டிசம்பர் மாதம் 9-ஆம் தேதியன்று பிற்பகல் 3.30 மணியளவில், கொச்சியிலுள்ள எர்ணாகுளத்து அப்பன் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேசப் புத்தகத் திருவிழா மண்டபத்தில் வைத்து, எழுத்தாளர் ஏ.எம். சாலன் மலையாள மொழியிலிருந்து மொழிபெயர்த்த சிறுகதை நூலான (மூலம்: மலையாளம், ஆசிரியர். இ.பி. ஸ்ரீகுமார்) ‘விளம்பர உடல்’ வெளியிடப்பட்டது. நூலை, கொச்சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். டாக்டர். திருமதி. ஜெ. லதா அவர்கள் வெளியிட, அதன் முதல் பிரதியை பிரபல மலையாள பெண் எழுத்தாளர். ஸ்ரீகுமாரி ராமச்சந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

ncbh book release 352

பல்கலைக்கழக துணைவேந்தர். டாக்டர். லதா அவர்கள் உரையாற்றும் போது, ‘தரமான மலையாள நூல்கள் தமிழுக்கு அரிதாக மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஏ.எம். சாலன் சிறுகதை நூல்களையும், நாவல்களையும் இப்படி மலையாளத்திலிருந்து தேர்ந்தெடுத்து தமிழுக்கு மொழிபெயர்த்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது, மலையாள இலக்கிய நூற்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதுடன், எங்கள் கலை இலக்கியம், பண்பாடு போன்றவற்றையும் தமிழ் மக்களுக்குப் பரிச்சயப்படுத்துகிறது. மட்டுமின்றி, இரு மாநில மக்களின் இலக்கிய வாய்க்காலாகவும் அமைகிறது’ என்றார். முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு கொஞ்சம் தமிழிலும், கொஞ்சம் மலையாளத்திலும் பேசிய ஸ்ரீகுமாரி ராமச்சந்திரன் அவர்கள் “ஏ.எம். சாலன், பல நல்ல மலையாளச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். என்னுடைய கதைகளையும் கூட அவர், தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும் நூல்களை சமூக அக்கறையோடு நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிடுவதை நினைக்கும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

மூல நூலின் ஆசிரியர். இ.பி. ஸ்ரீகுமார் பேசும் போது ‘எழுத்தாளர். ஏ.எம். சாலன், மலையாளிகள் படிக்கும் மலையாள நூல்களை விட அதிகமான மலையாள நூல்களைப் படித்துவருபவர். அவர், அப்படிப் படிக்கும் நூல்களிலுள்ள மிகச்சிறந்த நூற்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, மொழி பெயர்ப்பவர். உலகிலுள்ள தரமான மொழிபெயர்ப்பு நூல்களை தமிழில் அச்சடித்து வெளியிட்டு வரும் நியூ செஞ்சுரி புத்தகநிலையம், சிறந்த மலையாள நூல்களை அச்சிட்டு எங்களையும் எங்கள் இலக்கிய வளர்ச்சியினையும் ஊக்கப்படுத்தி வருகிறது. ஒரு வகையில் சொன்னால் அதுதான் மலையாள மொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் அச்சிட்டு வெளியிடுவதில் முன் வரிசையில் நிற்கும் எனத் தோன்றுகிறது. அது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.’ என்றார்.

கூட்டத்தின் தலைவராக இருந்த டாக்டர். பா. ஆனந்தகுமார் அவர்கள், தன் உரையை மலையாள மொழியில் மிகச்சிறப்பாக ஆற்றினார். அவர், உரையாற்றும் போது, மலையாள எழுத்தாளர் இ.பி. ஸ்ரீகுமாரின் கதைகள், அவற்றின் உள்ளடக்கம், அதன் சமூக, தத்துவப் பின்னணி, அது பிரதிபலிக்கும் இன்றைய சமூக எதார்த்தம் போன்றவைகளை, கதைகளிலிருந்து உதாரணங்களை எடுத்துக்காட்டி, தனக்கேயுரிய விமர்சனப் பார்வையில் பேசி, நூற்றுக்கணக்காக வந்தமர்ந்திருந்த தமிழ்- மலையாள மக்களை பிரமிப்பு அடையும்படி செய்தார். மட்டுமின்றி, துணைவேந்தரின் போற்றற்குரிய தகுதிகளையும், அவர் வகித்துவரும் பொறுப்பான பதவிகளையும் எடுத்துரைத்தார். மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் திரு. ஏ. கிருஷ்ணமூர்த்தி ஆற்றியவரவேற்பின் போது, நியூ செஞ்சுரி நிறுவனம் தமிழ் - மலையாளக் கலை இலக்கிய உலகிற்குச் செய்துவரும் சேவையைப் பற்றியும் எடுத்துக்காட்டிப் பேசினார். மலையாள எழுத்தாளர் இ.பி. ஸ்ரீகுமாரும், திரு. ஏ.எம். சாலனும் ஏற்புரை வழங்க, திரு. அஜித் சாலன் நன்றி கூறினார்.

Pin It