தொடர்புடைய படைப்புகள்

கண.குறிஞ்சி - பொதுவுடமைப் பாரம்பரியம் கொண்டது உங்கள் குடும்பம். நினைவில் வாழும் உங்கள் தந்தையார் தோழர் பவானி பாலு மற்றும் உங்களது குடும்பப் பின்னணியை விளக்கவும்.

ப.பா.மோகன்: பவானியில் கம்யூனிஸ்டு இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் எமது தந்தை பி.என்.பாலு ஒருவர். 1936 ஆண்டு கம்யூனிஸ்டு இயக்கம் தடை செய்யப்பட்டபோது காங்கிரஸ் சோசியலிஸ்டு கட்சி இயங்கி வந்தது. அப்பொழுது கம்யூனிஸ்டு இயக்கத்திற்காகப் போராடி, தந்திக் கம்பத்தை அறுத்ததாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் கடுமையான தடியடிக்கு உள்ளாக்கப்பட்டார் எனது தந்தை. பவானி வட்டாரத்தில் ஜமக்காள சங்கம் உருவாக்க இதர தோழர்களோடு பணியாற்றினார். அந்த பவானி வட்டார ஜமக்காள சங்கம் இன்றுவரை ஒரு பாரம்பரிய அமைப்பாகக் கம்யூனிஸ்டு இயக்கத்தின் கீழ் இருந்து வருகிறது. விடுதலைக்குப் பின் ஒன்றுபட்ட கோவை மாவட்ட இயக்கத்தில் பவானி வரலாற்றுப் பதிவைக் கொண்ட ஒன்றாக உருவாவதற்குப் பணியாற்றினார்.

pb mohan 350பவானி, காடையம்பட்டி, பெரியமோளபாளையம், அந்தியூர் போன்ற பகுதிகளில் கம்யூனிஸ்டு இயக்கம் சிறு குழுக்களாக உருவாவதற்கு அன்றைய கம்யூனிஸ்டு தலைவர்கள் பவானி வருகிறபோதெல்லாம் எங்கள் வீட்டில்தான் தங்குவார்கள். கட்சியின் பேரவைக் கூட்டங்களில் தலைவர்கள் ஜீவா, ரமணி, கே.டி.ராஜீ போன்ற தலைவர்கள் குழுக்கூட்டமும், வகுப்புகளும் நடக்கும். தமிழகத்தில் கம்யூனிஸ்டு இயக்கத்தை மண்ணுக்கேற்ற மார்க்சிய வழியில் செயல்படுத்திய சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்குப் பின் உழைக்கிற மக்களையும் மாற்றுச் சிந்தனை கொண்டவர்களையும் தன் பக்கம் ஈர்க்கும் தன்னிகரில்லாத் தலைவர். இலக்கியப் பேராசான் ஜீவா அவர்கள் நாங்கள் இளம் சிறார்களாக இருந்தபோதே எங்கள் வீட்டில் தங்கிக் கூட்டம் நடத்தித் தோழர்களை வரவழைத்துக் கலந்துரையாடி உள்ளார், எங்கள் பாட்டி காது மந்தமான ஜீவாவிடம், நடிகர் சிவாஜி கணேசன் வாங்கிக் கொடுத்த காது கேட்கும் கருவியைப் போட்டுக் கேட்க வைத்து எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய நினைவுகள் இன்றும் பசுமை போல் உள்ளது.

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலில், கம்யூனிஸ்டுக் கட்சி எங்கள் தந்தையைப் போட்டியிடப் பணித்தது. பவானி சட்டமன்றத் தொகுதியிலேயே திரளான மக்கள், கம்யூனிஸ்டுக் கட்சியை வரவேற்றார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகம் நடத்தி நிதி திரட்ட வருகை புரிந்தார்.

எங்களுடைய தந்தையும், தாயார் பாக்கியலட்சுமி ஆகியோர் கம்யூனிஸ்டு இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் தோழர்கள் வருகிறபோதெல்லாம் அவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிப்பதைத் தங்கள் வாழ்க்கையின் பெரும் பேறாகக் கருதினார்கள்.

எங்கள் குடும்பத்தில் நாங்கள் 5 ஆண்கள், 2 பெண்கள் அனைவரையும் மிகுந்த சிரமத்திற்கிடையே படிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், கம்யூனிஸ்டுக் கட்சிதான் நமது குடும்பம் என்ற உணர்வை ஊட்டி வளர்த்தனர். கட்சிக் கூட்டங்கள் நடக்கிறபோது சுவரெழுத்து எழுதுவது, ஒலி பெருக்கியில் விளம்பரப்படுத்துவது, கூட்டங்களின் முன்னால் அமர்ந்து கொண்டு கூட்டச் செலவுகளுக்குத் துண்டேந்தி வசூல் செய்வது, தலைவர்கள் வருகிறபோதெல்லாம் அவர்களைப் பேருந்து நிலையத்திலிருந்து வரவழைத்துத் தங்கி உபசரிப்பது அவர்கள் திரும்புகிற வரை அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வது ஆகியவற்றை வாழ்க்கையின் மிகப்பெரும் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தோம்.

எங்களது குடும்பமே கம்யூனிஸ்டு இயக்கத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு அன்று எங்களுக்கிட்ட இலட்சிய உரம் இன்றும், என்றும் வழிகாட்டியாக உள்ளது.

சோவியத் நாடு, ஜனசக்தி, தாமரை போன்ற பத்திரிகைகளைச் சத்தம் போட்டுப் படிக்க வைத்து மற்றவர்கள் படிப்பதற்கும், கேள்வி கேட்பதற்கும் ஒரு பாசறையாக எங்கள் இல்லமும், எங்கள் தந்தை நடத்தி வந்த பொற்கொல்லர் கடையும் இருந்தது என்றால் அது மிகையாகாது. இன்று கட்சியில் முன்னணிப் பங்கு வகிக்கும் தோழர்.டி.ஏ.மாதேஸ்வரன், தங்கராஜ் (ஓய்வு பெற்ற நகராட்சி அதிகாரி), செல்வராஜ், யுவராஜ், கந்தசாமி, பாலதண்டாயுதம் போன்றோருக்கு அது பயிற்சிக் காலமாக இருந்தது.

உங்களது பள்ளி / சட்டக்கல்லூரி காலகட்டம் குறித்த உங்களது மீள்பார்வை

பவானியில் அரசுத் தொடக்கப் பள்ளியிலும் உயர் நிலைப்பள்ளியிலும் பயின்ற பின் கல்லூரிப் படிப்பு ஸ்ரீ வாசவி கல்லூரியிலும், பின்பு சட்டக்கல்லூரியிலும் தொடர்ந்தது 1980ல் வழக்கறிஞர் பணி தொடங்கியது. ஈரோடு, பவானியில் மூத்த வழக்கறிஞராகவும் கம்யூனிஸ்டு இயக்கத்தில் துடிப்பு மிக்க போராட்டக் குணம் கொண்டராகவும் விளங்கிய தோழர் திருமலைராஜன் அவர்களிடம் இரண்டாண்டுகள் பணியாற்றிக் கந்தசாமி மில் தொழிலாளர் போராட்டத்தில் பங்கேற்றேன். மில் நிர்வாகத்தின் சதியின் காரணமாக ஏற்பட்ட கொலை வழக்கில் இருவரும் சதி வழக்கில் இணைக்கப்பட்டோம். பின்பு காவல்துறையே எங்களை விடுவித்தபின், பவானியில் தனியே வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினேன்.

பள்ளி மாணவர் காலத்திலேயே கம்யூனிஸ்டு கட்சியைத் தவிர வேறு எந்த நாட்டமுமின்றி இருந்து வந்தேன். பிறகு கல்லூரியில் ASIF இயக்க மாநாடுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு, ASIF-ன் சிவகங்கை மாநில மாநாடு, திருச்சி ASIF மாநில மாநாடு ஆகியவற்றால் பெருமளவில் ஈர்க்கப்பட்டு மாணவர் பெருமன்றத்தில் முழுவீச்சாகப் பணியாற்றத் தொடங்கினேன்.

ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றபின் தலைவர் பாலதண்டாயுதம் அவர்களை அழைத்து வர உறுதியளித்திருந்தேன், பின்பு அது கல்லூரி நிர்வாகத்தால் மறுக்கப்பட்டது. எனவே தலைவர் காமராஜ் அவர்களின் வருகையை எதிர்த்துப் பெரும் எதிர்ப்புக்கிடையே கல்லூரி வளாகத்திலேயே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அன்றைக்கு அரைகுறையாகத் தெரிந்த மார்க்சியத்தை வைத்துக் கொண்டு பொருளாதார வகுப்பில் கேள்வி கேட்பது வகுப்பறையில் வழக்கமாக இருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த பின் கம்யூனிஸ்டுக் கட்சியின் புதுடெல்லி ‘அஜாய்பவனில் “ உள்ள தோழர் மொஹித்சென், முதல்வராகப் பணியாற்றிய கட்சிக் கல்வி வகுப்பிற்கு 30 நாள்கள் அங்கு தங்கி படித்த நாள்கள் எனது வாழ்க்கையின் திருப்புமுனை ஆகும். பெரும் தலைவர்கள் டாங்கே, ராஜேஸ்வர் ராவ், ஹிரேன் முகர்ஜி, மொஹித்சென், அணில் ராஜிம்வாலே போன்ற தலைவர்களுடன் அஜாய்பவனில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இன்றும் என் வீட்டினை அலங்கரிக்கும் சிறந்த படமாகும். அந்த நாட்களில் மார்க்சியத்தின் அடிப்படைகளை ஓரளவு கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

மாணவர் அமைப்புகளில் இணைந்து பணியாற்றிய உங்களது செயல்பாடுகள்

மாணவர் பெருமன்ற முழு நேர ஊழியராகக் கல்லூரிப் படிப்பை முடித்த பின் நான்கு மாவட்டங்களுக்குப் பொறுப்பேற்றுக் கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள பழைய கட்சி அலுவலகத்திலும், காட்டூர் தொழிற்சங்க அலுவலகத்திலும் தங்கிப் பணியாற்றிய அனுபவங்கள் மறக்க முடியாதவை.

கட்சியின் சொந்தக் கட்டடமாக வாங்கப்பட்ட பாலன் இல்லத்தில் (பழைய கட்டடம்) தோழர்கள் நல்லகண்ணு, ஆதிமூலம் ஆகியார் ஒரு பக்கமும், தோழர் து.ராஜா (AISF மாநிலச் செயலர்) மறுபுறமும் தங்கியிருந்தனர். மாணவர் பெருமன்றத்தில் பணியாற்றிக் கொண்டே சட்டக்கல்லூரியில் படித்து வந்தேன். அப்பொழுது நான் அந்தக் காலகட்டத்தில் ஆற்றிய களப்பணிகள், கருத்தரங்குகள், மாநாடுகள் சென்னையை உலுக்கிய மாணவர் போராட்டங்கள் எண்ணற்றவை..

பாலன் இல்லம் முன்புறம் உள்ள காலி இடத்தைச் சென்னை பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் வந்து போகிற இடமாக மாற்றிக் காண்பித்தோம்.

அன்றைய எம்.ஜி.ஆர் அரசு, சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் நடத்திய அராஜகத்தைக் கண்டித்துத் தோழர் கல்யாணசுந்தரத்தை வைத்து நடத்திய கண்டனக் கூட்டம், மற்றும் ‘கெல்லிஸ்” சட்டக்கல்லூரி எம்.சி.எஸ் பிராட்வே சட்டக்கல்லூரிகளில் தோழர் என்.டி.வானமாமலை அவர்களைக் கொண்டு நடத்திய வகுப்புகள் ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானதல்ல.

அப்போது நாங்கள் நடத்திய திருச்சி AISF மாநில மாநாடு, (இந்துமாக் கடலை அமைதி மண்டலமாக்கக் கோரிய) அகில உலக இளைஞர், மாணவர் சென்னை மாநாடு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவசர நிலை காலத்தில் தோழர். தா.பாண்டியன் தலைமையில் நடந்த AISFன் மயிலாப்பூர் கூட்டத்தில் அப்போதைய தேசிய செயலர் அஜீஸ்பாட்சாவுடன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுத் தோழர் எம்.கே.வின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டோம். சட்டக்கல்லூரி தேர்தலில் நானும், தோழர் கே.சுப்ரமணி (வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத்தில் பணியாற்றிப் படித்து வழக்கறிஞராகக் கோவையில் இன்று பணியாற்றிக் கொண்டுள்ளார்) ஆகியோர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பாகப் பாரிமுனை சாலையில் அடிக்கடி மறியல் செய்வதும், எங்களைக் கைது செய்வதும் வழக்கு போடுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிப்போனது.

தோழர் கே.துரைராஜ் எங்களது போரட்டத்தைப் படம் பிடித்துப் பத்திரிகையில் போட்டு விடுவார். தொடர்ந்து AISF ஒரு முக்கிய அமைப்பாக மாறி, மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது.

எமது காலத்தில் பயணித்தவர்கள் தோழர்கள் மணிமுத்து, ஜேம்ஸ், ஜவகர், ஹுசேன், கோவையில் துளசிமணி,ஈரோட்டில் ஸ்டாலின் குணசேகரன், சேலத்தில் நந்தகோபால், பிரபு திருச்சியில் செல்வராஜ், இன்றைய மார்க்சிய மெய்யியல் முதல்வர், சி.பி.ஐ தேசிய உறுப்பினர், தஞ்சை சி.மகேந்திரன், தூத்துக்குடி ரவீந்திரன், புத்தனாம்பட்டி சி.மணிவேல், பாலன், நாகர்கோவில் பொன்னீலனின் தம்பி கனகசபாபதி ஆகியோர் ஆவர்.

நாங்கள் நடத்திய பள்ளி மாணவர் மாநாடு, தா.பாண்டியன், ஜெயகாந்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் கலந்து கொண்ட ஈரோடு மாநாடு, தொழிற்கல்லூரி மாணவர் மாநாடு, தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரி உட்படப்பல கல்லூரிகளில் தோழர் தா.பாண்டியன் போன்றவர்களைப் பேசுவதற்கு ஏற்பாடு செய்த கூட்டங்கள் போன்றவை அன்றைய ஆங்கில தமிழ் நாளேடுகளிலும், ஜனசக்தியிலும், மக்கள் செய்தியிலும் முக்கியச் செய்திகளாக இடம் பெறும்.

AISF அனைத்திந்திய அமைப்பிலும் துணைச் செயலாளராகப் பணியாற்றியும், யூத் லைப் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த தோழர் குணாளன், இன்றைய கம்யூனிஸ்டு இயக்கத்தின் தலைவர்களாகவும் தொழிற்சங்க விவசாய சங்கங்களின் தோழர்களாகவும் உள்ள அமிர்ஜித் கவுர், அஜீஸ் பாட்சா, மறைந்த விவசாய சங்கத் தலைவர் அதுல் குமார் அஞ்சான் போன்ற எண்ணற்ற தோழர்களின் உறவு மறக்க முடியாதது.

உங்களது இரசியப் பயண அனுபவங்களை நினைவு கூரமுடியுமா?

சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே 1978ல் சோவியத் நாட்டின் இளம் கம்யூனிஸ்டுக் கழகத்தின் சார்பில் (கம்சோமல்) அமைப்பில் 9 பேர் கொண்ட குழுவில் கேரள மாநிலத் தலைவர் பினாய் விஸ்வம் உட்பட நானும் 20 நாள்கள் மேற்கொண்ட பயணமும், அங்கு ஒவ்வொரு இடத்திலும் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றதும் மறக்க முடியாதது.

அந்த சமயத்தில் எனது தம்பி உதயசந்திரன் பேட்ரிஸ் லுமும்பா பல்கலை கழகத்தில் பொறியியல் துறையில் சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் செலவில் படித்து வந்தார். அவனுடன் மார்க்சிய அறிஞர், சிந்தனையாளர் முத்து மோகன் போன்றவர்கள் படித்து வந்தார்கள்.

மார்க்சிய ஆசான் விருத்தகிரி எங்களுக்கு மாபெரும் தத்துவ வழிகாட்டி, சோவியத் யூனியன் செல்லும் போதே “டேய் சோவியத் யூனியன் சொர்க்க பூமி என்ற கனவில் அங்கு செல்லாதே, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த சோசலிச நாடு அது. இருப்பினும் அங்கும் பிரச்சனை உண்டு” என்று கூறினார். அங்கு சென்றபின் ஒரே கட்சி ஆட்சி, அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள வைத்தது, மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்காதது போன்றவை மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்தன.

கட்சி முடிவை மக்கள் முடிவாகத் திணிப்பதும், கட்சித் தலைவர்களுக்கு எதிராக யாரும் உள்ளூர் அளவிலும் பேச முடியாது என்பதும் சோவியத் சோசலிசக் கட்டமைப்பின் குறைபாடு என்பதை வாழ்க்கை உணர்த்தியது.

வழக்கறிஞர் பணி தொடங்கிய காலத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இயலுமா?

சட்டக்கல்லூரி படிப்பு முடித்த பின்பும் ஓராண்டு தொடர்ந்து பாலன் இல்லத்தில் தங்கி முழு நேரப்பணியில் ஈடுபட்டேன் மாத ஊதியம் ரூ.150 போதாத நிலையில், தொழிற்சங்கப் பணிக்கு உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் தோழர் குசேலர் அழைத்தார். இருப்பினும் மனம் இடம்கொடுக்காமல் பிராட்வேயில் AITUC அலுவலகத்தில் கேட்டேன். உரிய பதில் இல்லாத நிலையில், சொந்த ஊருக்கே வந்து AITUC - அமைப்பின் வழிகாட்டுதலில் தோழரும் மூத்த வழக்கறிஞருமான திருமலைராஜனிடம் பணியைத் தொடங்கினேன்.

ஈரோடு கட்சி அலுவலகத்திலேயே வழக்கறிஞர் பணிமுடித்துத் தங்கினேன். கந்தசாமி நூற்பாலை தொடங்கிய பின் தனி தொழிற்சங்க அலுவலகம் சூரம்பட்டி நால் ரோட்டில் வாடகைக்கு எடுத்துத் தங்கி வழக்கறிஞர் பணியோடு தொழிற்சங்கப் பணியும் மாணவர்கள், இளைஞர்கள் மன்றங்களோடு தொடங்கிய பணியும் இன்றுவரை விரிவாகத் தொடர்கிறது.

கந்தசாமி நூற்பாலைப் போராட்டத்தில் ஈடுபட்ட கொலை வழக்கில், தோழர் திருமலைராஜன் வழக்காட இதர வழக்குகளில் வெற்றி பெற்றேன்.

முதன்முதலில் ஈரோடு AITUC சார்பில் முனிசிபல் தொழிற்சங்கத்தின் சார்பில் தலைவர்களின் தலைவரான மறக்கமுடியாத பெரும் ஆளுமை தோழர் மு.நடேசன், அழகையா ஆகியோர் வாய்ப்புக் கொடுத்த வழக்கு முக்கியமானது பாதாளச் சாக்கடை பணியின்போது இறந்து போன நகராட்சித் தொழிலாளிக்குத் தொழிலாளர் நஷ்டஈடு சட்டத்தின் கீழ் வாதாடினேன். பாதாள சாக்கடையில் இறக்கும்போது, அப்போதைய காலக்கட்டத்தில் எந்தப் பாதுகாப்பு உபகரணமும் இன்றி மூச்சு பிடித்து இறங்குவதால் சாராயம் குடித்திருந்தாலும், அது தவிர்க்க முடியாதது என ‘பெலார்மின்” என்ற உதவி ஆணையாளரிடம் வாதாடிப் பெற்ற வெற்றி மறக்க முடியாதது. பவானி வட்டம், பர்கூர் மலைப்பகுதியில் சோழகனை பகுதியில் சோழகர் ஆண்டுக்கு ஒருமுறை செட்டில்மென்ட் நிலத்தில் உள்ள புளியங்காய்களை அந்தியூர் சந்தைக்கு விற்க வரும்போது 23 பேர்கள் மீது போடப்பட்ட வழக்கை “Trends” அமைப்பின் சார்பில் ‘ஜேக்கப் பெல்லி” தர அதனை வாதாடி பவானி குற்றவியல் நீதிமன்றம், அந்தியூர் முகாமில் விடுதலை பெற்றுக் கொடுத்தேன்.

தாளவாடி, ஹாசனூரில் துரை என்பவரைச் சிறப்பு அதிரடிப்படை (STF) துன்புறுத்தத் தொடங்க அவருக்கு ஆதரவாகப் போராட இரண்டு மலைகளிலும் மலை மக்களோடு தொடர்பு கொள்ள கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர் வி.பி.குணசேகரன், தோழர் மோகன்குமார் மற்றும் மறைந்த யுவராஜ், மாதையன், தோழர் பாலதண்டாயுதம் ஆகியோர் மக்களோடு மக்களாகப் பயணித்துப் பெரும் அமைப்பாக்கினர். தோழர் நஞ்சப்பன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) துணையுடன் தமிழகப் பழங்குடி மக்கள் சங்கம் தற்பொழுது செயல்பட்டு வருகிறது.

பவானி நகரத்தில் ஜமக்காளத் தொழிலாளர் சங்கக் கூலி உயர்வுப் போராட்டத்தின்போது 31 பேர் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கையும், இதர குற்ற வழக்குகளையும் ஈரோடு அமர்வு நீதிமன்றத்திலும், பவானி குற்றவியல் நீதிமன்றத்திலும் தனியே போராடி விடுதலை பெற்றுத் தந்தது எனது வழக்கறிஞர் பணிக்கு அடித்தளமிட்டது.

தொழிலாளர் நீதிமன்றம் ஈரோடு மாவட்டத்தில் இல்லாத காரணத்தினாலும், அப்போதைய குடும்பச் சூழ்நிலையாலும் குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் அதிகமாக ஆர்வம் காட்டினேன்.

1989ல் தி.மு.க நபர்களின் சட்டவிரோதப் போக்கை அப்போதிருந்த UCPI கட்சியின் சார்பாகப் பவானியில் தொடர்ந்து தோழர்களோடு போராடியதால் எனது அலுவலகம் பகலில் என் முன்பே தாக்கப்பட்டது எதிர்வினையாகச் சில தோழர்கள் எதிர்தாக்குதல் எங்களுக்குத் தெரியாமல் செய்ததால் பல இடங்களில் தாக்குதலும், ஒரு வீட்டில் ஒரு பெண் குத்தபட்டதும் நடந்தது. அந்த வழக்கில் என் மீதும், தோழர்கள் டி.ஏ.மாதேஸ்வரன், பாலதண்டாயுதம், துரை, தமிழ்செல்வன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி எனப் பொய் வழக்குப் போடப்பட்டு அதனையும் எதிர்கொண்டு நீதின்றத்தின் மூலம் போராடி வெற்றி கண்டோம்.

ஒருபுறம் வீரப்பன் தேடல் வேட்டையில் தமிழக கர்நாடகா எல்லையில் நடந்த மனித உரிமை மீறல், அதனை எதிர்த்துக் களப்பணி. மறுபுறம் திருப்பூரில், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த உமர்கயான் மற்றும் 5 பேர்கள் மீதான 11 கொலை வழக்குகளை தோழர்.ச.பாலமுருகன் (பியூசினல் தேசியச் செயலாளர் /வழக்குரைஞர்) உதவியோடு கோவை அமர்வு நீதிமன்றத்தில் 40 நாள்கள் சிறப்பு வழக்காக எடுத்துத் தோழர்கள் மறைந்த திருப்பூர் சக்திவேல், தற்போதைய தற்சார்பு விவசாய சங்கத் தலைவரும் மார்க்சியத்தையும், நடைமுறையையும் தமிழகத்தில் தன் வாழ்க்கையின் ஊடே கற்றுணர்ந்து களமாடி வருபவருமான தோழர் கி.வே.பொன்னையன் ஆகியோரது உதவியுடன் வாதாடி, போராடியதால் அனைத்து வழக்குகளும் ‘பொய் வழக்குகள்” என நீதின்றத் தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டது. தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது.pb mohan and kolathoor maniஅடுத்தடுத்து நீங்கள் எடுத்துக் கொண்ட பிற வழக்குகள் யாவை?

இதற்கு இடையே அதிரடிப்படை தாக்குதலில் சிக்குண்டு தடாவிலும், இதர வழக்குகளிலும் சிறைப்பட்ட பழங்குடி, மலைவாழ் மக்களுக்காக தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் வி.பி.ஜி. மற்றும் மோகன்குமார் முதன் முதலாகத் தோழர் மோகன்குமார்ஆகியோர் உதவ முன்வந்தனர். (தோழர் மோகன்குமார் இன்றைய நிர்வாகக் குழு உறுப்பினர் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு இயக்கத்திற்குப் புதிய முகத்தைப் பவானிசாகர், சத்தியமங்கலம் பகுதிகளில் ஏற்படுத்தித் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வரும் ஆளுமை) தா.பாண்டியன்- கூட்டத்திற்கு வந்தபின் உத்வேகம் பெற்று அதன்பின் நிரந்தர வேலையை உதறிவிட்டு முழு நேர கம்யூனிஸ்டுக் கட்சி ஊழியராக தன்னைத் தானே தகுதியாக்கிக் கொண்டவர். இப்பழங்குடி மக்கள் தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து நடத்தித் தமிழ்நாட்டில் போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் விடுதலை பெற்றுத் தந்தேன்.

நக்கீரன் கோபால் மீதான வழக்குகள் பற்றிக் குறிப்பிடுக

குறிப்பாக நக்கீரன் கோபால் அவர்கள் ஜெயலலிதாவின் அடக்குமுறை வெறியாட்டத்தையும், பழங்குடி மக்கள் மீதான காவல்துறை அதிகாரி தேவாரம் குழுவின் கொடூரமான மனித உரிமை மீறலையும் தனது பத்திரிகை உதவியாளர்களான சுப்பு, ஜீவா தங்கவேல், சிவசுப்ரமணியம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மூலம் அம்பலப்படுத்தினார். அதனால் அவர்களையும் இணைத்து மக்கள் மீது போடப்பட்ட

4 கொலை வழக்குகள்,

2 கடத்தல் வழக்குகள்,

சித்தன் மாதேவன், கும்பி மீது போடப்பட்ட வழக்குகள்

ராஜ்குமார் கடத்தல் வழக்குகள்

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் மீது போடப்பட்ட வழக்குகள் என அனைத்து வழக்குகளிலும், அத்துடன் தமிழக விடுதலைப்படை, தமிழ்நாடு மீட்சிப்படை எனும் அமைப்புகளில் செயல்பட்ட தோழர்கள் மாதன், ஏழுமலை, மணிகண்டன், சத்தியமூர்த்தி, ஜெயபிரகாஷ், முத்துகுமார் ஆகியோர் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வழக்காடி வெற்றி பெற்றேன்.

ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வழக்காடியதால் தமிழகத்தில் மனித உரிமைத் தளத்தில் போராடும் வழக்கறிஞர் எனப் பெயர் பெறும் வாய்ப்புக் கிடைத்தது.

மனித உரிமை நீதிமன்றங்களைச் செயல்பட வைத்ததன் பின்னணியை விளக்கவும்

1996ல் தாளவாடி அரேபாளையத்தில், அதிரடிப் படைக்கும், வீரப்பன் குழுவிற்கும் ஏற்பட்ட மோதலில், காவலரின் சாவுக்குப் பின் உயர்அதிகாரி பாலச்சந்திரன், மோகன் நிவாஸ் போன்றோர் குண்டடிபட்ட வழக்கில் பழங்குடி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்றேன். அதுமட்டுமல்ல, 1993ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் விதிமுறை இல்லாமல் செயலற்றுக்கிடந்ததைத் தோழர் வி.பி.குணசேகரனையே மனுதாரராகப் போட்டு தாக்கல் செய்த வழக்கு ஈரோடு மாண்புமிகு தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குத் திருப்பப்பட்டதால், அதனை வழ. ச.பாலமுருகன் வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு அனுப்பினார். அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஏ.சுவாமிக்குத் தனது கருத்துடன் கூடிய கடிதம் அனுப்பினார். தானாக முன்வந்து எடுக்கப்பட்ட உயர்நீதிமன்ற சீராய்வு மனுவில் நீதிபதிகள் ஜனார்த்தனன், கற்பக விநாயகம் ஆகியோர் தலைமையில் பியூசிஎல் சுரேஷ், நாகசைலா , பியூசிஎல் தேசியத் தலைவரும் மனித உரிமைத் தளத்தின் மகத்தான வழக்கறிஞர் பெருந்தகையுமான கே.ஜி.கண்ணபிரான் சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் பலமுறை வந்து வாதாடியது அவருடன் உடனிருந்து கற்று கொண்டது எனது வழக்கறிஞர் பணிக்கு மேலும் மெருகூட்டியது.

கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் மிகவும் புகழ்பெற்றவை. அதில் உங்களது பங்களிப்பைத் தெரிவிக்கவும்.

1998 பிப்ரவரி 14 கோவையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அத்வானி வருகைக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் 4 மாநிலங்களைச் சார்ந்த 175 பேர் மீது வழக்கும், இஸ்லாமிய மக்கள் மீது நடந்த கொடும் தாக்குதலும், சித்திரவதையும் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. கோவையில் இஸ்லாமிய குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் இதர வழக்குகளில் வழக்கறிஞர் வைத்து நடத்தப் போதிய பொருளாதார வழியில்லாத நிலையில் திருப்பூர் உமர்கயான் வழக்குகளின் வெற்றியைக் கேள்விப்பட்டு என்னை அணுகினார். அதை அடுத்து முகமது அன்சாரி தொடர்பில் 2,000 ஆம் ஆண்டு கோவையில்,

பூபால கொலை வழக்கு

நடராஜன் கொலை வழக்கு

1997ம் ஆண்டு காவலர் செல்வராசு கொலை வழக்கு

நாகை பார்சல் குண்டு வெடிப்பு

கோவை நூறு அடி ரோடு சிமி வழக்கு

குண்டு வெடிப்பு வழக்கு என 2006ம் ஆண்டு வரை இஸ்லாமிய மக்களுடன் கலந்து பழகும் வாய்ப்பும், இஸ்லாத்தின் மீது பல வெளிச்சங்களும் எனக்குக் கிடைத்தன.

அப்துல் நவாஸ் மதானி வழக்கில் மூத்த வழக்கறிஞர் விருதாச்சல ரெட்டியார் வாதாடினார். இறுதியில் அவரது தொண்டை பாதிக்கப்பட்டதால் இ.த.ச.பிரிவு 153 பிரிவு குறித்து மட்டும் என்னை வாதாடக் கேட்டுக் கொண்டார். அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி. கண்ணபிரான் அவர்களைக் குற்றமுறு சதி (Criminal Conspiracy) குற்றச்சாட்டுக்கு வழக்காட நான் தனிப்பட்ட முயற்சியில் வரவழைத்தேன். மூத்த வழக்கறிஞர் திருமலைராஜன் உடன்பட்டார். மூன்று முறை கே.ஜி. கண்ணபிரான் கோவையில் தங்கி இருந்தபொழுது வழக்குகளை எப்படி அணுகுவது சாட்சியங்களின் அடிப்படையில் எப்படி வாதிடுவது என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதுமட்டுமல்ல தலை சிறந்த மனிதாபிமானியாகவும் இளைஞர்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய மாமனிதர் கே.ஜி.கண்ணபிரான் அவர்களை எனக்கு ஆசான் எனப் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

அதனைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும், கர்னல் மீதான நல்லஹாமன் வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்திலும் - நடந்த பொழுது அதில் பங்கேற்றுப் பயணித்த அனுபவமும் எமது வழிகாட்டியாகும்.

தலித்துகள் குறித்தான வழக்குகளில் சிறப்பான வெற்றிகளை ஈட்டியுள்ளீர்கள். அத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

29.11.1997ம் ஆண்டு மேலவளவு கிராமத்தில் ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தலித் மக்களான முருகேசன், பழனிச்சாமி மற்றும் நான்கு பேர் பேருந்தில் கூட்டமாக வரும்போது வழிமறித்து பட்டப்பகலில் படுகொலை செய்ததோடு, முருகேசனின் தலையைக் கொய்து கிணற்றில் வீசியெறிந்தனர் சாதி வெறியர்கள். அந்த வழக்கைத் தோழர் ரத்தினம் கையில் எடுத்தார். சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தோழர் திருமலைராஜனைச் சிறப்பு வழக்கறிஞராக நியமித்து, சாட்சிகளைப் பவானி கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திலும், சேலம் மாமங்கம் AITUC தொழிற்சங்க அலுவலகத்திலும் பாதுகாத்து , மோசமான புலன் விசாரணை அறிக்கையிருந்தும், 17 பேருக்கும் வாழ்நாள் சிறை பெற்றுத் தந்தோம்.

1992 ஆம் ஆண்டு சென்னரசம்பட்டியில் குத்தகை கேட்க ஆதிக்க சக்திகளோடு சமமாக அமர்ந்த காரணத்தினால் பேருந்- திலிருந்து இறங்கும்போது படுகொலை செய்யப்பட்ட வழக்கை வழக்கறிஞர் ரத்தினம் மூலம் கரூருக்கு மாற்றம் செய்து, அதில் நான் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டேன், 28 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட அத்தகைய வழக்குகளில், தலித் மக்களிடையே நேரிடையாகப் பழகிக் களமாடி அவர்களின் வலியை உணர்வதற்கு வழிவகுத்தது.

அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள் வாசிப்புத் தலித் மக்களின் பிரத்யேகத் தொடர் தீண்டாமைக் கொடுமைகள் போன்றவை அம்மக்களின் மீது எனது கவனத்தை அதிகமாக திருப்பியது.

வழக்கறிஞர் தமயந்தி வழக்கினை நாமக்கல் நீதிமன்றத்தில் நடத்தி அதில் தண்டனை மற்றும் குழந்தைக்கு 10 இலட்சம் நட்டஈடு பெற்றுக் கொடுத்ததும், அந்தச் சிறுவன் இன்று வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார் என்பதும், உமர்கயான் 11 கொலை வழக்குகளிலிருந்து விடுதலையாகி வழக்கறிஞராக, எழுத்தாளராகச் செயல்படுவதும், நான் நடத்திய 400க்கும் மேற்பட்ட கொலைவழக்குகளில் வழக்கு முடிந்த பின் அச்சமூகத்திற்குப் பாடுபடுவதும், அவர்களைக் கம்யூனிஸ்டு இயக்கத்தின்பால் கொண்டு வருவதும் ஆகிய செயல்பாடுகளை எமக்குக் கிடைத்த வாய்ப்புகளாகக் கருதுகிறேன்.

ஈரோடு மாவட்டம், வெள்ளித் திருப்பூர் கருப்பன் என்பவருக்குக் கொடுக்கப்பட்ட நிபந்தனை விவசாய பூமியில் கிணறு வெட்ட ரூ.3,000 கடன் பெற்றதை வெள்ளைத்தாளில் கிரயமாகப் பெற்று பிறகு அதனை ஆக்கிரமித்த ஆதிக்க சக்தி நபர்களின் மீதான சிவில் வழக்குகளில் வாதாடி வென்று, பின் நில ஆணையரிடம் முறையிட்டு நிலத்தை 10 ஆண்டுகளுக்குப் பின் தோழர் வி.பி.குணசேகரனின் முன் முயற்சியால் வட்ட ஆட்சியரே நேரில் வந்து நிலத்தை ஒப்படைத்த நிகழ்வு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும்.

ஆணவப் படுகொலைகள் குறித்த பல்வேறு வழக்குகளில் நீங்கள் வெற்றிவாகை சூடியுள்ளீர்கள். குறிப்பாகக் கோகுல்ராஜ் படுகொலை வழக்கு, அதன் தனித்தன்மை மற்றும் அது குறித்த விரிவான விவரங்களைத் தெரிவிக்கவும்.

தன்னுடன் நான்கு ஆண்டுக்காலம் பொறியியல் கல்லூரியில் படித்த மாணவி சுவாதியுடன் கோகுல்ராஜ் (பட்டியலினப் பொறியாளர்) திருச்செங்கோடு அர்த்தனாரிஸ்வரர் மலையில் சாமி கும்பிட்டுவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏதோ காரணத்திற்காக ஆதிக்க சாதி யுவராஜ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் கோகுல்ராஜின் கண்ணைக் கட்டி, தாக்கிச் சாதியைக் கூறி இழிவுப்படுத்திப் பேசியுள்ளனர். மேலும் அவர் தற்கொலை செய்துக் கொள்வதாகப் பேசிப் பதிவு செய்துகொண்டு அவரைத் தண்டவாளத்தின் அருகே தலையை வெட்டியது மட்டுமல்லாமல், நாக்கையும் துண்டித்து போட்டுப் படுகொலை செய்துவிட்டனர். அதில் புலனாய்வுக்கு உதவிய சுவாதி தன் திருமணத்திற்குப் பின் போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லாத நிலையில் பிறழ்சாட்சியாகி விட்டதால் வழக்கின் அடித்தளமே பாதிக்கப்பட்டது. 41 சாட்சிகள் விசாரணைக்குப் பின், உயர்நீதிமன்றத்தால் நான் நியமிக்கப்பட்டு, நாமக்கல் நீதிமன்றத்தில் சரியான நியாயம் கிடைக்காத நிலையில், மதுரைக்கு மாற்றப்பட்ட வழக்கின் அனுபவம் தனித்துவம் வாய்ந்தது.

ஏற்கனவே நடத்திய பல்வேறு கொலை வழக்குகளின் அனுபவமும், வன்கொடுமைச் சிறப்புச் சட்டம், திருத்தப்பட்டதும், பழங்குடி மக்களின் வழக்குகளை நடத்திய அனுபவமும் சேர்த்து சேலம் இளம்வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், தோழர் கார்த்திகேயனுடன் மூன்று ஆண்டுகள் மதுரைக்கு அடிக்கடி சென்று பல சிரமங்களுக்கிடையே கோகுல்ராஜ் வழக்கை நடத்தியது பெரும் அனுபவம்.

சட்டப்படி கண்ணுற்ற சாட்சி பிறழ்சாட்சி ஆன நிலையில் சூழ்நிலைச் சாட்சிகளின் அடிப்படைலேயே வழக்கை நிரூபிக்க வேண்டிய சூழலில், மின்னணு சாட்சியத்தையும் (CCTV Footage), புலன்விசாரணையில் கொண்டு வரப்படாத ‘புதிய தலைமுறை” தலைமை நிருபர் திரு.கார்த்திகைச் செல்வனிடம் யுவராஜ் கொடுத்த பேட்டியையும் சட்டப்பூர்வமான சாட்சியமாக்கி, வன்கொடுமைச் சட்டத்தில் ‘அனுமானம்” (Law of Presumption) என்பதை முதன்முறையாக நிரூபித்த வழக்காகும். கோகுல்ராஜ் வழக்கு, யுவராஜீக்கும், மற்ற தண்டிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்நாள் சிறை என்பது ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த எச்சரிக்கையாகும்.

சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்து கொடுத்த வராலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இது.

இளம் வழக்கறிஞர்கள், சமூகப் போராளிகளாக மாறிய சூழலில் சட்டத்தை எப்படிப் புரிந்து கொண்டு செயல்படுத்துவது என வழிகாட்டும் உண்மையான நீதிபதியாக நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் போன்றோர் உள்ளனர் என்பதை அந்தத் தீர்ப்பை ஆய்ந்து படிப்பவர்கள் புரிந்து கொள்வர்.

மனித உரிமைத் தளத்தில் உங்களோடு பயணிக்கும் தோழர்கள் குறித்த உங்களது கண்ணோட்டம்.

எமது மனித உரிமைச் சட்ட மற்றும் களப்பணிகளில் நான் கண்ட மனித உரிமை போராளிகளில் மறைந்த உன்னதமான தோழர் சோக்கோ அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் பாட்சா, மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர் ஹென்றிடிபேன், வழக்கறிஞர் லஜபதிராய், சி.கே.ராசன், எவிடன்ஸ் கதிர், மனித உரிமைச் செயல்பாட்டாளர் தோழர் கண. குறிஞ்சி, மீனவ மக்களுக்காகவும், கூடங்குளம், அணுமின் நிலையத்தை எதிர்த்துக் களமாடும் சமூகச் சிந்தனையாளர் சுப.உதயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், என்னோடு எல்லா பணிகளிலும் உதவிபுரியும் வழக்கறிஞர் பாவேந்தன் ஆகியோர் என்றென்றும் எமது உள்ளத்தில் நிற்பார்கள். தனிப்பட்ட முறையிலும், இயக்கத்தோடும், இதர மனித உரிமைகள் குறித்தும் தலித் அமைப்புகளுடன் இணைந்து இதுவரை சில வெற்றிகளைச் சட்டரீதியாகப் பெற்றிருந்தாலும் கண்முன்னே காவி, கார்ப்பரேட் பாசிசம் 10 ஆண்டுக் காலமாய் இந்தியாவில் மத சார்பின்மையை தகர்த்து இந்து ராஷ்டிரா எனும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை நிறைவேற்ற ஒரே நாடு, ஒரே தேர்தல் என மூன்றாவது முறையாக ஆட்சி பீடம் ஏறியிருப்பது சாதியற்ற, சமதர்மச் சமூகம் படைக்கும் பணியில் இன்னும் வேகமாகப் பணியாற்ற என்னைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.

இன்றைய சூழலில் முற்போக்குச் சக்திகளின் ஐக்கியம் மற்றும் தவிர்க்கமுடியாத கடமைகள் குறித்த உங்களது கண்ணோட்டம் என்ன?

100 ஆண்டுகள் கடந்து வாழ்ந்த தோழர் சங்கரையா 100 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.என்.கே. 94 ஆண்டுகள் வாழ்ந்து மூத்திரச் சட்டியுடன் சாதி ஒழிப்பில் களம் கண்ட பகுத்தறிவு பகலவன் பெரியார் மாந்த குலத்தின் மகத்தான தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் பாசிச எதிர்ப்புப் போரில் இணைந்து களமாடுவது அவசியம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகக் கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

அன்றே டாங்கே போன்றோர் காட்டிய ஒன்றுபடுதல், போராடுதல் (Unity & Fight) என்ற கருத்தாக்கத்தில் அடிபிறழாமல் இந்தியாவில் நிலவும் அரைநிலபிரபுத்துவ, முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் சாதியக் கூட்டமைப்பில் வலதுசாரி, பிற்போக்கு, கார்ப்பரேட், காவிகளுக்கு எதிராக ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். வர்க்கப் போராட்டத்தில், சாதி ஒழிப்பில், போராடுதல் என்ற நிலையைப் பின்பற்றத் தவறியதால், எதிரியைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டோம். அரசியல் மற்றும் தேர்தல் பாதையின் விளைவால் பிளவுபட்டு நிற்கும் கம்யூனிஸ்டு இடதுசாரி, ஜனநாயக சக்திகளை இணைக்காவிட்டால் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.

கருத்துத்தளத்தில் இயங்கும் அறிவுஜீவிகளின் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, முன்னேறிய வர்க்கமான உழைக்கும் வர்க்கத்தை அரசியல்படுத்தி, இதர அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைத்தனத்தை விடுவிக்காவிட்டால் உலகச் சூழ்நிலையில் பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூக அமைப்பைச் சிதைத்து வலதுசாரிகள் பிளவு அரசியலைப் பயன்படுத்தித் தொடர்ந்து நம்மை ஆட்சி செலுத்துவர்.

சட்டத்திற்கான போராளிகள் சிறையில் வாடிக்கிடக்கும் பீமாகோரே கான் குடியுரிமைத் திருத்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிகை ஊடக சுதந்திரத்தை மறுத்துத் தாக்கப்படும் ஊடக நண்பர்கள், மனித உரிமை ஆளுமைகள் தொழிற்சங்கம் மற்றும் தலித் உரிமை செயல்பாட்டார்கள். குறிப்பாக இஸ்லாமிய மக்கள் போன்ற சனநாயக சக்திகளை UAPA, NIA, ED, CBI, PMLA போன்ற பயங்கர வாதச் சட்டங்கள் மூலம் மோடி அரசு இன்னும் தொடர்ந்து சிறைப்படுத்தத் தயங்காது.

இத்தகைய நெருக்கடி நிலையில் மனித உரிமைத் தளத்தில் இந்தியாவில் சமூகநீதியையும் சமதர்மத்தையும் நிலைநாட்டிட அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டி பொறுப்பு நமக்கு போற்றத்தக்கது.

இருப்பினும் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம், நீதிமன்றத்தில் அரசமைப்பின் அடிப்படை- யிலான கட்டமைப்பு, சிறைவாசிகளின் மனித உரிமைகளை மையமாகக் கொண்ட பரந்துபட்ட (காங்கிரஸ் உள்ளிட்ட) பாசிச எதிர்ப்புக் கூட்டணி காலத்தின் கட்டாயமாகும். இன்றைய தேதியில் காங்கிரஸ் பேச மௌனம் காத்தலும் ராகுல் காந்தி கார்ப்பரேட்டுகளையும், அம்பானி, அதானியையும் விமர்சித்து ஆர்.எஸ்.எஸ்- அமைப்புக்கு எதிராகத் தொடுக்கும் போர்க்களத்தில் இடதுசாரிகள் இணைந்து நிற்பது காலத்தின் தேவையாகும்.

இடையில் சாதி ஒழிப்பின் அடிப்படையில் ஆணவக்கொலைக்கு எதிராகத் தனிச்சிறப்புச் சட்டம், தலித்துகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நில உரிமை, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச விலை, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக மனித உரிமை வழக்கறிஞர்கள் 100 பேரை உருவாக்குங்கள் என அன்றே கட்டளையிட்டார் கே.ஜி.கண்ணபிரான் அவர்கள் அந்த மாபெரும் மனித நேயரின் வழிகாட்டலில் ஒரு கம்யூனிஸ்டு வழக்கறிஞராகச் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் உரிமைக்கான போராட்டத்தை நான் மேற்கொண்டு வருகிறேன்.

எனது வழக்கறிஞர் பயணத்தில் நான் பெற்ற வெற்றிகளுக்கு அரசமைப்புச் சட்டம் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் இந்த இந்திய அரசியல் சாசனத்தின் மீது பாரதீய ஜனதா அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஆதரவாகச் செயல்படுவது பெரும் சோகம். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் அத்தகைய சவால்களை எதிர்கொள்ளப் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. அதற்கு உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை அறிவார்ந்த களப்பணியாற்றும் வழக்கறிஞர் குழு தேவைப்படுகிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்கிய கேசவானந்த பாரதி வழக்கின் அடிப்படையைத் தகர்க்க பி.ஜே.பி. அரசு படிப்படியாகச் சட்டம் கொண்டு வந்து இறுதியாக நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் போராடும் நிலையை நீர்த்துப் போக வைக்கிறது மேலும் சிறப்புச் சட்டங்களையும், மூன்று குற்றவியல் சட்டங்களையும் புகுத்தித் தன் இலக்கை அடையத் துடிக்கிறது. அதன் தொடக்கம்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல். இந்தப் பேராபத்தினை மக்களோடு இணைந்து மக்களுக்காக நீதிமன்றத்திலே போராடுவதற்கு நாடு முழுக்க நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்குவது நமது கடமை ஆகும்.

உங்களது ஓயாத பணிகளுக்கு உறுதுணையாக இருப்பவர் உங்களது துணைவியார். அவரது பங்களிப்புக் குறித்துப் பதிவிடவும்.

1984ல் விரோனிகா (எ) வினியுடன் காதல் திருமணம். தோழர் தா.பாண்டியன் தலைமையில் செவ்வாய்கிழமை, மாலை 4.00 மணிக்கு மண்டபத்தில் ஏற்பாடு. தோழர் எம்.கல்யாணசுந்தரம் செய்தி கேட்டு “பாலுவின் மகன் திருமணத்தில் நான் இல்லாமலா?” என அவரே வந்து பங்கேற்றார். அதனைப் பயன்படுத்தி கவுந்தப்பாடியில் தா.பாண்டியன் அவர்களும், குமாரபாளையத்தில் எம்.கல்யாணசுந்தரம் அவர்களும் பங்கேற்கும் பொதுகூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

பின்னால் தான் பிறந்த மௌடிக கத்தோலிக்க மத போதனைகளைக் கடந்து சாதி, மத மறுப்பில் என்னைக் கரம்பிடித்து என் இரண்டு பெண்பிள்ளைகள் பிரித்திலதா, ஆர்த்தி மற்றும் மகன் வழக்கறிஞர் சுபாஷ் ஆகியோரது படிப்பு, வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திச் சராசரி மனைவியாக எந்த வெளி உலக வசதிகளையும் காண முடியாமல் வாழ்ந்து வரும் என் துணைவி விரோனிகா (எ) வினி ஒரு சிறந்த ஆளுமை. அதுவே என் புற வாழ்க்கையில் வழக்கறிஞர் பணியில் வெற்றி பெறக் காரணமாக உள்ளது.

நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் தொடர்ந்து களமாடி வரும் உங்களது எதிர்காலத் திட்டம் கனவு என்னவாக இருக்கிறது?

இந்தியாவில் பல தேசிய இனங்கள் கொண்ட, மொழி அடிப்படையில் உள்ள சமூக மக்களிடையே மறுக்க முடியாத, மறைக்க முடியாத கார்ல் மார்க்சின் தத்துவம், நடைமுறை ஆகியவற்றோடு அம்பேத்கர், பெரியார் ஆகியோரது கருத்துகளின் இணைப்பும் மிக மிகத் தேவையாகும்.

இந்த மூன்று சக்திகளின் இணைப்பே பாசிசத்தை - சாதி வல்லாண்மையை ஒழித்துப் புதிய இந்தியாவைப் படைக்க உதவும். திராவிடம், தமிழ்த் தேசியம், மார்க்சியம் ஆகிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்துப் பொது எதிரியை வீழ்த்தத் தொடர்ந்து தொய்வுறாமல் பாடுபட வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டமாகும். கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதும், அதன்மூலம் எதிர்காலத்தில் சோசலிச சமுதாயம் அமைய வேண்டும் என்பதும் எனது வாழ்நாள் கனவாகும்.

- மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் 

நேர்காணல்: கண.குறிஞ்சி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.