கனிந்துதிரும்
ஈச்சம் பழங்களை
கவ்விக் கொண்டோடும்
கெண்டைகள் துள்ளிடும் என் குளத்தில்
கொலுசொலிகளை சுமந்து
நீந்தியலையும் அயிரைகளிடம்
சொல்லி வைத்தேன் உன்னைப்பற்றி .
இலைகளுக்கடியில்
வேர்களில்
நீர்த்தாவரங்களின் தண்டுகளில்
யாவும் படிந்து கிடக்கும்
பச்சை வண்ணக் காதலின் பாசிகள் ..
என் இலைகளில்
முட்கள் கூர்மை அச்சுறுத்தினாலும்
என் கனிகளில் விதைகளில்
இல்லை முட்கள்.
செம்பழுப்பாய் கனிந்திருப்பவை
எல்லாம் சொற்களே
ஊர்க் குருவிகளின் கூடுகள்
யாவும் என் இதயத்தில்
என் இதயம்
கூடு கட்டியிருப்பதோ
உன் கூட்டில்..
தனியாளாய் நின்றாலும்
தனித்துவமான உன் ஈச்சமரம் நானடி..
செம்போத்தே..
- சதீஷ் குமரன்