ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் வருவதால் சில வார்த்தைகளை நினைவூட்டுகிறேன்.
புரட்சிகர அரசியல், கட்சி, இயக்கம், பொறுப்பாளர்கள், பாண்டுகள், புரட்சிகர அமைப்பு, நக்சல்பாரி, போலி கம்யூனிஸ்டுகள், போஸ்டர், பிரச்சாரம், மாதாந்திர வேலைத் திட்டம், அறிக்கை, அதன் மீதான பரிசீலனை, விமர்சனம், சுயவிமர்சனம்.
விமர்சனம்; அமைப்புக்குள் மாதாமாதம் வேலைத்திட்டப் பரிசீலனை என்கின்ற பெயரில் மணிக்கணக்கில் தோழர்களை உட்கார வைத்துப் பொறுப்பாளர்கள் தங்கள் சிந்திக்கும் வார்த்தையை, எதிரில் இருக்கும் தோழர்களின் வாயிலிருந்து வரும் வரை சுயவிமர்சனம் ஏற்கச் சொல்லி விடாமல் துன்புறுத்துவாங்க. ஆனா இதே சிரத்தையோடு அமைப்பு மீது தோழர்களும் பிற அமைப்பினரும் கட்சியினர் வைக்கும் விமர்சனத்திற்குப் பதிலளித்திருக்கிறார்களா? இல்லை.
அமைப்புக்கு உள்ளே இருந்து வரும் விமர்சனங்களையும் சரி, வெளியே இருந்து வரும் விமர்சனங்களையும் சரி, புறங்கையால் தட்டிவிட்டு விமர்சனத்திற்குப் பதிலளித்தது போல, லும்பன்களைப் போல் கடந்து செல்வார்கள்.
உள்ளிருந்து விமர்சனம் வந்தால் விமர்சிக்கும் தோழரைக் கட்டம கட்டுவது, வெளியேற்றுவது; வெளியிலிருந்து விமர்சனம் வந்தால் அதற்கும் சில ரெடிமேட் ரப்பர் ஸ்டாம்ப் வார்த்தைகள் உண்டு. விமர்சிக்கும் நபர்களைத் தனி நபர்கள், ஓடுகாலிகள், தனிநபர் அராஜக வாதிகள், அமைப்பு முறைக்குள் வராத அறிவுஜீவிகள், லும்பன்கள், போலி கம்யூனிஸ்டுகள் என்னும் சில வார்த்தைகளால் விமர்சனங்கள் அத்தனையும் கண்டுகொள்ளாமல் நகர்ந்து விடுவார்கள்.
பொதுவாக விமர்சனங்கள் இரண்டு முறையில் வைக்கப்படுகின்றன.
ஒன்று, இதன் முன்னாள் தோழர்கள் மற்றும் பிற அமைப்புகளில் உள்ள தோழர்கள் இந்த அமைப்பு வளர வேண்டும், மார்க்சிய அரசியல் வளர வேண்டும் என நல்ல நோக்கத்தில் மக்களுக்காகப் போராடக்கூடிய அமைப்புகளில் உள்ள சிக்கல்கள், அரசியல் தவறுகள் குறித்து விமர்சிப்பது. அதைச் சரிசெய்தால் இன்னும் மக்கள் இந்த அமைப்புகளை நோக்கி வருவார்களே, மக்களுக்கு நல்லது நடக்குமே என்கின்ற வகையான விமர்சனம் ஒன்று.
இன்னொன்று அவதூறு. இல்லாதவற்றைப் பேசுவது, இல்லாதவற்றைச் சொல்வது, இவர்கள் அழிந்து நாசமாகப் போக வேண்டும் என்று தூற்றுவது.
நாம் இந்த இரண்டாவது வகை விமர்சனம் குறித்துப் பேசவில்லை, அதற்காக இந்தத் தொடரை எழுதவில்லை. நாம் சொல்வதெல்லாம் இந்த அமைப்பின் அரசியல் மற்றும் அதன் அமைப்புப் பிரச்சனைகள் குறித்துத்தான்; விமர்சிப்பவர்களைக் கடந்த காலத்தில் இவர்கள் கையாண்ட விதம் பற்றி மட்டும்தான்.
அமைப்பு முறை குறித்து, அமைப்பின் அரசியல் குறித்து விமர்சனம் வைத்த தோழர்களுக்குச் சரியான திருப்திகரமான பதிலைக்கொடுக்க மார்க்சிய அறிவும், அரசியல் அறிவும், நேர்மையும் இல்லாததால் வெளியேறியவர்கள் குறித்து இவர்கள் கூறும் பொன்மொழிகள் என்ன என்று பல தோழர்கள் அறிந்திருப்பார்கள்.
பொன்மொழி 1: கழிவுகள் உடம்பில் தங்குவது இல்லை. எப்படி உடம்பிலிருந்து கழிவுகள் வெளியேறுகிறதோ, அதுபோல சில நபர்கள் வெளியேறுகிறார்கள்; இது நமக்குப் பலம் தான்.
பொன்மொழி 2: குட்டி முதலாளித்துவ சிந்தனையாளர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கைக்காகப் புரட்சிகர அரசியலை விட்டு ஓடிப்போன ஓடுகாலிகள்.
பொன்மொழி 3: உங்களுக்குத் தெரிந்த பொன்மொழி இருந்தால், இருக்கும் கமெண்ட்டில் பதிவிடவும்.
பல ஆண்டுகளாகத் தங்களோடு பயணித்த தோழர்கள் விமர்சனத்தை முன்வைத்து வெளியேறினாலோ வெளியேற்றப்பட்டாலோ அவர்கள் பற்றி இந்தச் சத்தியவான்கள் உதிர்க்கும் முத்துக்கள், உடல் கழிவுகளோடு அதாவது மலத்தோடும் சிறுநீரோடும் ஒப்பிட்டுத் தோழர்களைக் கேவலப்படுத்துவது. அடடா… இவர்களல்லவா உண்மையான மார்க்சிஸ்டுகள்! நேற்று வரை தோழராக இருந்தவன் இன்று விமர்சனம் வைத்ததும் மனிதக் கழிவாகிவிட்டான்.
இதைப் பொறுப்பாளர்கள் “பாண்டுகள்” கூறினார்கள் என்பது மட்டுமல்ல, அதே மைன்ட்செட்டுக்கு நம்மையும் சேர்த்துப் பழக்கி விடுவார்கள். இவர்கள் உதிர்த்த முத்துக்களையே நாமும் பல இடங்களில் உதிர்த்திருப்போம். இப்போ நினைச்சா ரொம்ப கேவலமா இருக்கு.. ல்ல. அப்படி இருந்தால் நம்மள நாமே காரித் துப்பிக்கொள்ள வேண்டியதுதான்.
சரி, விமர்சனங்கள் குறித்தும் அரசியல் குறித்தும் நமது ஆசான்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஆசான்கள் மாக்சும் எங்கெல்சும் தங்கள் வாழ்நாளில் முக்கியமாக தாங்கள் முதலில் எழுத வேண்டியது, செய்ய வேண்டியது குறித்து என்ன நினைத்திருந்தார்கள் என்பது குறித்து எங்கெல்ஸ் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். இதுவரை இருந்த பழைய சமுதாயத்தின் கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் அமைப்புகளோடு முரண்பட்டு, அதற்கு எதிரான கருத்து ரீதியான போராட்டத்தில் வெற்றி பெறுவதுதான் முதலும் முக்கியமான வேலையாகவும் கருதுவதாகக் கூறியிருக்கிறார்.
அந்த அடிப்படையிலேயே ஃபாயர்பாக் முதல் டூரிங் உள்ளிட்ட அத்தனை தத்துவவாதிகளுக்கும் அவர்களுடைய தத்துவங்களில் உள்ள குறைபாடுகள் குறித்துப் பல்வேறு தத்துவார்த்த நூல்களை, விவாதங்களை, விமர்சனங்களை எழுதியிருக்கின்றனர்.
லெனினை எடுத்துக்கொண்டால் நரோதினியசத்துக்கு முடிவு கட்டினார், ஒரு கருத்து என்ற அடிப்படையில் அதை வீழ்த்தினார் என்று நாம் படித்திருக்கிறோம்.
ஆனால் இந்தியாவில், தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஒரே ஒரு புரட்சிகர கட்சி என்று கூறிக்கொள்ளும் இன்றைய SOC, எங்காவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு மூலையில், இடது தீவிரவாதிகளான மாவோயிஸ்ட் கட்சியின் தத்துவத்தையும் அமைப்பையும், வலதுசாரிகள் என்று கூறப்படும் சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் அரசியல் மற்றும் அமைப்புகளையோ முறியடித்து வளர முடிந்திருக்கிறதா? இல்லை என்றால் ஏன் இல்லை?
ஏன் இல்லையென்றால், தத்துவார்த்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் உண்மையில் ஓட்டாண்டிகளாகிப் போனது இவர்களும் தான். ஒரு கட்சி என்ற அடிப்படையிலாவது சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இருக்கின்றன. யார் தலைவர், யார் செயலாளர், யார் பொதுக்குழு உறுப்பினர், யார் செயற்குழு உறுப்பினர், யார் மாவட்ட தலைவர், யார் மாவட்ட செயலாளர் என எந்த ஒரு கட்டமைப்பும் இல்லாமல், சில தனிநபர்கள் யாருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டு, தங்களைத்தாங்களே ஒரு கட்சி என்று அறிவித்துக்கொண்டு, 50 ஆண்டு காலம் தாங்கள் ஒரு கட்சி என்று ஏமாற்றும் வேலையை மட்டுமே செய்து வந்திருக்கின்றனர். இது சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் பல ஸ்கேம்கள் போல தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுத் திரையில் காட்டப்படாத ஒரு புரட்சிகர ஸ்கேம், மோசடி.
கட்சிக்கான கட்டமைப்பு மட்டுமல்ல, அமைப்புக்கான அடிப்படை கூட இந்த அமைப்பில் இருந்ததில்லை. மாவட்டத்துக்கு நாலு ஏமாந்தவன், எதிர்த்துப் பேசத் தெரியாத அப்பாவிகளை உள்ளே இழுத்துக்கொண்டு, அவர்களை அமைப்பின் முன்னணியாளர்கள், தலைமை என்று மாற்றிவிடுவது. இருக்குற 5, 10 பேர் கிட்ட கூட முன்கூட்டியே யார் யாருக்கு என்ன பொறுப்புன்னு தீர்மானித்துச் சொல்லிவிட்டு, பேருக்கு ஒரு கூட்டத்தைப் போட்டு நீ தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர் என்று கூட்டம் நடத்துவதுதான் மொத்த அமைப்பின் நடைமுறை.
எங்கையாவது 50 வருச கட்சி, இயக்கம் 10 பேரை வச்சு மாநாடு போடுறதைப் பார்த்திருக்கீங்களா? வெட்கமே இல்லாம பத்துக்கு பத்து ரூம்ல ஒரு கூட்டத்தைப் போட்டு, அதுக்குப் பேரு மாநாடு, செயற்க்குழு கூட்டமுனு இணையத்துல போட்டோ வேற போடுவாங்க. அந்த 10 பேருக்கும் என்னடா இது, ஏன் அமைப்பு வளரவே மாட்டேங்குதுன்ற கேள்வி மட்டும் தோணுச்சுன்னா, அவ்ளோதான்; அவங்களைத் துரத்திவிட்டுப் புது ஆள்களை அங்கே கொண்டு வர உடனே வேலை நடக்கும். இவங்கதான் இந்தியாவுல புரட்சி செய்யப்போறாங்க, நம்புங்க!
இந்த 50 வருசமும் இவங்க பண்ண சாதனைன்னு எதாவது இருக்கான்னு இவங்க வெளியிட்ட கட்டுரையில் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது. வினவுல இருக்கும், போய் தேடிப் பாருங்க.
50 வருசமா போஸ்டர் ஒட்டினோம், போராட்டம் பண்ணோம், பிரச்சாரம் செய்தோம். முடிவு? ஒரு கட்சியாகக் கூட ஒரு மாநிலத்தில் பரிணமிக்க முடியல. பேருக்கு இருந்த ஒரு கட்சியை, அமைப்பை சண்டை போட்டுப் பிரிச்சு பிச்சு 3 குழுக்களாகப் பிரிஞ்சதோட, எண்ணற்ற பல நல்ல தோழர்களைச் செயலற்றவர்களாக மாற்றியிருக்கிறார்கள். பொறுப்பில் இருந்தவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இதுவரை இந்த அமைப்புகளை — அதாங்க 3 அமைப்புகளையும் சேர்த்தேதான் சொல்லுறேன்:
- மக்கள் அதிகாரம்,
- புரட்சிகர மக்கள் அதிகாரம்,
- மக்கள் அதிகாரக் கழகம்
- இந்த மூனு பேரையும் விமர்சனம் செய்து எழுதியிருக்கிறோமே, யாராவது "ஆமா, நாங்க கடந்த காலங்கள்ல இப்படியெல்லாம் தப்பு பண்ணிட்டோம், தவறு நடந்ததற்கு இதுவெல்லாம் காரணமாகிவிட்டது, இனி இது போன்ற தவறுகள் நடக்காது"ன்னு யாராவது ஒரு அமைப்பு ஒரு சின்ன பதிவோ கருத்தோ வெளிப்படையாக எழுதியிருக்காங்களா? எழுதமாட்டாங்க. ஏன்னா அதன் தலைமைகளிடம் அதற்கான நேர்மையோ பரிசீலனையோ துளி கூட இல்லை.
மாறாக என்ன பேசியிருப்பாங்கன்னா:
- எவனோ அனுப்புல இருந்து போனவன் எழுதியிருக்கிறான்.
- எவனோ போலியான பேரில் கோழைத்தனமா ஒளிந்துகொண்டு எழுதியிருக்கிறான்.
- தனிநபர்களுடைய கருத்துக்குப் பதில் சொல்ல முடியாது.
- இந்தத் டைப்லதான் இருக்கும் இவங்களோட பதில்.
புதிய ஜனநாயகம்னு ஒரு பத்திரிகை வருதே, வினவு, மக்கள் அதிகாரம், செங்கனல் இப்படியெல்லாம் இணையதளம் நடத்துறீங்களே, இதுல எழுதுறவங்க எல்லாம் என்ன சொந்த பேரும் சொந்த அட்ரஸும் போட்டுதான் எழுதுறீங்களா?
போலியான பேர் வச்சுக்கிறது, போலியான இடத்தைச் சொல்வது — இதெல்லாம் நீங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது தானே? விமர்சனத்துக்குப் பதில் சொல்றதுக்கு உண்மையான பேரு, அட்ரஸ், ஜாதகம் எல்லாம் வேணுமா என்ன?
சுப. தங்கராசு மீதான நூறு கோடி நிலமோசடி குற்றச்சாட்டு தொடங்கி, பல கோடி பெருமானம் உள்ள நிலம், தங்கப் பிஸ்கட், பல லட்சம் பணம் இப்படி எல்லாம் ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவையெல்லாம் பல நூறு தோழர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்து, உண்டியல் குலுக்கி, அடி வாங்கி, வழக்கு வாங்கி, அமைப்பு நடத்தி, வாழ்க்கை இழந்து சேர்த்த சொத்துக்களும் பணமும் மட்டும்தானா? அல்லது வேறு ஏதாவது ஒரு வழியில் இவையெல்லாம் வந்து சேர்ந்ததா என்பது இந்த மூன்று தலைமைகளுக்கும் தான் வெளிச்சம். இன்று வரையில் ஒருவரை ஒருவர் பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் குறித்து காட்டிக்கொள்ளாமல் அமைதியாகக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். தனித்தனி அமைப்புகளாகப் பிளவுபட்டு இருந்தாலும் இந்த விஷயத்தில் ஒரே அமைப்பாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் CPI(ML) கட்சியின் நக்சல்பாரி பாதையைத் தவறு என சரியான முடிவு எடுத்தார்கள். அதனாலேயே கட்சியால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட மேற்கு பிராந்தியக் குழுவே பின் சரியான முடிவெடுத்து மக்கள் திரள் பாதை எனக் கட்சியை ஆரம்பித்தது. அடுத்த சில ஆண்டுகளிலேயே தங்கள் முன்னோர்கள் என்ன தவறுகளைச் செய்தார்களோ அதையே இப்போதைய வரை செய்கிறார்கள். அதாவது விமர்சனங்களை ஏற்க மறுப்பதும், மார்க்சியத்தைக் குப்பையில் வீசி உணர்வு மற்றும் நடைமுறைகளுக்கு வால் பிடித்தும் சீரழிந்துள்ளனர்.
இது மீள முடியாத தவறு அல்ல, ஆனால் தலைமைகளுக்கு மீளவேண்டும் என ஒரு நோக்கம் இருப்பது போல் தெரியவில்லை. கிடைக்கும் அப்பாவிகளை வைத்துக்கொண்டு, நிதியில் தொடங்கி சொந்த வாழ்க்கை வரை, அமைப்பு முறை, ரகசிய அமைப்பு எனும் மாயையின் பின்னே ஒளிந்துகொண்டு யாருக்கும் தெரியாத ஒரு “புரட்சிகர” சுபபோக வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டனர் இதன் தலைமைகள்.
2000 முதலே ப்ளீனம் நடத்தப்படாமல் தேங்கத் தொடங்கிய கட்சி, அமைப்புகள் தேங்கி தேங்கிச் சக்கடையாகிப் போனது. அதன் நாற்றம் 2019-க்குப் பின் ஊருக்கே தெரியத் தொடங்கிவிட்டது. இது எப்படி நடந்தது? ஏன் இப்படி முடிந்தது? என்பது குறித்து அமைப்புகளின் தரப்பிலிருந்து வெளிப்படையாக ஒரு அறிக்கையோ சுயவிமர்சனமோ வரவில்லை. மாறாக, செய்த வேலையை மிகைப்படுத்திச் சுய தற்பெருமை மட்டுமே அறிக்கையாக வந்திருக்கிறது. வெளியிலிருந்து வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதாவது பதில் சொல்லியிருக்கிறார்களா? இல்லை.
50 வருசம் மக்களிடம் நிதி வாங்கி, பல தோழர்களின் உழைப்பு, தியாகத்தால் உருவான இயக்கம் இது. இந்த அமைப்பு முறையாலும் வேலைப் பாணியாலும் பல தோழர்களின் குடும்பங்கள் எளிய வாழ்க்கை என்ற நயவஞ்சகமான தலைமைகளின் வழிகாட்டுதலாலும் பொருளாதார ரீதியில் முடங்கிப் போயிருப்பதோடு, தங்களையும் தன் குடும்பத்தையும் முறையாகப் பராமரிக்காமல் பல தோழர்கள் நிரந்தரப் பாதிப்புள்ள நோயால் நோய் பட்டும், உரிய மருத்துவ பராமரிப்பின்றிச் சில தோழர்கள் நோயால் இறந்தும் போயிருக்கிறார்கள். இப்படி வாழ்க்கையும் உயிரையும் தியாகம் செய்து பல தோழர்கள் வளர்த்த இந்த அமைப்புகள் இன்று ஏதோ சில பொறுப்பாளர்களின் அப்பன் வீட்டு பரம்பரை சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. இவர்களைக் கேள்வி கேட்க மார்ச் கூடவோ, லெனின் கூடவோ சேர்ந்து புரட்சி செஞ்சிருக்கனுமா என்ன? சாதாரணமா உழைக்கும் மக்களில் ஒருவனாக இருந்தாலே போதாதா? அப்படியொருவன் தான் இந்த டோனி ஸ்டார்க்.
கட்சியில், அமைப்பில் பகுதி மற்றும் முழுநேர ஊழியர்களாகப் பல ஆண்டுகள் பணியாற்றிய தோழர்களின் விமர்சனம், உட்கட்சி விவாதம் உள்ளிட்ட ஆவணங்கள் அடுத்தடுத்த பகுதிகளில் தொடராக வெளிவர உள்ளது.
அமைப்பிலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட தோழர்களே ஒன்று சேருங்கள். (Avengers assemble 🛠️)
(தொடரும்)
- டோனி ஸ்டார்க்