அரசியல்வாதி வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க? ஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க? உங்க வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க? என்பதுதான் புதிய கல்விக் கொள்கைக்கு முட்டுக் கொடுப்பவர்களின் கேள்வியாக உள்ளது.
சாமானியர்களின் வீட்டுக் குழந்தைகள் பற்றி இவர்கள் சிந்திப்பது இல்லை. வீட்டு வேலை செய்பவர்கள், பூ கட்டி விற்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள், விவசாயக் கூலிகள், மலைவாழ் மக்கள் இன்னும் பலதரப்பட்ட உழைக்கும் வர்க்கத்திலிருந்து வரும் குழந்தைகள் பற்றியோ, முதல் தலைமுறையாகப் படிக்க வரும் குழந்தைகள் பற்றியோ சிந்திப்பது இல்லை. மொத்தத்தில் சமூக நீதி குறித்து சிந்திப்பதே இல்லை.
'தன்னிடம் பணம் இருக்கு. எவ்ளோ பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயார்' என்கிற மனப் போக்குதான் காரணம். புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகங்களைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் கூட இவர்கள் இல்லை.
1. மூன்றாவது மொழி கட்டாயம் (இந்தி திணிப்பு). இதன் மூலம் மாணவர்கள் மீதான சுமை அதிகரிப்பு.
2. தொழில்க் கல்வி என்னும் பெயரில் மாணவர்கள் அதிக இடைநீக்கம் செய்யப்படுவார்கள். இது குருகுலக் கல்வியின் நவீன வடிவம்.
3. வகுப்பு 3, 5, 8 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு. இதனால் மாணவர்கள் அதிக இடைநீக்கம் செய்யபடுவார்கள்.
4. இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்பதன் மூலம் நமது வரலாறு, பண்பாடு அனைத்தும் நீக்கப்படும்.
5. கோச்சிங் சென்டர் வணிகத்திற்கு வழிவகுக்கும் நுழைவுத் தேர்வுகள்.
6. வேதக் கல்வி திணிப்பு
7. கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு.
8. பல்கலைக் கழகங்களின் தன்னாட்சி பறிப்பு
9. இட ஒதுக்கீடுக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமை
10. செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை
இது போன்றப் பல பாதகங்களை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கை கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
பல தரமான விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பலரை உருவாக்கியத் தமிழ்நாட்டுக் கல்வி முறை எந்த வகையில் தாழ்ந்து போனது?
குறைகள் இருப்பின் அதனை நீக்க வேண்டியது தமிழ்நாட்டு அரசின் கடமை. எங்கோ டெல்லியில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டுக் கல்வியை சில வடநாட்டினர் தீர்மானிப்பது என்பதே தமிழ்நாட்டு இறையாண்மை மீதான தாக்குதல்.
கல்விப் பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல், பாராளுமன்ற அவைகளில் விவாதிக்காமல் தன்னிச்சையாக இந்த கொரோனா காலத்தில் அவசரமாக அமல்படுத்த துடிக்கும் போதே தெரியவில்லையா புதிய கல்விக் கொள்கை என்பது மோசடிக் கொள்கை என்பது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வு.
- குருநாதன் சிவராமன்