இந்தியாவில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு கறிக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்திரவு, சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு  குறிப்பிட்ட மதத்தின்  பெயரால் இதர மதத்தவரின் உரிமைகளில் தலையிடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற நாடு என்பது  இந்தியாவில் பெயரளவிற்குத்தான் இருக்கிறது. உண்மையில் இது அனைத்து மதங்களையும் சார்ந்துள்ள, மதங்களின் பெயரால் அனைத்து அத்துமீறல்களையும் அனுமதிக்கும் நாடு என்பதுதான் பொருத்தமானது. மக்களாட்சி நடைபெறும் நாட்டிலேயே இந்த நிலைமை என்றால், மதத்தின் பெயரால் ஆட்சி நடக்கும் நாடுகளில் மாற்று மதத்தவர்களுக்கு நேரும் சிரமங்கள் சொல்லி மாளாது.

வேலை நிமித்தமாக இரண்டு ஆண்டுகள் துபாயில் இருந்திருக்கிறேன். அய்க்கிய அரபு அமீரகம் என்று அழைக்கப்படும் அந்த நாட்டில் இஸ்லாமிய சட்டங்களே பின்பற்றப்படுகின்றன. அங்கு மாற்று மதத்தவருக்கு தங்கள் மதம் சார்ந்த கோவில் கட்டவும், வழிபாடு செய்யவும் உரிமை உண்டு. அதற்காக அங்கே மதச்சார்பின்மை தழைத்தோங்குகிறது என்ற முடிவுக்கு வரவேண்டாம். மத சகிப்பின்மை அங்கே அரசியலமைப்பு ரீதியாக சட்டமாகவே இருக்கிறது.

ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு  இருப்பார்கள். அப்படி நோன்பு இருப்பவர்களைக் காரணம் காட்டி, மாற்று மதத்தவரை சிரமத்திற்கு உள்ளாக்குவது அங்கு சாதாரணம்.

ரம்ஜான் நோன்பு சூரிய உதயத்தில் தொடங்கி, சூரிய அஸ்தமனத்தில் முடியும். இடைப்பட்ட நேரத்தில் யாரும் பொதுவிடங்களில் சாப்பிடவோ, குடிநீர் குடிக்கவோ கூடாது என்பது அமீரகச் சட்டம். மீறினால் அதிகபட்சமாக 2000 திராம்ஸ் (ஒரு திராம்ஸ் = ரூ.18) வரை அபராதமோ அல்லது ஒரு மாத சிறைத் தண்டனையோ வழங்கப்படும்.

saravana bhavan karama

ரம்ஜான் மாதத்தில் பகல் வேளைகளில் அனைத்து உணவு விடுதிகளையும் மூடி விடுவார்கள். 10000 திராம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.1,80,000) செலுத்தி, சிறப்பு அனுமதி வாங்கிய உணவு விடுதிகளில், பார்சல் சர்வீஸ் மட்டும் அனுமதிக்கப்படும். எந்த உணவு விடுதியிலும் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது. மாலையில் நோன்பு முடிந்தபின்பே அவ்வாறு சாப்பிடுவது அனுமதிக்கப்படும்.

http://www.thenational.ae/uae/ramadan-faqs-everything-you-need-to-know-about-the-holy-month-in-the-uae

http://www.thenational.ae/uae/uae-legal-qa-penalty-for-breaking-law-by-eating-in-public

பொது இடங்களில், உணவகங்களில் சாப்பிடக்கூடாது என்பதோடு, நோன்பு இருக்கும் ஒரு முஸ்லிம் முன்பு சாப்பிடக்கூடாது என்பதும் முக்கியமானது. மறைவான இடத்தில்தான் சாப்பிட வேண்டும். முஸ்லிம் ஒருவர் இருப்பது தெரியாமல் மாற்று மதத்தவர் யாராவது சாப்பிட்டு, அதை அந்த முஸ்லிம் புகாராகத் தெரிவித்து விட்டால், சாப்பிட்ட குற்றத்திற்காக அந்த மாற்று மதத்தவர் தண்டிக்கப்படுவார். நிறைய பேர் அது போல் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டனைத் தொகை தண்டிக்கப்படுவரின் பொருளாதாரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

நான் பணிபுரிந்த நிறுவனத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவர் 200 திராம்ஸ் அபராதம் கட்டியிருக்கிறார், தண்ணீர் குடித்ததற்காக. வேறு சிலர் 1000 திராம்ஸ் கட்டியிருக்கிறார்கள்.

http://al-bab.com/blog/2014/06/when-eating-becomes-crime

http://m.gulfnews.com/news/uae/crime/ramadan-violators-penalised-dh1-000-1.131706

ரம்ஜான் மாதம் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, புதிதாக துபாய் வந்த நபர்களிடம் உடனிருப்பவர்கள் சொல்லி விடுவார்கள். அப்படித்தான் அலுவலகத்திலும், நான் வசித்த அறையிலும் இருந்த நண்பர்கள் எனக்கு இதுதொடர்பான விதிகளையும், தண்டனைகளையும் சொல்லி எச்சரித்திருந்தார்கள்.

துபாயிலேயே அதிகளவு உணவு விடுதிகள் இருப்பது கராமா என்ற பகுதியில்தான். சங்கீதா, சரவண பவன், முருகன் இட்லிக் கடை, அஞ்சப்பர், திண்டுக்கல் தலப்பாகட்டி, உட்லேண்ட்ஸ் ஹோட்டல் என அனைத்து தமிழ்நாட்டு உணவு விடுதிகளும் இங்கே கிளைகள் வைத்துள்ளன. அதேபோல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் இங்கே உணவு விடுதிகள் திறந்திருக்கிறார்கள். இங்கே கிடைக்காத உணவு வகைகளே இல்லை எனலாம்.

வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் துபாயின் மற்ற பகுதிகளில் இருந்து உணவு விடுதிகளைத் தேடி கராமா பகுதிக்குத்தான் வருவார்கள். அத்தனை உணவு விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழியும். வார இறுதி நாட்களில் இடம் கிடைக்க ஒரு மணி நேரம் வரைக்கும் கூட காத்திருக்க வேண்டியிருக்கும்.

நான் வசித்ததும், எனது அலுவலகம் இருந்ததும் இதே கராமா பகுதியில்தான்.

ரம்ஜான் மாதத்தில் பெரிய உணவு விடுதிகளில் மட்டுமே பார்சல் சர்வீஸ் இருக்கும். அங்கேயும் உட்கார்ந்து சாப்பிட முடியாது என்பதால், பரிமாறுபவர்களுக்கு வேலை இருக்காது. பெரும்பாலான உணவு விடுதிகளில், வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மாதத்தில் விடுமுறை கொடுத்து, ஊருக்கு அனுப்பி விடுவார்கள்.

துபாயில் குடும்பத்தோடு வசிக்கும் தமிழர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் கட்டுமானம், துப்புரவு, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் அடிமட்டத் தொழில் செய்யும் தமிழர்களே அதிகம். இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 900 திராம்ஸ் (ஒரு திராம்ஸ் = ரூ.18). தங்குமிடம், போக்குவரத்து செலவு நிறுவனத்தின் பொறுப்பாகும். இவர்கள் பெரும்பாலும் லேபர் கேம்ப் என அழைக்கப்படும் பகுதிகளில் வசிப்பார்கள். லேபர் கேம்ப் என்பது நமது ஊர் மூன்றாந்தர கல்லூரி விடுதிகளைப் போலிருக்கும். அத்தகைய கேம்ப் ஒன்றில் ஒரு மாதம் தங்கியிருந்திருக்கிறேன்.

ஓர் அறையில் 4-லிருந்து 8 பேர் வரை தங்க முடியும். இரண்டடுக்கு கட்டில் இருக்கும், கீழே ஒருவர், மேலே ஒருவர். அட்டாச்டு பாத்ரூம் இருக்காது. பொதுக் கழிப்பறை, பொது சமையலறை இருக்கும். முதல் நாள் இரவு சமைத்த சாப்பாட்டை மறுநாள் காலையிலும், மதியமும் சாப்பிட்டுக் கொள்வார்கள். காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இருக்காது. ஏனெனில் 6 மணிக்கே நிறுவனப் பேருந்து ஆட்களை ஏற்றிச் செல்ல வந்துவிடும்.

லேபர் கேம்பில் 4 பேர், 5 பேர் குழுவாக சேர்ந்துகொண்டு சமைப்பார்கள். குழு கிடைக்காதவர்கள் லேபர் கேம்ப் அருகில் இருக்கும் மெஸ்ஸில் மாதக் கணக்கு வைத்து, பார்சல் வாங்கிக் கொண்டு வேலைக்குச் செல்வார்கள்.

சாப்பாடு, குடி, சில்லறை செலவுகள் போக மாதம் 600 திராம்ஸ் மிச்சம் பிடித்து விடுவார்கள். ஓவர் டைம் பார்த்தால், கூடுதலாக 200 திராம்ஸ் கிடைக்கும். இப்படி மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்பும் பணத்தில்தான், 'ரம்ஜான் மாதத்தில் பொதுஇடங்களில் தண்ணீர் குடித்துவிட்டார்' என்பதற்காக எங்களது நிறுவன ஊழியர் 200 திராம்ஸ் அபராதம் கட்டியிருக்கிறார்.

பட்டதாரிப் படிப்பு முடித்து, அலுவலக வேலைக்காக துபாய் வந்தவர்கள் sharing room-ல் தங்கியிருப்பார்கள். இவற்றை நமது  ஊர் மேன்சனோடு ஒப்பிடலாம். இத்தகைய மேன்சனில் ஓர் ஆண்டிற்கும் மேலாக தங்கியிருந்திருக்கிறேன். இங்கேயும் இரண்டடுக்கு கட்டில்தான். நான்கு பேரிலிருந்து பத்து பேர் வரை தங்கியிருப்பார்கள். அறை வாடகையைப் பொருத்து அட்டாச்டு பாத்ரூம் வசதி இருக்கும்.

இப்படி வசிப்பவர்களும் குழுவாக, பொது சமையலறையில் சமைத்து உண்பார்கள். நேரம் கிடைக்காதவர்கள் அருகில் இருக்கும் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொள்வார்கள். வாரத்திற்கு ஒரு முறை அஞ்சப்பர், சரவண பவன் செல்வதுண்டு.

ரம்ஜான் மாதத்தில் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கோ, குடும்பத்துடன் தங்கியிருப்பவர்களுக்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. பார்சலோ, டிபன் பாக்ஸோ கொண்டு வந்து, முஸ்லிம்கள் எதிரில் சாப்பிடாமல், மூடிய அறைக்குள் சாப்பிட்டு விடுவார்கள். வெளியே சுற்றுபவர்களுக்குத்தான் பெரும் பிரச்சினை. Marketing, Servicing வேலை பார்ப்பவர்கள் தாங்கள் சுற்றும் பகுதிகளில் எங்கு பார்சல் சர்வீஸ் இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். பார்சல் வாங்கி விட்டு, உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஒரு மறைவான இடத்தைத் தேட வேண்டும்.

நான் இருந்த இரண்டு ஆண்டுகளிலும் ரம்ஜான் மாதம் கடும் கோடையில் வந்தது. துபாய் வெயிலை ஒப்பிடும்போது, நமது ஊர் வெயில் எல்லாம் தூசு. அங்கு 48 டிகிரி, 50 டிகிரி என மண்டையைப் பிளக்கும். காரிலிருந்து இறங்கி, அலுவலகத்தின் உள்ளே நுழைவதற்குள் சட்டை தொப்பலாகி விடும். வேலையை முடித்துவிட்டு, திரும்பவும் காருக்குள் வந்தால், கார் உள்ளே அனலாக இருக்கும். எவ்வளவுதான் ஏசியைக் கூட்டி வைத்தாலும், குளிர் பரவ 15 நிமிடங்கள் ஆகும். நீர்ச்சத்து மிகுதியாகக் குறையும். இப்படியான காலநிலையில் காருக்குள் உட்கார்ந்து தண்ணீர் குடிப்பதை யாராவது பார்த்துவிட்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்றால் எவ்வளவு கொடுமை!

அதைவிடக் கொடுமை, பொது இடங்களில் வெயிலில் வேலை செய்பவர்களின் நிலைமை. அவர்கள் வெட்டவெளியில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும். தண்ணீர் குடிப்பதற்கு மறைவான இடம்கூட இருக்காது.

நமது நாட்டில் ஒரு சட்டம் இருந்தால், அதை எவ்வளவு வளைக்க முடியுமோ, அவ்வளவு வளைக்க முடியும். அதிகார வர்க்கமும் அதற்குத் துணை நிற்கும். ஆனால், துபாயில் அப்படி முடியாது. விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிப்பதில் காவல் துறையினர் மிகவும் சிரத்தையுடன் இருப்பார்கள். காரணம், அவர்களது சம்பள முறை. உதாரணத்திற்கு, 10000 திராம்ஸ் அவர்களது அடிப்படைச் சம்பளம் என்றால், அதனுடன் அவர்கள் வசூலிக்கும் அபராதத் தொகையில் ஒரு பத்து சதவீதமோ, இருபது சதவீதமோ கமிஷனாகக் கிடைக்கும். எவ்வளவு அபராதம் வசூலிக்கிறார்களோ, அவ்வளவு சம்பளம் கூடுதலாகக் கிடைக்கும். அதனால் காவல் துறையினர் சீருடையிலும், மப்டியிலும் அபராதம் போடுவதற்கு சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.

ramadan fasting

பார்க்கிங் கட்டணம் கட்டாத வண்டிகளுக்கு அபராதம். சாலை விதிகளை மதிக்கவில்லை என்றால் அபராதம். சாலையின் குறுக்கே நடந்தால் அபராதம். இதெல்லாம் சரிதான். ஆனால், ரம்ஜான் மாதத்தில் உணவு விடுதிகளிலோ, பொதுவிடங்களிலோ சாப்பிடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் இதே சிரத்தையுடன் அபராதம் வசூலிப்பது கொடுமையல்லவா? சம்பாதிக்க வந்த இடத்தில் தண்டத் தொகை கட்டுவதற்கு யாருக்குத்தான் மனம் வரும்? அதனால் மாற்று மதத்தவர்கள் ரம்ஜான் மாதத்தில் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள். எவ்வளவு தாகம், பசி இருந்தாலும் அடக்கிக் கொள்வார்கள்.

எனக்கு அலுவலகத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலையல்ல... நிறைய சுற்ற வேண்டியிருக்கும். எனது அலுவலகத்தில் எனக்குக் கீழே வேலை பார்த்தவர்களில் இரண்டு முஸ்லிம் நண்பர்களும் இருந்தார்கள். அவர்கள் நோன்பு இருப்பவர்கள். அவர்கள் அலுவலகம் வருவதற்கு முன்பாக, பார்சல் வாங்கி வந்து காலை சிற்றுண்டியை முடித்து விடுவேன்.

வேலை தொடர்பாக வெளியே செல்லும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். எனது காரோட்டி ஆந்திர முஸ்லிம். அவரும் நோன்பு இருப்பவர், கடின உழைப்பாளி. அவர் முன்பு தண்ணீர் குடிப்பதை பலமுறை தவிர்த்திருக்கிறேன். ஆனால், அவர் 'எனக்காக நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம்' என்று சொல்லி, குடிக்கச் செய்தார்.

எப்படி தண்ணீர் குடிப்பேன் என்றால், ஸ்ட்ரா வாங்கி வைத்துக் கொள்வேன். தாகம் ஏற்படும்போது, காருக்குள் குனிந்து, ஏறக்குறைய குப்புறக் கவிழ்ந்து, தண்ணீர் பாட்டிலில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் குடிப்பேன். சாப்பிடும் நேரம் வரும்போது, அந்த ஏரியாவில் எந்த உணவு விடுதியில் பார்சல் தருவார்கள் என்று தேடுவோம். அதற்கு அரைமணி நேரமாவது ஆகும். பார்சல் வாங்கிவிட்டால், அடுத்து சாப்பிடுவதற்கு மறைவான இடத்தைத் தேட வேண்டும்.

பெரும்பாலான அலுவலகங்களில் ரம்ஜான் மாதத்தில் மதியம் இரண்டு மணி வரைக்கும்தான் அலுவலகம் இருக்கும். என்னுடைய அலுவலகத்திலும் அதேதான் என்றாலும், எனக்கு கூடுதல் வேலைகள் இருக்கும். முடிப்பதற்கு 4 மணி ஆகிவிடும்.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் துபாயின் பல பகுதிகளில் கட்டுமானத் தொழில் நடந்து கொண்டிருந்தது. பார்சல் வாங்கியதும், அருகில் இருக்கும் கட்டுமான இடத்திற்கு வண்டியை விடச் சொல்வேன். அங்கே எப்படியும் தடுப்பு இருக்கும். உள்ளே உட்கார்ந்து தொழிலாளர்களுடன் சேர்ந்து சாப்பிடுவேன். இல்லை என்றால், வேலை எல்லாம் முடிந்து மாலை நான்கு மணிக்கு அலுவலகம் வந்துதான் சாப்பிட முடியும்.

அரபு நாடுகளில் துபாய்தான் லிபரல் ஸ்டேட். அங்கேயே இப்படி என்றால், இதர அரபு நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். குவைத்தில் ரம்ஜான் மாதத்தில் மருந்து உட்கொள்வதுகூட குற்றம்.

http://m.arabianbusiness.com/19-people-arrested-for-eating-in-public-during-ramadan-557401.html

http://www.arabnews.com/news/593401

http://timesofoman.com/article/57752/Ramadan/Don%27t-eat-or-drink-water-in-public-during-fast-in-the-Holy-Month-of-Ramadan-warns-Royal-Oman-Police

இந்தியாவில் நாம் சொல்வதுபோல் 'உன் மதத்தை உன் வீட்டிலே வச்சிக்கோ' என்று அரபு நாடுகளில் சொல்ல முடியாது. தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள் அல்லது மத நிந்தனை வழக்கில் மரண தண்டனை கொடுத்து விடுவார்கள்.

மாற்று மதத்தவர் தவறு செய்தால் ஓங்கிக் குட்டுவது, தனது மதத்தவர் தவறு செய்தால் அதை மூடி மறைப்பது - இதுதான் உலகம் முழுவதிலும் உள்ள மதவாதிகளின் ஒத்த பண்பாக இருக்கிறது. இதற்கு முஸ்லிம் மக்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர்.

இதை எல்லாம் சொன்னால், ‘குரானில் அப்படி எல்லாம் சொல்லவில்லை’ என்று குரான் வசனங்களைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். ஆனால், அரபு நாடுகளில் செயல்படுத்தப்படும் சட்டங்கள் எல்லாம் இஸ்லாமிய சட்டங்களே. 'இஸ்லாம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் நாங்கள் சட்டமாக்கியிருக்கிறோம். மாற்று மதத்தவர் எங்கள் சட்டங்களை, கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும்' என்று அன்பாக அரபு நாடுகளின் அரசாங்கங்கள் மிரட்டுகின்றன.

http://www.khaleejtimes.com/nation/general/fine-jail-term-for-eating-in-public-during-ramadan-fasting-hours

அனைத்து மதங்களும் மாற்று மதத்தவரின் உரிமைகளை கிள்ளுக்கீரையாகவே கருதுகின்றன. சகிப்புத்தன்மைக்கும், மதங்களுக்கும் துளிகூட தொடர்பில்லை. மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்காக முஸ்லிம்களையும், தலித்துகளையும் இந்துத்துவாதிகள் கொல்கிறார்கள். மத ஆட்சி நடைபெறும் நாடுகளில் வேறுவிதமான ஒடுக்குமுறை நிகழ்கிறது.

மதத்தின் பெயரால் எங்கெல்லாம் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் மாற்று மதத்தவர்களுக்கும், நாத்திகர்களுக்கும் உரிமைகள் மறுக்கப்படுவது காலம் காலமாகத் தொடரும் அநீதியாகும். அரபு நாடுகளில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, இஸ்லாமிய சட்டங்கள் திருத்தப்பட்டால் மட்டுமே இத்தகைய கொடுமைகள் ஒழியும். எண்ணெய் வளம் முழுவதும் தீர்ந்தபிறகு, அதற்கான வேலைகளை அமெரிக்கா கொடூரமாகச் செய்யப் போகிறது. அதை முன்னுணர்ந்து, இஸ்லாமிய அரசுகள் தங்களை மாற்றிக் கொள்வதே அவர்களது மக்களுக்கு நலம் பயக்கும்.

- கீற்று நந்தன்

Pin It