஜி ஜெர்மனியைவிடக் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது (snooping, surveillance) என்பது மறைமுகமாக வெளிப்படுகிறது. பெரும்பான்மைச் சர்வாதிகாரத்தில் மக்களாட்சித் தத்துவமே காவுகொடுக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் இல்லாதபோது மக்களாட்சி எங்குப் பிழைக்க முடியும் என்று அஞ்சுகிறார் அமர்நாத். இன்றைய செய்தித் தொடர்பின் முதுகெலும்பு செல்பேசி. அதன் பயன்பாடும் அதில் பயன்படும் முகநூலும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது அமர்நாத்தின் சித்தாந்தத்திற்கு ஏற்புடையதில்லை.

இவையும், பணமதிப்பிழப்பு அன்றாட மக்களைப் பாதிப்பது முதலானவையும் இந்தக் கதையோட்டத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்றைய நிகழ்வுகள். பெரியம்மாவின் மரணம் பணமதிப்பிழப்பு தந்த பரிசுதான். இன்னொரு கோட்பாட்டு மோதல் மதங்களையும் சடங்குகளையும் அரசியலாக்கி நாட்டைப் பிளவுபடுத்துகிற இன்றைய வலதுசாரிகளால் ஏற்படுகிறது.

இன்னொரு கதையோட்டம் ஹிட்லர் என்பவனின் அரசியல் எழுச்சியின் வரலாறு. அவன் குழந்தைப்பருவ அனுபவங்களும் அவனுடைய இயற்கை உந்துதல்களும் எப்படி அவனை ‘ஹிட்லராக’ உருவாக்கின என்பதை இங்கே விளக்கமுடியாது. மூர்க்கத்தனமான பேராசைக்காரனிடம் நுண்ணறிவும் உடல் வலுவும், சிலவேளைகளில் வெளிப்படும் மென்மையான உணர்வுகளும் சேரும்போது அரசியல்செய்வது அவன் கைகளில் இயற்கையான விளைவாக ஆகிவிடுகிறது. இறுதியில் சொல்லப்படுவதுபோலவே வரலாற்று ஹிட்லராகவே அவன் மாறிவிடுகிறான். இன்றைக்கு நமது நாட்டில் அடாவடித்தனம் செய்தே பதவிக்கு வந்தவர்களின் ஒட்டுமொத்த உருவம் அவன். அவ்வளவுதான்...

shambala book 450நாவலின் பின்னட்டையில் அமர்நாத் நாவலின் ‘மையக் கதாப்பாத்திரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மில்டனின் சாத்தானைப் போல ஹிட்லர்தான் கதை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் எதிர் நாயகன்போலத் தோன்றுகிறான். அமர்நாத் கதையில் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் காணப்பட்டாலும் கோட்பாட்டு மோதல்கள் மறைமுகமாகவே வெளிப்படுகின்றன. ஹிட்லர் கதையே அரசியல்தான். இப்படித்தான் அரசியல் நடக்கிறது என்று நம்மைப்போன்ற சாமானியர்களுக்கும், ஆசிரியருக்கும்கூட தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லாம் திரைக் கதைகளின் மூலம் பெற்ற அறிவுதான். அதனால்தானோ என்னவோ ஹிட்லரின் கதைப்பகுதியில் சினிமாத்தனம் தெரிகிறது.

சரி, கடைசியில் ஷம்பாலா எங்கிருந்து வருகிறது? தண்டிபத்லா சாஸ்திரி ஏன் வருகிறார்? இன்றைய அறிவியல் அனைத்தும் வடமொழிநூல்களிலிருந்து வருகிறது என்று பெருமை பேசும் அரசியலைச் சாஸ்திரி மூலம் பகடி செய்கிறாரா, ஆசிரியர்? பல அரசியல் நாவல்களில் கதைக் களமாக இருக்கிற - ஆர்வெல்லிலும் ஹக்சிலியிலும் வருகிற - அதீதப் புனைவுலகினைக் கொண்டு வருகிறார் தமிழவன். ஜேம்ஸ் ஹில்டன் தனது நாவலில் முழுமையடைந்த அழகிய அதீதக் கற்பனை உலகிற்கு ஷங்க்ரி லா என்று பெயர் வைத்தார். அவர் திபெத்திய புத்தப் புனித அரசாகக் கருதப்பட்ட ஷம்பாலா என்ற தொன்மத்திலிருந்து எடுத்தாண்டார் என்று சொல்வார்கள். இது மிக உயர்ந்த முழுமை நிலையிலுள்ள இலட்சிய உலகு, உடோப்பியா.

ஆனால் தமிழவனின் ஷம்பாலா இதற்கு நேர் எதிர் ஆனது. அங்கே அதிகாரம் குவிந்திருக்கும். பெருந்துன்பமும் அநீதியும் ஆட்சி செய்யும். இது டிஸ்டோப்பியா. அதைத்தான் நமது ஹிட்லர் தேடுகிறான். வரலாற்று ஹிட்லரும் அதைத்தான் தேடினார். இங்கு ஆர்வல், ஹக்சிலி நாவல்களின் கற்பனை உலகில் இருப்பதுபோன்ற அதிகார வன்முறை ஆட்சியமைப்பு இருக்கும். ஃபூக்கோ ஒரு சமுதாயத்தினுள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆட்சி அமைப்பையும் அதன் மூலமான அறிவையும் பற்றிக் கூறுகிறார்.அறிவும் அதிகாரமும் இணையும்போது என்ன நடக்கும்? தமிழவனின் ஷம்பாலாவில் வடமொழி நூல் காட்டும் அறிவு அதிகார மையத்தை ஏற்படுத்தும்போது உரிமை, சுதந்திரம் என்ற கோட்பாடே இல்லாது போகும்.

இவ்வாறு தமிழவனின் ஷம்பாலா நாவலில் ஓர் அரசியல் நாவலின் கூறுகள் அனைத்தும் இடம் பெறுகின்றன. தமிழ் அரசியல் நாவல்கள் என்ற ஓர் இலக்கிய வகையில் இது சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

ஷம்பாலா, தமிழவன்.
சிற்றேடு வெளியீடு 2019.
பக் 220. விலை ரூபாய் 250/-

Pin It