“இந்தித் திணிப்பை எதிர்க்க - கீழடியைப் பாதுகாக்க” என்ற முழக்கத்துடன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து கடந்த 26.06.2017 ல் சென்னையில் தமிழர் உரிமை மாநாட்டை நடத்தினர். மாநாட்டின் நோக்கம் மிகவும் அவசியமானது. இந்த நோக்கத்தில் பொதுவுடைமைத் தோழர்கள் ஒரு மாநாட்டை நடத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

மாநாட்டு நிகழ்ச்சி நிரலில், கீழடியில் இருந்து ‘பிடிமண்’ எடுத்து வந்த செயல், கடும் விமர்சனங்களை எழுப்பின. மாநாட்டுக்கு முன்பே 24.06.17 ல் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அந்தச் செயலுக்கு ஒரு முட்டுக்கொடுத்திருந்தார். அது ‘தீக்கதிர்’ நாளேட்டின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

“வறட்டு நாத்திகம் பேசிய நாம், சனங்களின் சாமிகளை மதவாதிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம். இன்றும் கிராமக்கோயில் பூசாரிகள் சங்கத்தை விஸ்வஹிந்து பரிஷத்காரன் தான் லபக்கி யுள்ளான்.

கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் நாத்திகம் பேசியதே இல்லை. தீபாவளிக்குச் சிறப்பு மலரே வெளியிடுபவர்கள் தான் இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள். தமிழ்நாட்டில் - இந்தியாவில் நாத்திகத்தை மக்கள் இயக்கமாகவே கட்டி எழுப்பியவர் தோழர் பெரியார் மட்டுமே. சாதிஒழிப்பை அடிப்படையாகக் கொண்ட பெரியாரிய நாத்திகத்தைத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல ஆண்டுகளாக ‘வறட்டு நாத்திகம்’ என்று கேலி பேசி வந்தனர்.

‘வறட்டு நாத்திகம்’ என்று பல அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்பட்ட பெரியாரிய நாத்திகமும் - அதற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும் இந்தியப் பகுதியில் இயங்கத் தொடங்கியது கி.பி.1925 க்குப் பிறகு தான். ஆனால், நாட்டார் தெய்வங்களும், குல தெய்வங்களும் பார்ப்பன வசமாகி முடிந்து போன காலம் கி.மு. காலங்களில் என்று தோழர் அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். புத்த மத அழிவே குலதெய்வ வழிபாட்டில் தான் தொடங்குகிறது. ஏதோ வறட்டு நாத்திகம் பேசியவர்களால் தான் நாட்டார் தெய்வங்கள் பார்ப்பன தெய்வங்களாகிவிட்டன என்பது தவறு. இதோ தோழர் அம்பேத்கர் பேசுகிறார்...

“...புத்த மதம் எப்படி பிராமணர்களாலேயே அழிக்கப்பட்டது என்பது புரியவில்லை. இதற்குப் பிரதானமான காரணம் குலதெய்வ வழிபாடுதான் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் கிராம தெய்வம், தேசிய தெய்வம் ஆகியவை தவிர, குடும்ப தெய்வங்கள் இருக்கின்றன.  பிராமணர்கள் மூலம் இந்தத் தெய்வங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன. இந்தத் தெய்வங்களுக்குப் பூசை செய்வதற்காகச் செல்கின்ற பூசாரிகள் இராணிகளின் மூலமாக அரசாங்க விஷயங்களில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கினர்.

- இலங்கை கொழும்புவில் 1950 ஜூன் 6 ல் பெளத்தர்களின் உலகத் தோழமை மாநாட்டில் தோழர் அம்பேத்கர்.

soil 600நாட்டார் தெய்வங்களை இந்து மதம் செரித்து - கழித்து - பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இப்போது இருப்பவை இந்து மதத்தின் கழிவுகளே. அந்தக்கழிவுகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்கள், தமிழறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வு மாணவர் முனைவர் ரெ.முத்துராஜன் அவர்களின் ஆய்வுநூலான ‘அய்யனார் வழிபாடு’ என்னும் நூலிலிருந்து சில சான்றுகளைப் பார்க்கலாம்.

“கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில், திருப்பயற்றூர்ப் பதிகத்தில், “அய்யனாரைத் தன் மகனாகச் சிவன் வைத்துக்கொண்டார்” எனப் பாடுகின்றார். சிவன், திருமால் (சைவம் வைணவம்) இணைப்புக்கும் இக்கதை பயன்பட்டிருக்கிறது. இக்காலத்தில் அய்யனாருக்கு ஹரி ஹரப் புத்திரன் என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது. - பக்கம் 17

கி.பி. 7 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களில் அய்யனார் தனித்தே அமர்ந்துள்ளார். இவருக்குப் பணிவிடை செய்வதற்கு இரண்டு பெண்கள் உள்ளனர். குடை பிடித்த பணியாளும், சாமரம் வீசுகின்ற பெண்ணும் சிற்பங்களில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்காலச் சோழர்காலச் சிற்பங்களில் அய்யனார் இரண்டு மனைவியருடன் காணப்படுகிறார். சங்க இலக்கியங்களில் அய்யனாருக்கு மனைவியர் இருந்ததற்கான குறிப்புகள் இல்லை. கி.பி. 7 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களிலேயே அய்யனாருடன் இரு மனைவியரைக் காணுகிறோம். - பக்கம் 18

அய்யனாருக்கு இந்திரன் மகள்களைத் ( பூரணை, புட்கலை ) திருமணம் செய்து வைக்கின்றனர். சிவனும், திருமாலும் அய்யானரிடம் ஊர் மக்களையும், தானியங்களையும் காக்கும் பொருட்டு ஊரின் எல்லையில் அமர்ந்து அருளாட்சி செய்யுமாறு பணிக்கின்றனர்.” - பக்கம் 73

நாட்டார் தெய்வங்கள் என்பவை ஏழாம் நூற்றாண்டிலேயே இந்து, பார்ப்பன மயமாமாக்கப்பட்டு விட்டது என்பதற்கு மேற்கண்ட நூலில் இன்னும் எராளமான சான்றுகள் உள்ளன.

மேலும், தோழர் தமிழ்ச்செல்வன் தனது பதிவில் இரண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.   

1. “தான் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத்தேடி வெளிச்செல்லும்போது. தன் முன்னோர்களை வணங்கி அவர்களின் காலடியிலிருந்து பிடிமண் எடுத்துச்செல்வது நாட்டார் மரபு. அது அவர்களின் மண்ணுரிமை யோடு சேர்ந்தது என தோழர் ஆர்.நல்லக்கண்ணு நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார்.”

2. “இந்து மதத்தில் பிடிமண் எடுக்கும் நடைமுறை கிடையாது. ஆகவே இந்து மதம் எனப்படுகிற சைவ, வைணவ, வைதீக மதங்களுக்கும் பிடிமண்ணுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது எந்த மதமும் சாராத நாட்டுப்புற வழிபாட்டு மரபில் உள்ள ஒரு சடங்கு.” என்றும் கூறியுள்ளார்.

தொடரும் ஜாதி இழிவு:

தான் பிறந்த மண்ணை விட்டு ஒரு தலித் வெளியூர் போனால், தலித் கோவிலில் பிடிமண் எடுப்பார். அந்த தலித் குடியிருக்கும் ‘ஊரில்’ உள்ள கிராமத் தெய்வக் கோவிலில் இருந்து பிடிமண் எடுக்க முடியாது. ஒரு பிற்படுத்தப்பட்டவர் அதே ஊரில் இருக்கும் சேரியில் சென்று பிடிமண் எடுக்க மாட்டார். அவரது சாதிக்குரிய நாட்டார் தெய்வத்திடமிருந்தது தான் பிடிமண் எடுப்பார். ஒருவேளை, இரு பிரிவுக்கும் பொதுவான கோவிலில், பிடிமண் எடுத்தாலும், அவை கொண்டு சென்று கோவிலாக வணங்கப்படும் இடங்கள் தனித் தனியாக -  ஊர்த் தெய்வமாகவும், சேரித்தெய்வமாகவும் தான் பிரிந்துள்ளன.

கஞ்சிக்கே வழியில்லாமல், பஞ்சம் பிழைக்க வெளியூர் சென்றாலும், தனது ஜாதியை விட்டுவிடாமல் பாதுகாக்கும் ஜாதிவெறிப் பண்பாட்டின் ஒரு கூறுதான் இந்த பிடிமண் எடுத்தல் பண்பாடு. தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒரு அடி நிலம் கூடச் சொந்தமாக வைக்கவிடாதது இந்துச்சமூகம். அப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த மண்ணுரிமைக்காக இந்தப் ‘பிடிமண்’ எடுக்கிறார்கள்? ஜாதி இழிவைப் பெருமையுடன், கடமைபோலச் செய்ய வைப்பது தான் ஆரிய - பார்ப்பன - இந்து மதம். அதன் வெளிப்பாடுதான் இந்தப் ‘பிடிமண்’

இந்துப் பண்பாடே:

‘பிடிமண்’ எடுத்தல் என்பது இந்து மதப் பண்பாடு அல்ல. என்பது மிகவும் தவறானது. கிறிஸ்துவர்களோ, இஸ்லாமியர்களோ, இந்த மதங்களில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவரோ, தாழ்த்தப்பட்டவரோ பிடிமண் எடுப்பது இல்லை. பிடிமண் எடுத்து ஏசுநாதருக்கோ, மேரி மாதாவுக்கோ, அல்லாவுக்கோ  கோவில் கட்டுவது இல்லை. இப்பண்பாடு முழுக்க முழுக்க இந்து மதத்தில் உள்ள பார்ப்பனர் உள்பட அனைவரும் நடத்திவரும் பண்பாடு.

“நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், சங்கரநாராயணசாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அதில் யானையை வைத்து பிடிமண் எடுத்து ஊர்வலமாகச் சென்று சங்கரநாராயணன் கோவிலில் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.”

“மும்பை தாராவி கிராஸ்ரோட்டில் ‘பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கம்’ நிர்வகிக்கும் மகாகணேசர் கோவில் உள்ளது. அந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது.  அதன் ஒரு பகுதியாக, ‘ஷீவதாரண பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி’ நடக்கிறது. முதலில், கணபதிஹோமத்தை நடத்தி, சிறப்பு அபிஷேகம் செய்து, கொடி ஏற்றப்பட்டு, பிறகு இந்த ‘ஷீவதாரண பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி’ நடைபெறுகிறது.”

இப்படிப் பல சான்றுகளைக் காட்ட முடியும். இந்தப் பண்பாடு யாருடைய பண்பாடு என்ற ஆய்வுக்கு முன், தற்போது இந்தப் பண்பாடு என்னவாக இருக்கிறது என்று ஆய்வதுதான் சரியாக இருக்கும்.  மாநாட்டில், இந்தப் பிடிமண்ணைத் தோழர் நல்லக்கண்ணு அவர்கள், ‘துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு’ பெற்றுக்கொண்ட காட்சியை, எவ்விதக் கூச்சமும் இன்றி முகநூல்களில் வெளியிட்டனர். பிடிமண்ணைத் தூக்கினால், தோளில் இருக்கும் துண்டு இடுப்புக்கு வரத்தான் செய்யும். அதனால்தான், தோளில் துண்டு போடும் உரிமைகளுக்காகவும் போராடிய கருஞ்சட்டைகள்தான், பிடிமண் பண்பாட்டில் ஒளிந்துள்ள ஜாதிப் பண்பாட்டை அடையாளம் கண்டு எச்சரிக்கிறோம்.

அடிமைத்தனங்களை உரிமைகளாகக் கருதிக் கொண்டு, நம்மையே ஏற்றுக் கொள்ள வைப்பது தான் இந்து மதப் பண்பாடு. காவி வண்ண உடை, ஸ்வஸ்திக் சின்னம், அரசமரத்தடிப் பிள்ளையார் வழிபாடு இவை போன்ற பல பழக்க வழக்கங்கள் இந்து மதத்திற்கு உரியவை அல்ல. அதற்காக அவற்றை நாம் இப்போது ஏற்க முடியாது.

மாட்டுக்கறி உண்பது பார்ப்பனர்களின் பண்பாடுதான். அதற்காக, எந்தப் பார்ப்பானும் தனது பாரம்பரிய உணவுப் பண்பாட்டை மீட்கிறேன் என்று மாட்டுக்கறி உண்பதில்லை. அதைப் பரப்புவதில்லை. அந்த உணவு தற்போது யாருடைய உணவாக இருக்கிறது என்று மட்டுமே பார்க்கிறான். அந்தப் பார்வை தான் நமக்கும் தேவை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களும், அவற்றின் தலைமைக்குழுக்களில் நிறைந்திருப்பவர்களும் பார்ப்பனர்களே என்று அடிக்கடி அடையாளம் காட்ட வேண்டாம்.

 

Pin It