இந்த உலகில் தான் எத்தனை எத்தனை தினங்கள். தினங்கள் இல்லாத நிகழ்வுகளே இல்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கும் காதலர் தினம் என்னும் ஒரு புதிய தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஒரு நோய் தொற்றுப் போல் நகர வாழ்க்கையை தாண்டி கிராமத்திலும் தன்னுடைய கோர முகத்தை வெளிக்காட்ட தொடங்கியது.

காதல் என்பது மென்மையானது. விட்டுக் கொடுப்பது, ஏற்றுக் கொள்வது, அர்ப்பணிப்பது என்ற எல்லைகளைத் தாண்டி தம்மையே இழப்பது என்பதுதான் பொருள் பொதிந்த காதலாக இருக்க முடியும். உலகெங்கும் உள்ள போராளிகள் தன் மண்ணை காதலிப்பதின் அடையாளமாக அந்த மண்ணிற்காக தற்கொடையாளியாக மாறிவரும் போக்கு வளர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவில் காதலர் தினம் எனும் ஒரு கலாச்சாரம் தோன்றிய பின்னர் அது வேண்டுமா? வேண்டாமா? தேவையா? தேவையில்லையா? என்பதை யார் தீர்மானிக்க வேண்டுமோ அவர்கள் தீர்மானிக்காமல் ஒரு சிறு கூட்டம் தாம் சிந்தித்த அல்லது தாம் திட்டமிட்ட ஒரு செயலை ஒரு அமைப்பின்மீது வலுக்கட்டாயமாய் திணிக்கும்போக்கு வலுவடைந்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இந்த காதலர் தினத்தின்போது கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மிகப்பெரிய பிரச்சனையை ராமசேனை எனும் அமைப்பினர் கையில் எடுத்தனர். எங்கெல்லாம் இணையர்களாக வருகிறார்களோ அவர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்று திருமணம் செய்து அதை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது என்ற செய்தியோடு கையிலே ஒரு மஞ்சள் கட்டிய கயிறை வைத்துக் கொண்டு நாய் பிடிப்பவர்களை போல் வீதியெங்கும் அலைந்தார்கள். அதைத் தொடர்ந்து ஒரு உணவு விடுதியில் நடனமாடினார்கள் என்ற செய்தியை வைத்து அங்கு நடனமாடிய பெண்களை மிகக் கீழ்த்தரமாக அடித்து விரட்டியதோடு அச்செயல் மிக சரியானதென நெஞ்சுயர்த்தி கொண்டார்கள்.

இவர்கள் எப்படி இப்படிப்பட்ட ஒரு கேடு நிலைக்கு தன்னை உள்ளாக்கிக் கொண்டார்கள் என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம் என்றால், இதில் காதலர் தினத்தை தாண்டி காவியின் அடையாளத்தை புரிந்து கொள்ள முடியும். அதேபோன்று இந்த ஆண்டும் காதலர் தினத்தை எங்கு கொண்டாடினாலும் அவர்களை இணைத்து மணம் முடித்து வைப்போம் என்பதை அறிவிக்க ஒரு மேடை அமைத்து, அந்த மேடையிலே பிரமோத் முத்தாலிக் பேசிக் கொண்டிருந்தபோது, ஒருசில இளைஞர்கள் எழுந்துச் சென்று போட்டிருந்த காவல் அரணை தாண்டி முத்தாலிக் முகத்திலே கரியை பூசியிருக்கிறார்கள்.காவியை மறைக்க இந்த இளைஞர்கள் மேற்கொண்ட கருப்பு சாயம் பூசுதல் ஒரு எதிர்மறைத் தன்மையை உருவாக்கியிருக்கிறது.

அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய அராஜகங்களை எல்லாம் ராமசேனை என்ற அமைப்பு நடத்தியிருக்கிறது. காதலர் தினத்திற்கெதிரான விழிப்புணர்வை நாடெங்கும் நடத்துவோம் என்று அறிவிப்பு செய்ததோடு பெங்களூர் ஜெ.சி.சாலையில் உள்ள ரவீந்தர கலாசேத்ர அருகே உள்ள ரங்க மந்திர மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை காதலர் தினம் தொடர்பான விவாத மேடையை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பெண்ணிய அமைப்பினரும், திரைப்பட இயக்குனர்களும் வந்திருந்தார்கள். நாம் மேற்சொன்ன நிகழ்ச்சி இந்த மேடையில் தான் நிகழ்ந்தேறியது.

முத்தாலிக் மீது வீசப்பட்ட மை, இந்து சமயத்தின்மீது பூசப்பட்டதாக அவர் அறிவிப்பு செய்கிறார். ஆனால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டிற்கான சிந்தனையே பெரிதாக இருக்கிறதே தவிர, தான் ஒரு இந்துவா என்ற சிந்தனைகூட அவர்களுக்கு இருந்தது கிடையாது; இருக்கப்போவதும் கிடையாது. ஆனால் இப்படி பிற்போக்குவாதிகளான சிலர் திட்டமிட் டு காதலர் தினத்திற்கெதிராக மற்றும் ஆண் பெண் இணைவுக்கெதிராக, ஓரின புணர்ச்சியாளர்க்கெதிராக என்றெல்லாம் கருத்தியல் வாதம் புரியாமல் கை பலத்தை உபயோகிக்க தொடங்கியிருக்கிறார்களே, இதற்குக் காரணம் அவர்களின் கருத்தியல் தோல்வியின் உச்சத்திற்கு போய்விட்டது ஒன்று.

மற்றொன்று தம்மால் கருத்தியலால் வெல்ல முடியாது என்கின்ற தோல்வி மனப்பான்மை தான். இவர்களின் குழுவில் மஞ்சள் துண்டு இணைக்கப்பட்ட தாலிக்கயிறுடன் ஒரு புரோகிதரும் இடம் பெறுவார் என்று அறிவித்துள்ள முத்தாலிக், ஆண்-பெண் இணையரைக் கண்டால் அவர்கள் கழுத்திலே தாலியைக் கட்டி அருகில் உள்ள திருமணப்பதிவு அலுவலகத்திலே பதிவு செய்வோம் என்று மிரட்டி இருக்கின்றன. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் மட்டுமல்ல, இந்திய ஜனநாயக குடியரசை கேலி செய்யும் செயலாகும். யார் யாரை நேசிக்க வேண்டும் என்பதும், யார் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும்.

இந்துமத வேதகால தர்மத்தின்படி சாதிய மேற்பூச்சைக் காட்டி கலப்பற்ற இரத்த உறவுகளை உருவாக்கப்பட்ட சாதியக் கூறுகளை மீண்டுமாய் தோண்டியெடுத்துத் தக்கவைத்துக் கொள்ள இந்து வெறியர்கள் செய்யும் சதி என்பதாகவே இந்த ராம சேனாவின் செயல்கள் தெரிகிறது. சற்றேறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகளாக தாய்வழிச் சமூகம் ஒதுக்கப்பட்ட காலத்திலிருந்தே பெண்ணிய ஒடுக்குமுறைக்கு அடித்தளமிட்ட வலிமையற்ற இந்த சாதியக் கூறுகள் இதுவரை அழுத்தமாக தங்கியிருப்பதற்குக் காரணம், இந்த இரத்தக் கலப்பற்ற திருமண உறவு முறையைக் காப்பாற்றிக் கொள்வதிலேதான் அடங்கி இருக்கிறது. இந்தியாவிலே இந்துமதத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவரும் வேளையிலே அதைத் தூக்கி நிறுத்த மீண்டும் மீண்டுமாய் அவர்களுக்குத் தேவைப்படுவது சாதிக்குள்ளாக முடிக்கும் திருமணந்தான்.

இந்தியாவைத் தவிர மற்ற உலக நாடுகளிலே திருமணம் என்பது ஒரு முதிர்ச்சிப் பெற்ற ஆணும், பெண்ணும் தம்முடைய விருப்பத்திற்கேற்றவாறு செய்ய உரிமைப் பெற்றிருக்கிறார்கள். யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் தீர்மானிப்பது கிடையாது. மாறாக அது அவர்களின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 30 வயது நிரம்பிய முதுகலைக்கல்வி முடித்த ஒரு இளைஞனின் வாழ்க்கைத் துணையை அந்த குடும்பம் தீர்மானிக்கிறது. எப்படி அந்த இளைஞரின் குடும்பம் தீர்மானிக்கிறதோ அதைவிடக் கேவலமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை இந்தியாவில் மிகக் கேவலமாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் பெண்பார்க்க வருகிறேன் என்று சொல்லும்போது தம்மை அலங்காரப்படுத்திக் கொள்ளும் அந்தப் பெண் தன்னை பார்க்கவரும் ஒவ்வொரு ஆணையும், அவன்தானா தன் கணவன் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருக்க, அவனில்லை என்றானதும் வேறொருவனைப் பார்க்க, இப்படி தொடர்கதையாக இந்த நாட்டிலே பெண்கள் காட்சிப் பொருளாவதற்கு இந்த சாதியும், மதமும் தான் துணை போகிறது. இந்த சாதிய மதக்கட்டமைப்பை சரியாக பராமரிக்க இந்தக் குடும்ப திருமணங்கள் துணை புரிவதால், இந்த மதவெறிபிடித்த தலைவர்கள் காதல் திருமணங்களை மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த உலகத்தின் மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த பொறுப்பில் இருக்கும் பராக் ஒபாமா இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் பிறந்தவர் என்பதை இந்த நேரத்திலே பதிவு செய்வதை நம் கடமையாகக் கருதுகிறோம். இரத்தச் சொந்தங்களிலே, மணமுடிப்பவரின் குழந்தைகள் அறிவாற்றல் குறைந்தவர்களாகவும், அல்லது செவித்திறன் மூளைத்திறன் குறைந்தவர்களாகவும் பிறக்கிறார்கள் என்ற அறிவியல் உண்மையைத் தொடர்ந்து அறிவியல் நமக்கு கற்றுத்தந்தாலும், நம்மால் இந்தக் கீழ்நிலையில் இருந்து மீண்டுவர மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

ஒருவேளை ஒத்த சாதியில் மணமுடித்தவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்குமேயானால் நாமும் அதை ஆதரிப்போம். சாதிய ஒற்றுமையுள்ள எத்தனையோ குடும்பங்களில் கருத்தொற்றுமையில்லாமல், மன இனக்கமில்லமல் தினம் தினம் கண்ணீரும், அடியும், மிதியும், அருவருப்பும், சலிப்பும் மிகுந்த வாழ்க்கைதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கீழ்நிலை திருமணத்திற்கு எல்லோரும் வரிந்து கட்டுவது தமக்கான சாதி அடையாளமும், மத அடையாளமும் மறைந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணம்தான். ஐரோப்பிய நாடுகளிலே ஜெர்மானியப் பெண்ணை பிரான்ஸ் நாட்டுக்காரனும், அமெரிக்க நாட்டு ஆணை ஆப்பிரிக்கா நாட்டு பெண்ணும் விரும்பி இணைந்து அறிவுச் செறிந்த குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது, இங்கே, தம் சாதியிலும், மதத்திலும் ஊறித்திளைத்து இன்னமும் பழமை மாறா மனதுடன் நம்மை நாமே கொன்றொழிக்கும் நிலையிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இது அடிப்படை கருத்தாக இருந்தாலும்கூட ஒழுக்கம் என்பது மனம் சார்ந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. யாருடைய ஒழுக்கத்துக்கும் அங்கீகாரம் வழங்குவதற்கும் நமக்கு உரிமை கிடையாது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கம் என்பது இந்தச் சமூகத்தை பாதிக்காத வரையில் அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவை என்ன இருக்கிறது? ஆண்-பெண் உறவு என்பது முற்றிலுமாய் அவர்களின் தனிமனித சுதந்திரம். அதைத் தடுப்பதோ, அதற்கெதிரான நடவடிக்கை எடுப்பதோ, அந்த மனித உரிமையின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. இந்த உறுதியை ஒடுக்கும் வேலையைதான் ராமசேனா தன் கையில் எடுத்திருக்கிறது.

இது மீண்டும் நம்மை வேதகாலத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையாகும். நீ சூத்திரன், நீ பஞ்சமர் என்று மனிதத்தைப் பிரித்துப் பார்க்கும் கொடும் செயலுக்கு வழிவகுக்கும். வாழ்வு என்பது மனங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. மனங்கள் என்பது எண்ணங்களால் உருவானது. எண்ணங்களோ தாம் விரும்பும் மனிதனின் செயல்களிலே வடிவமைக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேதான், காதல் என்பதும் தோன்றுகிறது. இந்த அடிப்படையில் தோன்றும் உறவிலே சாதி இருக்காது, மதம் இருக்காது, அழகு இருக்காது, ஆற்றல் இருக்காது, அதிலே வெறும் மனங்களின் ஒருங்கிணைப்பு மட்டுமே நிறைந்திருக்கும்.

அதனால் தான் பாரதி சொன்னார், ‘காதல் செய்வீர் மானிடரே’ என்று இந்த கூற்றுகளையெல்லாம் அடித்து நொறுக்கி காவித் திரையாக மூடி மீண்டும் பெண்களை அடிமையாக்கும் இந்த சமுதாயத்தை சாதிய கட்டமைப்புக்குள் கொண்டு வர இந்துத்துவ அமைப்புகள் முயற்சி செய்து கொண்டிருப்பதன் தொடக்கமாகவே மங்களூரில் இந்த அநியாயங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கலாச்சார பண்பாடு என்று வாய் கிழியப் பேசும் இந்த நாட்டிலேதான் எய்ட்ஸ் நோயாளிகள் உலகிலேயே அதிகம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக்கொண்டே இவர்கள் செய்யும் ஒழுக்கக் கேடான விசயங்கள் பல்வேறு தருணங்களிலே, பத்திரிகையிலே பல் இளித்துக் காட்டுகிறது.

இதையெல்லாம் சீர் செய்ய முடியாத இவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கிறேன் என்று சொல்வது முற்றிலுமாய் காவிமுகத்தின் அடையாளம் என்பதை நாம் உறுதி செய்து கொள்கிறோம்.

- கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)