சமூக நீதியின் மண் எனப்படும் தமிழகத்தில் ஈழப் போராட்டத்தின் விளைவாக சமூகநீதிப் போராட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக அய்யா சுப.வீ அவர்கள் முன்பு ஒருமுறை கூறியிருந்தார். தற்போது இளங்கோவன் பாலகிருஷ்ணன் என்னும் நண்பர் பேஸ்புக்கில் அதே கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். பல நண்பர்களும் அதனை வரவேற்றிருந்தார்கள். அது தொடர்பாக சில கருத்துக்களை இந்தக் கட்டுரையின் மூலம் சொல்ல விரும்புகிறேன்.

cauvery farmers 640

தமிழகத்தில் நாள்தோறும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்களைத் தற்கொலைக்கு தள்ளும் கல்வித்துறையைக் கண்டித்துப் போராட்டம், ஷெல் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம், அடுத்தடுத்த அணு உலைகளை அமைக்கும் இந்திய அரசை எதிர்த்துப் போராட்டம், மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம் என பல உதாரணங்களை அடுக்க முடியும்.

இதில் எந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் மற்றொரு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நோக்கி கேள்விகள் கேட்பதில்லை, அவதூறுகளை வீசுவதில்லை, பிற போராட்டத்தின் காரணமாக தங்கள் போராட்டம் வீரியம் குறைந்ததாகக் கருத்து கூறியதில்லை. ஆனால் குறிப்பாக ஈழப் போராட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனால்தான் சமூகநீதிப் போராட்டம் பின்தங்கிப் போனது என்று சொல்லிக் கொள்வது நமது இயலாமையைக் காட்டுகிறது. அல்லது பிறர் மீது பழிபோட்டு தன்னை உயர்த்திக் காட்டும் போக்கைக் காட்டுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஈழ ஆதரவு அரசியல் என்பது வரலாற்றில் தொடர்ச்சியாக இருந்தே வருகிறது. ஆனால் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மைய அரசியலில் கலந்து விட்டது ஈழம். இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கையும், அதற்குத் துணைபோன தமிழக கங்காணி அரசின் துரோகத்தையும் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். 'இனப்படுகொலை நடந்த மண்ணில் எப்படி சேர்ந்து வாழ்வது? பொது வாக்கெடுப்பை நடத்து' என்கிற கோரிக்கை பொதுவான கோரிக்கையாக மாறி விட்டது. பாலச்சந்திரனின் புகைப்படத்தையும், இசைப்பிரியாவின் புகைப்படத்தையும் பார்த்தப் பின்னர் தமிழக மாணவர்களும், பொது மக்களும், கட்சிகளும் 2013-இல் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினார்கள். இத்தகையப் போராட்டங்கள் சமூகநீதிப் போராட்டத்தை எப்படி பின்னுக்குத் தள்ளியது என்று நமக்குப் புரியவில்லை.

தமிழன் சாதி, மதமாகப் பிரிந்து நின்றால் வீழ்த்தப்படுவான், ஆகவே தமிழர்களாக இணைந்து நிற்க வேண்டும் என்கிற படிப்பினையைக் கொடுத்திருக்கிறது ஈழ இனப்படுகொலை. ஒருவகையில் மறைமுகமாக சமூகநீதி பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் தமிழகத்தில் வாழ்வாதாரம் தொடர்பான பல போராட்டங்களும் தமிழர்களின் ஒற்றுமைக்கான அவசியத்தைக் கற்பித்திருக்கின்றன. ஆகவே சமூகநீதிப் போராட்டமும் தொடர்ச்சியாக இருந்தே வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈழப் போராட்டங்களிலோ, தமிழக வாழ்வாதாரம் தொடர்பான போராட்டங்களிலோ ஈடுபடுபவர்களிடம் சமூகநீதி பற்றிய போதியப் புரிதல் இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைக் குறைகூறி நிராகரிக்க வேண்டிய அவசியமோ, கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டிய அவசியமோ இல்லை. அவர்களை சமூகநீதி போராட்டம் நோக்கியும் நகர்த்துவதுதான் நமது வெற்றி. 

இன்றைய நிலையில் அரசியல் பேச விரும்புபவர்களும், களத்தில் வந்து போராடுபவர்களும் மிகக் குறைவு. தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டால் போதுமானது, அது மட்டுமே அரசியல் என்கிற சிந்தனை பெரும்பான்மை மக்களிடம் உள்ளது. சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் 'பாமக பற்றி தெரியுமா?' என்கிற கேள்விக்குப் பல இளைஞர்களும் 'தெரியாது' என்றே பதில் கொடுத்தனர். சமூகநீதி பேசும் பல நண்பர்களும் அந்த வீடியோவைப் பகிர்ந்து பாமகவைக் கேலி செய்திருந்தார்கள். உண்மையில் அந்த வீடியோவுக்காக நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். பாமகவைத் தெரியாதவர்கள் பாமகவின் தலித் விரோத அரசியல் பற்றியோ, தலித்துகள் மீதான வன்முறைகள் பற்றியோ, அதற்கான தீர்வுகள் பற்றியோ எப்படி அறிந்து வைத்திருப்பார்கள்?. தலித் என்றால் அது ஒரு சாதி என எனது அலுவலக சக ஊழியர்கள் சொல்கிறார்கள். சாதிச் சான்றிதழை ஒழித்தால் சாதியை ஒழித்து விடலாம் என்று கூறும் அறிவாளிகள்தான் இவர்கள்.

சமூகநீதி தொடர்பான எந்த அரசியல் அறிவும் இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்துள்ளோம். ஓட்டு போட்டுவிட்டால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் என்கிற மாய வலைக்குள் சிக்கி சீரழிகிறது இந்தத் தலைமுறை. இப்போது புரிகிறதா?, தமிழகத்தில் ஏன் சமூகநீதிப் போராட்டம் தொய்வடைந்தது என்று. தேர்தல் அரசியலால் சமூகநீதி போராட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த உண்மையை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

எனது வாட்ஸ்அப்பில் தந்தை பெரியார் படத்தை முகப்புப் படமாக வைத்திருந்தேன். கல்லூரியில் படிக்கும் எனது உறவினர்க்கு பெரியாரை அடையாளம் காண முடியவில்லை. ஆக அரசியல் அறிவே இல்லாத வெறும் வாக்குகளாக அடுத்த தலைமுறையை மாற்றி வைத்திருக்கிறோம். இதற்கு நாம் அனைவரும் கூட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டு நம் தவறுகளை ஆராய்ந்து திருத்திக் கொள்வதுதான் சரியான முறை. அதைவிடுத்து ஒருவர் மீது ஒருவர் குறைசொல்லி பேசிக்கொண்டே இருப்பதன் மூலம் இந்த பயனும் இல்லை.

பின்குறிப்பு: "தமிழகமக்கள் ஈழத்தமிழர்களுக்காகப் போராடி ஈழத்தமிழர்களுக்கு கொடுத்த பங்களிப்பு ஒன்றுமில்லை" என்று கூறியிருந்தார் இளங்கோவன். இந்தக் கருத்தை  ஈழத் தமிழ்மக்களும், புலம்பெயர் தமிழர்களும் கட்டாயம் மறுப்பார்கள். இனப்படுகொலையை பூசி மறைக்கும் சர்வதேசத்தின் செயலையும், அதற்கு துணைபோகும் இந்திய அரசின் தமிழர் விரோத நிலைப்பாட்டையும், ஐநாவின் அயோக்கியத்தனத்தையும் எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. தற்போது பன்னாட்டு புலனாய்வுப் பொறிமுறை அமைக்கப்பட்டதற்கு தமிழகப் போராட்டங்களும் ஒரு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நெருக்கடி காரணமாக தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு அரசியல் வலிமை உண்டு என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

- குருநாதன் சிவராமன்

Pin It