கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

thiyagu kambikkul velichangal"வசந்தத்தின் இடிமுழக்கம்" எனக் கொண்டாடப்பட்ட நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மரண தண்டனை வரை சென்றவர் தோழர் தியாகு. காங்கிரஸ், நக்சல் இயக்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) என பல அரசியல் தளங்களில் பயணித்தவர். தனது அரசியல் பாதையை சுய விமர்சனம் செய்வதிலும், படிப்பினைகளை அறிந்து கொள்வதிலும் சிறிதும் தயக்கம் கொள்ளாதவர் என்பது அவரது எழுத்துக்களில் புரிகிறது. மார்க்சியக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர். தற்போது தமிழ்த் தேசிய இன விடுதலை போராட்டக் களத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார்.

அவரது சிறை அனுபவங்களைத் தொகுத்து வெளியான 'சுவருக்குள் சித்திரங்கள்' (வெளியீடு: விஜயா பதிப்பகம்) நூலை நான்கு வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். மரண தண்டனை பெறுதல், நீதிமன்றப் புறக்கணிப்பு, சிறைவாசிகளின் உரிமைக்கான போராட்டம், சக தோழர்களுடனான அரசியல் விவாதங்கள் ஆகியவற்றைத் தொகுத்திருப்பார். அதன் தொடர்ச்சியாகவே அவரது "கம்பிக்குள் வெளிச்சங்கள்" இருக்கும் என்கிற காரணத்தினாலும், அதிக பக்கங்கள் கொண்ட நூல் என்பதினால் "கம்பிக்குள் வெளிச்சங்கள்" நூல் சில காலம் கிடப்பில் இருந்தது.

தற்போது கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கினால் புத்தகம் வாசிக்க நேரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் "கம்பிக்குள் வெளிச்சங்கள்" (வெளியீடு: விஜயா பதிப்பகம்) நூலை வாசிக்க ஆரம்பித்தேன். சுமார் 600 பக்கங்கள் கொண்ட நூலை வாசித்து முடிக்க இரு வாரங்களாவது ஆகிவிடும் என எண்ணினேன். ஆனால் தோழர் தியாகுவின் மிகவும் எளிமையான எழுத்துநடை நமது வாசிப்புத் திறனை அதிகமாக்கி விடுகிறது. பணிகளுக்கு நடுவிலும் ஒரு வாரத்திற்குள் இந்த நூலைப் படித்து முடித்து விட்டேன்.

அழித்தொழிப்பும் சிறைபடுதலும்:

எப்ப பார்த்தாலும் அழித்தொழிப்பு பற்றியே பேசிக் கொண்டிருக்கும் இளைஞருக்கு (தியாகு) அதற்கான காலம் வந்துவிட்டது. உழைக்கும் மக்களைக் கொடுமைப்படுத்தும் வர்க்கப் பகைவர்களான சாதி ஆதிக்கப் பண்ணையார்கள்தான் இலக்கு. முதல் அழித்தொழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு பின்னர் தலைமறைவு வாழ்க்கை - மேலும் சில தோழர்களுடன் இணைந்து அடுத்த அழித்தொழிப்பு சம்பவத்திற்கான திட்டமிடுதல் - நக்சல்களின் முழக்கத்தை எழுப்புதல் - வயல், காடுகளில் தப்பியோட்டம் - பொதுமக்களிடம் அகப்பட்டு அடிவாங்குதல் - பின்னர் சிறைபடுதல் இப்படித்தான் நூல் ஆரம்பமாகிறது. ஒரு விறுவிறுப்பான திரைப்படக் காட்சி போல நகர்கிறது.

அரசியல் விவாதங்கள்:

சிறைபடுவதற்கு முன்னால் மாணவர் காங்கிரசில் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் தோழர் தியாகு. அதிலும் குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் தோழர் தியாகு நடத்திய விவாதம் மிகவும் முக்கியமானது. தற்போதைய காங்கிரஸ் நிலைக்கும் இந்த விவாதம் பொருந்தும். மேலும் மார்க்சிஸ்டுக் கட்சி மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் ஏ.பி (ஏ.பாலசுப்ரமணியம்) அவர்களிடம் "சீனப் பாதை - இந்தியப் பாதை" குறித்து விவாதித்தும் இந்த நூலின் முக்கிய படிப்பினை. 1974-இல் போராட்டக் கைதியாக சிறை சென்ற மார்க்சிஸ்ட் தோழர் மணியரசனுடன் (தற்போது தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்) "இந்தியப் புரட்சியின் பாதை எது? சீனப் பாதையா? அல்லது ரஷ்யப் பாதையா?" என விவாதிக்கிறார்கள் தோழர்கள் தியாகுவும், லெனினும். மேலும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்தும் விவாதிக்கிறார்கள்.

மார்க்சின் மூலதனம் மொழிபெயர்ப்பு:

"மார்க்ஸ் என்னும் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் அவரின் பின்னால் இருக்கும் நண்பர் எங்கெல்சும் நினைவுபடுத்தப்படுவார்" என்று தோழர் தியாகு அடிக்கடி சொல்லுவார். அதே போல தோழர் தியாகுவின் நூல்களை வாசிக்கும்போது அவரோடு சிறையில் இருந்த தோழர் லெனினும் கூடவே பயணிப்பதை காண முடியும். அப்படி ஒரு நெருக்கமான தோழமை அவர்கள் இருவருக்கும்..

மார்க்சியத்தின் மீது மிகுந்து ஈடுபாடு கொண்டவர்கள் தோழர்கள் தியாகுவும், லெனினும். சிறைவாழ்வை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் காரணமாக கார்ல் மார்க்சின் மூலதனம் நூலை தமிழில் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்குகிறார்கள். தோழர் தியாகுவின் ஆங்கில அறிவு மொழிபெயர்ப்பிற்கு மிகவும் உதவுகிறது. ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும் பின்னர் பல தோழர்கள் அளித்த நம்பிக்கையின் காரணமாக மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பிக்கிறார் தோழர் தியாகு. 1867 இல் ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனத்தின் முதல் பாகம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1975 இல் திருச்சி மத்தியச் சிறையில் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. சிறைக்குள் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பலர் சிறுசிறு உதவிகள் செய்கிறார்கள்.

செய்தித்தாள் வாசிப்பது, சக சிறைவாசிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பது, சிறைவாசிகளுக்கு மேல்முறையீடு, கருணை மனு மற்றும் கடிதம் எழுதுவதில் உதவுவது என மிகவும் பயனுள்ள வாழ்வை சிறைக்குள் வாழ்ந்திருக்கிறார் தோழர் தியாகு.

"கம்பிக்குள் சித்திரங்கள்" நூலில் மூன்று சிறைவாசிகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 

சந்துரு என்கிற சந்திரன்:

மிகவும் ஏழ்மை சூழ்நிலையில் வாழ்ந்து வந்த சந்துரு கோபத்தின் காரணமாக ஒரு கொலையைச் செய்து விடுகிறார். வேறு இருவர் கைது செய்யப்பட்டது தெரிந்ததும் தானே வந்து கைதாகிறார். பிறர்க்கு துன்பம் இழைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தோழர் தியாகுவின் ஆலோசனையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் படுகிறது.
மனிதாபிமானத்தைப் போலவே போர்க்குணம் அதிகம் இருப்பதால் தோழர்களிடம் விரைவில் நெருக்கமாகி விடுகிறார். சந்துருவையும், இன்னொரு சிறைவாசியான ஆறுமுகத்தையும் அமர வைத்து சிறைக் கொட்டடியில் மார்க்சிய வகுப்பெடுக்கிறார் தோழர் தியாகு. பொருள் முதல்வாதம், கருத்து முதல்வாதம் என பாடம் நகர்கிறது, நாமும் மாணவர்களாகி விடுகிறோம்.

பிறப்பால் கிறிஸ்தவர் இல்லை என்றாலும் இயேசுவின் மீது அப்படி ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர் சந்துரு. அதனால் அடிக்கடி "ஆத்திகம் - நாத்திகம்" விவாதமும் எழுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் சந்துரு விடுவிக்கப்படுகிறார். அவரை தனது வளர்ப்பு மகனாக அறிவித்து தனது சகோதரியின் மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கிறார் தோழர் லெனின். சிறைக்குள்ளும் இப்படியான உறவுகள் உருவாகின்றன.

வீரையன்:

சாதிவெறியும் ஆணாதிக்க வெறியும் கொண்டவர் வீரையன். போதிய ஆதாரங்களுடன் அவரைக் கைது செய்ய முடியாத நிலையில், காவல் துறை மிகவும் தந்திரமாக அவரை வைத்தே அவரது கைரேகையை குற்றம் நடந்த இடத்தில் உள்ள ஒரு பொருளில் படிய வைத்து விடுகிறது. அந்தக் கைரேகையே பின்னாளில் அவரது கழுத்தில் சுருக்குக் கயிறு ஆகி விடுகிறது. அவரின் குற்றத்திற்கு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சரிதான் என்று முதலில் நமக்குத் தோன்றுகிறது. பின்னாளில் அவரது மனமாற்றத்தைக் காணும்போது அவரை ஆயுள் தண்டனையோடு விடுவித்திருக்கலாம் என எண்ண வைக்கிறது. "சிறை என்பது குற்றவாளியைத் தண்டிக்கும் இடம் அல்ல, அவனுக்குள் இருக்கும் மனிதனை வெளிக் கொணரும் இடம்" என்பதற்கு வீரையன் நல்ல உதாரணம். தனது இறுதி நாட்களில் தோழர்களிடம் வீரையன் சொன்னது: "இங்க இப்ப ஒங்களோட பழகினதுக்கு.... முன்னாடியே பழகியிருந்தன்னா என் வாழ்க்கைப் பாதையே மாறிப் போயிருக்கும்னு நினைக்கிறேன்".

தனது இறுதி நாட்களைப் பயனுள்ளதாக்க வேண்டும் என்பதற்காக மூலதனம் நூல் மொழிபெயர்ப்பில் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்கிறார் தனது இறுதிநாள் வரை.. தனது இறுதி பத்து நாட்களைத் தோழர்களிடம் ஒப்படைத்து விடுகிறார். வீரையனிடம் பல இடங்களில் முரண்பட்டாலும் அவருக்குத் தேவையானவைகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள் தோழர்கள். வீரையன் தனது மனைவி, குழந்தை, பெற்றோருக்கு எழுதும் கடிதங்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்த்துபவை. வீரையன் இந்த உலகிலிருந்து நிரந்தர விடுதலை ஆகிறார்.

பூ. கருப்பையா:

சிறையில் யாருடனும் பேசாமல், தனித்து இருப்பவர் பூ. கருப்பையா. சில நாட்கள் பழக்கத்திற்குப் பின்னர் தோழர்களிடம் தனது வழக்கு பற்றி சொல்கிறார். கொலை வழக்கு ஒன்றில் எந்த தொடர்புமில்லாத அப்பாவி கருப்பையாவை சிலர் சூழ்ச்சி செய்து சிக்க வைக்கிறார்கள். வெளியூர்க்காரன், வேறு சாதிக்காரன் நம்ம ஊருல நல்லா முன்னேறி வருகிறானே என்கிற பொறாமைதான் காரணம். குற்றவாளியை முடிவு செய்து விட்டு அதற்கு ஏற்ப சாட்சிகளைத் தயார் செய்யும் கொடுமையைச் செய்கிறது காவல்துறை. சாட்சிகளும் சிறிதும் மனசாட்சி இன்றி கருப்பையாவின் மீது குற்றம்சாட்ட துணை போகிறார்கள். நீதிபதிகளும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்காமல் பொதுப்புத்தியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

கருணை மனு கொடுக்கச் சொல்லி தோழர்கள் வலியுறுத்துகிறார்கள். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் கருணை மனு இருக்க வேண்டும் என்பதால் அதனை மறுக்கிறார் கருப்பையா. பின்னர் தனது பின்னணி, வெளியூரில் தான் நடத்தப்பட்ட விதம், தனது மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தோழர்கள் உதவியோடு ஒரு கடிதமாக எழுதி ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 15 வருடங்கள் சிறைவாழ்விற்குப் பின்னர் வீடு திரும்புகிறார் அப்பாவி கருப்பையா.

மிசாக் கொடுமை:

1975 இல் இந்திராகாந்தி கொண்டுவந்த அவசர நிலை (emergency), மிசா கைதுகள், மிசா கைதிகள் சிறையில் சந்தித்த கொடுமைகள் பற்றி நூலின் இறுதி நூறு பக்கங்களில் விளக்கியிருக்கிறார் தோழர் தியாகு. மிசா பற்றித் தெரிந்து கொள்ள இந்த நூலே போதுமானது. குறிப்பாக சென்னை முன்னாள் மேயரும் அவசர நிலையின்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சிட்டிபாபு சிறையில் சந்தித்த கொடூரமான அடக்குமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலினை சிறையில் சந்தித்ததும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, கி.வீரமணி போன்ற முன்னணித் தலைவர்கள் குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

இவை போக "மெய்வழிச்சாலை அனந்தர்கள்" என்னும் ஆன்மீகக் குழுவினர் பற்றிய அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

சிறை வாழ்வு பற்றி, சிறைக்குள் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் "கம்பிக்குள் வெளிச்சங்கள்". 

- குருநாதன் சிவராமன்